நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: லாரி த்ராம்ப்லே (தமிழில் : பா. ரஞ்சித் குமார்) எழுதிய “ஆரஞ்சுப் பழத்தோட்டம்” புத்தகம் | Larry Tremblay (Pa. Ranjithkumar in Tamil) Orange Pazhathottam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: லாரி த்ராம்ப்லே (தமிழில் : பா. ரஞ்சித் குமார்) எழுதிய “ஆரஞ்சுப் பழத்தோட்டம்” நாவல்

இன்று மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலலின் கோர முகத்தை தொலைக்காட்சியில் தினமும் பார்த்து கொண்டு இருந்தாலும், அதை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்லும் அளவு தான் நமக்கு நேரம் இருக்கிறது. வரிசையாக குழந்தைகளின் பிணத்தை அடுக்கி வைத்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது நெஞ்சம் பதறினாலும், சிலிண்டர் கிடைக்காத பதற்றத்தை விட அது பெரிதாக இருந்திருக்காது. நம் வீட்டில் நம் குழந்தை நன்றாக இருக்கிறதா என்ற ஒரு குறுகிய வட்டத்தில் தான் நம் மனநிலை இருக்கிறது. அதை உடைப்பது போல் உள்ளது இந்நாவல். இறப்பு, துரோகம், குற்றவுணர்ச்சி, தியாகம் எனப் போரின் பாதிப்புகள் மட்டுமின்றி, போர் நடக்கும் நாடுகளில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை மாற்றங்கள் என்னவாக இருக்கிறது என்பதற்கும் விடை கிடைக்கிறது இந்நாவலில்.

“போர் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான உலகத்தின் எல்லையை துடைத்தெறிந்திருக்கிறது”

– லாரி த்ராம்ப்லே

லாரி த்ராம்ப்லே

கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர், நாடக ஆசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், கதகளி நிபுணராகவும் உள்ளார். பத்திற்கும் மேற்பட்ட இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

அமது, அஜீஸ் இருவரும் இரட்டையர்கள். ‘அமது அழுதால் அஜீஸும் அழுவான். அஜீஸ் சிரித்தால் அமதுவும் சிரிப்பான்’ என்று அவர்களது பாட்டி சொல்வது போல் அவ்வளவு அன்பான, இணக்கமான சிறுவர்கள். தங்களது ஆரஞ்சு பழத் தோட்டம், வீடு என்று சந்தோஷமாக வாழ்ந்த அவர்களின் வாழ்வை போர் எப்படி புரட்டிப் போட்டது என்பதை வாசிக்கும் போது நம் உணர்வை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது.

போரில் அவர்களது தாத்தா, பாட்டி இறந்த பின், பழிவாங்கும் நோக்கில் தந்தை ஜகத் தன் மகன்களை ஒரு மனித வெடிகுண்டாக மாற்ற நினைக்கிறார். அதற்கு அவர்கள் வாழும் பிராந்தியத்தின் தலைவன் சுலயது செய்யும் சூழ்ச்சியும் ஒரு காரணமாக இருக்கிறது. எதிரி முகாமை அழிக்க ஒருவனுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்த பட்சத்தில் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஜகத்க்கு இருந்தாலும், உடல்நிலை சரியில்லாத அஜீஸை அனுப்புவது பாவம் என்று அமதுவை தயார் படுத்துகிறார். ஆனால் சகோதரர்களின் அன்பும், தாய் தமராவின் பிரார்த்தனையும் அதை செயல் வடிவம் ஆக்கியதா என்பது மீதி கதை.

இரண்டு மகன்களையும் மரணத்தின் வாசலுக்கு அனுப்ப எந்த தாய்க்கு தான் மனம் வரும்.. ஜகத்தின் முடிவால், தமரா ஒரு மகனையாவது மரணத்தின் பிடியில் இருந்து தற்காத்து கொள்ள எடுக்கும் பிரயத்தனங்களும், பரிதவிப்பும் சொல்லில் அடக்க முடியாது. அது வலி மிகுந்த பக்கங்களாக உணர முடிகிறது.

போர் எதிரிகளை பழிவாங்க, ஒரு அழகான குடும்பத்தை பயன்படுத்திய சுலயது போன்ற மனிதர்கள் இருக்கும் வரை அப்பாவி குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்பது புரிகிறது. எதிரிகளை கொல்வது கடவுளுக்கு செய்யும் மரியாதையாகவும், நமக்கு அது கெளரவமாகவும் இருப்பதாக மக்களை மூளை சலவை செய்து அவர்கள் காரியத்தை முடித்துக் கொள்கிறார்கள். எதிரி முகாமை தாக்க என்று சொல்லி ஏமாற்றி, உடல் முழுவதும் வெடி மருந்து நிரப்பிய பெல்ட்டை கட்டி, பட்டம் விடும் போட்டி நடக்கும் இடத்தில் இருந்த குழந்தைகளின் நடுவில் கொண்டு போய் விட்டு, வெடிக்க வைக்கும் பொழுது ஒன்பது வயது சிறுவனின் உளநெருக்கடி எப்படி இருந்திருக்கும் என்பது வாசிக்கும் பொழுதே அதிர்வை தருகிறது.

இருவரில் ஒருவன் இல்லை என்றான பின் மற்றவனின் வாழ்வும் குற்றவுணர்ச்சியிலேயே கழிகிறது. தன்னால் தான் தன் கூடப் பிறந்தவன் இறந்தான் என்ற வேதனை அவனை இறுதி வரை வதைக்கிறது. தன் சகோதரனின் இறுதிக் கடிதம், தன் மேல் அவன் எவ்வளவு நம்பிக்கையை வைத்திருந்தான் என்ற உறுத்தலை கொடுக்கிறது. தன் சகோதரன் வெடித்து இறந்த குழந்தைகளின் குரல்கள் அவன் தலைக்குள் கேட்டு கொண்டே இருப்பது போல் ஒரு பிரமையோடேயே வாழ்கிறான். அந்த குரல்கள், மெலிதான ஏக்கத்துடன் கேட்கும் சமாதானத்தை எந்த நாடு அல்லது எந்த அதிகார அரசு தரும்?

அதிகார இறுமாப்பில் நாடுகளிடையே நடக்கும் போர்களில் பொருளாதாரம், நாட்டின் வளம் என பாதிப்புகள் இருந்தாலும், அங்கு வாழும் குழந்தைகளின் உளவியல் பாதிப்புகள் அதை விட அதிகம். சிறு வயதிலேயே அகதிகளாக நாடு விட்டு நாடு செல்வது, கல்வியை தொலைப்பது, விளையாடும் வயதில் பொறுப்புகளை சுமப்பது, மனிதர்களின் மேல் நம்பிக்கை இழப்பது என அவர்களின் பால்யம் வெடிகுண்டு போல் சிதறி விடுகிறது. அதிகார திமிருடன் இருப்பவர்களுக்கு அந்த வலி புரியாது.

குறைந்த பக்கங்களில் மிகவும் வலி மிகுந்த நாவலை தந்திருக்கிறார் ஆசிரியர். சிக்கலில்லாத மொழிபெயர்ப்பு வாசிப்பை எளிதாக்குகிறது. மூன்று பிரிவுகளாக இருக்கும் நாவலில் இறுதி பகுதி போர்களைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது. பதில்கள் அதிகாரத்தின் கைகளில் உள்ளது. ஆனால் கேள்விகளை எழுப்பும் பல குரல்களின் கதறல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது. நன்றி.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: ஆரஞ்சுப் பழத்தோட்டம்
ஆசிரியர்: லாரி த்ராம்ப்லே (தமிழில் : பா. ரஞ்சித் குமார்
வெளியீடு:
காலச்சுவடு
விலை: ₹.190
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கு.ஹேமலதா, தேனி.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *