‘கல் மண்டபம்’ – ஒரு கூரிய சமூகப் பதிவு
– சம்பத் ஸ்ரீனிவாசன்
இன்றைய பட்டிமன்றங்களின் பொதுப் போக்கு மாறிவிட்டது. கொடுக்கப்பட்ட 10 முதல் 15 நிமிடங்களுக்குள், நகைச்சுவைக்காக எதிரணியை நக்கலடிப்பதும், ஆண் பேச்சாளர்கள் மனைவியையும், பெண் பேச்சாளர்கள் கணவனையும் மையப்படுத்தித் துணுக்குகளைச் சொல்வதும், தலைப்பு சார்ந்த விஷயங்களை மேலோட்டமாகத் தொட்டு முடிப்பதும் பல ஆண்டுகளாக நடைமுறையாகிவிட்டது.ஆனால், வழக்கறிஞர் திருமதி. சுமதியிடம் இந்தக் கூட்டத்திலிருந்து விலகி நிற்கும் ஓர் ஆளுமையைக் காண முடியும்.
அவர் கொடுக்கப்பட்ட தலைப்புக்குள் மட்டுமே நின்று, தனது அழுத்தமான குரல் வளத்தால் நடுவரையும் பார்வையாளர்களையும் கட்டிப்போடும் திறன் கொண்டவர். நலிந்தவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு வழக்குகளைத் திறம்படக் கையாளும் வழக்கறிஞர் மட்டுமல்ல; பட்டிமன்றம் தவிர இலக்கிய விவாத அரங்குகளில் சிறப்பாகப் பேசக்கூடிய சிறந்த பேச்சாளரும் கூட.அப்படிப்பட்ட ஆளுமை திருமதி. சுமதி ஒரு படைப்பாளியாக எழுதிய நாவல்தான் ‘கல் மண்டபம்’. 2001-ல் வெளிவந்த இந்நூல், 2009 மற்றும் 2022 என மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.
நண்பர் ஆமருவி தேவநாதனின் சமீபத்திய பதிவு மூலம் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு, உடனே வாங்கி ஐந்து நாட்களில் படித்து முடித்தேன். மறைக்கப்பட்ட வாழ்வியலும் சுரண்டலும்’முன்னேறிய சமூகம்’ என்று பொதுவாகக் கருதப்படும் பிராமண சமூகத்தில், ஒருவரின் இறப்புக்குப் பின் நடக்கும் சடங்குகளையும், அதைச் சார்ந்து இயங்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலையும் இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.இறப்பு நேரிட்ட மறுநாள் தொடங்கி 13 நாட்கள் நடக்கும் காரியங்கள், சடங்குகளை நடத்துபவர்களான வாத்யார், பரிஜாரகர், மட்டை தூக்குபவர், சவண்டிக்கொத்தன் (சவண்டிக்கு ஒருவன்) போன்றோர், உயிருடன் இருப்பவரைப் பிரேதமாக வரித்து நடைபெறும் சடங்குகள், உப்பில்லா பிரபூதபலி என இவற்றுக்கான இடங்களான ஞானவாபி, கல் மண்டபம், விஷ்ணு தீர்த்தம், தர்ம வாபி (மதுரை டிவிஎஸ் தோப்பு), பிரம்ம தீர்த்தம் (கோவை) போன்ற இடங்களில் வலம் வரும் சாமானியர்களின் வாழ்நிலையை, வறுமையை, அவர்களுக்குள்ளேயே நிகழும் சுரண்டல்களை இந்நூல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.
இத்தகைய இடங்களில் முகவராக (ஏஜெண்ட்) ஆதிக்கம் செலுத்தும் ஒருவர், எதிர்த்துப் பேசுபவர்களை ஒழித்துக் கட்டும் போக்கையும் சுமதி மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.தேசு, ராமான்ஜி, விசாலம் மாமி போன்ற சிலரின் வாழ்க்கையை நுணுக்கமாகக் கவனித்து, கேட்டறிந்து, 2000-ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் கதை, இன்று 23 ஆண்டுகள் கடந்த நிலையில், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பிரேதங்கள் கொண்டு செல்ல வாகனங்கள், மின் மயானங்கள் வந்துவிட்டாலும், இந்தச் சமூகத்தில் இறந்த தின சம்ஸ்காரம், அஸ்தி கரைப்பு, 10 முதல் 13 நாட்கள் வரையிலான நிகழ்வுகள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

நம்பிக்கைகள் மீதான விமர்சனம்: ஒரு தெளிவுபடுத்தல்சமீபத்தில் ஒரு பேச்சாளர், பிரேதத்தை எடுத்துச் செல்லும் போது அக்னிச் சட்டி கொண்டு செல்வதைப் பற்றி ஏளனமாகப் பேசியிருந்தார். 60-70 ஆண்டுகளுக்கு முன் ஆற்றோர மயானங்களில் நெருப்பு கிடைக்காது என்பதற்காக எடுத்துச் சென்றிருக்கலாம். மின் மயானங்கள் வந்தபிறகு இது தேவையா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.ஆனால், இந்தக் கதையில் சொல்லப்பட்ட சமூகம் அக்னியைத் தெய்வமாக வழிபடுகிறது. பிரேதம் வைக்கப்பட்டிருந்த வீட்டில், நம்பிக்கைகளுக்கு ஏற்ப மந்திரங்களால் உருவாக்கப்படும் அக்னியின் ஒரு சிறு பகுதியை எடுத்துச் சென்று, மின் மயானமாக இருந்தாலும், பிரேதத்தை உள்ளே வைப்பதற்கு முன் அந்தச் சிறு நெருப்பை நெஞ்சிலிட்டுவிடும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். இவை ஒவ்வொருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள். சிலர் புதைக்கின்றனர், சிலர் எரிக்கின்றனர். பகுத்தறிவு பேசினாலும், புதைத்த சமாதியில் பூக்களிட்டு வழிபடுவதும் நடக்கிறது.
இவற்றையெல்லாம் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்து கடந்து செல்வதே சிறப்பாக இருக்கும். மாறாக, வாழ்நாளெல்லாம் சரியில்லாத ஒருவருக்கு மறைவுக்குப் பின் நடக்கும் ஆடம்பரமான பூப்பல்லக்கு, மேளதாளம், வெடிகள், போக்குவரத்து நிறுத்தம் போன்ற ஆரவாரங்களைக் கேள்வி கேட்க முடியாதபோது, நம்பிக்கையின் சடங்குகளை விமர்சிப்பது எந்த அளவு நியாயம் என்றும் மனம் கேட்கிறது.
பாத்திரப் படைப்பும் வடிவச் சிறப்பும் வேதாந்த தேசிகன் (தேசு), அவனுக்குத் துணையாக அமைந்த கல்யாணி, தேசுவின் தகப்பனார் ராமான்ஜி, தாயார் சௌந்தரம், ராமான்ஜியின் வாழ்வில் வரும் கீதா, கௌசி, பட்டண்ணா, விசாலம் மாமி, நரசிம்மன், சடகோபன், சேஷாத்ரி, குப்புசாமி, பாபு எனப் பல பாத்திரங்கள் உயிர்ப்புடன் உலவுகின்றனர். ஸ்ரீரங்கம், கொள்ளிடக்கரை, மதுரை டிவிஎஸ் தோப்பு, கோவை பிரம்ம தீர்த்தம், ஞானவாபி போன்ற கல் ஊன்றி காரியம் செய்யும் இடங்களில் இன்றும் தாடி வாத்யாராக, சௌரியாக, சுப்புணியாகப் பலர் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.யதார்த்தத்தை அற்புதமாகப் பதிவு செய்திருக்கும் இந்த நாவலில், புரோஹிதராகப் பணி தொடங்கி, அவமானத்தால் தளிகை பரிஜாரகனாக மாறிய ராமான்ஜி, அவரது மனைவி சௌந்தரம், மகன் தேசு ஆகியோரின் பாத்திரப் படைப்பு தனித்து நிற்கிறது.
நிகழ்கால நடப்பு, அடுத்த அத்தியாயத்தில் முந்தைய நிகழ்வின் Flash back, மீண்டும் நிகழ்கால நடப்பு என மாறி மாறிச் செல்லும் பாங்கு, நம்மை அறியாமல் பாத்திரங்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. தேசுவுக்குக் கல்யாணி துணையாக அமைந்த பின், குழந்தைகளின் பிறப்புக்குப் பின், அவன் சகவாசப் பழக்கங்களிலிருந்து மீண்டானா, அவர்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுச் சுயமாகக் காலூன்றி நின்றார்களா என்கிற எதிர்பார்ப்பு பதைப்பு நம்முள் தோன்றுகிறது.கதை ஓட்டத்திற்கிடையே சூழலுக்கேற்பப் பாசுரங்கள், ஜெயதேவர் அஷ்டபதி, திரை இசைப் பாடல் வரிகள் எனக் கோத்திருக்கும் பாங்கு ரசிக்கத்தக்கது. பசி, ஏழ்மை, முரண்பாடுகள், சண்டைகள் என இவை நடந்துகொண்டிருக்கும் போதே, கணவன்-மனைவி அந்நியோன்யம், அவர்களிடையேயான சிருங்காரம் ஆகியவற்றைப் பதிவு செய்திருக்கும் விதம், நம்மை இன்னும் ஆழ்ந்து அந்த நாவலுக்குள் பயணிக்க வைக்கிறது. வறுமையாலும், போதிய கல்வித் தேர்ச்சியின்மையாலும் அந்திம காரியங்களுக்கு உதவியாளராக வரும் தேசு போன்றவர்களின் குழந்தைகள் நல்ல கல்வி பெற, அவர்கள் வாழ்நிலை மேம்பட வசதி வாய்ந்த சமூகப் பெரியவர்களும், அறக்கட்டளைகளும் உதவிகள் செய்ய வேண்டும் என்கிற பிரார்த்தனை மனதிற்குள் ஓடுகிறது.
இந்த நாவலுக்கு எனது முகநூல் நண்பர் கோவை ஓவியர் ஜீவா மிகச் சிறப்பாக அட்டைப்படம் வடிவமைத்துள்ளார். தேசுவின் பணிச்சூழல், உணர்ச்சிகள், வறுமை என அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, மெலிதான வர்ணத்தில் சில கோடுகளில் அற்புதமாக அந்தப் பாத்திரப் படைப்பை முன்னிறுத்தியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்!சமூகத்தில் கவனிக்கப்படாமல், பேசப்படாமல், சொந்த சமூகத்தாலே அலட்சியப்படுத்தப்படும் குறிப்பிட்ட சிலரின் வாழ்வியலை அற்புதமாக எழுதியிருக்கும் திருமதி. சுமதிக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.
நூலின் விவரங்கள்:
நூல் : கல் மண்டபம்
ஆசிரியர் : வழக்கறிஞர் சுமதி
வெளியீடு : சிறுவாணி வாசகர் மையம்
விலை: ரூ.250
எழுதியவர் :
✍🏻 சம்பத் ஸ்ரீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

