Kuzhanthaiyin kuthukalam Short Story by Vinthan Synopsis 72 Written by Ramachandra Vaidyanath. விந்தனின் குழந்தையின் குதூகலம் சிறுகதை

சிறுகதைச் சுருக்கம் 72: விந்தனின் குழந்தையின் குதூகலம் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்



மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்கள்.

         குழந்தையின் குதூகலம்
         விந்தன்

அன்றிரவு சங்கருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் அன்று மாலை வாங்கிய ஆடும் குதிரையின் மீதே இருந்தது. அதன் மீது தான் ஏறிக்கொண்டு ஆனந்தச் சவாரி செய்வது போலவும், அது ஆகாய விதியெல்லாம் தூள் பறக்கப் பறந்து செல்வது போலவும் அவன் கற்பனை செய்து கொண்டிருந்தான்.

பொழுது விடிந்ததும் ஒரு விநாடிகூட அவனால் தாமதிக்க முடியவில்லை. இட்லியை மறந்தான். சட்னியை மறந்தான். காப்பியைக் கூட மறந்து விட்டான். அந்த ஆடும் மரக்குதிரையை எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுவதற்காகத் தெருவுக்கு ஓடோடியும் வந்து விட்டான். அந்த குதிரையை வைத்துக் கொண்டு அவன் தன் வீட்டிலேயே ஆட்டம் போட்டிருக்கலாம். ஆனால் என்ன பிரயோசனம் அதனால்? அந்த குதிரை வாங்கிய வைபவத்தைப் பற்றி அவன் தன் நண்பர்களிடமெல்லாம் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்க, அதை தன் வீட்டுக் கூடத்திலேயே வைத்துக் கொண்டு ஆடினால் அவ்வளவு சுகப்படுமா?
சங்கர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அந்தக் குதிரையின் மீது ஏறி அவன் “ஹை ஹை” என்று ஓர் ஆட்டம் போட்டதுதான் தாமதம், அப்பொழுதுதான் படுக்கையை விட்டு எழுந்த எதிர்வீட்டு மணி பறந்தோடி வந்தான்.

‘என் அப்பா வாங்கிக் கொடுத்தார்’ என்று சங்கர் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் விஷயத்தை அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துவிட அவனுக்கு விருப்பமில்லை.

நேற்று ஞாயிற்றுக் கிழமையாதலால் தன் அப்பா அம்மாவுடன் சினிமாவுக்குப் போனதையும், பின்னர் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டதையும், பின் பீச்சுக்குப் போனதையும், அப்பாலே பஜாருக்கு வந்து இந்தக் குதிரையை வாங்கினதையும் நீட்டி முழக்கினான். மணிக்கோ அவன் சொன்ன சினிமா, ஹோட்டல், பீச், பஜார் பற்றி எதுவுமே தெரியாது மட்டுமில்லை சென்றதும் கிடையாது. அவை பற்றியும் சங்கர் சாங்கோபாங்கமாக விவரணம் செய்தான்.

“சங்கர் சங்கர், இந்தக் குதிரை மேலே நானும் கொஞ்ச நேரம் ஏறிச் சவாரி செய்யட்டுமா?” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டே அந்தக் குதிரையை நெருங்கினான் மணி. “போடா போ” என்று எரிச்சலுடன் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் சங்கர். கதிர்வேல் நாடார் எண்ணெய் மண்டியில் மணியின் தகப்பனாருக்கு வேலை. வரவு செலவுக் கணக்கைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வாங்க வருவோருக்கு எண்ணெய் அளந்து ஊற்றும் வரை உள்ள எல்லா வேலைகளையும் அவரேதான் பார்த்துக் கொள்ள வேண்டும். மாதச் சம்பளம் முழுசாக அவருக்குப் பதினைந்து ரூபாய். இவ்வளவு தாராளமாக நடார் அவருக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் பூமிக்கும் வானத்துக்குமாக விரிந்து கிடந்த அவருடைய பரந்த மனம்தான் என்றாலும், இன்னொரு விசேஷ காரணமும் இருந்தது.

கடலையெண்ணெயை நல்லெண்ணெயாக்குவது எப்படி: ஒரு மணங்கு தேங்காண்ணெயில் எவ்வளவு கடலையெண்ணெய் சேர்க்கலாம்: எடையைக் கூடுதலாக்க என்னத்தைப் போட்டுக் கரைப்பது: என்பது போன்ற விஷயங்களில் மணியின் தகப்பனாருக்கு முப்பது வருடகால அனுபவம் உண்டு. அந்த முப்பது வருட கால அனுபவத்தையும் அவர் வேறு எங்கிருந்தும் அடைந்துவிடவில்லை. கதிர்வேலு நாடார் கடையிலிருந்தேதான் அடைந்திருந்தார். மேற்கூறியபடியெல்லாம் செய்வது பாவம் என்பதைக் கதிர்வேலு நாடார் அறியாமலிருந்தார் என்று சொல்லிவிடவும் முடியாது. ஆனால் அந்தப் பாவத்துக்குத் தண்டனை இந்த ஜன்மத்திலா கிடைக்கப் போகிறது? அடுத்த ஜன்மத்தில்தானே என்ற தைரியம் அவருக்கு.

இந்த தைரியம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவருக்குக் கொஞ்சம் அச்சமும் இருக்கத்தான் இருந்தது. அதற்காக அவர் சர்க்கார் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் லஞ்சத்தோடு, லஞ்சமாக சுவாமிகளுக்கும் அவ்வப்போது கும்பாபிஷேகம் செய்து வைப்பது, லட்ச தீபம் ஏற்றி வைப்பது, திருவிழா நடத்துவது இம்மாதிரி ஏதாவது செய்து அடியார்க்கு நல்லாராய் அன்புக்கும் ஆண்டவனுக்கும் அடிமையாய் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியாராய் சத்தியமே உருவாய் பராபரத்தின் அருளால் வாழ்ந்து வந்தார்.

மணியின் தகப்பனாருக்குத் தம் எஜமானரின் மேல் கொள்ளை ஆசை. ‘எசமான் மாணிக்கம், மாணிக்கம்ன்னு என் மேலே உசிரையே வச்சிருக்காரு’ என்று தம் மனைவியிடம் அவர் பெருமையுடன் சொல்லிக் கொள்வார். ‘சம்பளத்திலே ஒண்ணையும் காணோமே’ என்பாள் அவள் அலட்சியமாக,
“சீ போடி பணமா பெரிது? மனிசன் அன்பு இல்லே பெரிசு” என்பார் மாணிக்கம் பிள்ளை.

தமக்கு உலகம் இன்னதென்று தெரிந்த நாளிலிருந்து அதாவது நாடார் கடையில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து சூரியோதயத்தையோ அதன் அஸ்தமனத்தையோ திருவாளர் மாணிக்கம் பிள்ளை அவர்கள் தம் வீட்டிலிருந்து பார்க்கும் பாவத்தை ஒரு நாளாவது செய்தவர் அல்ல. எண்ணெய் மண்டியில் இருந்தபடிதான் பார்ப்பார். கடைச்சிப்பந்திகள் சட்டமோ அவர் இருந்த திக்கைக் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

இந்த அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கிறதே அது நம் மாணிக்கம் பிள்ளையை அடியோடு கைவிட்டு விட்டதென்றும் சொல்விட முடியாது. ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த அவருக்கு மணி ஒருவன் மட்டும்தான் உயிருடன் இருந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தன் தகப்பனார் வேலைக்குப் போகும்போதும், வீடு திரும்பும்போதும் மணி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பான். ஆகவே அன்றுவரை தந்தையும் மகனும் ஒருவரையொருவர் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்க்காமலே இருந்து வந்தது.

‘அப்பா எங்கே அம்மா?’ என்று அடிக்கடி அவன் தன் தாயாரைக் கேட்பதுண்டு. ‘அவள் வேலைக்குப் போயிருக்கிறார்’ என்பாள். ஒரு சமயம் ‘ஊருக்குப் போயிருக்கிறார்’ என்பாள். இன்னொரு சமயம் தொந்தரவு தாங்காமல் சில சமயம் ‘அப்பா இறந்துவிட்டார்’ என்று அவள் கொஞ்சங்கூடக் கூசாமல் சொல்லிவிடுவதும் உண்டு.

இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு மணிக்கு அலுத்துப் போய்விட்டது. அப்பா எப்படியாவது தொலைந்து போகட்டும், அவரைப் பற்றிய கவலையே நமக்கு வேண்டாம் என்று எண்ணியவனாய் அன்று அவன் தன் தாயாரை நோக்கி “அம்மா என்னை பீச்சுக்காச்சும் ஒரு நாளைக்குக் கூட்டிக்கிட்டுப் போயேன்” என்றான்.
“அந்தப் பாழும் பீச் எப்படியிருக்கும் என்னமாயிருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாதேடா கண்ணு” என்றாள் அவள். மணிக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. “பொய் சொல்லாதே அம்மா, நிஜமாச் சொல்லு” என்றான் மணி.

