குட்டிப் பெண்களின் பெரிய கதை – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : “குட்டிப் பெண்களின் பெரிய கதை”
நூலாசிரியர்: ரமாதேவி ரத்தினசாமி
விலை : ரூபாய் 180/-
வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ் சென்னை -600083
தொடர்பு எண்: 7550098666
பெண்களுக்குக் கல்வியோடு, தைரியத்தையும், காதல் தொல்லைகள், பாலியல் சீண்டல்களை எதிர்கொள்வது குறித்தும் பயிற்றுவிக்க வேண்டும்
ஒவ்வொரு வீட்டிலும் ஆணோ பெண்ணோ குழந்தை பிறந்ததிலிருந்து இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக மதிப்பீடுகள் பாலியல் வரையறைகளுக்கு உட்பட்டே அவர்களை வளர்க்கிறோம். அவர்களும் அப்படியே சமத்துவமின்றி வளர்கிறார்கள்.
குறிப்பாக வளரிளம் பெண்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மிக சரியாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
இந்த சமூகத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்த 10 பெண்களின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது “குட்டி பெண்களின் பெரிய கதைகள்”.
தன் பள்ளி ஆசிரியைப் பார்த்து சூதானமாக போய் வாங்க டீச்சர் என்று பொறுப்பாகச் சொல்லும் கார்த்தீஸ்வரி எனும் குழந்தை கௌரவ கொலை செய்யப்படுகிறார்.
சிறுவயதிலேயே மல்லிகா கருக்கலைப்பிற்கு உள்ளாகிறார்.
அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிரும் காதலன் /கணவன் கொடுமைகளால் தூக்கிட்டு மரணிக்கிறார்.
நல்ல உடை கிடைக்கும் சிறப்பான உணவு கிடைக்கும் என்று குழந்தை திருமணம் பற்றிய அறியாத கல்பனா குழந்தை திருமணத்திற்குப் பலிகடாவாக்கப்படுகிறார்.
தின்பண்டங்களுக்கு ஆசைப்பட்டு பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் பாலியல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் வீரலட்சுமி.
போலீஸ் ஆக வேண்டும் எனும் ஆசைப்படும் போதும் பொண்ணு கட்டாயத் திருமணத்தில் தள்ளப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்கிறார்.
பெண் குழந்தைகளுக்கு உரிய ஹாஸ்டலில் படித்து வரும் முத்தழகி தனது ஹாஸ்டல் வார்டனின் கணவரால் பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பம் ஆகிவிடுகிறார். கருக்கலைப்பின் போது முத்தழகி மரணம் ஆகி விடுகிறார்.
தன் அம்மாவின் அடாவடியான குணங்களை கற்றுக் கொண்ட பேச்சியம்மா.
தனது அடாவடித்தனத்தால் கணவர் மீது பொய்யாக பாலியல் புகார் அளிக்கிறார். ஆனால் உலகம் அவரது உண்மை குணம் தெரிந்தவுடன் ஒதுக்கி வைக்கின்றனர். இதனால் தனிமையில் மனமுடைந்த பேச்சியம்மா காணாமல் போய்விடுகிறார்.
தன் அப்பா மற்றும் தனது அத்தையின் கணவர் இருவராலும் பாலியலுக்கு உள்ளாக்கப்படுகிறார் காளீஸ்வரி.
கற்றல் குறைபாடு உள்ள நளினியின் சூழ்நிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. எனவே காணாமல் போய்விடுகின்றார்.
உண்மை காதல் என நம்பி மாட்டிக் கொண்டு அது உண்மை அல்ல என்பதை உணர்ந்த பின்பு காணாமல் போகிறார் சோலை அம்மாள் .
மேற்கண்ட உண்மை சம்பவங்களை ஆசிரியருக்கே உரிய அனுபவத்தில் மிகச் சிறந்த கள அனுபவத்தோடு இந்நூலை படைத்திருக்கிறார் நூலாசிரியர் ரமாதேவி ரத்தினசாமி.
பொதுவாக பெண்களுக்கு கல்வி வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்திருக்கிறோம்.
ஆனால் நம் பெண் குழந்தைகளை தைரியத்துடன் வளர்த்து வருகிரோமா? என்பது கேள்விக்குறியே?
அவர்கள் அனுதினமும் சந்திக்கும் காதல் தொல்லைகள், பாலியல் சீண்டல்கள் போன்றவைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை நாம் சொல்லிக் கொடுத்து உள்ளோமா?
குறிப்பாக நம் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்னென்ன என்பதை நாம் அவர்களுக்கு குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அதுபோன்று பெண்கள் சுய பொருளாதாரத்தில் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும். சுயமாக வாழ பொருளாதாரம் மிகவும் முக்கியமானது.
இன்றைக்கு நகரப் பகுதியில் வசிக்கும் பெண்கள் 40 சதவீதத்துக்கு மேல் ஏதாவது ஒரு வேலையை தேடி சுயமாக வாழ வழிவகை செய்து கொண்டுள்ளார்கள்.
ஆனால் 60% பெண்கள் இன்னும் ஆண்களைச் சார்ந்து அல்லது பெற்றோர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழிகாட்டுதல் எவ்வளவு முக்கியமோ அதுபோன்று பள்ளியில் பயிலும் போது அவர்களுக்கு சரியான ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அவசியம் தேவைப்படுகிறது.
குறிப்பாக “குட் டச்” “பேட் டச்” கல்வி பள்ளியில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.
குழந்தை திருமணம், இளம் வயது தாய்மை அடைதல், ஜாதீய பாகுபாடுகள், கௌரவக் கொலைகள் அது போன்று வளரிளம் பருவ காலத்தில் உள்ள சிக்கல்களை அறிந்து கொள்வதற்கும், அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் திறனும், வழிகாட்டலும் விழிப்புணர்வும் அவர்களுக்கு வழங்கினால் அவர்களின் வாழ்க்கை பாதை மிகச் சிறப்பாக அமையும்.
இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையும் தான் வாழ்தலுக்கான நம்பிக்கையும் பலத்தையும் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அனைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.
அப்போதுதான் பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமைகள் இல்லாத உலகை நாம் உருவாக்க முடியும்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.