எழுத்தாளர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் (Lakshmi Kumaran Gnanadraviyam) எழுதிய ‘ பொங்க’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை
பொங்கலுக்கு முதல் நாளும் பொல்லாத ஒருநாள் விடுப்பும்
– மணி மீனாட்சிசுந்தரம்
/சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது./
– ஞானக்கூத்தன்
அதிகாரம், அடக்கிவைக்கவும் அவமானப்படுத்தவும் ஆசையாய்த் துடிக்கும்.தனக்கு அடங்கிக்தான் ஆகவேண்டும் என்பதில் ஒரு திமிரும்,தன்னை மீறி என்ன செய்துவிடமுடியும் என்பதில் ஒரு குரூரமும் அதற்கு எப்போதும் உண்டு.
ஆனாலும் ‘ஓடப்பராய் இருப்போர் உதையப்பராய் மாறிவிட்டால்’ நிலைமையே வேறு.
தலைமையாசிரியர்- ஆசிரியர் – பெற்றோர் – மாணவர் என்ற இணக்கத்தில் அதிகாரம் தலையெடுப்பது ஆபத்தானது. அன்பும் புரிதலுமே இந்த இணக்கத்தை மேம்படுத்தும். ஆனால், அதிகாரத்தின் நாவுகள் தீண்டாத இடம் ஏதும் உண்டா?
நகரத்தின் பெரிய ஆங்கில வழிப் பள்ளி அது.பொங்கலுக்கு முதல்நாள் போகியன்று விடுப்பு எடுத்ததற்காகப் பள்ளி நிர்வாகம் மாணவனைத் தினமும் வகுப்புக்கு வெளியே நிறுத்துகிறது.அப்பா விடுப்புக் கடிதம் கொடுத்துவிட்டாலும் ஏற்க மறுக்கிறது.
பையனைப் பள்ளி நடத்தும் விதத்தைக் கண்டு மனம் பொறுக்காத கல்லூரி விரிவுரையாளரான அப்பா காலையிலேயே ஒரு மணிநேரம் கல்லூரிக்கு அனுமதி பெற்று, பள்ளிக்கூடத் தலைமையாசிரியரைப் பார்க்கப் போகிறார்.
தலைமையாசிரியர் அறையின் வெளியிலேயே உதவியாளர்கள் அவரைத் தடுத்து விடுகின்றனர்.
/” ஃபாதர் ரவுண்ஸ்ல இருக்காரு…பதினோரு மணிக்குத்தான் சீட்டுக்கு வருவார். வெயிட் பண்ணுங்க “/ என்கின்றனர்.
தலைமையாசிரியரின் அறைக்கு வெளியே, உட்கார எந்த ஒரு இருக்கையும் இல்லை. இவரைப் போலவே வேறு சில பெற்றோர்களும் நின்று கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பத்திலேயே இந்தப் பள்ளியில் மகனைச் சேர்க்க அவருக்கு விருப்பமில்லை.மனைவியின் பிடிவாதம்தான் அவரை இப்படி நிறுத்தியிருக்கிறது.பெரிய பள்ளிகள் என்று பெயரெடுத்த சில பள்ளிகள் பெற்றோரை நடத்தும் விதமே தனி. முழுவதுமாகச் சரணடைந்து விடவேண்டும்.எந்த விளக்கமும் அங்கிருந்து வராது. அதுவும் பொதுத் தேர்வு எழுதும் வகுப்பென்றால் மாணவர்கள் நிலை சொல்லி மாளாது.
அடிமாடு பரவாயில்லை.மாணவர்கள் நிலை அதைவிடத் திண்டாட்டம். அதிகாலை முதல் மாலை வரை மாணவர்கள் வறுத்தெடுக்கப் படுவார்கள்.அவர்களுக்குச் சனியும் கிடையாது ,ஞாயிறும் கிடையாது,அரசு விடுமுறையும் கிடையாது. பிள்ளைகள் படும் துயரங்களைப் பார்த்துப் பெற்றோர்களுக்குக் கண்டிப்பாகக் கண்ணீர் பெருகும்.ஆனால், நாளை தேர்வில் அவர்கள் வாங்கப் போகும் மதிப்பெண்கள்,உறவினர்களிடம் காட்டக் கிடைக்கும் பெருமை, பீற்றலை நினைத்துக் கண்ணீரைத் துடைத்துக்கொள்வர். இதை இந்தப் பள்ளிகள் நன்கு புரிந்துகொண்டதால்
அதிகாரத்தின் திமிரைக் கொண்டே அனைவரையும் அணுகும்.பாவம் மாணவர்கள்?!
“ஒரு மணி நேர அனுமதியில் வந்திருக்கிறேன்.
தலைமையாசிரியர் எங்கே இருக்கிறார் என்று சொன்னால அவரைப் போய் பார்த்துவிட்டுப் போகிறேன்” என்று கேட்கிறார் அப்பா.
உதவியாளர், /” இல்லை சார்…ஃபாதர இப்பப் பார்க்க முடியாது.பதினோரு மணிக்குத்தான் பேரன்ஸ்ஸ பார்க்கிற நேரம்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பக்கத்து அறையின் கண்ணாடிக் கதவுகளைத் திறந்துகொண்டு தலைமையாசிரியர் வருகிறார்.
தந்தை அவரிடம்,
/” வணக்கம் சார். என் பையன் போன திங்கள்கிழமை லீவு எடுத்துட்டான்… நான்தான் லீவு லெட்டர்
குடுத்துவிட்டுருந்தேன்… நீங்க என்ன வரச்சொன்னீங்களாங்….என்று பணிவாக கூறுகிறார்./
அவரோ, “பொங்கலுக்கு முதல் நாளா?” என்று கேட்டுவிட்டு /”பொங்கலுக்கு லீவு எடுத்த பசங்களோட பேரன்ஸ் எல்லாந் ஈவினிங் திரி தேட்டிக்குத்தான் பார்க்க முடியும்” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு நடக்கலானார்./
அப்பாவுககுத் தன்மானம் விடைக்கிறது.
ஆனால் என்ன செய்வது? இப்படிப்பட்ட பள்ளிகளில் பெற்றோருக்குப் பேச்சு ஏது? தொடர்ந்து பிள்ளை படிக்க வேண்டாமா?
வேறுவழியில்லாமல் அப்பா பள்ளியை விட்டுக் கிளம்புகிறார். பள்ளியில் வகுப்புக்கு வெளியே மகன் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தபடியே கல்லூரிக்குத் திரும்புகிறார்.
மாலையில் வீட்டிலிருக்கும் உடல்நிலை சரியில்லாத மனைவியைப் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று தலைமையாசிரியரைப் பார்த்துவிட்டு வரச் சொல்கிறார் அப்பா. பள்ளியின் முதல்வர் மதியம் பள்ளிக்கே வரவில்லை என்று அறிக்கப்பட்டதால் போன ஆட்டோவிலேயே அம்மா வீடு திரும்பி விடுகிறாள்.
அடுத்த நாள் காலையிலும் அப்பா பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர் அறை வாசலில் காத்திருக்கிறார். அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் உதவியாளர் வந்து / “ ஃபாதருக்கு முக்கியமான வேலை இருப்பதால் இன்று யாரையும் சந்திக்க முடியாது எனச் சொல்லி விட்டதாக”/ கூறுகிறார். காத்திருந்த பெற்றோர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி கலைந்து செல்கின்றனர்.
/ இன்றைக்கும் பையன் புத்தகத்தை முகத்தருகே பிடித்த வண்ணம் வராண்டாவில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தபடியே/ கல்லூரிக்குத் திரும்புகிறார் அப்பா.
வீட்டில் பையன் கவலையோடே இருக்கிறான்.தான் ஒருநாள் விடுப்பு எடுத்ததற்காகத் தினமும் வகுப்பறைக்குள் அமர விடாமல், வராண்டாவில் நிற்க வைப்பது குறித்து அவன் மிகவும் வருந்துகிறான்.
/ நீ தப்பு ஒன்னும் பண்ணலப்பா…ஏம் மூடவுட் பண்ணிக்கிறே…? அப்பா இன்னக்கி அவசியம் வந்து ஒங்க பிரின்ஸ்பாலைப் பாக்கிறேங்” என்று மகனைச் சமாதானப்படுத்துகிறார் அப்பா.
மறுநாள் காலையில் கல்லூரிக்கு அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டுக் காலையிலேயே பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர் அறைக்கு முன் காத்திருக்கிறார் அப்பா. இவரோடு வழக்கம் போல் வேறுசில பெற்றோர்களும்…
அவர்கள் ஒவ்வொருவரிடமும், பள்ளி நிர்வாகம் இப்படித் தேவையில்லாமல் தங்களை அலைய விடுவதைக் குறித்த ஆதங்கம் வெளிப்படுகிறது.ஆனால், பள்ளி நிர்வாகத்திடம் அதுபற்றிப் பேச அவர்கள் யாருமே தயாராக இல்லை.
/ சுமார் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு பணியாள் தலைமையாசிரியர் அறையிலிருந்து வெளியே வந்து, ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒவ்வொரு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அந்த அட்டவணைப்படி இவரை நாளைக்கு மதியம் இரண்டு மணிக்கு வரவேண்டும்/ என்று கூறுகிறார்.
பெற்றோர்கள் மறுமொழி பேசாமல் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடி கலைந்து செல்கின்றனர். நம் விரிவுரையாளருக்கோ கோபம் கொஞ்சநஞ்சமல்ல.
/ இவனுக்கு இது மிகப் பெரிய அவமானமாகப்பட்டது.உலகில் இதுமாதிரியான நவநாகரிக வன்முறையை மக்கள் மீது செலுத்தும் எந்த நிறுவனத்தையும் எதிர்க்க வேண்டும் என்பது இவன் சித்தாந்தம்.கோபத்தால் உடம்பு துடித்தது.தொண்டை வறண்டு அடைத்துக் கொண்டது./
பொங்கலுக்கு முதல்நாள், ஒரே ஒருநாள் விடுப்பு எடுத்ததற்காகத் தன் மகனைத் தொடர்ந்து வகுப்புக்கு வெளியில் நிற்க வைப்பது, மூன்று நாட்களாகத் தலைமையாசிரியர் எதுவும் சொல்லாமல் தம்மை அலைக்கழிப்பது என பள்ளியின் நடவடிக்கைகளில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த பேராசிரியரான அப்பா வெடிக்க ஆரம்பிக்கிறார்.
வராண்டாவை விட்டு இறங்கி மைதானத்தில் நின்று கொண்டு தலைமையாசிரியர் அறையை நோக்கி,
/” எலேய் மயிறாண்டிகளா…என்னடா பள்ளிக் கொடம் நடத்துறீய….பையன லீவு எடுக்கச் சொன்னது நாந்தாண்டா…
எம் பையன் மேல எனக்கில்லாத அக்கற ஒங்களுக்குப் பொளந்துகிட்டு வருதோ…எலேய், நீங்க அந்தப் பண்டிக…நொந்தப் பண்டிகன்னு ஆயிரம் லீவு உடுவிய…நாங்க ஒருநாளு எடுக்கப்படாதோ…லீவு எடுத்துக்கிறது எங்க உரிமைடா கழுதைகளா…எங்களைத் தண்டிக்கிறதுக்கு ஒங்களுக்கு எவன்டா உரிம குடுத்தாங்..ஆங்…” என்று அவர் ஆரம்பித்ததும் தலைமையாசிரியர் முதற்கொண்டு அனைவரும் வெளியே ஓடிவந்து பார்க்கின்றனர்.
பையனின் அப்பா பேசும்பேச்சு தீவிரமான சில கேள்விகளை நம்முன் வைக்கிறது. மழையோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. தலைமையாசிரியரோ, ஆசிரியர்களோ தங்களுக்குத் தேவைப்பட்ட நேரங்களில் விடுப்பு எடுக்கத் தயங்கவதில்லை. அது அவர்களின் உரிமையும் கூட. இப்படியிருக்க மாணவர்கள் மட்டும் விடுப்பே எடுக்கக்கூடாது( போதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர் உட்பட) என்பது எவ்விதத்தில் நியாயமாகும்? அவர்களுக்கான உரிமையல்லவா அது!
பெற்றோர்கள் சம்மதத்துடன் மாணவர்கள் எடுக்கும் அவசியமான விடுப்புக்குக் குற்றம் காண்பது தவறான போக்கு. அதற்கு மாணவனையும் பெற்றோரையும் அவமானப்படுத்தித் தண்டிக்க முயல்வது கண்டிக்கப்பட வேண்டிய எதேச்சதிகாரமாகும்.
அத்துடன் பள்ளிக்கூடங்கள், பெற்றோரை மீறித் தாங்கள்தான் மாணவர்களின் முழு எதிர்காலத்திற்கும் பொறுப்பானவர்கள் என்ற தோரணையில் நடந்துகொள்வது பெற்றோருக்கும் பள்ளிக்குமான வீண் மோதலை ஏற்படுத்திவிடும்.
விரிவுரையாளர் விசயத்திலும் அப்படித்தான் நடந்து விடுகிறது. நகர வாசிகளுக்கும் பொங்கல் பண்டிகைக்கும் எந்தத் தொடர்புமில்லை. கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து நகரத்தில் வாழ்கிறவர்களும், தொடர்ந்து கிராமத்திலே வாழ்கிறவர்களும் தங்கள் நிலத்தில் கொண்டாடும் உணர்வுபூர்வமான விழா அது. பொங்கலுக்கு முன்னும் பின்னுமாக அவர்கள் விடுப்பு எடுத்துத்தான் ஆகவேண்டும். அதைப் பள்ளி நிர்வாகம் உணரவில்லை.
கதையில் வரும் கிறித்துவப் பள்ளியை ஒரு பொதுவான உதாரணமாகக் கொள்ளமுடியாது.அது கதாசிரியர்க்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமாகக்கூட இருக்கலாம்.
பள்ளி நிர்வாகம் இப்படி நடந்துகொள்வதன் காரணம் பொங்கலுக்கும் அதனைத் தொடர்ந்தும் அரசு, விடுமுறை விடும்போது மாணவர்கள் பொறுப்பில்லாமல் பொங்கலுக்கு முதல் நாளும் விடுப்பு எடுப்பது தவறு என எண்ணியிருக்கலாம்.அதனால், பெற்றவர்களையும் அது பொறுப்பில்லாதவர்களாகக் கருதுகிறது.
விரிவுரையாளரை எல்லோரும் வந்து சமாதானப்படுத்த முயல்கிறார்கள்.அவரோ உதாசீனப்படுத்தப்பட்ட கோபத்தில் பொரிந்து தள்ளுகிறார்.
போகி அன்று விடுப்பு எடுக்க வேண்டியதன் காரணத்தை இப்படிக் குமுறுகிறார்,
/ பொங்கல மாடுகளோட மக்க மனுசங்களோட மண்ணுல கெடந்து கொண்டாடுவம்டா…போகி அன்னிக்கு த் தாண்டா எங்களுக்குச் சந்தை…
வாழப்பழந்…கரும்பு…மஞ்சக் கொத்து, மண்பானைச் சட்டி, கருவாடு,மாட்டுக்கு நெட்டி மால, புதுக்கயிறுங்க,
கொம்புக்குக் காவி, பெயிண்டுன்னு வண்டி கட்டிப்போய் வாங்கி வர்ற நாளு… ராத்திரி பன்னண்டு மணிக்குப் போயி என்னாத்தப் புடுங்குறது… விடிஞ்சா எதுல பொங்க வைக்கிறது…. எனப் பேசிக்கொண்டே போகும் அவரை ஆசிரியர்கள் வந்து,
/” உங்களுக்கே இது நல்லாயிருக்கா…நீங்களும் ஒரு ஆசிரியர்தானே…”/ என அமைதிப்படுத்த முயல்கிறார்கள்.
/ “என்னங்கய்யா…நல்லாருக்கா நொல்லாருக்கான்னுட்டு…போகியன்னிக்கு நீ பள்ளிக்கூடம் வப்பே…நாந் எம்பையன அனுப்பணுமா…? இஞ்ச பாருங்கப்பா….எனக்கு மதம் , சாதியெல்லாம் மயிரு மாரி… அடிப்படையில் நாங்க ஆதித் தமிழனுங்க..எங்களுக்கு ஒரேயொரு விழா இருக்குன்னா அது பொங்கல் தான்…உலகம் முழுக்க மனுச வரலாறப் படிங்கடா…
இதுல சாமியுமில்ல…மதமுமில்லடா…
இது விவசாயியோட விழாப்பா…” எனப் புலம்பும் அப்பாவை மகன் கண்ணீர் மல்க ஓடிவந்து பள்ளிக்கூட வாசலுக்கு அழைத்துப் போகிறான்.
அப்பா, வேட்டியால் முகத்தைத் துடைத்துக்கொண்டு குடிநீர்க் குழாயை நோக்கிப் போவதோடு கதை முடிவுக்கு வருகிறது.
பொங்கலுக்கு முதல்நாள் விடுமுறை அளிக்காத, விடுப்பு எடுக்கும் மாணவரையும் பெற்றோரையும் அவமதிக்கும் பள்ளியை முன்னிறுத்திக் கதை சொல்லப்பட்டிருந்தாலும், அவசியமானவற்றுக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்களின் உரிமையை உணர்த்துவதிலும், மாணவரின் உரிமையில் பள்ளிக்கு இருக்கவேண்டிய வரம்பைச் சுட்டிக்காட்டுவதிலும் இக்கதை முக்கியமான ஒன்றாகிறது.
‘பொங்க’ சிறுகதை குறித்து எழுத
உதவிய நூல்கள்:-
1.புதிய தமிழ்ச் சிறுகதைகள்,
தொகுப்பாசிரியர் :
முகிலை இராசபாண்டியன்,
சாகித்திய அகாதமி வெளியீடு.
2. ஞானக்கூத்தன் கவிதைகள்,
பதிப்பாசிரியர் :
திவாகர் ரங்கநாதன்,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் – 629001.
கட்டுரை ஆசிரியர் குறிப்பு:-

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


பொங்க சிறுகதையில் அப்பாவின் பொங்கல் பொங்க சிறப்பு ஐயா. அதில் உங்களது பார்வை அனைவருக்குமான பார்வை. வாழ்த்துகள் ஐயா.