நான் பிப்ரவரி 13 அன்று திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கும், மறுநாள் திரும்புதலுக்கும் விமானப் பயணம் மேற்கொள்ள நேர்ந்தது. திருவனந்தபுரம் பன்னாட்டு முனையத்தில் விமானம் ஏறுவதற்கான வரிசையில் நின்றிருந்தபோது, அதற்கு இணையாக விமான நிலையத்தை விட்டு வெளியேறுபவர்களின் இன்னொரு வரிசையும் நின்றிருந்தது. கேரள அரசின் சுகாதாரத் துறையால் விமான நிலையத்துக்குள்ளேயே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் பரிசோதனைக்கு உட்பட்ட பின்பே அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இதைப் பார்த்திராத எனக்கு திருவனந்தபுரத்தில் ஒரு வேடிக்கைபோல தோன்றியது. ஆனால், அடுத்து வந்த அசாதாரண நாட்களானது கேரள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தின.
சீனாவில் முன்னரே கரோனா தாக்குதல் தொடங்கிவிட்டாலும், அதன் பரவலைப் பற்றிய தகவல்கள் தாமதமாகவே வெளியுலகுக்குத் தெரியவந்தன. 2020 ஜனவரி 30 அன்று சீனாவிலிருந்து கேரளம் திரும்பிய மூன்று மருத்துவ மாணவர்களுக்கு கரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக கேரளம் எச்சரிக்கை அடைந்தது. 2018-ல் மாநிலத்தின் வடக்கு, மத்திய மாவட்டங்களில் ஏற்பட்ட நிபா வைரஸ் தாக்குதல் இந்த எச்சரிக்கைக்குக் காரணமாக இருந்தன.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர், படிப்போர் கணிசமாக இருப்பதும் அவர்களுடைய போக்குவரத்தின் வழி வந்த தொற்றுமே கேரளத்தில் கரோனா பரவ முதன்மைக் காரணம். அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தாலும், இந்தக் கட்டங்களில் கரோனா தாக்குதலின் தீவிரத்தை மக்கள் சரிவர உணர்ந்திருக்கவில்லை என்பது தாக்குதல் எண்ணிக்கை அதிகரிக்க இன்னொரு காரணமாக இருந்தது; வெளிநாட்டு விமான சேவையில் மத்திய அரசு எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டுவராததும், கேரளத்துக்கு வெளியிலிருந்து வரும் ரயில்கள் வழக்கம்போல் வந்துசென்றதும் தொற்றை மேலும் அதிகப்படுத்தின.
தடத்தைப் பின்தொடர்தல்
கரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒருவரின் வழித் தடத்தைப் பின்தொடர்ந்து, அவரோடு சமீப காலத்தில் பழகியிருந்த அத்தனை பேரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரும் நடவடிக்கையை இன்றைக்கு இந்தியா முழுக்க உள்ள அரசுகள் கையில் எடுத்திருக்கின்றன. இந்தியாவில் கேரளம்தான் இதை முதலில் தொடங்கியது. இத்தாலியிலிருந்து திரும்பிய ரான்னியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மூலம் கரோனா பரவியிருப்பது கண்டறியப்பட்டபோது, அவர்களது வழித் தடம் மூலம் மற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
கோந்நி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் A.U.ஜெனிஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.P.B.Nooh இருவரும் ஆவணிபாறை என்ற ஆதிவாசி காலனிக்கு, அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய, மூட்டைகளை, தங்களது தோள்களில் சுமந்து செல்லும் காட்சி.
இதற்குள் கரோனா இதர மாவட்டங்களும் வேகமாகப் பரவியிருப்பது தெரியவந்தது. மார்ச் 12 அன்று 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தபோது மாநிலம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கும் தடுப்பு நடவடிக்கைக்கும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளைத் தவிர்க்கச் சொன்னதோடு, இதைக் கடுமையாகப் பின்பற்றவும் அரசு நடவடிக்கை எடுத்தது. ‘சங்கிலித் தொடரை அறு’ (பிரேக் தி செய்ன்) விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடந்தன.
பொதுவாக, பிப்ரவரி – மார்ச் கேரளத்தில் உற்சவக் காலம். மக்கள் திரளும் நாட்கள். திருவிழாக்கள், தலயாத்திரைகள், சுற்றுலாக்களுக்குத் தடை விதிக்கும் துணிச்சலான நடவடிக்கையை அரசு எடுத்தது. திரையரங்குகள், வணிக வளாகங்கள் முதலான மக்கள் திரளும் எல்லா இடங்களும் மூடப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. அவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் தடைசெய்யப்பட்டன. நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டதாக நாளிதழ் ஒன்றில் வெளிவந்த அறிவிப்புகள் வழக்கமாக அதில் வரும் மணமக்கள் தேவை விளம்பரங்களைவிட அதிகமாக இருந்தன.
