குருவி மொழியறிந்த குழந்தை – நூல் அறிமுகம்
அன்பான வசந்தா அம்மாவிற்கு எனது வாழ்த்துகளும் அன்பும். என்னுடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழமையின் முதல் நூலுக்கு மதிப்புரை வழங்குவதில் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி.
தொடர் வாசிப்பு ஓர் நாள் எழுத்தாக கைகூடும் என்பதற்கு சிறந்த சான்றாக திகழ்கிறார் வசந்தா அம்மா. 2020ல் கொரானா அளித்த கட்டாய ஓய்வில் எங்களது ஆசான் உமர் பாரூக் ஐயாவின் முன்னெடுப்பில் தோழர் மு. முருகேஷ் அவர்களால் இணையவழி ஹைக்கூ பயிலரங்கம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுத முயன்று இன்று ஒரு நூலாக உருவெடுத்துள்ளது. சீரிய முயற்சிக்கு எனது பாராட்டுகள்.
நூலின் ஒவ்வொரு ஹைக்கூ கவிதையும் மிக அழகாக நேர்த்தியாக வார்த்தைகளால் செதுக்கப்பட்டு பெரிய கருத்தினை கூறுகிறது. அணுவைத் துளைத்து ஏழ்கடலை உட்புகுத்தி குறுகத் தரித்த குறள் போல ஒவ்வொரு கவிதையும் அருமையாக சமகால மனிதனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை கண்ணில் நிறுத்துகிறது.
இதோ நான் ரசித்து படித்த சில ஹைக்கூ வரிகள் புத்தகத்திலிருந்து.
“வறுமையின் கிழிசல்
குடைக்குள்ளும் பெய்கிறது
மழை”
வறுமை நிலையை ஒரு குடையின் ஓட்டையில் காட்சியைப் படுத்தியுள்ளார் கவிஞர்.
“திணறுது மூச்சு
திறக்கப்படாத
மனக் கதவு”

மனம் திறந்து பேசினால் தீராத பிரச்சனை இல்லை. பேச விடாமல் தடுக்கும் இறுமாப்பினை தூக்கி எறிய தயங்கும் மனநிலை உள்ளவரை மன அழுத்தம் மூச்சு திணற வைத்து விடும் அல்லவா.
“மெல்ல எட்டிப்பார்த்து
மறைகிறது எலி
புதுவரவாய் பூனை”
சிறு வயதில் பார்த்த டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் நினைவில் வருகிறது. குட்டி எலியும் குண்டு பூனையும் கண்ணில் தெரிகிறது. அழகு வரிகள்.
“மூட்டை சுமக்கவில்லை
கூன் விழவில்லை
தொடரும் ஆன்லைன் வகுப்பு”
கணிணி கைப்பேசி இது கூடவே இலவச இணைப்பாக 5ஜி அலைவரிசை. ஓடி விளையாட வேண்டிய சுட்டிக் குழந்தைகளை ஒரே இடத்தில் அமர்த்தி வைத்து குழந்தைமையே பறித்து செல்கிறது ஆன்லைன் கல்வி முறை. சமூகத்தின் ஒரு முக்கிய அவலத்தை கூறுகிறது இவ்வரிகள்.
“பிடித்ததை அழுதாவது
வாங்கிவிடத் தெரிந்திருக்கிறது
குழந்தைகளுக்கு”
தனக்கு என்ன தேவை அதனை எப்படி பெறுவது என்ற தெளிவு பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிகம். குழந்தைகளின் உலகம் அத்துணை தூய்மையானது அழகானது.
“காற்றில்லா வேளையிலும்
நேராக நிற்பதில்லை
கட்சிக் கொடிகள்”
ஒரு தலைவனின் நேர்மைத்தன்மை அவனது சூழல் அசைத்து பார்த்துவிடும். இதை காற்றில் பறந்தாடும் கட்சிக் கொடியுடன் ஒப்பிட்டு வரியாக புனைந்துள்ளது சிறப்பு.
இன்னும் சில கவிதைகளை பகிரலாம் ஆனால் இது வாசிக்கப்பட வேண்டிய முக்கிய தொகுப்பு என்பதால் இதனோடு முடித்துவிட எண்ணுகிறேன்.
ஒரு படைப்பாளி தனது படைப்பிற்கு கிடைக்கும் விமர்சனங்கள் கருத்துகள் மூலமாகவே மேன்மேலும் எழுதும் ஊக்கத்தை பெறுகிறான். நல்லதொரு படைப்பிற்காக வசந்தா அம்மாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் நிறைய எழுதி பல புத்தகங்கள் எழுதி பிரசுரம் செய்திட எனது விருப்பங்கள்.
நூலின் தகவல்கள் :
நூலின் தலைப்பு : குருவி மொழியறிந்த குழந்தை
எழுத்தாளர்: வசந்தா சுவாமிநாதன்
நூல் அறிமுகம் எழுதியவரர் :
ஜெயஸ்ரீ பாலாஜி
தமுஎகச அறம் கிளை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