“நிஜமாத்தான் சொல்றேன், அது எந்தப் பக்கம் இருக்கும் என்றுகூட இன்றுவரை எனக்குத் தெரியாதேடா”. மணிக்கு அழுகை வந்துவிட்டது. அழ ஆரம்பித்து விட்டான். தாயார் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை. அழுதபடியே சிறிது நேரத்திற்கெல்லாம் அயர்ந்து தூங்கிவிட்டான். அன்றிரவு மாணிக்கம் பிள்ளை சாப்பிட்டானதும் தன்னை பீச்சுக்காவது கூட்டிக் கொண்டு போகும்படி குழந்தை அழுத விஷயத்தை அவரிடம் தெரிவித்தாள் அவருடைய மனைவி.

‘எல்லா விசயமும் தெரிந்த நீயே இப்படிச் சொன்னா, நான் என்ன பண்றது? செலவுக்குக் காசு தேடற விசயம் ஒரு பக்கம் இருக்கட்டும் முதல்லே நேரம் இருக்கா அதைச் சொல்லு’ என்றார் மாணிக்கம் பிள்ளை. அதற்கு அடுத்தநாள்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் விடிந்ததும் விடியாததுமாகத் தன் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டு வேலைகளில் இறங்கியிருந்தாள் மணியின் தாயார். மணி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
“அம்மா பூச்சாண்டி வந்து என்னைப் பிடிச்சுக்கிட்டானே!” என்று திடீரென்ற அவன் வாசலிலிருந்தபடியே அலறியதைக் கேட்டதும் “ஐயோ, என்னடா கண்ணு” என்று கதறிக் கொண்டே தாயார் வாசலுக்கு ஓடோடியும் வந்தாள்.

முகத்தில் தாடியும் மீசையும் வளர்ந்து பார்ப்பதற்கு விகாரமாயிருந்த ஒரு தரித்திர உருவம் மணியை ஆசையுடன் கட்டிப் பிடித்துத் தூக்கிக் கொண்டிருந்தது. அவள் அந்த உருவத்தைக் கண்டு பயந்துவிடவில்லை, முக மலர்ச்சியுடன் “அவர் தாண்டா உன் அப்பா” என்றாள்.

“நிஜமாவா அம்மா, என் அப்பாவா அம்மா” என்றான் ஆச்சரியத்துடன்

“ஆமாண்டா, ஆமாம்” என்றாள் அவள்.

“அப்படின்னா இனிமே நான் அப்பாவோட சினிமாவுக்குப் போவேன், ஹோட்டலுக்குப் போவேன், பீச்சுக்குக்கூடப் போவேன்” என்று பொங்கி வந்த சந்தோஷத்தில் அடுக்கிக் கொண்டே போனான் மணி, மாணிக்கம் பிள்ளை அவனுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. “அந்ததப் பாவிதான் எனக்கு வயசாயிடுச்சுன்னு என்னை வேலையிலிருந்து தள்ளிவிட்டானே” என்றார்.

“என்ன?” திடுக்கிட்டாள் அவள்,

“ஆமாண்டி, ஆமாம்” என்றார் அவர் அலுப்புடன்.

“இதுதான் விசயமா, கொஞ்சம் நஞ்சம் பணம் கூடக் கொடுக்கலையா?” என்று கேட்டாள் அவள்.

“அதக்கூடக் கேட்டுப் பார்த்தேன், இத்தனை வருசமா உனக்கு நான் வேலை கொடுத்து ஆதரிச்சதற்கு நீதாண்டா எனக்கு ஏதாச்சும் கொடுத்துவிட்டுப் போகணும் என்கிறானே” என்றார் அவர். குழந்தை மணிக்கு அப்பாவைப் பார்த்த பிறகு அங்கே நிற்கவே மனமில்லை. குதி குதி என்று குதித்துக் கொண்டே வாசலுக்கு ஓடி வந்தான். அவன் எதிர்பார்த்தபடி சங்கரும் வந்து கொண்டிருந்தான். “டேய் சங்கர் என் அப்பா வந்துட்டாருடா, இனிமே நான் உன்னைப் போலவே சினிமாவுக்கு ஹோட்டலுக்கு பீச்சுக்கு எல்லாம் போவேன் தெரியுமா!” என்று பெருமையடித்துக் கொண்டான்.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *