கோ.இலக்ஷ்யா மன்னார் எழுதிய "சுடுமண் பொம்மைகள்" கவிதைகள் தொகுப்பு புத்தகம் | Lakshaya Mannar's Suduman Pommaikal Book Review in Tamil | கி.ரமேஷ் | www.bookday.in

கோ.இலக்ஷ்யா மன்னார் எழுதிய “சுடுமண் பொம்மைகள்” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

“சுடுமண் பொம்மைகள்” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

”உடைவோம் என்பதை அறிந்திருந்தும்
சிரிக்க மறப்பதில்லை
சுடுமண் பொம்மைகள்.”

“கடவுளே என்றாலும்
மறுநாளே கைவிட்டுச் செல்ல,
திருநங்கை என்ற ஒற்றை காரணம்
போதாதா. . .”

மூச்சடைக்கிறது. ஒரு நிமிடம் மூச்சு வாங்கி விட்டு மேலே செல்வோம்.

. . . .

கவிதைகள். நம் உணர்வுகளைக் கிளர்த்தி விட்டு வசப்படுத்திக் கொள்பவை. நிறைய எழுத வேண்டிய தேவையில்லை. சில சொற்கள், சில வாக்கியங்களே போதும் நம்மை அசைத்து, உடைத்துப் போடுவதற்கு. இதோ அதற்கு ஒரு உதாரணம் – கோ.இலக்‌ஷ்யா மன்னாரின் ‘சுடுமண் பொம்மைகள்’.

மேலே காட்டியிருக்கும் இரண்டு கவிதைகளைப் படியுங்கள். திருநர்களின் காதல் வாழ்வை அப்படியே எடுத்துப் பிழிந்து கொடுத்து விடுகின்றன.

சுடுமண் பொம்மைகள் என்ற இந்தக் கவிதைப் புத்தகத்தைக் கொடுத்தபோது முதல் கவிதையே புரட்டிப் போட்டது. முதல் பத்து கவிதைகளிலேயே இந்த உலகின் மீது, சமுதாயத்தின் மீதான திருநர்களின் கோபத்தை, ஏக்கத்தை, காதலை ஆவேசமாக வெளிப்படுத்தி விடுகிறார் இலக்‌ஷ்யா. இது குறித்து அவரிடம் பேசியபோது அவர் சொன்னார், ”மற்றவையெல்லாம் காதல் கவிதைகள்தான் தோழர்.” ஆனால் அவையும் இந்த வகையைச் சேர்ந்தவைதான் என்பதைப் படித்துப் புரிந்து கொண்டேன்.

முன்னுரையிலேயே தோழர் ஹேமாவதி அருமையாக எடுத்துரைக்கிறார்:

”ஆண் பெண் இருவருக்குமிடையேயான காதல் மட்டும்தான் காதல். அதுதான் அற்புதமானது, மற்றவை அருவருக்கத்தக்கது என்று குயர் மக்களைப் பார்த்துக் காகங்கள் போல் கரையும் கூட்டம்தான் காதலித்ததற்காகக் கண்ணகி-முருகேசனையும், இளவரசனையும், சங்கரையும், கவினையும் காவு வாங்கியது.”

ஆம் இவர்களுக்குக் காதல் என்றாலே கசக்கிறது. அதுவும், மதம் தாண்டிய, சாதி தாண்டிய, இனம் தாண்டிய, பாலினம் தாண்டிய காதல் என்றால் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். ஏன் அவர்களுக்குக் காதல் வரக்கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே? அவர்களுக்கும் காதல், பாசம், அன்பு என அனைத்தும் தேவைதானே? அவர்களும் இயற்கையின் படைப்புகள்தானே? இந்தக் கவிதைகள் இதைத்தான் பேசுகின்றன.

ஆனால் அவர்களது காதலை ஏற்காததற்கும், முதலில் பயன்படுத்தி விட்டு அப்படியே சக்கையாய் உமிழவும் தேவையாக இருப்பது, ‘அவர்கள் திருநர்கள்’ என்ற ஒற்றைக் காரணம்தானே என்ற கோபம் இலக்‌ஷ்யாவின் கவிதையில் வெளிப்படுகிறது.

இது எப்படிப்பட்ட சமூகம்? அவர் திருநர் என்பதை அறிந்தவுடன் வீடு அவரைத் துரத்தி விடுகிறது. கல்வி மறுக்கப்படுகிறது. வாழ்க்கை மறுக்கப்படுகிறது. பிச்சை எடுத்து வாழவும், பாலியல் ரீதியான வருவாய்க்கும் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் அதே சமூகம் அவர்களிடம் ஆசி கேட்கிறது. என்ன வினோதம்?

‘வீட்டை விட்டு விரட்டப்பட்டவளிடம்’
’காதலும் மணவாழ்வும் கனவாகிப் போனவளிடம்’
’வியாபாரம் செழிக்க’
’தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள்’
’ஆண்பிள்ளை பிறக்க’
என்று சொல்லி விட்டு,
”ஆணோ . . . பெண்ணோ” எதுவாகினும்
தன்னைப்போல் பிறக்க வேண்டாவென
இறைவனிடம் முறையிட்டு
செல்கிறாள்
(திரு)நங்கையொருத்தி”

என்று முடிக்கிறார் இலக்‌ஷ்யா. எத்தகைய முரண் இந்த சமூகத்திடம்!

அவர்களது உடல்மீதுதான் எத்தனை குரூரப் பார்வைகள்? அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற கச்சையான கேள்விகள்?

மிகவும் குரூரமாகவே இந்தக் கவிதையைப் படைத்துள்ளார் இலக்‌ஷ்யா. இந்த ஒரு தொடக்கக் கவிதை போதுமானது சமூக அவலத்தைப் படம் பிடிக்க.

’தொலைக்காட்சி தொடரொன்றில்
துகில் உரியப்படும் திரௌபதியைக் கண்டு
வெடித்து அழுகிறேன்’.

உங்களுடன் சேர்ந்து கண்ணீர் வடிக்கிறேன்.

தான் திருநங்கை என்றறிந்தும் தான் காதலிப்பதாகச் சொல்லி விட்டு பயன்படுத்தியபின் அதே காரணத்தைச் சொல்லிப் பிரிகிறான் ஒருவன்.

ஒரு பெண்ணின் காதலில் என்னென்ன எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே எதிர்பார்ப்புகள்தானே அவர்களுக்கும் இருக்கிறது? இதில் என்ன தவறு? ஆண் உடலில் பெண் மனதையும், பெண் உடலில் ஆணின் மனதையும் வைத்துப் படைத்தது அவர்களது தவறா?

இந்தக் கவிதைப் படைப்புக்கு முன் ஹேமாவதி எழுதிய ‘யார் தவறு’ என்ற புத்தகத்தைப் படித்திருந்ததால் இந்தக் கவிதைப் புத்தகத்தில் அமிழ்ந்து போவதில் எனக்கு சிக்கல் ஏற்படவில்லை.

135 குறுங்கவிதைகளை எழுதித் தள்ளியிருக்கிறார் இலக்‌ஷ்யா. ஒவ்வொன்றும் திருநர்களின் காதலை, வலியை, பிரிவை, ஏக்கத்தைப் பேசும் கவிதைகளாக உருவாகியுள்ளன.

’நிலையற்றது என்பதை அறிந்தும்
பெய்யும் மழைதனை
பாலை நிராகரிப்பதில்லை.
முந்தைய வறட்சியின் வடுக்களை மறப்பதற்கும்
பிந்தைய வறட்சியின் வலிகளை ஏற்பதற்கும்’.

எவ்வளவு ஏங்கிப் போயிருக்கிறீர்கள் குழந்தைகளே என்று அள்ளி அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

ஆனால் அவரது தன்னம்பிக்கை அப்படியே போய் விடவில்லை:

’தன்னைச் சிதைத்துக் கொள்ளத் துணியும்
விதைதான்
முளைக்கத்துவங்குகிறது’.

என்ற வார்த்தைகளில் அவரது தன்னம்பிக்கை வெளிப்படுகிறது.

இதுவரை திருநர்களை இந்த சமூகம் வாழ விடாமல் செய்தது போதும். இனியும் அவர்களைத் தவிக்க விடுவது சரியாகாது.

இந்தக் கவிதைகளில் மிகப்பெரும் கவிதாயினியாக விஸ்வரூபம் எடுத்துள்ளார் இலக்‌ஷ்யா மன்னார். சரியானவரைத்தான் தமுஎகச தன் மாநிலக்குழுவுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இலக்கிய வானில் ஒரு தாரகையாக மின்னும் திறன் அவரிடம் இருக்கிறது. ஆனால் இந்தக் கொடியைத் தாங்கிப் பிடிக்க தமுஎகச மட்டுமல்ல, இந்தச் சமூகமும் முன்வர வேண்டும்.

’உடைந்து விடாத
கிளையின் மீது படரவேண்டும் என்பதைத் தாண்டி
வேறென்ன விருப்பம் இருந்து விடும்
கொடிக்கு.’

வாழ்த்துகள் மகளே.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“சுடுமண் பொம்மைகள்” கவிதைகள் தொகுப்பு
ஆசிரியர்:​கோ.இலக்ஷ்யா மன்னார்
வெளியீடு:
Queer Publishing House
விலை: 
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கி.ரமேஷ்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *