10000 பிரதிகளைத் தாண்டி விற்பனை ஆகி சாதனை படைத்துள்ள ” குற்றப் பரம்பரை” குறித்து புதியதாக எழுத தேவையில்லை என்பதே உண்மை.
நூற்றுக்கும் குறைவான நாவல்களே படித்துள்ள போதிலும் இதிலுள்ள பிரமிப்பு அகலவில்லை என்பதாலே இப்பதிவு.
எதற்காக துரத்தப்படுகிறோம் என்பதை அறியாமலேயே ஓட ஆரம்பிக்கும் நாவல் கடைசி வரை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக ஓடுகிறது.
கொம்பூதி, பெரும்பச்சேரி மற்றும் பெருநாழி என்ற மூன்று கிராமங்களுடன் பின்னி பிணைந்து பயணஞ் செய்யும் கதை…
இடைஇடையே விசித்திர உலக புனைவுக் கதையோ என்னும் ஐயம் தோன்றும் வண்ணம் அமைந்த சம்பங்கி ஆற்றங்கரையோரம் அமைந்த குடில் மாந்தர்களுடன் ஒரு வித பிணைப்பு எனத் தொடர்கிறது இந்நாவல்.
வேலுச்சாமி என்ற வேயன்னா( வீயன்னா) வை மையப்படுத்தியே தொடரும் நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தேர்ந்த படைப்பாகவே மிளிர்கிறது.
கொம்பூதி கிராமத்தில் வில்லாயுதம், கூழானிக் கிழவி, அன்னம்மாள், அன்னமயில், சிட்டு, பொன்னம்மாள், நரிவேலு, கீரைச்சட்டி, இருளாயி என்ற ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் பிரமாதம்.
பெரும்பச் சேரியில் வசிக்கும் துருவன், ராக்கு, திருவேட்டை, சிகப்பி, விசக்குட்டை பாத்திரப் படைப்புகளும் கனகச்சிதம்.
பெருநாழியை பொறுத்தவரை பல சமூக மக்கள் வாழ்ந்த போதிலும் பெரும்பச்சேரி மக்களை மட்டும் தமது தேவைகளுக்கு பயன்படுத்தும் பாங்கே நிலவுகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது இந்நாவல்.
1900 களில் நடைபெறுகின்ற கதை என்பதை உணர்ந்தாலே இந்நாவலின் அடர்த்தியை எளிதில் உணர முடியும்.
“கைரேகைச் சட்டம்” என்று ஒற்றை வார்த்தையில் கேள்விப்பட்டிருந்த தகவல் அமுல்படுத்த துவங்கிய நிலையை அறிந்த போது அது உண்டாக்கிய பிரமிப்பு அகலவே இல்லை.
பச்சமுத்து, கனகதுரை, ஏகாம்பரம், புலவர், ஆசாரி,சுப்பையா, வீரசுத்தி என ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் நடைமுறை வாழ்வின் எதார்த்தமான முகங்கள்.
ஆங்கிலேயரான இன்ஸ்பெக்டர் விக்டர் அவர் மனைவி ஜான்சியின் பாத்திரப்படைப்பு விசித்திரமானது.
வட இந்திய இன்ஸ்பெக்டரான பகதூரின் பாத்திரப் படைப்பு அலாதியானது.
சேதுவின் பாத்திரப் படைப்பு இளவட்ட மிடுக்குடன் அவசர புத்தியுடையவனாக சித்திகரிக்கப்பட்டுள்ளது.
பெரும்பச்சேரி மக்கள் எஸ்டேட் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக பெருநாழி மக்கள் செய்யும் தந்திரம் கர்ணக் கொடூரம்.
கந்தனை போலீஸ் வண்டியால் ஏற்றிக் கொண்ட போலீஸை பழிவாங்க பெரும்பச்சேரி மக்கள் செய்யும் தந்திரம் துரிதமான விந்தை.
கிழட்டு போலீஸ் பாத்திரப் படைப்பே கதையின் அடுஅடுத்த நகர்தலுக்கு தூபமிடுகிறது.
வேயன்னாவின் வலதுகரமான வையத்துரையின் பிறப்பு கதையோ(காளத்தி, வீரணன்) மகா பிரமிப்பு…
நாகமுனி, வஜ்ராயினி, ஹஸார் தினார், மான், குதிரை, வைரங்கள் என இடைசெருகலாய் ஒரு கதை தொடர்வதாக தோன்றினாலும் முத்தாய்ப்பாக முடிச்சு அவிழ உதவுகிறது.
வந்தேறி, பிகில் போன்ற வார்த்தைகள் பிரயோகமும் அலாதியானது.
“புது மாப்பிள்ளைக்கும் முதலிரவு கச்சேரியில் (சிறையில்) தான்” எனபதன் மூலம் கைரேகைச் சட்டத்தின் அவலத்தை உணரலாம்.
சட்டம் இயற்றுபவர்கள் அதற்கான தீர்வுகளை முழுவதும் அலசி ஆராய்வதில்லை என்பது அன்று முதல் இன்று வரை தொடர்வதே பெரும் அபத்தம்.
ஒரு திரைப்படத்திற்கான அனைத்து உத்திகளையும் கையாண்டு வேயன்னா என்ற பிரமாண்ட (ஹீரோயிஸம்) கதாபாத்திரம் வாயிலாக கதையை சுவாரசியம் குறையாமல் நகர்த்திச் செல்கிறார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.
வறுமை, சாதிய கொடூரம், பண்டைய பழக்க வழக்கங்கள், கேலி, கிண்டல், நகைச்சுவை, காதல்ரசம், யதார்த்தமான வாழ்வுநெறி, மனிதநேயம், ஈகை, திகில், அதீத கற்பனை, சாகசங்கள் என அனைத்து சுவைகளும் நேர்த்தியான முறையில் பின்னப்பட்டதே ” குற்றப் பரம்பரை”
சொல்ல வேண்டியவை தாராளம்; சொன்னதோ கொஞ்சம்.
முடிந்தால் வாசித்து பேரனுபவத்தை பெற முயற்சிக்கலாமே…
“குற்றப் பரம்பரை”
வேல.ராமமூர்த்தி
டிஸ்கவரி புக் பேலஸ்
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.