உலகம் போற்றும் தமிழக லேசர் இயற்பியல் விஞ்ஞானி டாக்டர். வடிவேல் மாசிலாமணி (Prof. Dr. Vadivel Masilamani)
தொடர் 71 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
டாக்டர் வடிவேல் திருப்பங்களி மாசிலாமணி உலகம் அறிந்த லேசர் இயற்பியல் விஞ்ஞானி ஆவார். புற்று நோய்க்கான லேசர் முறை நோய் கண்டுபிடிப்பு முறைகளையும், நவீன சிகிச்சை முறைகளையும் அறிமுகப்படுத்திய மருத்துவ இயற்பியல் துறையின் நிபுணத்துவ விஞ்ஞானி அவர். ரியாத்திலுள்ள கிங் சவுதி பல்கலைக்கழகத்தின் லேசர் ஆய்வு கூடத்தின் வருகை தரும் முதன்மை விஞ்ஞானியாக தற்போதும் பணியாற்றி வருகிறார் விஞ்ஞானி மாசிலாமணி அவர்கள்.
விஞ்ஞானி டாக்டர். வடிவேல் மாசிலாமணி (Prof. Dr. Vadivel Masilamani) சார்ந்திருக்கும் துறை லேசர் இயற்பியல் துறையாகும். இன்றைய மருத்துவத்துறை பழங்காலத்தில் இருந்ததை போல நாடி பிடித்தும் தொட்டுப்பார்த்தும் மட்டுமே வைத்தியம் செய்யும் முறையாக இருக்கவில்லை. மாறாக நாம் பல வகை இயந்திரங்களை பயன்படுத்தி இன்று நோய்களை சரியாக தரம் பிரித்து அறிந்து மிக தெளிவாக அந்த இடம் நோக்கிய நேரடி மருத்துவ சிகிச்சை செய்துகொண்டு நிம்மதியாக வாழ முடிகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. முன்பு உயிரியல் என்பது தனியாகவும், உடலியல் தனியாகவும், வேதியியல், இயற்பியல் தனித்தனியாகவும் செயல்பட்டு வந்தன. இன்று இயற்பியல் துறை எந்த அளவிற்கு மருத்துவத்துறைக்கு பயன்படுகிறது என்றால் மருத்துவர்களை விட மருத்துவ உபகரண இயற்பியல் துறை வல்லுநர்கள் இன்று ஏராளமாக தேவைப்படுகிறார்கள்.

லேசர் இயற்பியல் என்பது லேசர்களின் கோட்பாடு மற்றும் நடைமுறையை விவரிக்கும் ஒளி இயலின் ஒரு கிளை ஆகும். லேசர் என்றால் என்னவென்று கேட்பவர்களா நீங்கள்.. LIGHT AMPLIFICATION BY STIMULATED EMISSION OF RADIATION – LASER என்று ஒற்றை அலைநீளத்துடன் ஒரு குறுகிய குவிக்கப்பட்ட தீவிர ஒளிக்கற்றையை நாம் லேசர் என்று அழைக்கிறோம். இவற்றை உற்பத்தி செய்வதற்கான கருவி தான் லேசர் கருவி. இது எப்படி வேலை செய்கிறது, கண்ணாடி, படிகம் அல்லது வாயுக்கள் திரவங்கள் போன்ற ஒளிஇயல் பொருளில் உள்ள எலக்ட்ரான்கள், மின்சாரம் அல்லது ஒளியிலிருந்து ஆற்றலை உறிஞ்சிக் கொள்கின்றன.
இந்த ஆற்றல் எலக்ட்ரான்களை தீவிரமாக உற்சாகப்படுத்தி ஒரு புள்ளியில் குவிகிறது. இவை அணுவின் உட்கருவைச் சுற்றி அதிக ஆற்றல் கொண்ட சுற்றுப்பாதைக்கு நகர்கின்றன. லேசர் ஒளியானது ஒரு சாதாரண ஒளி விளக்கில் இருந்து வேறுபட்டதாகும். ஏனெனில் இது ஒரே வண்ணமுடையது. அதுமட்டுமல்ல இது திசை கொண்டது, ஒத்திசைவு கொண்டது. ஒரு புள்ளியில் குவிக்கப்பட்ட லேசர் பீம் என்று அழைக்கப்படும் லேசர் கற்றை, கதிர்வீச்சின் தூண்டப்பட்ட உமிழ்வு மூலம் ஒளி பெருக்கத்தின் அமைப்பை ஒரு மையத்தில் சுருக்குவதற்கு ஒப்பானதாகும். அதீதமான ஆற்றல் கொண்ட இந்த லேசர் ஒளிக்கற்றைகள் ஒரு மனிதனின் உடலையோ அல்லது ஒரு பாறையையோ பிளக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தவை.

இந்த லேசர் கற்றைகளை பயன்படுத்தி சிறுநீரகப்பை புற்றுநோய் கண்டறியும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய விஞ்ஞானி தான் நம் தமிழகத்தின் வடிவேல் மாசிலாமணி. ஏற்கனவே லேசர் அறுவை சிகிச்சைகள் பார்வையை சரி செய்வதற்கும் தோல் சிகிச்சை போன்றவற்றுக்கும் மருத்துவ துறையில் பயன்பட்டு வந்தன. தன்னுடைய ஆய்வின் தொடக்க காலத்தில் 1973 முதல் வாயு திரவம் மற்றும் திட லேசர்கள் எவ்விதம் மருத்துவ துறைக்கு பயன்படுத்தப்பட முடியும் என்பதற்கான ஒரு முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை மாசிலாமணி வெளியிட்டார். 1999 ஆண்டு ரியாத்தில் உள்ள கிங் சவுதி பல்கலைக்கழகத்தின் லேசர் ஆய்வகத்தில் முதன்மை விஞ்ஞானியாக அவர் இணைக்கப்பட்டார். அப்போதிலிருந்து தொடங்கி லேசர்களை பயன்படுத்தி முதலில் புற்றுநோய்களை கண்டறியும் புதிய முறையை அவர் அறிமுகம் செய்ய முடிந்தது.
நுரையீரல் புற்றுநோய்க்கான பயோ மார்க்கர் என்று அழைக்கப்படும் ஸ்பெக்ட்ரல் முறையை லேசர் பயன்பாட்டு முறையில் கண்டறிந்தவர் உலகின் கவனத்தை ஈர்த்தவர் விஞ்ஞானி டாக்டர். வடிவேல் மாசிலாமணி (Prof. Dr. Vadivel Masilamani) அவர்கள். சிறுநீரக பையில் புற்று நோய்கள் ஏற்பட்டால் முதலில் அவே கண்டுபிடிக்கப்படுவது மிக மிக கடினமாக உள்ளது. அவ்விதம் சிறுநீர்ப்பையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒருவர் நான்காவது நிலைக்கு சென்ற பிறகுதான் அவருக்கு புற்றுநோய் இருப்பதையே நாம் அறிய முடியும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு நிலை.. புற்றுநோய் நான்காவது நிலையை அடைந்துவிட்ட பிறகு ஒருவருக்கு தற்போது இருக்கின்ற சிகிச்சை முறைகளை பயன்படுத்தி குணப்படுத்துவது சாத்தியமே இல்லை. ஆனால் மாசிலாமணி அவர்கள் 2017 ஆம் வருடம் லேசர்களை பயன்படுத்தி சிறுநீர்பை புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் ஒரு புதிய முறையை மருத்துவ துறைக்கு அறிமுகம் செய்தார். அதே போல தலசீமியா நோய்-க்கு ஸ்பெக்ட்ரல் ஸ்கேனிங் முறைப்படி நோயை கண்டறிந்து குணப்படுத்தும் முறையையும் அவர் மருத்துவ உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

டாக்டர் வடிவேல் மாசிலாமணி 1948 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று சென்னையில் பிறந்தார். தன்னுடைய ஆரம்ப கல்வியை முடித்துவிட்டு சென்னை ஐஐடியில் இயற்பியல் துறையில் இளம் கலை மற்றும் முதுகலை இயற்பியல் துறை பட்டங்கள் பெற்றார். பிறகு அதே நிறுவனத்தில் லேசர் இயற்பியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வை முடித்த கையோடு துமக்கூரு பல்கலைக்கழகம் பெங்களூருவுக்கு சென்று முனைவர் பட்ட ஆய்வுக்கு பிறகான ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினார்.
கிங் சவுதி பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராகவும், லேசர் ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானியாகவும் அவர் இணைக்கப்பட்டார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த துறையில் கடுமையாக உழைத்து 12 முக்கிய கண்டுபிடிப்புகளின் உரிமங்களை தன்னகத்தே வைத்திருக்கிறார்.
சென்னையில் அவருடைய முனைவர் பட்ட ஆய்வு ஆண்டுகளில் நைட்ரஜன் லேசர் ஒன்றை தாமாகவே கட்டமைத்து உருவாக்கி இந்தியாவிலேயே முதல் லேசர் கட்டமைப்பு என்கிற பெயரை பெற்றார். இது 400 – 700 நானோ மீட்டர் திரவ லேசர் அமைப்பாகும். இதன்மூலம் உலகப் பிரசித்திபெற்ற விஞ்ஞானி டாக்டர். வடிவேல் மாசிலாமணி (Prof. Dr. Vadivel Masilamani) இத்தாலியில் சர்வதேச கோட்பாட்டியல் இயற்பியல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். பிரான்சு, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு சென்று லேசர் கருவிகள் கட்டமைக்க பயிற்சிகள் கொடுத்தார். தன்னுடைய சொந்த சகோதரர் உணவுக்குழாய் புற்றுநோய் வந்து அவதியுறுகிறார் என்பதை அறிந்த பொழுது அதற்கான சிகிச்சை முறையை இயற்பியலில் தேடிய பேராசிரியர் மாசிலாமணி அப்போதுதான் லேசர் முறையில் புற்றுநோய்க்கான அடிப்படைகளை கண்டறியும் கருவிகளை அடையத் தொடங்கினார்.
இந்தியாவில் இரண்டு இடங்களை சிறுநீரகப்பை புற்றுநோயின் தலைமையகங்கள் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். ஒன்று புதுடெல்லி, இன்னொன்று அகமதாபாத். இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று தன்னுடைய கருவிகளை அறிமுகம் செய்து ஆயிரக்கணக்கானவர்களின் சிறுநீரகப்பை புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திய பெருமை மாசிலாமணி அவர்களை சாரும்… அரை நூற்றாண்டுக்கு மேல் இந்தத் துறையில் கடுமையாக இயங்கி வரும் பேராசிரியர் மாசிலாமணி பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர்.
இவருடைய லேசர் முறையிலான புற்றுநோய் கண்டுபிடிப்பு கருவிக்கு சவுதி மன்னர் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மாஸ்கோவில் ஆர்க்கிமிடீஸ் இன்வென்டர் விருது இவருக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது அமெரிக்காவினுடைய நியூயார்க் பல்கலைக்கழகம், கனடாவின் கியூபெக் மாண்ட்ரீல் பல்கலைக்கழகம் ஜெர்மனியின் ஃப்ரெடரிக் ஷீலர் பல்கலைக்கழகம், பிரான்ஸ்சின் போர்டியாக்ஸ் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களில் இவர் வருகை தரும் விஞ்ஞானியாகவும், பேராசிரியராகவும் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை.
தனது ஓய்வு நேரங்களில் தன் தாய்மொழியான தமிழில் கவிதைகள் படைப்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான உரைகளை நிகழ்த்துவதும் தமிழில் அறிவியலை பரப்புவதும் எழுதுவதுமான தன் பணிகளுக்காக அறிவியல் தமிழ் கழகம் என்னும் ஒரு அமைப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார் மாசிலாமணி என்பது குறிப்பிடத்தக்கது
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் அறிந்த இந்திய மின் வேதியியலாளர் நல்லதம்பி கலைச்செல்வி
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


பேராசிரியர். முனைவர். மாசிலாமணி ஐயா அவர்களுக்கு லேசர் முறையிலான புற்றுநோய் கண்டுபிடிப்பு கருவிக்கு சவுதி மன்னர் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளார். மாஸ்கோவில் ஆர்க்கிமிடீஸ் இன்வென்டர் விருது இவருக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவினுடைய நியூயார்க் பல்கலைக்கழகம், கனடாவின் கியூபெக் மாண்ட்ரீல் பல்கலைக்கழகம் ஜெர்மனியின் ஃப்ரெடரிக் ஷீலர் பல்கலைக்கழகம், பிரான்ஸ்சின் போர்டியாக்ஸ் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களில் இவர் வருகை தரும் விஞ்ஞானியாகவும், பேராசிரியராகவும் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமையே.
சிறுநீரக புற்றுநோய்க்கு லேசர் சிகிச்சை மூலம் தீர்வு காண 30வருடங்களுக்கு முன்பே ஆய்வு செய்து வெற்றி கண்ட நம் தமிழ் அறிவியல் மகனாரை வாழ்த்தி வணங்குகிறேன்.
பெயரளவில் மட்டுமே அறிந்திருந்த பேராசிரியர் முனைவர் மாசிலாமணி ஐயா அவர்களை,
அவரின் அறிவியல் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நமக்கு அறிமுகப்படுத்திய முனைவர் ஆயிஷா நடராசன் ஐயா அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
மிக்க நன்றி சார் 🙏
Pingback: இந்திய மரபணுவியல் வித்தகர் குமாரசாமி தங்கராஜ் - Book Day
மரபணுவியல் விஞ்ஞானி முனைவர் குமாரசாமி தங்கராஜ் அவர்களின் ஆராய்ச்சி பங்களிப்பு மிகவும் வியக்கத்தக்க பாராட்டுக்குரியவர். மேலும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமையாக கருதுகின்றோம். அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல புதிய அறிவியல் சாதனைகளை மானிடம் நலம் பெற உலகுக்கு அளிப்பார் என வாழ்த்துகிறேன்.
ப. தங்கராஜு,
மேனாள் துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.., சென்னை