நூல் அறிமுகம்: வேல ராமமூர்த்தியின் “குற்றப் பரம்பரை” – – அன்பூ

சாவுக்குத் தப்பிப் பிழைத்து வந்தேறிகளாய்க் கொம்பூதியில் குடியமர்ந்த கள்ளர் இனத்தவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரப் போராட்டமுமே கதையின் கருக்களம்.இந்தக் கொம்பூதிக் கிராமத்தின் தலைவன் வேலுச்சாமி என்கிற வேயன்னாவும் வேயன்னாவின் தாய் ஆதிச்சருகு கூழாயிக் கிழவியுமே கள்ளர் இனத்தின் ஆணிவேரும் அச்சாணியும்.
கொம்பூதி பெரும்பச்சேரி  பெருநாழி இம்மூன்று கிராமங்களுக்கும் இடையே தெறித்து விழும் தீண்டாமையின் குருதியாட்டம் தான் கதையின் போக்கு.
மதயானை நடை/
மீன்வலயைப் போட்டு யானையைப் பிடிக்கப் பாக்குறாங்கெ/
சிங்கத்தைப் புடிச்சு எலிப்பத்தக்குள்ள அடைச்சுட்டாய்ங்கெ/….
வேயன்னாவின் கம்பீரத்தையும் ஆளுமைத் திறனையும் வாசிப்போருக்கு அப்படியே உணர்த்திக் கடத்துகின்றன ஆங்காங்கே சின்னச் சின்னதாய் மின்னிக்கிடக்கும் இந்த வைரச்சொற்கள்.
கொள்ளைத் தொழிலுக்குப் பெரும் துணைபுரியும் ஆக்காட்டிக் குருவி, கொம்பூதி மந்தைக்கு எந்நேரமும் காவலுக்கு நிற்கும் வேட்டை நாய்கள், வடக்கிருந்து இடம் பறந்து களவுத் தொழிலுக்குச் சகுனம் சொல்லும் ஆலமரத்துப் பட்சி, வில்லாயுதத்தோடு கல்லெறிந்து கறித்துண்டு பிடித்து விளையாடும் அவனின் செல்ல வளர்ப்புக் கழுகு, அவன் இழுத்தலுக்கு இசைந்து சிட்டாய்ப் பறந்து சிலிர்க்க வைக்கும் அவனின் குதிரை, வஜ்ராயிணியின் முகம் படித்து அவள் மனத்தின் ரணம் ஆற்றும் அவளின் மான்குட்டி என்று இந்த மனிதர்களின் உணர்வுகளோடு உறவாடித் திரியும் உயிரினங்களும் நம்மோடு வெகு கரிசனமாய் ஒட்டிக்கொள்கின்றன.
குலசாமி இருளப்பனுக்கு மணியடித்துக் குலவையிட்டு அவன் திருவடி மண்ணெடுத்து
ஆதிக்கிழவி கூழாயி திலகமிட… ஆலமரத்துப் பட்சி சகுனம் சொல்ல…ஆக்காட்டிக் குருவியும் ஆயுதங்களுமாய் இரவுக் கூத்துக்குச் செல்லும் அத்தனை பிரயத்தனங்களுக்கும் கிடைக்கும் வைரங்களும் வைடூரியங்களும் வயிற்றுக் கஞ்சிக்குப் பண்டமாற்று மட்டுமே.
களவுப் பொருட்களை இன்னதென்று ஏறெடுத்தும் பார்ப்பதில்லை இந்தச் சனம். குலப் பெண்களுக்குத் தாலிக்கொடி கூட…குதிரை ரோமத்தில் கோர்க்கப்பட்ட ஒன்றிரெண்டு பாசிமணிகள் மட்டுமே.
இவர்களின் ஆகப்பெரிய ஆசையெல்லாம் தடையின்றி பசியாறிக் கிடப்பது மட்டுமே.
பசியையும் இவர்கள் பகுத்துண்டு பறிமாறிக்கொள்ளும் பாங்கில் இவர்களின் ஆகச்சிறந்த மேன்மை நம்மை அறைகிறது.
பாரதிராஜாவின் கனவு ப்ரொஜெக்ட் ...
வளரி வேல்க்கம்பு வெட்டரிவாள் வீச்சரிவாள் குத்துக்கம்பு கோடாலி சுருள்வாள் சூரிக்கத்தி என்று களவுத் தொழிலுக்கு இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள்… வெள்ளைக்காரப் போலீசையே கதிகலங்க வைக்கிறது. இந்த ஆயுதங்களோடு இருக்கும் இவர்களை நாடுவதற்கு நாக்குத் தள்ளிப் போய்…சதியின் போக்கில் சென்று அத்தனை ஆயுதங்ளையும் கைப்பற்றி வெற்று ஆளாய்த் தான் இவர்களை வளைத்துப் போட்டு மார்தட்டிக்கொள்கிறது சட்டிப் போலீசுத் தலைகள்.
கொம்பூதிக் குடிகளுக்குப் பொழைச்சுக் கிடக்கக் காலூன்றிக் கொடுத்தது பெரும்பச்சேரிச் சனங்க.
தீண்டாமையத் தின்னு தீண்டாமயக் குடிச்சு தீண்டாமயைவே சுவாசிச்சுக்  கிடக்கும் பெருநாழிச் சனக்கட்டு முதலாளி முதலைகளுக்கு … அடிமாடுக் கணக்கா உழைச்சுக் கொட்டி வயித்தக் கழுவுற பொழப்பு தான் பெரும்பச்சேரிச் சனத்துக்கு.
பச்சத்தண்ணிக்குப் படுற பாடும்… அந்தத் தண்ணி வழியா ஆடாத ஆட்டங்காட்டும் தீண்டாமைப் பேயிம்…அப்பப்பா…வாசிக்க வாசிக்க வயிறு குலைதள்ளுது நமக்கு.
பெருநாழி எருதுகட்டு மாடுபிடி விழாவை…அப்படியே கொம்பூதிக் கள்ளர்களைச் சுற்றி வளைக்கும் பெரும் சதியாட்டமாய் நிகழ்த்திக்காட்டும் வெள்ளைக்காரப் போலிசுகளின் நரித்தன விளையாட்டுக்களும்…அதைத் தொடர்ந்த கொடூரங்களும் நம்மை அப்படியே துடிக்கத் துடிக்க அதிரவைக்கின்றன.
கதையின் ஊடாக வரும் காளத்தி வீராணன் கதையும்… வஜ்ராயிணியின் கதையும் இருவேறுவிதமான தாக்குதல்களைத் தந்துபோகிறது நம்மிடம்.
கதவிடுக்கில் நசுக்கிக் கொன்று வயிறு கிழித்துச் சிசுவை எடுத்துத் தூக்கி வீசி… நார்ப்பெட்டியில் திருவேட்டை தாங்கிப் பிடித்த வையத்துரையின் ஆதிக்கதை கலங்கடிக்கிறது நம்மை.
அங்கம்மா அன்னமயிலு வில்லாயுதம் வையத்துரை சேது வெள்ளையம்மா சிட்டு போன்ற முக்கியப் பாத்திரங்களுக்கு இணையாக விக்டர் துரை, மேரி,  ஊமையன் நரிவேலு, துரும்பன், திருவேட்டை, கள்ளு விற்கும் தேனம்மா, வில்லியம்ஸ், நான்சி, கார்மேக ஆசாரி, ராக்கு,ஹசார் தினார், நாகமுனி போன்ற உப பாத்திரங்களும் கூட நம்மை வெகுவாய்ப் பாதிக்கின்றன.
பச்சைமுத்து சுப்பையா ஏகாம்பரம் போன்ற நச்சுக்களின் நடமாட்டங்கள் நம்மை அதிரவைக்கின்றன.
தன் தலைமுடியைக் கொண்டே வெள்ளைக்காரப் போலீசின் கழுத்தறுத்துக் கொல்லும் இருளாயி கொம்பூதிக் குலப்பெண்களின் வீரம் பேசுகிறாள் என்றால்…
தான் பெற்ற பச்சைமண்ணின் நெஞ்சை அறுத்துக் குருதியெடுத்துப் பிராது கொடுக்கும்
தலையாரி மனைவி …பெருநாழியின்  தீண்டாமைக் கொடுமைக்குப் பெரும் சாட்சி.
பச்சப்பிள்ளக் கதறக் கதறக் குடிதண்ணீருக்கு மல்லுக்கட்டப் போய்த் தீண்டாமைத் தீய்க்குப் புருசனைக் காவு கொடுத்து நெஞ்சிலடிச்சுக் கதறும் ராக்கு…பெரும்பச்சேரியின் இயலாமைத்தனத்துக்குச் சான்று.
விக்டர், பகதூர் போன்ற அயலாரால் சாதிக்க முடியாத ஒரு பெருங் கொடூரத்தைச் சாதித்துக் காட்டவெனவே வந்துசேரும் சேது…கள்ளர் இனத்தையே அழித்துக்காட்டி அவனைப் பெற்றகடனைத் தீர்த்துக் கொள்கிறது அவலம்.
அத்தனைக்கும் சாட்சியாய் கிழக்கு நோக்கி சிங்க வாகனத்தில் ஓங்கிய அரிவாளும், துருத்திய கண்களுமாய் நின்று கொண்டிருக்கிறார் கொம்பூதிக் கள்ளர் இனக் குலசாமி இருளப்பசாமி.
– அன்பூ
நூல்: குற்றப் பரம்பரை
ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்