“என்னடா இது, கொரோனாவைரஸ் கண்ணுக்குத் தெரியாது, மைக்ராஸ்கோப் வழியாத்தான் பார்க்க முடியும்கிறாங்க, ஆனா இங்கே இவ்வளவு பெரிசா கண்ணு முன்னால வந்து நிக்குதே!”

-ஊரடங்கால் ரொம்ப நேரம் தூங்கிக்கொண்டிருந்தவனை, சரியாகத் தலைவாராதவள் உலுக்கி எழுப்பியபோது அவன் அலறுவது போலப் பாவலாக் காட்டியபடி இப்படிச் சொல்கிறான்.

“உன்னையெல்லாம் லாக்டவுன்னு சொல்லி வீட்டுல கிடக்கவெச்சாங்களே அவங்களைச் சொல்லணும். லாக்கப்பிலே உள்ளே தள்ளவேண்டிய ஆளு நீ.”

-அவள் போலீசுக்குப் போன் செய்வது போலப் பாவலாக் காட்டியபடி இப்படி அவனுடன் கணக்கை நேர் செய்கிறாள்.

அந்த இரண்டு பேருமே வாய்விட்டுச் சிரித்தபடி உற்சாகத்தோடு அன்றைய வேலைகளைத் தொடங்கியிருப்பார்கள் என்று ஊகிக்கலாம். இதைப் படிக்கிறவர்களும் மனம் விட்டுச் சிரித்தபடி தங்கள பணிகளைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்ககலாம்.

இதுவொரு தேவை

ஆம், கொரோனா தடுப்புப் போராட்டத்தில் தேவைப்படுவது மருத்துவ சிகிச்சை, முகக் கவசம், சமூகவிலகல், தட்டுப்பாடற்ற உணவு உள்ளிட்ட கட்டாயத்தேவைகள், தொலைபேசி வழியாகவேனும் நல விசாரிப்புகள், ஊக்கமொழிகள் ஆகியவற்றோடு நகைச்சுவையும்தான். மேற்படி உரையாடலைக் கூட, இந்த நேரத்தில் கொஞ்சமும் சீரியஸ்னெஸ் இல்லாமல் இப்படிப்பட்ட சிரிப்புக் கதைகள் தேவைதானா என்று கேட்பவர்கள் இருக்கக்கூடும்தான். ஆனால், கருத்துக்கணிப்பு ஒன்றை (தேர்தல் நேரத்துக் கருத்துத் திணிப்புத் தந்திரங்கள் போல இல்லாத மெய்யான கருததுக்கணிப்பு) நடத்தினால், இந்த நேரத்தில் இப்படிப்பட்ட சிரிப்புக் கதைகளை வரவேற்கிறவர்களே மிகப் பெரும்பான்மையாக இருப்பார்கள். ஏனென்றால், வழக்கமான வாழ்க்கையில் மட்டுமல்ல, நெருக்கடியான சூழல்களிலும் தேவைப்படுவது சிரிப்பு.

Buy RoyalBox Polyresin Handcrafted Cute Child Monk Showpiece ...

விலங்கினங்களில் மனிதர்களின் சிறப்புத் தன்மை என்னவென்றால் அவர்கள் சிரிக்கத் தெரிந்த விலங்குகளாக இருப்பதுதான் என்பார்கள். வேறு சில விலங்குகளும் தங்கள் உற்சாக உணர்வைச் சிரிப்பது போன்ற முகத்தோற்றத்துடன் வெளிப்படுத்துகின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், மனிதப் பரிமாணத்தில்தான் முழுமையான, பொருள் புரிந்த சிரிப்பாகவும் வளர்ச்சி ஏற்பட்டது. மிக முக்கியமானது, மனிதர்கள் சிரிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிரிக்க வைக்கத் தெரிந்தவர்களும் கூட. சொல்லப்போனால் சிரிக்கவைக்கும் கலை கைவரப்பெற்றவர்கள் சமுதாயக் கொடையாளர்கள். அரசியல் தலைவர்கள், அறிவியல் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகப் போராளிகள், உழைப்பாளிகள் என கொடை வழங்குவோர் எங்கும் இருக்கிறார்கள். ஆக, சிரிக்காதவர்களும் சிரிக்கவைக்காதவர்களும் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்களே முடிவு செய்து சிரிக்கலாம்.

இறுக்கமானதொரு சூழலில், ஒருவர் யாரையும் காயப்படுத்தாத ஒரு நகைச்சுவையை வெளிப்படுத்துகிறார் என்றால், அல்லது அந்தச் சூழலையே நையாண்டி செய்கிறார் என்றால் வெடித்துச் சிரிப்பதிலிருந்து அந்த இறுக்கச் சூழல் தளரத் தொடங்குகிறது. குடும்பங்களின் திருமண நிகழ்வுகள், இயக்கங்க்ளின் மாநாடுகள் என எங்கும் இப்படிப்பட்டவர்களைக் காணலாம். அவர்களால் இறுக்கம் தளர்வது மட்டுமல்ல, கடுமையான நிலைமையைச் சமாளிப்பதற்கான தெளிவும் தெம்பும் எல்லோரையும் நுண்ணுயிரி போலத் தொற்றிக்கொள்ளும் – முகக்கவசம் அணிந்து ஒரு மீட்டர் தள்ளித் தள்ளி நின்றால் கூட! இந்தத் தொற்றுக்கு யாரும் அஞ்ச மாட்டார்கள் – இது நல்லது செய்யும் பாக்டீரியா போன்றது என்பதால்!

கோமாளிக் கலைஞர்கள்

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற சொலவடை எவ்வளவு செரிவானது! அச்சமூட்டும் பேய்க்கதைகளை மாற்றி சிலர் சிரிப்பூட்டும் பேய்க்கதைகளை சினிமாவாக்கியபோது ஒருவர் “வாய்விட்டுச் சிரித்தால் பேய்விட்டுப் போகும்” என்று எழுதியது நினைவுக்கு வருகிறது. அலுப்புப் பேயை விரட்டுவதால்தானே, தெருக்கூத்துகளில் கோமாளிப் பாத்திரங்கள் ஒரு மரபாகவே இடம்பெற்று வருகின்றன. நாடகக் கதைக்குச் சம்பந்தமில்லாமலே அந்தக் கோமாளிக் கலைஞர்கள் தற்கால அரசியலைக்கூட வம்புக்கிழுப்பார்கள்.

Carnival Clowns Beach Sheet for Sale by Kaye Menner

தமிழகத்தில் முற்போக்குக் கலை இலக்கிய மேடைகளில் புதுகை பூபாளம் குழுவினருக்குக் கிடைக்கும் வரவேற்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு மிக மிக அடிப்படையானது ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கிற அவர்களது நையாண்டி விமர்சனங்கள்தான் என்பதை மறுப்பாரில்லை.

பள்ளியில், கல்லூரியில், பணித்தலத்தில், நண்பர்கள் கூட்டத்தில், தோழமை வட்டத்தில் ஒருவர் சிரிக்கவைக்கக்கூடியவராக இருந்தால் மற்றவர்களின் விருப்பத்திற்குரியவராகவும் இருப்பார். கொரோனாவால் வந்த வீடடங்கில் குடும்பத்தில் ஒருவர்க்கொருவர் கிண்டல் செய்து சிரிப்பது, யாரேனும் நகைப்புக்கிடமாக நடந்துகொள்கிறபோது சிரிப்பது, யாரோ யாரைப் பற்றியோ சொன்னதை இப்போது   ஒருவர் நினைவூட்ட மற்றவர்கள் சிரிப்பது – இவையெல்லாம் போகச் சிரிப்பதற்கு உத்தரவாதமான இன்னொரு வழி இருக்கிறது – அதுதான் தொலைக்காட்சிகளின் தனி நகைச்சுவை அலைவரிசைகள். வழக்கமான அலைவரிசைகளிலேயே நகைச்சுவைக்கென்று தனிக்காட்சிகள் இருக்கின்றன. தனிக் கலைஞர்களின் நகைச்சுவைப் பேச்சுகள், குழுக்களின் கலகல நாடகங்கள் என நிகழ்ச்சிகள் அசத்திக்கொண்டும் கலக்கிக்கொண்டும் இருக்கின்றன.

உளவியல் சார்ந்தது

எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இத்தகைய அலைவரிசைகள் இயங்கி சிரிப்பலைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பது சும்மா சிரித்துவிட்டுக் கடக்கிற செய்தியல்ல. ஆழ்ந்த தனிமனித உளவியலும் சமூக உளவியலும் இதில் பிணைந்திருக்கின்றன. அழுத்தங்களைத் தணித்துப் புத்துணர்ச்சியோடு செயல்பட வைக்கிறார்கள் என்பதால்தான் திரைப்படக் கலைஞர்கள், தொலைக்காட்சிகளின் நகைச்சுவையாளர்கள் உள்ளிட்ட  நகைச்சுவைக் கலைஞர்களை உலகெங்கும் மக்கள் நேசிக்கிறார்கள்.

தமிழில் பட்டிமன்றங்கள், வழக்காடுமன்றங்கள் ஆகிய வெகுமக்கள் இலக்கிய வடிவங்களின் வெற்றிக்கு அவை நகைச்சுவை கலந்து வாழ்வியலைப் பேசுவது முக்கியக் காணரமல்லவா? தம்பியருள் சிறந்தவன், கற்பில் சிறந்தவள் என்று முந்தைய இலக்கியங்கள் தொடர்பான தலைப்புகளில் சில சபைகளுக்குள் மட்டுமே சுற்றிவந்த இந்த நிகழ்ச்சிகள் அரசியலையும் சமூகநிலைமைகளையும் திரைப்படங்களையுமை பற்றி விவாதிக்கத் தொடங்கிய பிறகுதான் எளிய மக்களின் வெளிகளுக்கும் வந்தன.

யாழில் D.R. அம்பேத்கார் நினைவாக ...

மார்க்சியச் சிந்தனையாளர்கள் உட்பட இவற்றில் நட்சத்திரங்களாகக் கொடிகட்டிப் பறக்கிறவர்களை வரிசைப்படுத்த முயன்றால் – அவர் பெயர் விட்டுப்போயிடுச்சு, இவரைச் சொல்லாமல் விட்டுட்டீங்க என்று, அவர்கள் சும்மா இருந்தாலும் அவர்களுடைய நேயர்கள் சண்டைக்கு வருவார்களே! சிறப்பு நாட்களில் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்கள் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியல்லவா!

பத்திரிகைகளில் அரசியல் நையாண்டிச் சித்திரங்களாகிய கார்ட்டூன்களுக்குத் தனி வாசக வட்டமே இருக்கிறது. பத்திரிகைகள் இணையத்தளத்தில் ஏறிய பிறகும் கார்ட்டூன்களுக்கு அதே முக்கியத்துவம் தரப்படுகிறது. சில தொலைக்காட்சிகளில் தினமும் பத்திரிகைகளில் வெளியான கார்ட்டூன்கள் ஒளிபரப்பப்படுகின்றன. கொரோனா கால கார்ட்டூன்கள் என்றே தொகுத்து வெளியிடலாம்.

மீம்ஸ் ராச்சியம்

சமூக ஊடகங்கள் ஆளுமைமிக்கதொரு தளமாக உருவெடுத்த பிறகு, விதவிதமான ‘மீம்ஸ்’ கற்பனைகள் படையெடுத்து வந்து தாக்குகின்றன. அவை மேலோட்டமான சிரிப்பல்ல. முதலில் பார்த்த தெருக்கூத்துக் கோமாளிகளின் தொடர்ச்சியாக அரசியல் அபத்தங்களையும், சமூகக் கொடுமைகளையும் சந்தியில் நிறுத்திச் சிரிப்பாய்ச் சிரிக்கவைக்கின்றன.

100 Best tamil trolls Images, Videos - 2020 - 😅 தமிழ் ...

சிலர் சீரியஸ் மேட்டர் சொல்வதாக நினைத்துச் செய்கிற வேலைகள் வெடிச்சிரிப்பை வரவழைப்பதாக இருக்கும். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் விளக்கேற்றுகிறபோது, பூமியைச் சுற்றியிருக்கிற நட்சத்திரங்களும் கிரகங்களும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதால் ஏற்படும் எனர்ஜி, கொரோனாவை ஓட ஓட விரட்டும் என்பதாக வந்த வீடியோக்கள் இந்த ரகம்தான்.

சில சாம்பிள் ஜோக்குகள்

அந்த ரகத்திலான ஜோக்குகள் ஒருபுறமிருக்க, கொரோனா ஜோக்குகள் என்றே உலகம் முழுவதும் பரவி, கொரோனா அச்சத்தை முறியடித்துக்கொண்டிருக்கின்றன. இணையவழியில் வந்த அப்படிப்பட்ட ஜோக்குகளில் சிலவற்றைப் பார்ப்போம்:

  • “என்னப்பா இது கை மட்டும் இப்படி எலும்பும் தோலுமா இருக்கு?”

“ஒரு நாளைக்கு ஐம்பது தடவை சோப்புப் போட்டு கை கழுவினா வேற எப்படி இருக்கும்!

-கை கழுவுகிறபோதெல்லாம் இது நினைவுக்கு வந்து புன்னகைக்க வைக்கும்.

  • “கதவுல ரெண்டு கைப்பிடி இருக்கே எதுக்கு?”

“மேலே இருக்கிற கைப்பிடி கைகழுவிட்டு வர்றவங்களுக்காக. கீழே இருக்கிறது கைகழுவாம வர்றவங்களுக்காக…”

-கைகழுவாமல் நுழைகிறபோதெல்லாம் இது நினைவுக்கு வந்து குழாயருகில் போக வைக்கும்.

  • “நம்ம வாஷிங் மெஷின்ல ஏதோ பிரச்சினை, சட்டையெல்லாம் சுருங்கிப்போச்சே?”

“வாஷிங் மெஷின்ல இல்லை, ஃபிரிட்ஜிலதான் இருக்கு பிரச்சினை!”

-முதலில் புரியாவிட்டாலும், ஊரடங்கு என்று ஏகப்பட்ட உணவு வகையறாக்களை வாங்கி இருப்பில் வைத்துச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் உடம்பு பெருத்துவிட்டதைக் கிண்டலடிக்கிறது என்று புரிகிறபோது சிரிப்போடு, புதிரைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியும் சேர்ந்துகொள்ளுமல்லவா!

  • “என்னது,பேங்க்குக்குள்ள ரெண்டு பேரு மூகமூடி போட்டுக்கிட்டு வந்தததைப் பார்த்தியா? ஏன் எங்களுக்குச் சொல்லலை?”

“அவங்க கொள்ளையடிக்கத்தான் வர்றாங்கன்னு நான் நினைக்கலையே!”

-மாஸ்க் போட்டிருந்தாலும் அதற்குள்ளேயே சிரிக்கவைக்கிற ஜோக் இது.

  • “ஏன்இதை நாவல் கொரோனா வைரஸ்னு சொல்றாங்க…’”

“அது ஒரு நீண்ட கதை…’”

-நாவல் என்றால் புதிய என்ற பொருளும் இருக்கிறபோது இந்த வார்த்தை விளையாட்டை ஒரு நாவல் ஜோக் என்று சொல்லலாம்தானே.

  • “ஆமா,இன்னிக்கு நைட் நான் வெளியே போகலாம்னு பிளான் போட்டிருக்கிறது நிஜம்தான்.”

“அய்யய்யோ! எப்ப, எங்கே?”

“8 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் என் ரூமிலிருந்து ஹாலுக்கு.”

-வெளியே சுற்ற முடியாததன் மனச்சுமையை இந்த ஜோக் தன் தோளுக்கு மாற்றிக்கொள்கிறதே.

  • “எப்படி தலைவரே, ஒரே மாஸ்க்கை நாலு நாள் அழுக்குப்படாம யூஸ் பண்றீங்க?”

“இருமல், தும்மல் வந்தால் கழட்டிருவேன்!”

-இது நம்ம ஊர் சிரிப்பு. கட்சி வேறுபாடில்லாமல் சிரிக்கலாம்.

ஒரு பக்கம் கொரோனா போராட்டக்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கிற மக்கள், இன்னொரு பக்கம் முன்யோசனையற்ற அவசர ஏற்பாடுகள், அதனாலேயே தொற்று பரவிய வேதனைகள், எளிய மக்களைத் திண்டாடவிட்ட துயரங்கள் போன்றவற்றால் நொந்துபோகிறார்கள். அடுத்தடுத்து இப்படியாகப்பட்ட அபத்தங்கள் வந்து மோதுகிறபோது, சிரிப்பதன்றி வேறு எப்படித்தான் மனதைத் தேற்றிக்கொள்வது?

ஒரு சொந்த பிட்டோடு இதை முடிக்கலாம்:

“யாரது ஜோக்ஸெல்லாம் கேட்டுட்டு சத்தம் போட்டு சிரிச்சிக்கிட்டிருக்கிறது?”

“கொரோனா.”

செய்திக்கு அரசியல் உண்டு, அழகியல் ...

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com

One thought on “சிரிப்பது ஒரு தேவை, சிரிக்க வைப்பது ஒரு கொடை – அ. குமரேசன்”
  1. வாய்விட்டு சிரித்(து) தால் நோய் விட்டு
    போகட்டும்…😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *