விசாலி அக்காவுடன் சேர்ந்து அருகில் இருந்த தோப்புக்குப் போய் வந்ததில் இருந்து சிறுமி வைஷாலியின் போக்கே முற்றிலும் மாறிப் போய்விட்டது.
விசாலிக்கு வயது பதினொன்று; வைஷாலிக்கு வயது எட்டு. அக்கா தங்கை இருவரும் சேர்ந்து கொட்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டால் வீடே கிடுகிடுத்துவிடும்.
“அதுகளா! அதுக ரெண்டும் குட்டிப் பிசாசுக” இப்படித்தான் அவர்களின் தெருவில் எல்லோரும் அக்கா, தங்கையைக் குறித்துச் சொல்வார்கள்.
முருங்கை மரம், புளிய மரம் பேய்களெல்லாம் அக்கா, தங்கைகளின் பெயரைச் சொன்னால் அலறும்.
அக்கா விசாலிக்கு புளியம்பழம் என்றால் வாயெல்லாம் எச்சில் ஊறிவிடும்; வைஷாலிக்கு முழுசாக பழுத்திருக்கக் கூடாது; அரைப்பழம் என்றால் உசுரு அவளுக்கு.
“புளியங்கா… புளியங்கா” என்று சிறுமிகள் போடும் கூச்சலில் புளியமரத்துப் பறவைகள் எல்லாம் நடுங்கியபடி இறக்கை அடித்துப் பறந்து மறையும். புளியமரம் நின்று கொண்டிருக்கும் ஆற்றங்கரையைச் சுற்றி வந்து கிளிகளும், மஞ்சள் மைனாக்களும் ‘புளியங்கா… புளியங்கா‘ என்று பதில் குரல் எழுப்பும்.
சிறு சிறு பூச்சிகளையும், வண்ண வண்ண பூக்களையும் சேகரிப்பதென்றால் கொள்ளைப் பிரியம் விசாலிக்கு. சிறு பூச்சிகளை மயக்கமடையச் செய்து தர்மகோலில் குண்டூசியால் குத்தி வைப்பாள் விசாலி. இதற்காகவே ஒரு சின்ன பாட்டிலில் குளோரோஃபார்ம் மயக்கமருந்தும், சதுர வடிவ தர்மக்கோல்களும், குண்டூசி டப்பாவும் வைத்திருந்தாள் விசாலி.
மெஜந்தா, வயலட், மஞ்சள், ஊதா என்று தோப்பில் பூத்திருக்கும் விதவிதமான பூக்களைப் பறித்து வந்து A4 பேப்பரில் செல்லோடேப்பால் ஒட்டி தன்னுடைய அலமாரியில் பாதுகாப்பாக அடுக்குவாள் விசாலி. பூக்களையும், விதவிதமான வண்டுகளையும் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்ட பிறகு தெருவில் இறங்கி கொட்டம் அடிப்பதை நிறுத்திவிட்டாள் விசாலி.
அக்காவோடு தோப்புக்குள் சுற்றிவரும் போது அரசமர இலைகளையும், பூவரசமர இலைகளையும் பொறுக்கி வருவாள் வைஷாலி. பூவரச இலைகளைச் சுருட்டி பீப்பி செய்து பறவைகளைப் போலவே ஒலி எழுப்புவாள் வைஷாலி.
அரச இலைகளைக் காயவைத்து சல்லடை போன்று மாறிவிடும் இலையின் நரம்புகளை தன்னுடைய நோட்டில் ஒட்டும் வேலையில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கிப் போனாள் வைஷாலி. பேப்பரில் ஒட்டப்பட்ட இலை நரம்புகளில் கிளி, குருவி படங்களை வரைந்து அந்தத் தெருவில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டாள் குட்டிப் பாப்பா வைஷாலி. குட்டிப் பாப்பா செய்யும் பூவரசஇலை பீப்பிகளை ஊதியபடி தெருவைச் சுற்றிவந்தார்கள் அவளது வயதொத்த சிறுமிகள்.
குழந்தைகளின் இசையொலியில் அக்கா, தங்கை வசித்த தெருவே நந்தவனமாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் அந்தத் தெருவில் வசித்த யாரும் விசாலி, வைஷாலியை ‘குட்டிப் பிசாசுகள்” என்று சொல்வதில்லை. எல்லோருக்கும் செல்ல தேவதைகளாக மாறிவிட்டார்கள் அக்கா, தங்கை சிறுமிகள் இருவரும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறு பூச்சிகளையும் வண்டுகளையும் மமக்கமடையச் செய்து குண்டூசியால் குத்துவது சித்ரவதை. இதை ஏற்க முடியவில்லை.