சமூகம் முன்னெடுத்த ஊரடங்கு
மாநிலம் தழுவிய ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படாமலேயே இத்தனையும் நடந்தன. அரசின் கோரிக்கைக்கு மக்கள் செவிசாய்த்ததன் விளைவு இது. மார்ச் 20 அன்று இந்தச் சிக்கலான நிலைமையை மாநிலப் பேரிடர் என்று பிணராயி விஜயன் அறிவித்தார். அதுவரை மாநிலச் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நோய்த் தடுப்புப் பணிகளானது காவல் துறை உள்ளிட்ட பிற துறைகளும் ஒன்றுபட்ட கூட்டமைப்பின் பணிகளாக மாறின. அடுத்த மூன்றாவது நாள் மாநிலத்தில் கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டுவரப்பட்டவர்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்தைக் கடந்துபோது, ‘மாநில ஊரடங்கு’ அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை அரசு செய்திருந்ததால் பிற்பாடு தமிழகத்திலோ, நாடு தழுவிய வகையிலோ கொண்டுவரப்பட்ட ஊரடங்கு விளைவித்ததைப் போல, சொந்த ஊர் தேடி நகரங்களிலிருந்து கிராமங்கள் நோக்கி உள்மாநில ஆட்கள் அலைக்கழியும் நிலை கேரளத்தில் பெரிய அளவில் உருவாகவில்லை.
பசிக்கு எதிரான போர்
இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் நாள் வரை நாட்டிலேயே கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாநிலம் கேரளம். 1.6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாநிலம் முழுவதும் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். ஆனால், இருவர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். குஜராத்தின் அகமதாபாதில் கரோனா தொற்றுக்குள்ளான ஐவரில் மூவர் இறந்துவிட்டதாக நேற்று முன்தினம் படித்தபோது கேரள அரசின் செயல்பாடு லேசானதல்ல என்று புரிகிறது.
மக்களுக்கு உணவளிக்கும் வாலிபர் ( DYFI ) சங்கத்தினர்
எனக்கு நாடெங்கிலும் இக்காலகட்டத்தில் ஏழை மக்கள் படும் பாட்டைக் காண்கையில் கேரள அரசின் முக்கியமான செயல்பாடாகத் தோன்றுவது அது முன்னெடுக்கும் பசிக்கு எதிரான போர். சமூகநலத் துறையின் ‘குடும்பஸ்ரீ’ அமைப்பு வாயிலாகக் கடன் வாய்ப்புகள், இலவச ரேஷன், நலிந்தவர்களுக்கான ஈட்டூதியம், கேரளத்தில் பணிபுரியும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கான – அவர்களை ‘விருந்தினர் உழைப்பாளிகள்’ என்று குறிப்பிட்டார் பிணராயி விஜயன் – சமுதாய சமையற்கூடங்கள் இவையெல்லாம் கேரள முன்மாதிரிகளாகப் பேசப்படுகின்றன. மனிதர்களை அண்டித் தெருவில் திரியும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவு அளிப்பதற்கும்கூட ஏற்பாடு செய்திருக்கிறது கேரள அரசு.
அன்றாடம் ஊடகச் சந்திப்பு வாயிலாக மக்களுக்கு நிலவரங்களைத் தெரிவித்துவருகிறார் பிணராயி விஜயன். ‘மாநிலத்தில் ஒருவர்கூட உணவில்லாமல் சாகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று சொன்னதோடு அல்லாமல், அதை நடைமுறைப்படுத்தவும் ஓடுகிறார். இது கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மோதும் போர்க்களம். அதில் மக்கள் வெற்றி பெற நம்பிக்கையான அரசு தேவை. அப்படி ஓர் அரசை இப்போது கேரளம் பெற்றிருப்பது ஆறுதல். ‘கட்சி, கோட்பாடு, கொள்கை, மதம் எல்லாம் சரிதான். ஆனால் அவையெல்லாம் மனிதர்கள் இருந்தால்தானே அர்த்தமுள்ளதாகும். இப்போது நம்முடைய நோக்கம் மனிதர்களைக் காப்பாற்றுவது’. கரோனா காலத்தில் கேரளம் பகிர்ந்துகொள்ளும் செய்தி இதுதான்.
– சுகுமாரன், கவிஞர், ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியர்.
தொடர்புக்கு: [email protected]