தேசியக் கல்விக்கொள்கை வரைவில் பள்ளிக்கல்வி குறித்த ஒரு சில பகுதிகள் குறித்த உரையாடல்களின் தொடக்கப் புள்ளியாக மொழி, பாடங்கள், தேர்வு குறித்த சில செய்திகளை மட்டுமே இக்கட்டுரையில் பேசியுள்ளேன். அலங்காரமான, குழப்பமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தேசியக் கல்விக்கொள்கை வரைவு 2019, மிகப்பெருமளவில், ஆழ்ந்த கவனத்தோடு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உடைய இந்தியத் திருநாட்டில் கல்வியின் இன்றைய நிலை என்ன? நாம் மிகத் தீவிரமான கற்றல் சிக்கலில் சிக்கியுள்ளோம். தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள் மிகப்பெரும் எண்ணிக்கையினர் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவுத் திறன்களைஅடையவில்லை.

விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாடு பத்து கோடிக்கும் அதிகமான மாணவர்களைக் கற்றலில் இருந்து எழுத்தறிவின்மைக்கு இழக்க நேரிடும். உடனடியாகக் கல்வியில் மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அதிலும் 85 % மூளை வளர்ச்சி ஆறு வயதிற்குள் நடந்துவிடுவதால் இது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ற பலத்த முன்னெச்சரிக்கையுடன் ஏறத்தாழ ஓராண்டில் 11 பேர் கொண்ட குழு 14 முறை ஓரிரு நாட்கள் கூடி நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடி தேசியக் கல்விக்கொள்கை வரைவை நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் வருங்காலத் தலைமுறையை 21ஆம் நூற்றாண்டில் வாழத் தகுதியாக ஆக்கும் விதமாகவும் உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

நானூறு பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த அறிக்கை பொதுமக்களிடைய தற்போது பிரபலமாக உள்ள வாட்சப் வதந்திகளைப் போன்றே இருக்கிறது. இன்றுவரை நடைமுறையில் உள்ள கல்விமுறையின் குறைபாடுகளைப் பட்டியலிடுகிறது. இவ்வளவு குறைபாடுகள் இப்போது இருக்கின்றன, எங்களுக்கு முன்னாள் எல்லாமே ஊழல், நமது பாரம்பரிய, பழமையான அறிவியல் பூர்வ அணுகுமுறை அல்ல.

எனவே உடனே மாற்றவில்லை என்றால் அழிவுதான். என்று பயம் காட்டித் தனது பாசிசக் கொள்கைகளை அனைத்து துறைகளிலும் திணிப்பதே பா.ஜ.க அரசின் வழிமுறையாக இருக்கிறது. மிகவும் விரிவாகக் குறைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே வந்து இறுதியில் தீர்வுகளைச் சொல்வது போலத் தனது கொள்கைகளைப் புகுத்துகிறது.

மொழி 

பள்ளிக்கல்வி, வட்டார மொழி/ வீட்டில் பேசும் மொழி/ தாய்மொழி மூலமே நிகழ வேண்டும். என்று தாய்மொழிக் கல்வி குறித்து பல்வேறு சான்றுகளுடன் விளக்கும்போது அனைவரும் மனம் மகிழ்வர்.
இதுவரை குழந்தைகள் கற்கவில்லை என்று சொல்லிப் பயம் காட்டியபின் குழந்தைகள் எவ்வளவு திறமையானவர்கள் தெரியுமா! என்று புகழ்ந்து செய்தித் திணிப்புக்கான களத்தை இந்த அறிக்கை அமைக்கிறது.
பல்வேறு ஆய்வுகளின்படி 2 முதல் 8 வயதிற்குள் குழந்தைகள் மிக வேகமாகக் கற்றுக்கொள்வார்கள்.

பல மொழிகளைக் கற்பது அவர்களது அறிவாற்றலை மிகவும் மேம்படுத்தும். எனவே, அடிப்படை நிலையிலேயே மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்கத் தொடங்க வேண்டும். மூன்றாம் வகுப்புக்குள் அம்மொழிகளில் பேசவும், கருத்துகளைப் பரிமாறவும், எழுத்துக்களை இனம் காணவும் அடிப்படையான வாசிப்புத் திறனையும் அடைந்திருக்க வேண்டும். எழுதுவதை மட்டும் கற்றல் மொழியில் செய்யலாம். மூன்றாம் வகுப்புக்கு மேல் எழுதவும் பயிற்சி அளிக்க வேண்டும்.

வட்டார, தாய் மொழியின் சிறப்புகளைச் சொல்லி, ஏன் அந்நிய மொழியான ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்று ஒரு வினாவையும் எழுப்புகிறது தேசியக் கல்விக்கொள்கை. எனவே இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை உணர இந்திய மொழிகளைக் கற்க வேண்டும். அதிலும் செம்மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

வடமொழி அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கிறது. என்று தொடங்கி அதன் பெருமைகளை விரித்துப் பேசி, 64 கலைகள் என்றெல்லாம் ஆசை காட்டி, இலக்கியப் பெருமை பேசும் பக்கங்களின் வழியே வட மொழிக்கான பாதை உருவாக்கப்படுகிறது. மூன்று வயதிற்குப்பின் மொழி கற்றல் குறித்த விரிவான பகுதிகள் குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் அவசியம்.

பாடங்கள்
பாடப்புத்தகங்கள் பெரியதாக இருக்கின்றன என்று யஷ்பால் குழுவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி உடனடியாகப் பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும் என்று சொல்வதைக் கல்வியாளர்களும் குழந்தை நேயர்களும் மகிழ்ச்சியோடு நினைக்கும்போது அதிலும் செய்தித் திணிப்பிற்கான பாதையை அமைக்கிறார்கள்.
ஐந்து அல்லது ஆறு பாடங்களுக்கு மேல் கற்க வேண்டியதில்லை என்று இனிப்பாகத் தொடங்கிப் பல்வேறு விடயங்கள் அதேபோல இனிப்புத் தடவித் திணிக்கப்படுகின்றன.

• ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை ஏதேனும் ஒரு செம்மொழியைக் கற்க வேண்டும். அதன்பின் குழந்தைகள் விரும்பினால் தொடரலாம்.
• நோபல் பரிசு பெற்ற அனைவருமே இசை அறிந்தவர்கள். எனவே கர்நாடக இசை அல்லது இந்துஸ்தானி இசை ஆகிய இந்திய இசைவடிவங்களைக் கற்க வேண்டும்.
• கல்வி இணைச் செயல்பாடு என்று இல்லாமல் விளையாட்டு, ஓவியம், சிற்பம் போன்ற கலைகளையும் பாடமாகக் கற்கவேண்டும்.
• வாழ்வியல் திறன்களில் தொழில்களின் பங்கு முக்கியமாது. எனவே 3 முதல் 8 வயதுக் குழந்தைகளுக்கு தோட்டக்கலை, மட்பாண்டம் செய்தல், மரவேலை போன்றவை கற்றுத்தரப்படும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ற தொழில்கள் ஆண்டு முழுவதும் கற்றுத்தரப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்புவரையான மாணவர்களும் இப்பயிற்சியைத் தொடர்வர்.
• 9 ஆம் வகுப்பில் விரும்பிய பாடங்களை எடுத்துப் படிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகள் குழப்பமான வளரிளம் பருவக் குழந்தைகளைத் திசைதிருப்புகின்றன.
• இந்தியப் பண்பாடு, மொழிகள், கலாச்சாரம், நீதிநெறிகள், பஞ்சதந்திரம், கீதா உபதேசம், தர்க்கம், பாஸ்கராச்சாரியார் சூத்திரங்கள், என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
மேலே சுருக்கமாகச் சொல்லியுள்ள ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான் புராண இதிகாசங்களை அறிவியலின் பெயரால் குழந்தைகளின் மனதுள் எளிதில் திணிக்கவும், இளம் வயதிலேயே தொழில்களின் பக்கம் குழந்தைகளைத் திருப்பும் சூழ்ச்சியையும் உணர முடியும்.

தேர்வு
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மனப்பாட அறிவையே சோதிக்கின்றன. தேர்வு முறைகளை மாற்ற வேண்டும் என்று சொல்லியபின் 3,5,8,10,12 ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வு திணிக்கப்படுகிறது. அத்தனை தடைகளையும் தாண்டி வந்துவிட்டால் இருக்கவே இருக்கிறது, கல்லூரிக்குச் செல்லும் தகுதியை அறிய நாடு முழுமைக்குமான NTA தேர்வு. இடைநிற்றல் இன்னும் இருக்கிறதே! என்று ஒரு பக்கம் வருந்தி மறுபக்கம் பல்வேறு தேர்வுகள் திணிக்கப்படுகின்றன.

தேர்தல் அறிக்கையைப் போல 2025 ஆம் ஆண்டிற்குள் தொடக்கப்பள்ளிகளில் மின்சார வசதி, தண்ணீர் வசதி என்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும் அறிக்கை தனியாரின் மீது தேவையில்லாத சந்தேகம் வேண்டாம் என்கிறது. கல்வியில் தனியாரின் நுழைவையும் வரவேற்கிறது.

இத்தனை ஆண்டுகாலக் கல்வி வரலாற்றில் நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. என்றாலும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் எளிய, நடுத்தர, கிராமப்புற, மலைப்பகுதிக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று அதிக அளவில் பள்ளிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ள காலம் இது. உயர்த்தப்பட இனத்தினருக்கு மட்டுமே பிறப்பிலேயே அறிவு இருக்கிறது என்ற புராணப் புழுகை மீறித் தங்களின் அறிவை ஒடுக்கப்பட்ட, மலைப்பகுதிக் குழந்தைகள் நிரூபித்துவருகிறார்கள்.

அதிக அளவில் தங்களுக்குப் போட்டி உருவாகி விட்டது என்ற பயமே NEET போன்ற நுழைவுத் தேர்வுகளை உருவாக்கியது. கல்வியால் மட்டுமே இளம் மனங்களில் தனது செய்திகளைப் புகுத்த முடியும். முன்னேறத் துடிக்கும் ஒடுக்கப்பட்டவர்களைப் பல்வேறு நிலைகளில் கல்வியிலிருந்து விரட்டும் மாபெரும் சதித்திட்ட வரைவே தேசியக் கல்விக் கொள்கை 2019.

One thought on “குழந்தை மனதில் திணிப்பது சுலபம் | கலகலவகுப்பறை சிவா”
  1. ஏற்கனவே கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட கல்விக்கு மேலதிக அங்கீகாரத்தை வழங்கி, சமூக நீதியையும் அறிவியல் நியதியையும் அறவே மறுத்து, இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அடியில் ஆபத்தான நச்சு வெடியை அலங்காரப் பூச்சு தடவி வைத்திருக்கிறது இந்த தேகெகொ வரைவு .

    வரைவின் வெற்றுக் கூச்சல்களைத் தோலுரித்துக் காட்டுகிறது உங்கள் கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *