Kuzhanthai Short Story by SubhaSri குழந்தை சிறுகதை - சுபாஸ்ரீ




ஏனோ கயலுக்கு அன்று தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தால் மனதில் காமாட்சி அக்காவின் முகமே வந்து சென்றது எப்பொழுதும் காமாட்சி அக்காவிடம் பேசிவிட்டு வந்தால் மிகவும் தெளிவாகவும் சந்தோஷமாகவும் உணர்வாள் அன்று கனத்துடன் வந்தாள் காரணம் காமாட்சியின் மனதில் மறைத்து வைத்திருந்த ரணத்தை கூறியதால் தான்.

எப்பொழுதும் போல அன்றும் காமாட்சியின் வீட்டிற்கு சென்றாள் கயல். அக்கா குட் ஈவினிங் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்ற அவளுக்கு அதிர்ச்சி, எப்பொழுதும் புன்னகையுடன் வரவேற்கும் அக்காவின் முகத்தில் சோகமும் துக்கமும் கண்களில் கண்ணீருடன் பார்க்கும்போது என்னவென்றே புரியாமல் கேட்க காமாட்சியும் மனதில் வைத்து அழுத்திக் கொண்டு இருந்ததை யாரிடம் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தது போல் சொல்ல ஆரம்பித்தாள், உனக்கே தெரியும் எங்களுக்கு ஏழு வருடம் ஆகியும் குழந்தை இல்லை என்று, இந்த ஏழு வருடத்தில் எங்கு சென்றாலும் அறிவுரையும் அவமானமும் எனக்குத்தான், பெண் ஜென்மமே பாவம் போல தோன்றுகிறது கயல், ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தாச்சு எத்தனையோ மருந்து மாத்திரைகள் எல்லாம் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை பணமும் கரையுது உடம்பும் மனசும் ரணம் ஆகுறது தான் மிச்சம்.

இப்போது என்னென்னா அவருக்கு இன்னொரு கல்யாணம் பற்றிப் பேசுகிறார்கள், குழந்தை இல்லை என்றது எனக்கு மட்டும் வருத்தமா இருக்காதா சொல்லு, அதுக்கு இதுதான் தீர்வா? அந்த நேரம் கயலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, கவலைப்படாதீங்க அக்கா, கடவுள் கூட இருப்பார் என்று சொல்லிவிட்டு வந்து விட்டாள்.

வீட்டிற்கு வந்தவளுக்கு காமாட்சியின் பேச்சிலேயே மனம் நின்றது, எவ்வளவு மன வலிகளுடன் பேசினார்கள்? பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கிடையாதா என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டே,இதே சிந்தனையுடன் உறங்கியும் போனாள்.

மறுநாள் காலையிலேயே காமாட்சியின் வீட்டிற்கு சென்றால் அங்கு நிறையப் பேர் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் அவள் உள்ளே போகலாமா வேண்டாமா என்று தயங்கி கொண்டிருந்தாள், காமாட்சி மட்டுமே அவளுக்கு தெரிந்தாள் வாடிய முகத்துடன்,அப்போது காமாட்சியின் கணவர், அரவிந்தன் குரல் கேட்டது.
எதற்காகவும் என் மனைவியை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. குழந்தை பிறந்தாலும், இல்லை எங்களுக்கு அந்த வரம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குழந்தையாய் என் மனைவியைப் பார்த்துக் கொள்வேன், அவளும் என்னை அப்படித்தான் பார்த்துக் கொள்கிறாள் இது போதும், எத்தனையோ குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாமல் அனாதை ஆசிரமத்தில் உள்ளனர், எங்களால் முடிந்த அளவிற்கு அந்த குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வோம்.
இரண்டாவது கல்யாணம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை, எங்கள் வாழ்க்கையை எங்களை வாழவிடுங்கள், என்று திட்டவட்டமாக பேசியது காதில் கேட்டது.

இப்பொழுதும் காமாட்சி அக்காவின் கண்களில் கண்ணீரை கண்டால் கயல், ஆனால் இம்முறை முகத்தில் அன்பும் மகிழ்ச்சியும் தெரிந்தது எல்லா ஆண்களும் அரவிந்த் மாமா போல மனிதநேயமும், பெண்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியவாறு அவள் வீட்டிற்குள் நிம்மதியாக சென்றாள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “குழந்தை சிறுகதை – சுபாஸ்ரீ”
  1. அருமையான சிறுகதை💐👌எல்லா இணைகளும் நல்ல புரிதலோடு இருந்துவிட்டால் வாழ்க்கை இனிமைதான்💐💐💐💐வாழ்த்துகள் தோழர்…தொடர்ந்து சிறப்பு செய்க💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *