"லட்சுமணப் பெருமாள் கதைகள்" சிறுகதைத் தொகுப்பு புத்தகம் | Lakshmana Perumal Kathaigal Tamil Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

“லட்சுமணப் பெருமாள் கதைகள்” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

“லட்சுமணப் பெருமாள் கதைகள்” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

‘பேச்சு வாக்குல’ சொல்லப்பட்ட கதைகள்

கரிசல் காட்டு மண்ணிலிருந்து முளைத்த எண்ணற்ற எழுத்தாளர்களின் தொடர்ச்சியாக – அதிலும் குறிப்பாக கி.ராஜநாராயணன், பூமணி போன்றோர்களின் வழியில் – அவர்களது எழுத்து மரபின் நீட்சியாக விளங்குகிறார் லெட்சுமணப் பெருமாள். அவரது 2009 வரையிலான 41 சிறுகதைகளைக் கொண்ட மொத்தத் தொகுப்பிது.

லெட்சுமணப் பெருமாளை நேரில் நான்கைந்து முறை சந்தித்துள்ளேன். அவை 1990களின் இறுதி மற்றும் புத்தாயிரத்தின் தொடக்க கால சந்திப்புகள். அதில் தோழர் லட்சுமிகாந்தனின் திருமணத்தை ஒட்டி சாத்தூரில் தங்கியிருந்த விடுதியில், திருமங்கலத்தைச் சேர்ந்த தோழர்கள் ஷாஜஹான், சார்லஸ், பாண்டி, வழக்கறிஞர் அய்யா நாகராஜன் ஆகியோருடன் திருமணத்திற்கு முந்தைய இரவில் உரையாடியது நன்றாகவே நினைவிருக்கிறது.

நம்ம ஊரைச் சேர்ந்த சம்சாரி ஒருவரைப் போன்ற மிக எளிமையான தோற்றம். பேசத் தொடங்கினால் உடைத்துக் கிளம்பிய காட்டாறாய் பிரவாகிக்கும் கரிசல் வட்டார மொழியிலான பேச்சு. அவர் பேசப் பேச நாங்கள் சிரித்து விழுந்தபடியே இருந்ததும் நினைவிலாடுகிறது. அந்தக் கட்டற்ற பேச்சையே தனது கதைகளாக மாற்றும் வித்தையை – விந்தையை லெட்சுமணப் பெருமாள் இத்தொகுப்பில் செய்து காட்டியுள்ளார். அதுவே அவரது கதைகளின் தனித்துவமாகவும் பலமாகவும் அமைந்துவிடுகிறது.

கதைகளின் பண்பமைவைப் பொறுத்து கதைகளுக்கு ஒற்றைச் சொல் தலைப்புகளை இடும் வழக்கத்தை முன்னத்தி ஏர் பூமணியிடமிருந்து லெட்சுமணப் பெருமாள் கைக்கொண்டுள்ளார். கரிசல் காட்டின் எளிய மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளே இவரது எல்லாக் கதைகளின் அடித்தளம் – பேசுபொருள்.

பாலியல் தொழிலாளிகள், தீப்பெட்டி கம்பெனி குழந்தை தொழிலாளர்கள், வீட்டு வேலை பார்க்கும் சிறுமிகள், பால்புதுமையினர், லாரி கிளீனர் போன்ற அமைப்புசாரா உதிரித் தொழிலாளர்கள் என அவரது பெரும்பாலான கதை மாந்தர்கள் மைய நீரோட்டத்தில் இருந்து விலக்கிவைக்கப்பட்ட – பெரு முதலீட்டிய வர்க்கக் கட்டமைப்புச் சூழலில் கவனிப்பாரற்ற – பெருங்கதையாடல்களில் தவிர்க்கப்பட்ட விளிம்புநிலை மக்களே..! அவர்களது வாழ்வும் பேச்சும் லெட்சுமணப் பெருமாளின் கதைகளில் மிக இயல்பாகப் புனைவாகிறது.

இன்னும் குறிப்பாக கிராமத்து மக்களின் பாலியல் ஈடுபாடு, பாலுறவு சார்ந்த செயல்பாடுகள் பற்றிய நுணுக்கமான அவதானிப்புடன் கூடிய சித்தரிப்பை பல கதைகளில் காண முடிகிறது – அது லெட்சுமணப் பெருமாளின் சிறப்புக் கூறாகவும் அமைந்து விடுகிறது.

