லட்சத்தீவு: பிரபுல் கோடா பட்டேல் நடவடிக்கைகளுக்குப் பின்னேயிருக்கும் நிகழ்ச்சி நிரல் – ஜான் பிரிட்டாஸ் | (தமிழில்: ச.வீரமணி)பிரபுல் கோடா படேல், லட்சத்தீவு நிர்வாக அலுவலர் (administrator), லட்சத்தீவு மக்கள் மீது மேற்கொள்ளும் வலுக்கட்டாய நடவடிக்கைகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் புனித நூலின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அதாவது, சிறுபான்மையின மக்களை ஒடுக்குவது, இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அமல்படுத்திட நயவஞ்சக வழிகளில் திட்டமிடுவது. இவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றியது, அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்துவந்த சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்டியது, முஸ்லீம்கள் மத்தியில் விவாகரத்து நடைபெறுமானால் ஆண்களை மட்டும் கிரிமினல் குற்றவாளியாக ஆக்குவது, அயோத்தி மீதான வழக்கின் விசித்திரமான தீர்ப்பு மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியே லட்சத்தீவு மீதான நடவடிக்கைகளுமாகும். அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள விழுமியங்களை அரித்துவீழ்த்திட வேண்டும் என்பதே அவர்களின் அப்பட்டமான குறிக்கோளாகும்.

பிரபுல் கோடா பட்டேல், ஒரு பாஜக தலைவர். இந்த நபர் 2020 டிசம்பரில் லட்சத்தீவு நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களாக இவர் சீர்திருத்தங்கள் என்ற பெயர்களில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், உண்மையில் லட்சத்தீவு என்னும் பெயரில் அடங்கியிருக்கக்கூடிய 35 தீவுகளைக் கொண்ட மக்கள் மீது ஏவப்பட்டுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உலகக்கண்ணோட்டத்தின் அடிப்படையிலான, நாஜிக்களின் மற்றுமொரு வாழ்விடமாக, மோசமான அரசியல் ஆய்வுக்கூடமாக மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாகும். இவர்களின் நோக்கம் மிகவும் தெளிவானதும், முழுமையானதுமாகும். அதாவது, மக்கள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்தி, இழிவுபடுத்தி, கிரிமினல்களாக்கி, தாங்கள் கருதிடும் குறுகிய தேசியவாத வியாக்கியானத்திற்கு உட்பட்டவர்களாக மாற்ற வேண்டும் என்பதேயாகும்.

இவர்கள் காஷ்மீர் மீது பிரயோகித்த கதைகள் அனைத்தும் சிற்சில மாற்றங்களுடன் லட்சத்தீவு மக்கள் மீதும் பிரயோகிக்கப்படுகிறது. பாஜக தலைமையானது (கேரள பாஜக தலைமை இந்தப் பேர்வழியைத் தீவிரமாக ஆதரித்துக்கொண்டிருக்கிறது), லட்சத்தீவுகளில் உள்ள அப்பாவி மற்றும் அப்பழுக்கற்ற மக்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்காக அவர்களை ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போதைப்பொருட்கள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பவர்களாகக் குற்றஞ்சாட்டி, அவர்களைத் தேச விரோதக் குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவர்களின் வழக்கப்படி, லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவு அளித்திடும் எவரொருவரும் ‘தேச விரோதிகளை’ ஆதரிப்பவர்களாவார்கள். இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதியன்று லட்சத்தீவு அருகே கடலில் இலங்கைக் கப்பல் ஒன்றிலிருந்து மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி, இந்தத் தீவு, தேச விரோதிகளின் கூடாரமாக இவர்களால் சித்தரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எனினும், லட்சத்தீவில் பணியிலிருந்த ஒப்பந்த ஊழியர்கள் ஏன் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதற்கோ, அங்கன்வாடி மையங்கள் ஏன் மூடப்பட்டன என்பதற்கோ, கால்நடைப் பண்ணைகள் ஏன் சிதைக்கப்பட்டன என்பதற்கோ, மீன்பிடி நடவடிக்கைகளுக்கான தற்காலிகக் கூடங்கள் ஏன் அப்புறப் படுத்தப்பட்டன என்பதற்கோ எவ்விதமான விளக்கத்தையும் பாஜக கூறவே இல்லை. ஆயினும், இவையனைத்துமே தேச விரோதிகளுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரிலேயே இவர்களால் செய்யப்பட்டிருக்கின்றன.லட்சத்தீவு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்களை, இது அவர்களின் பிரச்சனை மட்டுமே என்கிற ரீதியில் பார்க்கக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் உள்ளவர்களில் பலர், “ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் நிகழ்வுகள் அந்தந்த மாநிலத்திற்கு மட்டுமே உள்ள பிரச்சனை, இதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை” என்கிற போக்கு பொதுவாக இருந்து வருகிறது. அதேபோன்று லட்சத்தீவு மக்கள் மீது ஏவப்பட்டுள்ள ஆபத்துக்களைப் பார்க்கக் கூடாது. உண்மையில் இது அங்கேயுள்ள ஆளும் பாஜக-விற்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயான பிரச்சனை கிடையாது. லட்சத்தீவுக் கூட்டங்களில் நடைபெற்றுள்ள மாற்றங்களை அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்ற முறையில் பார்க்கக் கூடாது. அதற்கும் அப்பால் இதன் உண்மைப் பொருளைப் பார்க்கக்கூடிய பக்குவத்தை ஒருவர் பெற்றிட வேண்டும். இந்திய அரசமைப்புச்சட்டத்தின் சாரத்தை உயர்த்திப் பிடிப்பதற்கான தருணம் இப்போது நமக்குக் கனிந்திருக்கிறது.

1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் யூனியன் பிரதேசங்களுக்கான கருத்தாக்கம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது, சுயேச்சையாக இருக்கக்கூடிய மிகவும் சிறிய பிரதேசங்கள் அல்லது பக்கத்தில் உள்ள மாநிலங்களுடன் இணைக்கமுடியாத விதத்தில் மிகவும் வித்தியாசமான – பொருளாதார ரீதியாக, கலாச்சார ரீதியாக மற்றும் புவியியல் ரீதியாக – மிகவும் வித்தியாசமான பிரதேசங்களாக இருப்பதைக் குறிக்கிறது.

அரசமைப்புச்சட்டத்தின் 7ஆவது திருத்தம் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு இருக்கிற அடிப்படைகளைத் தெளிவாக வரையறுத்திருந்தது. உண்மையில் இப்போது லட்சத்தீவு நிர்வாக அலுவலர் மேற்கொள்ளும் சினமூட்டுகிற நடவடிக்கைகள் உண்மையில் அத்தீவு மக்களின் கலாச்சார, பொருளாதார மற்றும் புவியியல் அடிப்படைகள் மீதான தாக்குதல்களாகும். ஆர்எஸ்எஸ், இந்தியா குறித்தும் இந்துயிசம் குறித்தும் கூறிடும் வியாக்கியானங்களுக்கு உட்பட்டே ஒட்டுமொத்த இந்தியாவும் இருந்திட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் கலாச்சாரத்தை ஒட்டியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது தெளிவாகும்.

பசு வதைத் தடை உட்பட இவர்கள் லட்சத்தீவில் மேற்கொண்டுள்ள எண்ணற்ற நடவடிக்கைகள் இப்பிராந்தியத்தை காவிமயமாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. இவ்வாறு ஆர்எஸ்எஸ்-உம் அதன் அரசியல் அங்கமும் நாட்டில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூவிக்கொண்டு மடத்தனமான முறையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

அரபிக்கடலில் உள்ள யூனியன் பிரதேசத்தில் பட்டேல் அறிமுகப்படுத்தியுள்ள கொள்கைகள் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன. இந்தத் தீவுக்கூட்டத்தில் குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாகும். மக்கள் யாரும் தங்கள் கதவுகளை மூடுவதே கிடையாது. கடைகளில் உள்ளவர்கள் உணவு உட்கொள்வதற்காக வீடுகளுக்குச் செல்லும்போது கடைகளைப் பூட்டுவதே கிடையாது. கதவுகள் திறந்தே இருக்கும். இங்கேதான் பட்டேல் 2021 சமூக விரோத நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தல் சட்டமுன்வடிவை (அல்லது குண்டர்கள் சட்டத்தை)க் கொண்டு வந்திருக்கிறார். இதன் குறிக்கோள் மக்களை எவ்வித விசாரணையுமின்றி அரசியல்ரீதியாகக் கைது செய்வதற்கேயாகும். இவருடைய இத்தகைய இழிவான நடவடிக்கைகள் இத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அங்கே இயங்கிவந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களையும் பறித்திடும் விதத்தில் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். கல்வி, சுகாதார நலன், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீனளம் உட்பட பல்வேறு துறைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டப் பஞ்சாயத்துக்களுக்கு இருந்து வந்த அதிகாரங்களையும் பறித்துக்கொண்டுவிட்டார். மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுடன் இணைந்துகொண்டு கூட்டுக் களவாணித்தனத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டுகளின் பைகளை நிரப்புவதற்கு வசதி செய்து தர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இவை அனைத்தையும் இந்த நபர் அழித்துக் கொண்டிருக்கிறார்.இத்தீவுக்கூட்டங்களில் வாழும் மக்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முஸ்லீம்கள். இவர்கள் மது அருந்துவதில்லை. ஆனால் இங்கே மது ஆறாக ஓடுவதற்கேற்றவிதத்தில் ஒரு புதிய கொள்கையை நிர்வாக அலுவலர் முன்மொழிந்திருக்கிறார். அதே சமயத்தில் மக்களின் உணவில் பிரதானமாக இருந்துவரும் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்க அவர் விரும்புகிறார். இவர், ஏற்கனவே பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் அசைவ உணவு அளிப்பதற்குத் தடை விதித்துவிட்டார். இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கொண்டுவந்துள்ள மற்றொரு முன்மொழிவு, ‘குடும்பக் கட்டுப்பாடு’க்கான சட்டமாகும். இந்துத்துவா பேர்வழிகள், அடிக்கடி கூறுவதுபோன்று முஸ்லீம்கள் ஏராளமாகக் குழந்தைகளைப் பெற்று எண்ணிக்கையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற பிரச்சாரத்தினையொட்டியே இந்த நடவடிக்கையாகும்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் என்பவர்கள் 79 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துவந்தபோதிலும், ‘இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்’ என்கிற இவர்களின் பொய்ப்பிரச்சாரம் நாட்டில் சில பகுதிகளில் இவர்களுக்கு ஆதாயமாகவே இருந்து வருகிறது. இந்துக்கள் மக்கள்தொகையைவிட முஸ்லீம்கள் மக்கள்தொகை விரைவில் மிகுந்துவிடும் என்கிற இவர்களின் துர்ப்பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் இவர்களால் தீவிரமானமுறையில் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தகு பிரச்சாரம் எள்ளிநகையாடக்கூடிய விதத்தில் இருந்தபோதிலும், இத்தகைய மாபெரும் பொய்யை அவர்கள் விடாது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வாதத்தின்பின்னணியில்தான் நிர்வாக அலுவலர், பஞ்சாயத்துத் தேர்தல்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்று பஞ்சாயத்து விதிகளில் மாற்றங்களைக் கொண்டுவர முன்மொழிவுகளைச் செய்திருக்கிறார்.

பட்டேல் கொண்டு வந்துள்ள நடவடிக்கைகள் லட்சத்தீவு மக்களின் எதிர்கால வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவைகளாகும். இப்போது ஒரு விதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, இங்கே வாழும் மக்கள் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையும் தங்களின் நிலத்தின் உரிமையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பித்து, ஆட்சேபணை இல்லா சான்றிதழ் (No Objection Certificate) வாங்காவிட்டால், அவர்கள் மீது மிகப்பெரிய அளவில் அபராதங்கள் விதிக்கப்படும். இப்போது முன்மொழியப்பட்டுள்ள லட்சத்தீவு வளர்ச்சி அதிகாரக்குழுமம் (LDA-Lakshadweep Development Authority), நிலத்தின் பயன்பாட்டை மாற்றுவதற்கு நிர்வாக அலுவலருக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. இலட்சத்தீவை சூறையாடுவதற்காகத் துடித்துக்கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஆதரவாக இந்த முன்மொழிவு கொண்டுவரப்படுகிறது. இவற்றின் மூலம் மக்களின் நில உரிமைகளைப் பறித்திடுவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

லட்சத்தீவு மக்கள், தங்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுவதற்காகவும், தங்களின் சொந்த நிலங்களிலிருந்து தங்களை விரட்டியடித்துவிட்டு, தங்களை குத்தகைதாரர்களாக மாற்றுவதற்காகவும், ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்கும் இத்தகைய இழிமுயற்சிகளுக்கு எதிராக லட்சத்தீவு மக்கள் அணி அணியாகக் கிளர்ந்தெழுந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இத்துடன் லட்சத்தீவுகளுக்குத் தற்போது கேரள உயர்நீதிமன்றம்தான் சட்டரீதியாக அதிகாரவரம்பெல்லை (jurisdiction)யினைப் பெற்றிருக்கிறது. இதனை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்காக விசித்திரமானமுறையில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. இதன்மூலம் லட்சத்தீவினை முற்றிலுமாக கேரளாவிடமிருந்து பிரித்திட வேண்டும் என்கிற சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. கேரளாவுக்கும் லட்சத்தீவுக்கும் காலங்காலமாகப் பெரிய அளவில் கலாச்சார மற்றும் மொழிவழி ஒற்றுமை இருந்து வந்திருக்கின்றன. இவ்வாறு இம்மக்கள் கேரள மக்களுடன் நல்லிணக்கத்துடன் இருப்பது, இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு நிச்சயமாகக் கசப்பாகத்தான் இருக்கும். ஏனெனில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலின்படி செயல்பட்டுவரும் மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளை முற்றிலுமாக எதிர்த்துவரும் கேரள மக்களையும், கேரள மாநில அரசாங்கத்தையும் மத்திய ஆட்சியாளர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காதுதான். இத்துடன் இப்போது கோழிக்கோட்டில் இயங்கிவரும் லட்சத்தீவு அதிகாரக்குழுமத்தை (Lakshadweep Authority), பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருக்கு மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது. அதேபோன்று கள்ளிக்கோட்டை (Calicut)யில் உள்ள பேய்பூர் (Beypore) துறைமுகத்திற்கும் தீவிற்கும் இடையேயுள்ள சரக்குக் கப்பல் போக்குவரத்தையும் மங்களூருக்கு மாற்றவும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நடவடிக்கைகள் அனைத்தும், லட்சத்தீவு மக்கள் கேரளாவுடன் வைத்துள்ள அனைத்து உறவுகளையும் வெட்டிவிட வேண்டும் என்ற இழிநோக்கத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லட்சத்தீவிற்கு நிர்வாக அலுவலராக பாஜக பேர்வழியான பிரபுல் கோடா பட்டேலை நியமித்திருப்பது சங் பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்கிற நோக்கமேயாகும். லட்சத்தீவுக்கு ஒரு நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி இந்தப் பேர்வழிதான். இந்த நபர், பாஜக-வின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது அவருக்குக்கீழ் ஈராண்டு காலம் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். இவருடைய தந்தை கோடாபாய் பட்டேல், ஓர் ஆர்எஸ்எஸ் தலைவர். இவருக்கும் நரேந்திர மோடிக்கும் குஜராத்தில் மோடியின் ஆரம்ப அரசியல் நடவடிக்கைக் காலங்களில் நெருங்கிய உறவு உண்டு.

மத்தியில் ஆட்சியில் உள்ள குறுகிய புத்தி படைத்தவர்களின் இத்தகு இழிமுயற்சிகளை மேலும் காலதாமதமின்றித் தடுத்து நிறுத்திட வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து சாதியினரும், அனைத்து மதத்தினரும், அனைத்து இனத்தினரும் சமமாக நின்று பரஸ்பரம் வாழவேண்டும் என்கிற உரிமையைப் பெற்றிருக்கிறோம் என்கிற அரசமைப்புச்சட்டத்தின் சொந்தக்காரர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம் லட்சத்தீவில் நடைபெறும் நிகழ்ச்சிப் போக்குகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று மந்தமாக இருந்தோமென்றால், அது நாட்டுக்கும் நமக்கும் பேரழிவினை ஏற்படுத்திடும். பின்னர் நாம் நம்முடைய செயலற்ற தன்மைக்காக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

 

(கட்டுரையாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்.)