நூல் அறிமுகம்: லா.ச.ராமாமிருதம் அவர்களின் *விளிம்பில்* – பா. அசோக்குமார்நூல்: “விளிம்பில்”
ஆசிரியர்: லா.ச.ராமாமிருதம்
வெளியீடு: வானதி பதிப்பகம்
பக்கங்கள்:148
விலை: ₹. 40
இந்நூல் 2001 ஆம் ஆண்டு லா.ச.ரா அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது. லா.ச.ரா அவர்களின் சிற்சில சிறுகதைகள் மட்டுமே வாசித்த நிலையில் மதுரையில் பழைய புத்தகக் கடையில் கையில் அகப்பட்ட இந்நூலை மிகக் கச்சிதமாக பற்றிக் கொண்டதில் அகமகிழ்கிறேன். புக் பைண்டிங் செய்வதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட இருந்த நூலாக இருக்குமென அனுமானிக்கிறேன். (அட்டைப்படம் இல்லை)
நாவலாக இருக்குமென்று எண்ணி எடுத்திருந்த நிலையில் முன்னுரையில் இந்நூல் லா.ச.ரா அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் சில நினைவுகள் என அறிந்து வியந்தேன். எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பது ஒரு சுகமெனில் எழுத்தாளர்களின் சுயவரலாற்றைப் படிப்பதும் தனிசுகமே. அதிலும் கூடுதல் சிறப்பாக எழுத்தாளரின் வாய்மொழியில் பகர்வதாகவே அமைந்துள்ள இந்நூல் புதியதொரு அனுபவமே…
இந்நூலைப் படிக்கும் போது கே.வி.நாதன் அவர்கள் எழுதிய “மௌனியின் மறுபக்கம்” நூலினைப் படித்த உணர்வு வந்து வந்து போனது என்பதே நிதர்சனம். அதில் மௌனி அவர்களின் கடிதங்கள் வாயிலாக அவரின் வாழ்வியலை உணர்ந்தது போலவே இந்நூலில் எழுத்தாளரின் நினைவோட்டங்கள் வாயிலாகவும் டைரிக் குறிப்புகள் வழியாகவும் வாழ்க்கை அனுபவங்களை உணர முடிந்தது.
“விளிம்பில்” என்று இந்நூலுக்கு அவர் பெயர்சூட்டியவிதம் கனக்கச்சிதமே. வாழ்வின் இறுதியில் மரணத்தை எதிர்நோக்கிய நிலையை பிரதிபலிக்கும் பிம்பமே இந்த விளிம்பில். இளமைப் பருவம் முதலான வாழ்வியலை இந்நூலில் அவர் பகிரவில்லை என்பது குறையாக இருந்தபோதிலும் “விளிம்பில்” என்ற தலைப்பிற்கு இணக்கமான முறையில் இந்த வயது முதிர்ந்த வாழ்வியல் அனுபவங்களே இந்நாலில் பகிர்ந்துள்ளார் லா.ச.ரா அவர்கள்.
writermaanee: லா. ச. ராமாமிர்தம்
லா. ச. ராமாமிர்தம்
முதுமைப் பருவத்தில் வரும் ஞாபகமறதியையே மிக அதிக இடங்களில் பதிவு செய்துள்ளார். மனைவியுடன் வாழும் பாக்கியம் இருந்த நிலையிலும் தனிமையில் தனக்குத்தானே உரையாடும் அனுபவ பகிர்வு அலாதியான அனுபவத்தை ஊட்டக்கூடியதே. மகன் மற்றும் மகளுடன் இருந்து வரும் அனுசரணையான அணுகுமுறையை யாரும் கவனத்தில் கொள்ளக்கூடியதே.. குறிப்பாக பேத்திக்கும் அவருக்குமான நிகழ்வுகள் ஒவ்வொன்றும் குதூகலத்தில் நம்மை ஆழ்த்தக்கூடியவைகளே…
பொதுவாக லா.ச.ரா அவர்களின் படைப்புலகம் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனம் “புரிவதில்லை” என்பதே. அதனை அவரே இந்நூலில் பல இடங்களில் மேற்கோள் காட்டியிருப்பது சிறப்புக்குரியதே. சில இடங்களில் சில பகுதிகளை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்ள முனையும் சூழலே உள்ளது என்பது நெருடலே. ஒருவேளை என்னுடைய வாசக அறிவு அவ்வளவுதானோ என்னவோ…
மனைவிக்கும் அவருக்குமான அந்நியோன்யமான உறவு சிலாகித்து மகிழும் வண்ணம் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சிவாஜி ரசிகையாக தொலைக்காட்சியில் அவர் மனைவி திரைப்படம் பார்க்கும் சூழல் கவித்துவமானது. சதாபிஷேகம் நடைபெறும் வைபவம் கவிதை வடிவில் தத்துவார்த்த ரீதியில் காட்சிபடுத்தி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார் லா.ச.ரா அவர்கள்.
தனது படைப்புகள் குறித்த எவ்வித புகழுரைகள் இடம்பெறா வண்ணம் அமைத்த விதம் சிந்திக்க வைக்கிறது. நினைவோட்டங்களில் முன்னுக்குப் பின்னாக பயணித்து மனதில் உதிக்கும் எண்ணங்களை எவ்வித சமசரமின்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்த வகையில் மிரட்டியுள்ளார் எனலாம். தனது வாழ்வியலை தானே அசை போட்ட வண்ணம் தான் ருசித்த சுவையை வாசகனுக்கு கடத்த முயன்ற முயற்சியாகவே இதனை பாவிக்கிறேன்.
மனைவியின் இளமைப் பருவ நிகழ்வுகளைக் கூறக் கேட்டு பகிர்ந்த அனுபவங்கள் படு சுவாரஸ்யமான நிகழ்வுகளே. அதிலும் குறிப்பாக தெப்பத்தில் அகல் விளக்கிட்டு அதன் மூலம் மாப்பிள்ளை குறித்த அனுமானக் கணிப்பு நடத்தும் நிகழ்வுகள் கவித்துவமானவை. அதனை தனது வாழ்வோடு பொருத்த நினைத்து மனைவியுடன் கேட்க நினைத்து தயக்கம் உண்டாகி மனம் நெகிழும் தருணங்கள் ரசனைமிக்கவையே…
No description available.
தனது மனைவியின் ஞாபகத்திறனை மெச்சி குதூகலத்தில் திளைத்ததுடன் நில்லாமல் அவளி(ரி)ன் ஞாபகக்கீற்றை கிளறி இதுபோல் ஓராயிரம் கதைகளை அறிந்து நூல்கள் பல படைக்கலாமே என்ற அவாவை வெளிப்படுத்திய நிகழ்வுகள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளே.. முதுமைப் பருவத்தில் உண்டாகும் உடல் சங்கடங்களை பகிர அதிகமாக மெனக்கெடாமல் உள்ளம் சார்ந்த நினைவு அழிவின் துயரங்களையே பிரதானமாக பகிர முயன்றதாகவே உணர்கிறேன்.
தெய்வத்திற்கும் அவருக்குமான பிடித்தத்தை பகிரும் தருணங்கள் சற்று அயர்ச்சியூட்டுவதாக தோன்றினாலும் அதிலுள்ள பக்தியும் புனிதமும் போற்றுதலுக்குரியதே. குலதெய்வ வழிபாடு குறித்த கருத்துக்கள் நமது வாழ்வில் பின்பற்ற உதவக்கூடியதே. அவர் கைப்பட எழுதிய முன்னுரை இந்நூலில் இடம்பெற்றுள்ளது வெகுசிறப்பான அனுபவமே.
வாழ்வின் விளிம்பு நிலையில் நின்று கொண்டு மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு தனது நிகழ்வால வாழ்வனுபவத்தை உள்ளது உள்ளபடி பகிரத் துணிந்த துணிச்சல் படைப்பாளருக்கே சாத்தியமாகும் என கருதுகிறேன்.
“காலா..சற்றே என்காலருகே வாடா..உன்னை ஓங்கி மிதிக்கிறேன்” என்ற பாரதியின் வீர வரிகளே நினைவில் வந்து செல்கின்றன.  மீண்டுமொரு முறை வாசித்தல் அவசியமென கருதுகிறேன்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.