தொற்றுநோயால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்குப் பிறகு, பொருளாதார புத்துணர்ச்சிக்கான தடைகளை அகற்றுவதற்காக, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்தம் செய்திருக்கின்றன. தங்களுடைய மனசாட்சியை உறுத்தாத நிலைமைகளிலேயே, தாங்கள் வாங்குகின்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்று நுகர்வோரிடம் இருக்கின்ற எதிர்பார்ப்பைப் பற்றி கவலைப்படுகின்ற மிகப் பெரிய, ஏற்றுமதி சார்ந்த முதலீடுகளைத் தள்ளி வைத்திருப்பதுதான், இவ்வாறு தொழிலாளர்களின் பாதுகாப்பை இடைநிறுத்துவதன் ஒரே விளைவாக இருக்கப் போகிறது.
நிச்சயமாக, அத்துடன் சில துணை நன்மைகளும்கூட இருக்கத்தான் போகின்றன. ஒன்று, வணிக சார்பு கொண்ட சீர்திருத்தவாதிகளாக, இந்த மாநில அரசாங்கங்களை வழிநடத்துபவர்களுக்கு, ஊடகங்களில் பதினைந்து விநாடிகள் புகழ் கிடைக்கப் போகின்றது. அவர்களால் குறைந்தபட்சம் ஒரு தூண்டுதல் தொகுப்பை வழங்க முடியவில்லை என்றாலும், தொழிலாளர்களின் ஆற்றலை மலிவாகவும், கூடுதல் மணிநேரம் பயன்படுத்திக் கொண்டு, தொழிலாளர்கள் வராத நாட்களுக்கான பணத்தை அவர்கள் ஈடுகட்டத் தயாராகிக் கொண்டிருப்பதாக சமிக்ஞைகள் தெரிகின்றன. கிடைக்கப் போகின்ற மற்றுமொரு நன்மை என்னவென்றால், தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதை ஆய்வு செய்வதற்காக வருகின்ற தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்களுக்கு கொடுக்கின்ற வழக்கமான லஞ்சத்தில், மாதம் ஒன்றிற்கு சில நூறு ரூபாயை தொழில்முனைவோர்களால் இனிமேல் சேமித்துக் கொள்ள முடியும்.
இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டங்கள், நடுத்தர வர்க்க இந்தியா உண்மை என்று கருதுகின்ற ஜனநாயக முகப்பின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன. தொழிலாளர் சட்டங்கள், குறைந்தபட்ச ஊதியங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் நாகரிக இருப்பிற்கான பிற அடையாளங்களைத் தங்களுடைய கற்பனையில் கூட கொண்டிராத முறைசாராத் துறைகளிலேயே, இந்தியாவில் உள்ள 50 கோடி தொழிலாளர்களில் 90 சதவிகிதம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அதிகார எல்லைக்குள் இருக்கின்ற பண்டைக்கால ஆற்றலின் துணை கொண்டு தேவையானது, அளிப்பை இடைமறிக்கின்றது.
இதன் விளைவாக, கட்டுப்படுத்தப்படாத படைப்பாற்றல் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் பலத்த வெடிச்சத்தம் கேட்பதற்குப் பதிலாக, தொழிலாளர்கள் தரப்பில் உள்ள துயரங்கள், குறைந்த உற்பத்தித்திறன், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் மிகச்சாதாரண தரம் போன்ற நீடித்த சிணுங்கல்கள் மட்டுமே கேட்கின்றன. தொழிலாளர் சட்டங்கள் மேலே தூக்கி நிறுத்தப்பட்டனவா அல்லது தரையில் போட்டு மிதிக்கப்பட்டனவா என்ற கேள்விகள், இந்திய உற்பத்தி சாம்ராஜ்யத்தின் இந்தப் பகுதிகளில் முக்கியத்துவமற்றவையாகவே இருக்கின்றன.
முறைசார்ந்த துறையில் தொழிலாளர் சட்டங்கள் ஏதோவொரு வகையில் இருந்து வருகின்றன. அங்கே தொழிலாளர்கள் பெரும்பாலும் தொழிற்சங்கங்களாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றனர். சட்டங்களில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, சில கோரிக்கைகளை அமல்படுத்துமாறு அவர்களால் கோரிக்கைகளை முன்வைக்க முடியும். சட்டங்களை அமல்படுத்த வைக்கின்ற வகையில் தொழிற்சங்க வலிமை போதுமானதாக இருந்தால், அவை நிறைவேறவும் செய்யலாம். இல்லையெனில், வழக்கமான முறையில், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்களுக்கான வெற்றியாகவே அது இருக்கும். தொழிலாளர்களுக்கு நலன் புரிவதை விட, தொழில்முனைவோரைக் கட்டுப்படுத்துவதாக தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பது முற்றிலும் புனைகதையாகவே இருக்கும்.
அதிக ஊதியங்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று சொல்வது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புறக்கணித்து விட்டு பேசுவதாகும். ஒரு மணி நேரத்திற்கான உழைப்பு உற்பத்தித்திறன், தொழிற்சங்கங்கள் ஆற்றல்மிக்கதாக இருக்கின்ற பிரான்சைப் போலவே, தொழிற்சங்கமயமாக்கல் அளவுகள் குறைவாக இருக்கின்ற அமெரிக்காவிலும் ஒரே அளவிலேயே இருக்கின்றது.
ஹிரோஷிமா, நாகசாகி அணு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, ஜப்பான் சரணடைந்த பின்னர், அதன் நவீன சமாதான அரசியலமைப்பு எழுதப்பட்டது. போருக்குப் பிந்தைய ஆரம்பகால புனரமைப்பை மேற்பார்வையிட்ட ஜெனரல் டக்ளஸ் மாக் ஆர்தர், இறுதியாக ஜப்பானை ஜப்பானியர்களிடம் ஒப்படைத்தபோது. 57% தொழிலாளர்கள் தொழிற்சங்கப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். ராணுவவாதம் திரும்பி விடாமல் இருப்பதற்கான அரணாக, வலுவான தொழிற்சங்கங்கள் ஜப்பானில் இருக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் விரும்பினர்.
தொழில் உற்பத்தி மற்றும் தரத்தை உயர்த்துவதற்கான கூட்டுப் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு, தொழிற்சங்கங்களைப் பயன்படுத்த ஜப்பானிய தொழில்துறை கற்றுக் கொண்டது. கொரியா நன்கு தொழிற்சங்கப்படுத்தப்பட்டிருக்கின்ற நாடு என்றாலும், உலகிலேயே மிகவும் மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பா பாரம்பரியமாக தொழிற்சங்கப்படுத்தப்பட்டு சோவியத் புரட்சியின் லாபத்தை அறுவடை செய்து வருகின்றது. அது சமூக ஒப்பந்தத்தின் மூலம் உழைப்பாளிகளை பங்காளிகளாகவும், வளர்ச்சியின் பயனாளிகளாகவும் மாற்றியிருக்கிறது. ஜெர்மன் தொழிற்சங்கங்கள் இன்று நிர்வாகங்களுடன் இணைந்து, அந்த நாட்டில் மிகப் பெரிய அளவிலான வேலையின்மையைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
தொழிலாளர் உறவுகள் குறித்து, ’தொழிற்சங்கங்கள் மோசமானவை, தொழிற்சங்கங்கள் இல்லை என்றால் நல்லது’ என்ற எளிய பார்வையை இந்தியத் தொழில்துறை நிலைநிறுத்தியிருக்கிறது. ஆனால் அது, ஒரு நிறுவனத்தின் ஊதியச் செலவு என்பது, அந்த பொருளாதாரத்திலுள்ள மற்ற பகுதிகளுக்கு வாங்குகின்ற ஆற்றல் என்ற மிக முக்கியமான விஷயத்தைக் கவனிக்கவில்லை.. ஒவ்வொரு நிறுவனமும் தான் வழங்குகின்ற ஊதியத்தை முடிந்தவரை அதிகமாகக் குறைத்து விட்டு, தன்னுடைய ஊழியர்களிடமிருந்து மிக நீண்ட நேர வேலைகளைப் பெறுமானால், அதன் விளைவாக பொருளாதாரத்தில் உள்ள மொத்த கொள்முதல் ஆற்றலைக் குறைப்பதும், பொழுதுபோக்கு, பயணம், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் ஓய்வுநேர நுகர்வோருக்கான வணிகங்களுக்கான தேவையைக் குறைப்பதுமே ஏற்படும்.
நிறுவன மட்டத்தில் அறிவார்ந்த செயல்பாடாக இருப்பது, பருண்மைப் பொருளாதார மட்டத்தில் அறிவற்ற செயலாகவே இருக்கும். இந்த இடைவெளியை தொழிற்சங்கங்களால் குறைக்க முடியும். ஊதியத்தை அதிகரிக்கவும், வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தவும் தொழிற்சங்கங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. இது மொத்தத்தில், அனைத்து வணிகத்திற்கும், நிறுவனத்திற்கும் சந்தையை அதிகரித்து தருகிறது.
புத்தொளி பெற்ற தொழில்துறை நன்கு ஊதியம் பெறுகின்ற உழைப்பை ஒரு சொத்தாகவே பார்க்கும். உற்பத்தி செய்யப்படுகின்ற லட்சக்கணக்கான பொருட்களில் மிக, மிகக் குறைவான குறைபாடுகள் இருப்பதையே நவீன உற்பத்திமுறை எதிர்பார்க்கும். தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கானதை மட்டும் சம்பாதிக்கின்ற உழைப்பாளிகளால் இத்தகைய தரத்தின் அளவு எட்டப்படுவதில்லை. தங்களுடைய வேலை மற்றும் பணியிடத்தை அனுபவிக்கின்ற தொழிலாளர்களால் மட்டுமே அது கிடைக்கும். என்ன மாதிரியான தொழிலாளர் நடைமுறைகள் நமக்குத் தேவை என்பது, இந்தியத் தொழில்துறை என்ன மாதிரியான லட்சியத்தைக் கொண்டுள்ளது என்பதைப் பொறுத்ததாகவே இருக்கும்.
உள்ளூர் வாராந்திர சந்தையில் விற்க வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்கின்ற வியர்வையை உறிஞ்சுகின்ற கடைகளை உருவாக்குவதே உங்களுடைய லட்சியம் என்றால், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் தலைவர்கள் முன்வைக்கின்ற தொழிலாளர் சட்டங்களே உங்களுக்குப் போதுமானவையாக இருக்கும். ஆனால் இந்தியத் தொழில்துறை தன்னுடைய பொருட்களை உலகளாவிய சந்தைகளில் விற்க விரும்பினால், குறைந்தபட்சம் அனைவருக்கும் ஏற்புடைய வேலையை வழங்கி, பணியிடங்களில் திருப்திகரமான உயர் தரத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள சட்டங்களுக்கு ஏற்ப, தன்னுடைய தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதற்கு மத்திய அரசு முயற்சிக்கவில்லை. தொழிலாளர் சட்டங்கள் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளன. அதாவது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டும் இந்த சட்டங்களை இயற்றுகின்றன.
அதன் விளைவாக 45 மத்திய தொழிலாளர் சட்டங்களும், 200 க்கும் மேற்பட்ட மாநில அளவிலான தொழிலாளர் சட்டங்களும் இருக்கின்றன. ஒரே விஷயத்தில் மாநில சட்டம் மத்திய சட்டத்தை மீறுவதாகக் கருதப்படும் போது, மத்திய சட்டமே மேலோங்கி நிற்கும். எனவே, பாஜக ஆளுகின்ற இந்த மூன்று மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்துவது, கூடுதல் நன்மையைத் தருவதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. தொழிலாளர் சட்டங்களை இவ்வாறு இடைநிறுத்துவது குறித்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படுமானால், நிச்சயம் வழக்கறிஞர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர் வெளியேற்றத்தை அடுத்து, தொழிலாளர் பற்றாக்குறையை தொழில்துறைகள் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. தேவை மற்றும் அளிப்பு சக்திகளின் விளைவாக ஊதியங்கள் உயர வாய்ப்புள்ளது. தொழிலாளர் சட்டங்களை இவ்வாறு இடைநிறுத்துவது அதை ஒருபோதும் மாற்றாது.
இறுதியில், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் மாநிலங்களின் தொழிலாளர் சட்டத் சீர்திருத்தங்கள் வழங்கப் போகின்ற முக்கியமான சேவை பொருளாதாரத்திற்காக இருக்கப் போவதில்லை. அது அரசியலுக்கே சேவை செய்வதாக இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கிய பின்னர், இந்தியாவிடம் இருக்கின்ற ஆட்சியமைப்பு முறை மற்றும் ஆட்சியாளர்கள் பொருத்தமானது என்று கருதுகின்ற சமூக வர்க்கங்களுக்கிடையே உள்ள அதிகார உறவுகளுக்குச் சேவை செய்வதாகவே அது இருக்கும்.
தி எக்கானமிக் டைம்ஸ், 2020 மே 09
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு
மக்கள் நல அரசு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொண்டு மிகப்பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கெதிராக்ச் சட்டம் இயற்றும் ஒரு அரசானது மக்கள்விரோத அரசாகத்தான் இருக்கமுடியும். அதுவும் மக்களின் உயிரே நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இச்சமயத்தில் இது மாதிரியான சட்டங்களை உருவாக்குவது “எரியிர வீட்ல புடுங்கினது லாபம்” ன்னு சொல்றதுதான் நினைவிற்க்கு வருகிறது. மேலும், மிக முக்கியமாக, இத்தகைய மக்கள் விரோதச்சட்டங்கள் “மொத்த நாட்டுப் பொருளாதாரத்திற்கும் கேடாகும்” என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளது இக்கட்டுரை.