ஆனாலும், ‘இத்தகைய கதைகள் அதிகார எதிர்ப்புச் செயற்பாடுகள்தான், மொழியில் கலகந்தான் எனினும் இவை அனைத்து மக்களும் பங்கேற்கும் நடை முறை சார்ந்த கேளிக்கை வடிவமல்ல என்றும், இத்தகைய எழுத்து ஆண்களுக்கிடையிலான பரிமாற்றங்களாக அமைந்து பல சந்தர்ப்பங்களில் ஆணாதிக்கக் கருத்தியல் நிறைந்தவையாகவும், மிகை நகை எதார்த்தத்தின் புத்துயிர்ப்புப் பண்பு குறைந்தவையாகவும் வெளிப்படுவதாகவும் அவ்வாறு பொது வெளிப்பாடாக இல்லாததால் தனி நபர் வக்கிரங்களாகவும், பாலியல் விருப்பு நிறைவேற்றப் பதிலியாகவும் அமைந்து விடும் அபாயம் உள்ளதால், பாலியலோடு மற்ற பிற எதிர் அரசியல் செயல்பாடுகளுடன் இணையும்போதே இவற்றால் நாம் விரும்பிய பலன் விளையும்” என்று கி.ரா.வின் பாலியல் கதைத் தொகுப்பு குறித்த கட்டுரை ஒன்றில் அ.மார்க்ஸ் கூறியது இத்தொகுப்புக்கும் பொருந்தும்.

‘ஒட்டுவாரொட்டி’ கதை அந்த வகையில் கிராமத்து பெண்களின் பாலியல் நேரத்து சுதந்திர வெளிப்பாடு குறித்த விசயத்தை நகைச்சுவையாகப் பேசுகிறது. இக்கதையில் பாலியல் செயல்பாடே ஆண் மைய நடவடிக்கையாக/கேளிக்கையாகக் கட்டமைக்கப்பட்டுள்ள சூழலில் ‘அந்த’ நேரத்தில் சத்தமாகக் கெக்கலிட்டுச் சிரிக்கும் பெண்களின் செயல்பாடு ஒரு கூட்டு எதிர்ப்புணர்வை வெளிக்காட்டுவதாகவும் ஆண்களின் பாலியல் அதிகாரத்திற்கெதிரான பெண்மையின் கேலியுடனான எதிர்வினையாகவும் அந்தச் சிரிப்பு அமைந்துவிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் தொகுப்பில் உள்ள பிற கதைகளான ‘உத்தராயணம்’, ‘ஒட்டுப்படை’ ஆகியவை பாலியல் நடவடிக்கைகளை ஆண்சார்ந்த குரலில் பேசுகின்றன.

அதுபோலவே, கதை சொல்லும் முறைமையிலும், தன்மையிலும் இயல்பாகவே மெலிதான நகைச்சுவையும், அங்கதமும் இணை சேர்ந்துள்ளது. ‘மருவாதி’, ‘ஒட்டுவாரொட்டி’, ‘பச்சைமனசு’, ‘துடி’ போன்ற கதைகளில் அது நம்மை வாய்விட்டுச் சிரிக்கச் செய்து விடுகிறது.

‘ரசமானி’, ‘தீ’, ‘கதை சொல்லியின் கதை’, ‘வயனம்’ போன்ற தமிழ்ச் சிறுகதையின் பெரும்பரப்பில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதிக்கும் கதைகளும் தொகுப்பில் அமைந்துள்ளன.

இத்தொகுப்பின் வழியே லெட்சுமணப் பெருமாள் – இன்னுமொரு எழுத்தாளர் என்றில்லாமல் – குறிப்பிடத்தகுந்த எழுத்தாளுமைதான் என்பதையும் நிறுவிக் கொள்கிறார்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“லட்சுமணப் பெருமாள் கதைகள்” சிறுகதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர்:எஸ்.இலட்சுமணப்பெருமாள்
வெளியீடு:வம்சி பதிப்பகம்
விலை:₹.500
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *