பெரியவர்கள் குழந்தைகளாக மாறவேண்டிய தருணங்கள்..! – மு.சிவகுருநாதன் 

 

(குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வெளியிட்ட  குழந்தை அவள் செய்த முதல் தப்பு உலகச் சிறுகதைகளும் கவிதைகளும் என்ற குறுநூல்  பற்றிய  பதிவு.)

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள், நாம் கொஞ்சம் பெரிய மனிதத்தனத்தை விட்டொழித்து குழந்தைமையைக் கைக்கொள்ள வேண்டும். இது கொஞ்சம் சிக்கலானதுதான்; இல்லையென்றால் நம்மால் குழந்தைகளைப் புரிந்துகொள்ள இயலவே இயலாது. நாம் கடந்து வந்த குழந்தைமையை மீண்டும் நமக்கு உணர்த்த குழந்தைகள் தேவைப்படுகிறார்கள்.

“குழந்தைகள் யாரையும் கரைக்கும் யாரோடும் கரைந்துகொள்ளும் இசையாகவும், தர்க்கங்களுக்குள் நிற்காத இயல்பு கொண்ட புதிரான கவிதையாகவும் இருக்கிறார்கள். நிறைய வரையறைகளை மனதிற்குள் நிரப்பிக் கொண்ட நமக்கு குழந்தைகளின் நெகிழ்வும் கதகதப்பும் கொண்ட மன இயல்பை ஏற்றுக் கொள்வது கடினமாகவும் நிராகரிப்பது எளிதாகவும் இருக்கிறது”, (பக்.06) என்று முன்னுரை சொல்கிறது.

“குழந்தைகள் புரிந்துகொள்ள எளிமையானவர்களா புதிரானவர்களா என்ற கேள்விக்கு இரண்டுமே பதிலாக இருக்கிறது அல்லது இரண்டுமே நிராகரிக்கும்படி இருக்கிறது. குழந்தைகள் நமக்கு இசைவானவர்களாக மாறுவதென்பது நாம் குழந்தைகளுக்கு இணக்கமாக மாற எந்தளவு தயாராக இருக்கிறோம் என்பதோடு தொடர்புடையது”, (பக்.07) இந்த இணக்கம் என்பது  கவிதைகளாகவும் புதிராகவும் இருக்கும் குழந்தைமைக்கு மாறுவதே ஒற்றை வழியாக இருக்க முடியும்.

இந்தக் குறுநூலில் பெரியவர்கள் எழுதிய மூன்று கதைகளும் இரண்டு கவிதைகளும் உள்ளன. இவையனைத்தும் குழந்தைகளைப் பற்றியவை என்பதே ஒற்றுமை.

டொனால்டு பர்த்தலமே (Donald Parthalome) ‘குழந்தை அவள் செய்த முதல் தப்பு’ எனும் தலைப்புக் கதை ராஜ சுந்தரராஜன் மொழிபெயர்ப்பில். (Parthalome – பார்த்தாலுமே என்று தமிழில் எழுதுவது என்னமோ போலிருக்கிறது!)

அக்குழந்தை ஒன்றும் பெரிய குழந்தைகூட இல்லை; 14 அல்லது 15 மாதக் குட்டிக் குழந்தை. புத்தகங்களை கிழிப்பதுதான் அவளது வேலை; இல்லை அவள் செய்யும் தப்பு. ஒரு பக்கம் கிழித்தால் நான்கு மணிநேரம் அறையில் அடைக்க ஒழுக்க விதி நிர்ணயிக்கப்பட்டது. 4 பக்கங்களைக் கிழித்து 16 மணிநேரம் கூட அக்குழந்தை அறையில் அடைபட்டது. ஒரு மணிநேரத்திற்கு மேல் கத்திவிட்டுப் பின்பு களைத்துத் தூங்கிவிடுவதுண்டு.

‘ஆடிக்கொண்டே பிறந்தவள்’ என்ற பெயருடைய அக்குழந்தையிடம் எந்தத் தந்திரங்களும் பலிக்கவில்லை. அறையைவிட்டு வெளியே வரும் குழந்தையின் கண்ணில் புத்தகம் தட்டுப்பட்ட்டால், உடனே கிழிபடும். குழந்தையின் எடை குறைகிறது என்ற தாயின் குரலுக்கும் பிற்கால நீண்ட வாழ்க்கையில் அவள் பிறரோடு ஒருமித்து வாழ வேண்டுமே! என்ற கட்டாயம் செவிசாய்க்க மறுக்கிறது.

சிறுகதை – சொல்வனம் | இதழ் 223

ஒருகட்டத்தில் மனைவி அறைக்கதவின் கொண்டியை கடப்பாறையால் பெயர்த்தெடுத்தார். இருப்பினும் அப்பா மீண்டும் சரிசெய்து காந்த அட்டை செருகும் பூட்டு போடுகிறார். ஆனால் ஒரு முன்னேற்றமும் இல்லை. அக்குழந்தை அறையைவிட்டு வெளியே வந்து புத்தகங்களைப் பிய்த்தெறிவதுதான் வாடிக்கையாக இருக்கிறது.

வேறு என்னதான் வழி? “புத்தகங்களில் இருந்து பக்கங்களைக் கிழித்தல் தப்பில்லை; முன்பு கிழித்ததும் சரிதான்”, என்று அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று. வேறென்ன, இப்போதும் நானும் அவளும் அருகருகே உட்கார்ந்து கொண்டு புத்தகங்களின் பக்கங்களை கிழித்தெறிகிறோம்.

இக்கதையின் ஆசிரியர் பின்நவீனத்துவ எழுத்தாளர், பத்தரிக்கையாளர். தனது தந்தையின் பிற்போக்குவாதத்திற்கு எதிர்வினையாக எழுதத் தொடங்கியவர். கலைத்துப் போடுதல் மற்றும் கொலாஜ் வடிவ பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்.

புத்தகங்களைக் கிழிக்கும் அனுபவத்தில் சொந்தக் கதை ஒன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். நமது வீடெங்கும் புத்தகங்கள் இருக்கத்தானே செய்யும்? எங்களது மூத்த மகள் கவிநிலா (9) குழந்தையிலிருந்தே புத்தகங்களை எடுத்துப் பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிடுவாள். வியப்பாக இருக்கும். அவளிடம் எந்தப் புத்தகத்தையும் அளிக்கலாம். எவ்வித சேதாரமும் ஆகாது. பேனா, பென்சில் கைகளில் கிடைத்தால் எழுதுவதற்கு பேப்பர், நோட்டு உடனே கொடுத்தாக வேண்டும் கிறுக்குவதற்கு.

இளைய மகள் கயல்நிலா (4) அப்படியே நேர்மறை. புத்தகங்கள் கிடைத்தால் போதும், கிழிக்காமல் விடமாட்டாள். அவள் இப்படி கிழிப்பதில் எனது இணையருக்கு கொள்ளை மகிழ்ச்சி. வீடெங்கும் புத்தகங்கள் இருப்பதனால் அவ்வளவு வெறுப்பு! உலகில் புத்தகங்களை நேசிப்பவர்களைவிட வெறுப்பவர்களே அதிகம் போலும்! அவளாவது கிழித்துத் தொலைக்கட்டும் என்கிற நல்லெண்ணம். சுவரில் கிறுக்குவதில் இருவரும் சளைத்தவர்களில்லை. புத்தகங்களை கிழிப்பதை ரசிக்கும் இணையரால் இதைச் சகித்துக்கொள்ள இயலுவதில்லை. பேனா, பென்சில், மார்க்கர் என எது கொண்டும் சுவர்க் கிறுக்கல்கள் இன்றும் தொடர்கின்றன.

கொஞ்சம் காலம் போனபிறகு மூன்று வயதிற்குள்ளாகவே சிறியவள் புத்தகங்களை கிழிப்பதை அறவே விட்டுவிட்டாள். பறவைகள், விலங்குகள் படம் போட்ட புத்தகங்கள் (குறிப்பாக கோவை சதாசிவம் நூல்கள்), பஞ்சு மிட்டாய், குட்டி ஆகாயம், சிறார் கதைகளை எடுத்து தனியாகவும் புத்தகப்பையிலும் வைத்துக் கொள்கிறாள். சிவப்பு அவளுக்குப் பிடித்த கலர்; மார்க்ஸ் தாத்தா (அ.மார்க்ஸ்) புத்தகங்களையும் முதலெழுத்தைப் பார்த்து அடையாளம் கண்டு எடுத்து வைத்துக் கொள்கிறாள். நமக்குத் தேவையென்றால் அவளிடம் கேட்டு அனுமதி பெற்றே வாங்க வேண்டியிருக்கிறது. குழந்தைகள் பலவிதம்! அவற்றைக் கற்கவும் அவைகளிடம் கற்கவும் ஆயுள் போதாது.

இரண்டாவதாக பாலகுமார் விஜயராமன் மொழியாக்க்கத்தில் ஷிர்லி ஜேக்ஸனின் ‘சார்லஸ்’ என்ற கதை. மழலையர் பள்ளியில் படிக்கும் லோரி தனது அன்றாடப் பள்ளி அனுபவங்களைப்ப் பெற்றோரிடம் சொல்லி வருகிறான். லோரி தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமல் ‘சார்லஸ்’ என்ற மாணவன் செய்யும் குறும்புத்தனங்களை தினமும் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளான்.

“சார்லஸ் எப்படி இருப்பான்”, என்ற் கேள்விக்கு, “அவன் என்னைவிடப் பெரியவன்”, என்கிறான். குழந்தைகள் விரைவில் பெரியவர்களாகவே விரும்புகிறார்கள். குழந்தைகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதால் பெரியவர்களால் விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தின் காரணமாகக் கூட இருக்கலாம்.

When A Child Is Mean To Your Child..... - Judgejudyjudy's blog....

ஒருமுறை சார்லஸ் உடற்பயிற்சியும் செய்யாமல், மிஸ்ஸின் நண்பரை உதைத்துவிட்டதாகச் சொல்ல, “சார்லஸை பள்ளியில் என்ன செய்வார்கள் என நீ நினைக்கிறாய்? என்று அவனது அப்பா கேட்க, “பள்ளியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைக்கிறேன்”, என்கிறான் சாதாரணமாக.

மூன்று நான்கு வாரங்களில் சார்லஸ் நல்ல பையனாக மாறத் தொடங்கிவிட்டான். மிஸ்சின் உதவியாளராக மாறிவிட்டான். திடீரென்று, சிறுமியை கெட்ட வார்த்தை சொல்லச் சொன்னதாக ஒரு புகார் சொல்கிறான். பிறகு அவனே மூன்று நான்கு முறை அந்தக் கெட்டவார்த்தையைச் சொல்ல, அவனது வாய் சோப்பு போட்டு கழுவப்படுகிறது.

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் சார்லஸின் பெற்றோரைச் சந்திக்க லோரியின் பெற்றோர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். வகுப்பாசிரியையுடன் உரையாடுகின்றனர்.

“முதல் ஒரு வாரத்திற்கு சமாளிக்கச் சிறிது சிரமமாக இருந்தது” அவர் மெதுவாகக் கூறினார்.

“ஆனால், இப்போழுது எனது குட்டி உதவியாளராக ஆகிவிட்டான், நடுநடுவே சிறுசிறு தவறுகள் அவ்வப்போது இருக்கும், அது பரவாயில்லை”. (…)

சார்லஸ்? (..)

“சார்லஸ்! சார்லஸ் என்று யாரும் இந்தப் பள்ளியில் படிக்கவில்லையே”. (பக்.28&29) என்று கதை முடிகிறது. லோரி தன்னைதான் ‘சார்லஸ்’ ஆக கற்பனை செய்து கொண்டிருக்கிறான். குழந்தைக்குத்தான் இம்மாதிரியான கற்பனை உலகு சாத்தியமாகும்.

ராஜேஷ் சுப்ரமணியன் மொழிபெயர்ப்பில் ஹெச்.ஹெச். முன்ரேவின் ‘அமைதியின் பொம்மைகள்’ மூன்றாவது கதை. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் விளையாட்டு பொம்மைகள் வழியே அவர்கள் தீவிரப் போக்குள்ளவர்களாக மாறுகிறார்கள். போர்கள், வன்முறைகள் தவிர்த்த அமைதிப் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்ற ‘தேசிய அமைதிக் குழுவின்’ பரிந்துரைச் செய்தியுடன் கதை தொடங்குகிறது.

சோதனை முயற்சியாக  ஹார்வி போப் தனது சகோதரி எலெனர் போப்பின் குழந்தைகளுக்கு (எரிக், பெர்டி) புதிய வகைப் பொம்மைகளைப் பரிசளிக்கிறார். பெட்டியைத் திறப்பதற்கு முன்பு அல்பேனிய படை வீரர்கள் அல்லது அரேபிய ஒட்டகப் படைவீரர்கள் என்பதாக அவர்களது கற்பனை நகர்கிறது.

ஆனால், நகராட்சிக் குப்பைத் தொட்டி, ஜான் ஸ்டுவர்ட் மில் பொம்மை, மான்செஸ்டர் YMCA மாதிரிக் கட்டிடம், வாக்குப் பெட்டி, சுகாதார ஆய்வாளர், மாவட்ட கவுன்சிலர், ஆட்சிமன்ற அதிகாரி பொம்மைகள், ஒற்றைச் சக்கரத் தள்ளுவண்டி, மண் வெட்டி, ராபர்ட் ரெக்ஸ், கவிஞர் ஹேமன்ஸ், ரோலண்ட் ஹில், ஜான் ஹெர்ஸ்செல் என பொம்மைகள் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு என்ன விளையாடுவது? அதையும் விளக்குகிறார்கள்.

“வாக்குப் போடாத சமயங்களில் வாக்குப் பெட்டியில் என்ன போடப்படும்?”, உண்மையில் நல்ல கேள்வி. குழந்தைகளால் மட்டுமே இவ்வாறு கேள்விகள் கேட்க இயலும்.

இந்தப் பொம்மைகள் இரண்டை வைத்து தேர்தல் நடத்துவதுபோல விளையாடலாம்.

“அழுகிய முட்டைகள், முஷ்டி சண்டைகள் மற்றும் உடைந்த தலைகளுடன்”, என்று உரக்க சொன்னான் எரிக்.

“அது மட்டும் இல்லை, எல்லோருடைய மூக்குகளும் உடைந்து ரத்தம் வரவேண்டும் மற்றும் எல்லாரும் அதிக அளவில் குடிபோதையில் இருக்கும்படியும்”, என்று எதிரொலித்தான் பெர்டி. (பக்.41)

இல்லையில்லை, முறையாகத் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிப்பதை எப்படி விளையாட வேண்டும் என்று விளக்கம் சொல்கிறார். ஆனால் குழந்தைகளுக்கு போரடிக்கவே, போர்போன் (Bourbon)  காலத்தைப் பற்றிய வீட்டுவேலை இருக்கிறது. வரலாறு படிக்க வேண்டும் என்று தப்பிக்கிறார்கள்.

போர் வருணனைகள் மிகப்படுத்தப்பட்டவை என்று ஹார்வி சமாதானம் சொல்லப்போக, “உங்களுக்கு மேடம் டுபார்ரி பற்றி ஏதேனும் தெரியுமா? அவளுடைய தலை துண்டிக்கப்பட்டது அல்லவா? என்று கேள்வி கேட்டுத் துளைக்கின்றனர். போர்கள் பற்றி அவர்களுக்கு முன்பே நிறைய சொல்லப்பட்டுவிட்டது. டூ லேட்!

ஞாயிறு பள்ளிகளைத் தொடங்கிய ராபர்ட் ரெக்ஸ் தான் லூயி மன்னன், திருமதி ஹேமன்ஸ் மேடம் டேமெயின் டெனோன், ஜான் ஸ்டுவர்ட் மில் மார்ஷல் சாக்ஸ், நகராட்சிக் குப்பைக் கூடைகள் துளையிடப்பட்டு பீரங்கி வண்டிகள் என போர் விளையாட்டு தொடங்கியாயிற்று.

லூயி தன் படைகளுடன்   YMCA கட்டிடத்தை முற்றுகையிட்டு கைப்பற்ற, லூவர் நகருக்கு திரும்பியதும், “அனைத்து பெண்களும் எனக்கே”, என்று உரக்க சொல்ல, “நடக்காது, நீ நினைப்பது நடக்கவே நடக்காது”, ஹேமன்ஸ் மார்ஷல் சாக்சின் இதயத்தைக் கத்தியால் குத்தி ரத்தம் பீறிட சாகடிக்கிறாள். அதைக் கண்ட மார்ஷலின் வீரர்கள் மூர்க்கத்தனத்துடன் நுழைந்து 100 பெண்களைக் கொல்கிறார்கள். உயிர்பிழைத்த 500 பெண்கள் பிரெஞ்ச் கப்பல்களுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். நான் மார்ஷலை (தளபதியை) இழந்துவிட்டேன். ஆனால் வெறும் கைகளுடன் திரும்ப மாட்டேன்”, என்கிறான் லூயி.

Image may contain: 3 people

ஹார்வி தனது சகோதரியிடம் சொல்கிறார், “தோற்றுவிட்டோம்”.

போர் அவர்களுக்கு பாடங்கள், சினிமா, ஊடகம் என்று நிறைய சொல்லிக் கொடுத்துவிட்டது. அவர்கள் உள்ளத்திலிருந்து இனி போர்களை, வன்முறைகளை அழிக்க இயலாது. இந்தியச் சூழலும் போர், வல்லரசு, வெறுப்பரசியல் என்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இவற்றை மடை மாற்றுவது எளிதானதல்ல.

இறுதியாக, ப்ரையன் பேட்டனின் இரு கவிதைகளை செல்மா பிரியதர்சன் தமிழாக்கியுள்ளார். ‘தேர்வு அதிகாரி’ என்ற கவிதையில்,

ஒரு தேர்வெழுத அமர்ந்தேன்

அப்போது நான் குழந்தை

அந்தத் தேர்வு மிக எளிமையானது

அதில் தோல்வியடைவதற்கு எதுவுமே இல்லை”.  (பக்.50)

தொடர்ந்து தேர்வுகளில் தோல்வியடைந்தவனின் வினாத்தாள் கீழ்க்கண்டவாறு உள்ளது.

வினா 1

ஒரு குழந்தையின் கற்பனை எவ்வளவு

விசாலமானது?

வினா 2

தேர்வதிகாரியின் ஆன்மா எவ்வளவு

மேம்போக்கானது?”. (பக்.51)

இக்கவிதை தேர்வை மட்டுமல்ல ஒடுக்கும் ஆதிக்க சக்திகளையும் சேர்த்தே விமர்சிக்கிறது. இவர்களது ஒடுக்குமுறைக்கு தேர்வு ஓர் ஆயுதமாகவல்லவா இருக்கிறது?

ஒரு விஞ்ஞானி, தொலைக் காட்சி செய்தி வாசிப்பாளர், விமானி, நடனக் கலைஞர், வழக்குரைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கணிப்பொறியாளர், ஒப்பனையாளர் என எதுவுமாக என்னால் முடியாது.

ஆயிரமாயிரம் பறவைகள் என்

கிளைகள் வழி பறந்தோடும்படி

நான் ஒரு மரமாவேன்.

பெருந்திமிங்கலங்கள் நீந்தித்

திமிரும்படி

நான் ஒரு பெருங்கடலாவேன்.

எனக்குள் அருவிகள்

சலசலத்தோட, பருந்துகளின்

உறைவிடமாகி

முழுதும் இண்டு இடுக்காக, குன்றும்

குழியுமாகி, பள்ளத்தாக்கும்

நீர்வீழ்ச்சியுமாக

நான் ஒரு நீண்ட மலைத் தொடராவேன். (பக்.52&53)

அவர்களோ அனைத்தும் முடியாது என்கிறார்கள். எங்களது விருப்பங்களில் ஒன்றாக மாறவேண்டிய குழந்தை நீ என்கிறார்கள்.

அவர்களுக்கு என்னைப் புரியாது

நினைத்தால் வைக்கோல் மணக்கும்

தொழுவமாவேன்.

ஒற்றைக்கொம்பு குதிரைகள் இன்னும்

பாய்ந்தோடும்

தொலைந்த கானக வெளியாவேன், (பக்.53&54)

எந்தக் கனவையும் உண்மையாக்கும் என்னை அவர்கள் உணர்வதில்லை; நான் அவர்களுக்கு மத்தியில் உலவும் ஒரு மந்திரவாதி என்பதையும் அவர்கள் உணர்வதேயில்லை, என்ற குழந்தையின் சிறகடிப்பை இந்தக் கவிதையில் உணரமுடிகிறது

நூல் விவரங்கள்:

குழந்தை அவள் செய்த முதல் தப்பு

உலகச் சிறுகதைகளும் கவிதைகளும்

வெளியீடு: குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம்

முதல் பதிப்பு: செப்டம்பர் 2018

பக்கங்கள்: 56

விலை: 50

தொடர்பு முகவரி: 

வானம் அமைப்பு,

7 / 40 L5, பாடசாலை தெரு,

இடையர்பாளையம் ரோடு,

சுந்தராபுரம்,

கோயம்புத்தூர் – 641024.

அலைபேசி: 9605417123

மின்னஞ்சல்: [email protected]

வலைப்பூ: www.kuttiaagaayam.blogspot.com