நூல் அறிமுகம்: லா. ச. ராமாமிர்தமின் *கேரளத்தில் எங்கோ* – ரூஃபினா ராஜ்குமார்நாவல் : கேரளத்தில் எங்கோ
ஆசிரியர் : லா. ச. ராமாமிர்தம்
பதிப்பகம் : உயிர்மை
மொத்த பக்கங்கள் என்னவோ 112 தான். ஆனால் படித்து முடிக்கும் போது இவ்வளவு கனத்தை மனதில் ஏற்ற முடியுமா? இத்தனை பக்கங்களை இத்தனை நாள் வைத்து வைத்து படிக்க முடியுமா?
லா.ச.ரா வின் கதைக்கு நான் எங்கே விளக்கம் சொல்வது. நான் ரசித்த வரிகளை சொல்கிறேன். நீங்கள் வாசித்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.
” மகனே நான் உனக்கு வேலி அல்ல. நீயே தான் உனக்கு வேலி. நான் உன்னுடைய வேர். நீ என்னைத் தாங்கும் விழுது. நான் இன்னும் அசக்தனாகவில்லை. ஆனால் உன் மேல் சாய விரும்புகிறேன்.அது எனக்குப் பெருமை. ஆகையால் கிட்டே வா” லா.ச.ராவின் இந்த வரிகள் இன்றும் ஒவ்வொரு தகப்பனும் தன் மகனைப் பார்த்து சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
“அப்பா உங்கள் புத்திக்கூர்மை உங்களையே வெட்டுமளவுக்கு அதைத் தீட்டி விட்டீர்கள். எதிராளிக்கு சந்தர்ப்பம் அளிக்காமல் எல்லாப் பதிலையும் நீங்களே சொல்லி விடுகிறீர்கள். கேள்வியும் உங்களுடையது. பதிலும் உங்களுடையதா? எதிராளிக்கு ஒண்ணுமே கிடையாதா?”
இதை நாமும் உள் வாங்கிக் கொள்ள வேண்டும். எதிரே இருப்பவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நமக்கு புரிந்தாலும் அவரைச் சொல்ல விட வேண்டும். எதிராளிக்கு ஒண்ணுமே கிடையாதா என்னும் ஆதங்கத்தை அவரிடமிருந்து போக்கணும்.
” வாதாங்கொட்டை மேட்டு விழிகள். கீழுதட்டின் மேலுறங்கும் மேலுதடு. அசப்பில் சில ஓரங்களில் சில சாயல்களில் அந்த முகம் சிற்பியின் கனவாயிருக்கக் கூடும்”
கீழுதட்டின் மேலுறங்கும் மேலுதடு. தன் ஆசை நாயகனின் மார் மேல் கலவி முடித்த பெண் சாய்துறங்குவதும் அவன் கரங்கள் அரவணைப்பாய் தோள் அணைத்துக் கிடக்கும் காட்சி கண் முன் வரவில்லை?
” பயம் ஒட்டுவாரொட்டி. நாய் பாய்கிற மாதிரி பயத்தை இன்னொருவர் மேல் அவிழ்த்து விடலாம்” இன்றைய கொரோனா செய்திகள் அதைத் தான் செய்கின்றன. வேட்டை நாயாய் நம் மேல் பாய்கின்றன.


” இவளுடைய வேங்கைப் புலி சாப்பாடு கண்டு இவளைப் பிடிக்கவில்லை. ஒருவர் மேல் பிடித்தம் தோன்றுவதற்கும் விடுவதற்கும் இணைக்கோடு இவ்வளவு மெலிந்த இழையா?” சட்டென்று ஒருவரைப் பிடித்தும் விடுகிறது. அதே வேகத்தில் பிடிக்காமலும் போகிறது. உண்மை தானே?
“செத்த பிறகு கார்ப்பரேஷன் தொட்டியில் எறிஞ்சாலும் சரி. பூப்பல்லக்கு கட்டினாலும் சரி. பிணத்துக்கு தெரிஞ்சு என்ன ஆகணும்? அதுக்கு ரெண்டும் ஒண்ணு தான்”
மருத்துவமனையிலிருந்து வெளியேறும் ஆம்புலன்ஸ்சிலிருந்து துணிக்குள் புதைந்த பிணம் ஒன்று நழுவி தெருவில் விழுந்த காட்சி நினைவுக்கு வருகிறது. பிணத்துக்கு ஏது மாட்சிமை. பார்க்கும் நம் கண்களுக்குத் தான்.
“ஞங்கள் ஊணு கழிக்க ஞான் வேசியாகணும். வேறு ஏதும் ஞான் அறிஞ்சிட்டில்லா.”
இந்த கொரோனா கால பசி, தொழில் இழந்த துயரம், தன் உடலை முதலாக்கிய பெண்கள் ஒரு சிலர் கண் முன் வருகிறார்கள்.
புத்தக தினத்தன்று ஒரு நல்ல புத்தகம் வாசிக்க வேண்டுமென நினைத்து எடுத்து வாசித்து முடித்தேன்.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)