“சுடுமண் பொம்மைகள்” தோழர் கோ.இலக்ஷ்யா மன்னார் அவர்களின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு…
இந்தியாவில் திருநங்கைகளின் உரிமைகள், பாதுகாப்பு, சட்ட சீர்திருத்தங்கள், பாலின சமத்துவ விழிப்புணர்வு போன்றவை கடந்த பத்தாண்டுகளாகச் சமூகத்தில் ஒரு பேசும் பொருளாக மாறியிருப்பது நல்ல முன்னேற்றம் என்றாலும், அதே சில வருடங்களாக எத்தனை திருநங்கைகள் இறந்து போயிருக்கிறார்கள் என்று தெரியுமா? என்ற கேள்வி அவளிடமிருந்து தொடர்ந்து எழும். திருநங்கைகள் மீதான குடும்ப மற்றும் சமூக வன்முறை, தவறான சிகிச்சை போன்றவற்றால் ஏற்படும் இறப்பைக்காட்டிலும் காதல் தோல்வியால் மரணிப்பதென்பது சற்றே கூடுதல்.
அப்படி பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு ஆதரவாக நீதிகிடைக்க ஒரு வழக்குக்கூட காவல்துறையினரால் பதிவு செய்யப்படுவதில்லை என்ற ஆதங்கமும் அவளிடம் வெளிப்படும்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் எல்லா உரிமைகளும், சக இந்திய குடிமக்களாக எங்களுக்கும் பொருந்துமென, 2014ல் உச்சநீதிமன்ற நால்சா தீர்ப்பிற்கு பிறகும், ஏன் இங்குத் திருநங்கைகளின் வாழ்வில் மட்டும் இத்தனை போராட்டம்..? சட்ட ரீதியிலான மாற்றங்களைத்தாண்டி சமூக மாற்றம் ஒன்றே மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். அதை நோக்கி பயணிக்க வேண்டிய தூரம் வெகுத்தொலைவு என்று தொடர்ந்து ஏதாவது ஒரு விவாதத்தை தொடங்கி பேசிக் கொண்டிருப்பவள்தான் என் அன்புத்தோழி தோழர் கோ.இலக்ஷ்யா மன்னார்.
அதுமட்டுமல்லாமல், “இந்தச் சமுகத்தில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் கண்டித்து வீதியில் போராடும் உங்களைப் போன்ற தோழர்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு பெரும் மரியாதையுண்டு. நானும் உங்களுடன் போராட்ட களத்துல நிற்க வேண்டும் என்பதே எனது விருப்பமும்கூட. ஆனால் என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு, இங்கு வாழ்தல் என்பதே பெரும் போராட்டம்தான்.
அதைத்தாண்டி சக திருநர் மக்களுக்கு எதிராக நடக்கும் பல கொடுமைகளைக் களைய போராட்டம் நடத்தி , எங்களின் அடையாளத்தை, பாதுகாப்பை, வாழ்வதற்கான அத்தனை உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான வேலையை முதலில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறும் தோழர் கோ.இலக்ஷ்யாவிற்கு திருநங்கை சமூகப் பிரதிநிதியென்ற ஒரு முகத்தைத் தாண்டி, இன்னும் பல முகங்கள் அவருக்குண்டு.
2015 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற திருநங்கை தினவிழாவைத் தன் இனிமையான தமிழ் உச்சரிப்பால் தொகுத்து வழங்கியபோது, பேச்சாளர் என்கிற முகம் எனக்கு அறிமுகம்.
2018 ஆம் ஆண்டு கல்கி வார இதழில் கூவாகம் திருவிழாக்குறித்து அவள் எழுதிய சிறு கட்டுரையை படித்தபோது அவளுக்குள் உள்ள எழுத்தாளர் முகம் எனக்கு அறிமுகம்.
2019 ஆம் ஆண்டு தமுஎகச நடத்திய தென்னிந்திய நாடகத்திருவிழாவில் முழுக்க முழுக்க திருநங்கைகள் மட்டுமே பங்குபெற்ற ‘எஜுக்கேஷனும் XY-யும்’ என்ற நாடகத்தில் கட்டியக்காரியாக அரங்கை கலக்கியபோது அவளின் நாடகக்கலைஞர் என்ற முகம் அறிமுகம்.
இதோ இந்த கவிதை தொகுப்பின் படைப்பாளியாக இப்பொழுது கவிஞர் என்கிற முகம்.
தன்னுடைய பாலின அடையாளத்தை தேடிச்செல்ல, அவளுள் ஊற்றெடுத்த
காதலே இக்கவிதை தொகுப்பின் காரணி.
“கை ஏந்தி நிற்பதொன்றும் எனக்குப் புதிதல்ல
பிறரிடத்தே காசுக்காக. உன்னிடத்தே காதலுக்காக”
ஒரு திருக்குறளைப் போல இக்கவிதையின் மூலம் காதல் உணர்வையும் இந்தச் சமூகம் அவளைப் பிச்சையெடுக்க தள்ளிய வலியையும் கடத்தி இருப்பார். அதற்கு அவர் கையாண்ட மொழியின் எளிமை, அருமை.
“எனக்கான எல்லாவற்றையும்
பிடுங்கிக் கொண்டு ஆசிர்வதிக்க கோருகிறார்கள்.
நானோ இழைக்கப்பட்ட அநீதி மறந்து
‘நல்லாரு சாமி’ யென
வாழ்த்தி நகர்கிறேன்.
சன்மானமாய் சில சில்லறைகளோடு.”
என்கிற கவிதை மாறுபாலினப் பெண்களுக்கு மட்டுமல்ல, காலம் காலமாக இந்த ஆணாதிக்கச் சமூகம் பெண்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு அவளைத் தியாகியாகவும் தெய்வமாகவும் கொண்டாடும் வேஷத்தையும் கலைத்தெறிகிறது.
“எம் காதல் இவர்களுக்கு
கத்திச்சண்டையாம்.
அன்றிலைப்பற்றி
காகங்களுக்கு என்னத்தெரியும்.”
என்று பால்புதுமையினரின் காதலை இழி செய்திடும் பாலாதிக்க வெறியர்களை காகங்களென்று எள்ளி நகையாடுதல் அருமை.
ஆண் பெண் இருவருக்குமிடையேயான காதல் மட்டும்தான் காதல். அதுதான் அற்புதமானது மற்றவை அருவருக்கத்தக்கது என்று குயர் மக்களைப்பார்த்துக் காகங்கள் போல் கரையும் கூட்டம்தான் காதலித்ததற்காகக் கண்ணகி- முருகேசனையும், இளவரசனையும், சங்கரையும், கவினையும் காவு வாங்கியது.
பெரும்பாலானவை காதல் கவிதைகள் என்றாலும், அதில் திருநங்கைகளின் வாழ்க்கை நிலை, சமூகம் அவர்களைத் தொடர்ந்து எப்படி எல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதைச் சுட்டிச்செல்கிறார்.
“எத்தனை குரூரப் பார்வைகள் என் மீதும், என் உடல்மீதும்…” என்ற கவிதையினூடே திருநங்கைகளின் உடல் ஒரு காட்சிப் பொருளாக்கப்படுவதைச் சாடுவதோடு, திருநங்கைகளில் உடலில் ஏன் உங்களுக்கு மட்டும் இவ்வளவு சந்தேகம் உங்களைப் போலதான் நாங்களும் என்று கூறுகிறது.
ஆம்! இந்த பாலாதிக்கச் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியது திருநர் மக்களின் உடலையல்ல உணர்வை.
திருநங்கைகள் பலர் கடவுள் மீதான நம்பிக்கையுள்ளவர்கள் அவர்களுக்கென பிரத்தியேக வழிபடு தெய்வங்களும் உள்ளன. ஆங்காங்கே சில கவிதைகளில் தன் கடவுள் நம்பிக்கையை வெளிப்படித்தினாலும், ஒரு கட்டத்தில் அதையும் தாண்டி கற்பிதங்கள் எங்கிருந்து உருவாக்கப்படுகிறதோ அங்கிருந்து அவளது கேள்வியைத் தொடங்குவது என்று முடிவு செய்து கடவுளையும் சும்மா விடவில்லை.
‘கூத்தாண்டவரும் ஒரு ஆணென பகடி செய்வது, கடலில் கரைக்க தூக்கிவரப்படும் விநாயகர் கவிஞரிடம் பேசுவது, தெய்வப்பிறவி உங்கள் வீட்டிலும் பிறக்கட்டும் என வாழ்த்துவது’ போன்ற கவிதைகள் மூலம் காலம் காலமாக உருவாக்கப்பட்ட கற்பிதங்களை உடைதெறிய தன்னால் ஆனா முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆயிரம் சட்டங்கள் இயற்றினாலும் இன்னும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தவாரே உள்ளன. அதிலும் குறிப்பாகப் பாலியல் வன்கொடுமைகள்.
“நான் அறிவதற்கு முன்னரே
என்னுள்ளிருந்த பெண்மையை
உணர்ந்திருந்தானவன்.
என்னை முதலில் வன்புணர்ந்தவன்.”
என்ற கவிதை என்னை உலுக்கியது.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மட்டுமல்ல பாலினம் உறுதி செய்யப்படாத குழந்தைகள், பால்யத்தில் எதிர்நோக்கும் பாலியல் சீண்டல்களும், வன்கொடுமைகளும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டுயவை. இது குறித்து விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.
விளிம்புநிலை சமூகமாக இன்று திருநர் மக்கள் வாழ்வதற்கு இச்சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருமே காரணம். அவர்களை இயல்பாக, சகமனிதராக வாழ விட்டிருந்தாலே இன்று பல்துறைகளில் வல்லுநர்களாக மாறியிருப்பார்கள். அதன் மூலம் இந்தச் சமூகமும் வளர்ச்சியடைந்திருக்கும் என்ற குற்ற உணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு தோழர் கோ.இலக்ஷ்யா மன்னார் போன்ற பல திருநங்கைகள் கலை இலக்கியத்தின் வழியே இடையறாது பயணிக்கவேண்டும்.
அகம் மகிழ்ந்த வாழ்த்துகளுடன்
நூலின் விவரங்கள்:
நூல்: “சுடுமண் பொம்மைகள்”
ஆசிரியர்: கோ.இலக்ஷ்யா மன்னார்
பதிப்பகம்: Queer Publishing House
விலை: ரூ.150
எழுதியவர் :
✍🏻 – பா.ஹேமாவதி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

