நூல் : கல்வி எனப்படுவது…
ஆசிரியர் : லதா ராமகிருஷ்ணன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள் : 24
விலை : 15

நம்மிடம் யாரேனும் இந்த தலைப்பினை – அதாவது – ”கல்வி எனப்படுவது…” என்ற தலைப்பினைக் கொடுத்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் நம்மில் பெரும்பாலானோர் கல்வியைக் குறித்து எழுதத் தொடங்குகையிலேயே மதிப்பெண், தேர்ச்சி என்பது குறித்தே எழுதுவோம் அல்லவா? ஒருவேளை இன்றைய சூழ்நிலையில் எழுதும் கட்டுரையாயின் புதிய தேசிய கல்வி கொள்கையையும், அதன் சாதக பாதகங்களையும் சேர்த்தே எழுதுவோமாய் இருக்கும்.
ஆனால் இந்நூலாசிரியர் இவற்றையெல்லாம் தாண்டியும் சிந்தித்திருக்கிறார். இச்சிறுநூல் அதனாலே தனிகவனம் பெறுகிறது.

”கற்றது கையளவு, கல்லாதது உலகளவு“ என்பார்கள். இது நம் கல்வித்துறைக்கும் மிகவும் பொருத்தமானது. இன்றைய உலக நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வாங்குவதில் செலவழிக்கும் தொகையோடு ஒப்பிட மக்களுக்கு கல்வி கற்பிக்கவென ஒதுக்கும் நிதியின் அளவு பெரும்பாலும் கணிசமான அளவு குறைவாகவே இருப்பதாக” கூறி நூலினைத் தொடங்கும் ஆசிரியர்,  மனிதனின் வலிமையான ஆயுதமான கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார்.

பொதுவாகவே, இங்கு உயர் நிலை வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுவதை விடவும் ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மிக மிக குறைவாகவே உள்ளது. ஆனால், ஆரம்ப நிலை குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி முன்னவர்களின் பணியை விட மிக மிக பொறுப்பு வாய்ந்ததும் முக்கியமானதும் ஆகும். ஆனாலும் ஏனோ நம் சமூகத்தில் அவர்களுக்கான ஊதியம் என்பது பெரிய முரண்பாடுடனேயே இருப்பதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

பெரும்பாலும் நான் வாசித்த கல்வி சார்ந்த நூல்கள் அனைத்திலும் கல்வி தொடர்பான கட்டுரைகளில் அரசுப் பள்ளியை மையப்படுத்தியே புகழ்வதோ, தாழ்த்தி பேசுவதோ இருக்கும். ஆனால், இந்நூல் தனியார் மற்றும் அரசு இரு வகைகளிலும் உள்ள பாதக, சாதகங்களை மாணவர் வழிநின்று சீர்தூக்குகிறது.

”ஒரு குழந்தை ஐந்து வயதிற்குள் பெறும் அனுபவங்கள் அதன் வாழ்நாளுக்கும் அதன் மீது தாக்கம் செலுத்தும் தன்மை வாய்ந்தவை”, ”புதிதாக பேச ஆரம்பிக்கும் குழந்தையை, நடக்க ஆரம்பிக்கும் குழந்தையை கை கட்டி, வாய் பொத்தி, ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வைப்பது எத்தனை கொடுமை” என்பன போன்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும்  சிந்திக்க வேண்டிய கேள்விகளை ஆங்காங்கே தூவிச் செல்கிறார் நூலாசிரியர்.



ஆசிரியப் பணியினை ஏதோ கடமையே என செய்வோரையும் நாம் அறிவோம். ”எந்தவிதமான மன ஈடுபாடும் இல்லாமல் சம்பளத்திற்காக மட்டும் ஆசிரியர்களாக வருபவர்கள் குழந்தைகளிடம் அன்போடும், பொறுமையோடும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.” என்ற எதார்த்த நிலையினையும் சாடுகிறார்.

மனப்பாடம் செய்தலின் இன்னல்கள், நம் கல்வி முறையால் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லுதல் என பல தளங்களிலும் நூல் விரிகிறது. கல்வி சார்ந்த நூல்களை வாசிக்க விரும்பும் ஆசிரியரும், பெற்றோரும், மற்றோரும் வாசிக்க ஏற்ற நூல் – ”கல்வி எனப்படுவது…”
இறுதியாக நூலிலிருந்து சில மேற்கோள்கள்…

 ”ஒரு மாணவனின் திறனாற்றலை மதிப்பீடு செய்வதற்கான ஒரே அளவுகோலாக அவனுடைய மனப்பாடத்திறன் மாறிவிடலாகாது.”
 ”ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணாக்கர்களின் எதிரிகள், அவர்களை முடக்கும் சக்திகள் என்பதான எதிர்மறை பிம்பமே தொடர்ந்து ஒளி-ஒலி ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது”
 ”மாணவர்கள் பள்ளியிலிருந்து பாதியிலேயே நின்று விடுவதற்கு வறுமை கடைசிபட்சக் காரணமே. கல்வித்திட்டமும், பள்ளிகள் கடைபிடிக்கும் போக்குகளும், அனுசரணையற்ற வழிகளுமே முக்கிய காரணங்கள்.”

வாசிப்பும், பகிர்வும்

திவாகர். ஜெ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *