குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம்
“மனதில் குறுகுறுப்பு உருவாகி, இளையவர்கள் தாமாக இந்தக் கேள்வியை கேட்கும்வரை காத்திருந்து பதிலை தர வேண்டும் என்கின்றனர் குழந்தை மனநல நிபுணர்கள். கேள்வி கேட்கும் முன்னர் அறிமுகம் செய்வதோ; கேள்வியைக் கேட்ட பின்னர் தட்டிக் கழிப்பது பிசகு என்கின்றனர். நம்முடைய குழந்தை, உற்றார், உறவினர், குழந்தைகள் ஏன நமக்குத் தெரிந்த எந்த வளரும் இளையோரும் இந்த கேள்வியை எழுப்பினால் பதில் தர இந்த நூல் எளிதில் உதவும்.”
த. வி. வெங்கடேஸ்வரன் (விஞ்ஞானி, விஞ்ஞான் பிரச்சார அமைப்பு)
“குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்” என்ற கேள்வி சிறுவயதில் தொடங்கி-தங்களது இளம்வயதில் அரசல் புரசலாகக் கேட்டு அறிந்து, பின்னர் 12ஆம் வகுப்பு புத்தகம், இணையம், சக நண்பர்களின் பகிர்தல் என முட்டி மோதி தாமாகவோ அல்லது தன்னைப் போன்ற சக வயதிலுள்ளவர்களின் கூற்றை நம்பியோ மட்டுமே விடை காணுவதே நம் நிலத்தின் பண்பாடு. ஆனால், அதே நேரம் பருவம் எய்திய உடன் சடங்கு நடத்துவதும் இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆண் பிள்ளைகளின் நட்பு வட்டம், பல்வேறு வயதினரை உள்ளடக்கி பல்வேறு விதமான வழிவகைகள் மூலம் விடை காணும். இவை அனைத்துமே, பல நேரங்களில் பிழையான தகவல்கள், தவறான புரிதல்களிலே கொண்டு சேர்த்துவிடுகின்றன.
இந்தச் சூழலில் நமது கல்வித் திட்டத்தில் +12 பாடத்தில் உள்ள அறிவியல் ரீதியான விளக்கம் என்பது நடத்தப்படாமலே கடந்துவிடுவது எனது பள்ளி காலத்தின் அனுபவமாக இருந்தது. ஆனால், தற்போது சற்று அந்தப் போக்கு மாறியிருக்கிறதைக் கவனிக்க முடிகிறது. ஆண்-பெண் உடல் அமைப்பு குறித்தும், மாதவிடாய், குழந்தைகள் உருவாவது குறித்தும் வயதிற்கேற்ப சில பள்ளிகளில் சொல்லித் தருவது இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து வருவதைக் கவனிக்க முடிகிறது.
வீடுகளும் சில மாற்றங்களை மெதுவாகச் செய்துவருவதையும் நாம் அனைவருமே அனுபவ ரீதியாக அறிந்து வருகிறோம். இவை ஒருபுறம் இருக்க, இன்றைய பெற்றோர் & ஆசிரியர்களுக்கு உதவும்படியான நூல்களின் தேவையும் இருந்து வருகிறது. வயதிற்கு ஏற்றார்போல் எதைச் சொல்வது, எதைத் தவிர்ப்பது என்ற முடிவெடுக்க மனநிலை ஆலோசகரின் உதவியோ அல்லது அவர்களின் அறிவுரையின் பெயரில் உருவான புத்தகங்களோ தேவையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதுபோன்ற புத்தகங்கள் ஒவ்வொரு காலத்திலும், வயதிற்கேற்ப உருவாகி வருவதைக் காணமுடிகிறது. தமிழில் அதுபோன்ற முயற்சிகளை எடுப்பது என்பது மிகவும் சவாலானது.
அந்தச் சவாலின் முதல் முயற்சியாக இந்தப் புத்தகத்தை நான் பார்க்கிறேன். ஆங்கிலத்தில் 1960களில் “How Babies are made” எனும் இந்தப் புத்தகம் முதல் பதிப்பு கண்டுள்ளது. அதன் பிறகு அறிவியல் அமைப்புகள் மூலம் இந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. தற்போது கிட்டத்தட்ட 60ஆண்டுகள் பிறகு தற்போது தமிழில் வெளியாகியுள்ளது. இந்தக் காலத்திற்கேற்ப நாம் இன்னும் வெவ்வேறு வடிவில் வயதிற்கேற்ப உரையாடலை நடத்திட இந்தப் புத்தகம் ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது.
முனைவர் ஹேமபிரபா மிகவும் கவனத்துடன் மொழிபெயர்த்துள்ளார். வண்ணப்படங்களுடன் இந்தப் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது.
முன்னுரையில் த.வி அவர்கள் கூறியதுபோல, பதின்பருவத்தினரிடமிருந்து தாமாகக் கேள்வி எழும்போது அவர்களது வயதையும், மனதையும் சூழல் அறிந்து நாம் பதில்கூற இந்தப் புத்தகம் கட்டாயம் உதவும். இந்தப் புத்தகம் முதலில் பெரியவர்களால் வாசிக்கப்பட்டு, பின்னர் இளையோருக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
நூலின் தகவல்கள் :
புத்தகம்: குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்
ஆங்கில மூலம்: ஸ்டீவன் செப் & அன்ட்ரூ ஆண்ட்ரி
தமிழில்: ஹேமபிரபா
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/kuzhanthaikal-eppadi-uruvagirarkal/
நூல் அறிமுகம் எழுதியவர் :
பஞ்சு மிட்டாய் பிரபு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

