சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த அவர்கள் நடத்தும் சாணக்கியத்தை வெளிப்படையாகப் பேசுகிறது. ஒரு சிறு தொழிலாளி முதலாளியாக ஆசைப்பட்டால் அவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்; எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை இந்த 207 பக்க நாவலில் சொல்ல முயன்றிருக்கிறார்.
இது போட்டிக்காக எழுதப்பட்ட நாவல் தான் என்ற போதிலும் தான் எடுத்த களத்தையும் கருப்பொருளையும் தெளிவாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் பாரதிக்குமார். ஒரு எதிர்மறைத் தாக்கத்தை வாசகர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பிருந்தாலும், இயல்பியல் புதினம், நிஜ வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் போது, அல்லது பெரும்பான்மையான வாழ்க்கைத் தரவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு எழுதும் போது இத்தகைய எதிர்மறை அம்சங்களைத் தவிர்க்க முடிவதில்லை என்பது ஆசிரியரைத் தொடர்பு கொண்ட போது தெளிந்த உண்மை.
இதில் கதை மாந்தரில் தலைக் கதாப்பாத்திரம் இலங்கைத் தமிழர் என்பதால் இலங்கைத் தமிழர்பாடுகள் பற்றி அலசி இருக்கலாம் என்பது நமது எதிர்பார்ப்பாக இருந்தாலும் சற்று ஆழ்ந்து யோசித்தோமாயின், நாவல் இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிப் பெரிதாகச் சொல்லவில்லை எனினும் இலங்கைத் தமிழன் அகதியாக இருந்தால் அவன் திறமை சாலியாக இருந்தாலும் கூட அவனது முன்னேற்றத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாக சட்டங்களும் சமுதாயமும் இருப்பதை இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.
அதுவும் ஒரு மனிதனின், ஓர் இனத்தின் அடையாளம் அழிவதற்கு தன் பெயர் கூடத் தனக்குச் சொந்தமில்லாத வாழ்க்கையை வாழும் பாபு கதாப்பாத்திரம் சிறந்த உதாரணம். மொத்தத்தில் ஒரு தொழிலாளி முதலாளியாக நல்லவனாக திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாக இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்ல முற்பட்டாலும் ஒரு சிலர் அதனையும் மீறி, பாபுவின் முதலாளியைப் போல, அறத்தையும் பாதுகாத்து நிற்பது சற்று நம்பிக்கையைத் தருகிறது. அதாவது, தொழிலாளி முதலாளி ஆகும் போது அவர் தன்னைப் போன்ற இன்னொரு தொழிலாளி முதலாளி ஆவதை விரும்புகிறார்; ஆதரிக்கிறார்.
அதே சமயம் பணம் படைத்த முதலாளிகள் அதிகாரம் பெறும் போது பணம் அவர்களுக்குள்ளேயே சுற்றி வர வேண்டும் என்பதற்கான சதிகளைத் தீட்டுகின்றனர். முதலாளி வர்க்கத்திற்குள்ளாகவே பிரிவுகளை ஏற்படுத்துகின்றனர். இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சி எல்லாத் துறைகளிலும் எல்லா மட்டத்திலும் எல்லாக் காலகட்டத்திலும் கையாளப்பட்டுக் கொண்டிருப்பது உலகச் சமுதாயம் ஒப்புக் கொண்ட ஒவ்வாமை. சுருக்கமாக அனைவராலும் ஒரு முறை வாசிக்கப்பட வேண்டிய இயல்பியல் சமுதாய நாவல்.
நூலின் தலைப்பு : குற்றியலுகரம் நாவல்
ஆசிரியர் : நெய்வேலி பாரதிக்குமார்
பதிப்பகம் : ஜீரோ டிகிரி
பாபு கனிமகன்
741, காமராசர் சாலை
இளையான்குடி – 630702
சிவகங்கை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.