பட்டதாரி ஆசிரியர் திரு. பிச்சைக்கனி வழக்கமாக குழந்தைகள் செயல்பாட்டை பதிவு செய்து காணோளி அனுப்புவார். அவ்வாறே இன்றும் ஒரு காணோளி அனுப்பி இருந்தார்.
ஊரடங்கு காலத்தில் கற்றல் கற்பித்தல் நின்று போனதாகவும், இணையவழியாக பாடங்கள் நடத்தாவிட்டால், குழந்தைகள் கற்றல் செயல்பாட்டையே மறந்துவிடுவார்கள் என்று புலம்பும் நபர்களுக்கு, அவர் அனுப்பிய காணோளி சிறந்த பதிலாக எனக்கு பட்டது.
1967யில் ஜான் ஹோல்ட் எழுதிய “எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?” என்ற நூல் தான் இன்று வரை குழந்தைகள் கற்கும் விதம், பெற்றோர், ஆசிரியர் அணுகுமுறை ஆகியவற்றை பற்றி விவாதிக்க இத்துறையில் அக்கரை உள்ள அனைவராலும் வாசிக்கப்படுகிறது. இந்நூலை அப்பணசாமி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார்.
நோய் தொற்று ஊரடங்கு காலத்தில் கற்றலைப் பற்றி பேசுபவர்களுக்கு ஜான் ஹோல்டும் தெரியாது. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்றும் தெரியாது.
நேரடி வகுப்பு இல்லை, எனவே, இணையவழி கற்றல் என்ற ஒற்றை வாதத்தை தவிர வேறு எதை பற்றியும் இவர்கள் சிந்திக்க தயாராக இல்லை.
இவர்கள் புரிதலில் வகுப்பறையில் புத்தகத்தில் உள்ளதை ஆசிரியர் தனது மாணவர் புரிந்து கொள்ள உதவுகிறார். அதே வேலையை இணைய வழியாக ஆசிரியர் செய்வார்.
எனவே இணையவழியாக வகுப்பு நடத்த வேண்டும். மாணவர் இருக்கும் இடத்தில் இருந்தே கற்றுக் கொள்வார்கள். இதற்கு கணினி, மடிக் கணினி, கை அடக்கமாக உள்ள செல்லிடப் பேசி போன்ற மின் கருவிகள் இருந்தால் போதும்.
மின்தடை இல்லாமல் எல்லா இடத்திலும் மின்சாரம் 24 மணிநேரமும் உள்ளதா? இணைய வசதி எல்லா இடத்திலும் உள்ளதா? அலைக்கற்றை சமமாக எல்லா இடத்திலும் உள்ளதா? இதை பயன்படுத்த எவ்வளவு கட்டணம்? அந்த அளவிற்கு பெற்றோரிடம் பணம் உள்ளதா? இந்த கேள்விகள் எழுப்பினாலே இவர்களுக்கு எரிச்சல் வரும்.
இருப்பவர்கள் பற்றி மட்டுமே கவலைப் படும் இவர்களுக்கு இல்லாதவர்களின் கவலை ஒரு பொருட்டே அல்ல. வல்லான் வாழ்வான் (Survival of the fittest) என்பதே இவர்கள் கொள்கை. வணிகச் சந்தையிடம் கல்வி என்றால் வேறு என்ன நாம் எதிர்பார்க்க முடியும்.
நோய் தொற்று, அதன் விளைவாக ஊரடங்கு, இத்தகைய சூழலில், தனது அரசுப்பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு எவ்வாறு அமையலாம் என்று ஆராய, மாநில அரசு, ஒரு குழு அமைக்கிறது. ஆனால் அந்த குழுவில் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர் யாரும் இடம் பெறவில்லை. மத்தியப் பாடத்திட்ட பள்ளி நிர்வாகிகள் இந்த குழுவில் கல்வியாளர்கள் என்ற அடிப்படையில் இடம் பெற்றுள்ளனர்.
பள்ளி பாடவேளை, அதற்கு தகுந்தாற்போல் பாட அளவு, கற்பித்தல் முறை ஆகியவற்றை குறித்து ஆராய வேண்டிய ஒரு குழுவில், பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியரின் நேரடி அனுபவ பகிர்வு இல்லாமல் எவ்வாறு முடிவெடுக்க முடியும். முடிவு எடுக்கும் இடத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் இருக்க வேண்டியது இல்லை என்ற சிந்தனை ஜனநாயக தன்மை கொண்டதல்ல.
“நான் சொல்வதை நீ செய்தால் போதும்” என்று ஒரு அதிகார வர்க்கம் ஆசிரியரை பார்த்து சொல்ல அனுமதிக்கும் சமூகம் பண்பாட்டு ரீதியாக இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றே நாம் கருத வேண்டும்.
இத்தகைய சூழலில், ஒவ்வொருவரும் குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்று அறிய முற்பட வேண்டி உள்ளது. குழந்தைகளை உற்று நோக்கினால், குழந்தைகள் பல முறைகளில கற்கிறார்கள் என்பது புலப்படும்.
அ. ஐம்புலன்கள் வாயிலாகக் கற்றல்,
ஆ. பார்த்து, கேட்டு, செய்து கற்றல்,
இ. தெரிந்ததிலிருந்து கற்றல்,
ஈ. சூழ்நிலையோடு தொடர்பு படுத்தி கற்றல்,
உ. ஆராய்ந்து கற்றல்,
ஊ. குழுக்கற்றல்
உள்ளிட்ட பல வகைகளில் குழந்தைகள் கற்கிறார்கள் என்பது விளங்கும்.
குழந்தைகள் கற்கின்ற போது அவர்களை பயம் கொள்ள செய்ய வேண்டியது இல்லை. ஆபத்தான செயல்களாக நாம் கருதும் சில செயல்களில் அவர்கள் ஈடுபாடும் போது கவனித்து வழி நடத்த வேண்டுமே தவிர மிரளவைத்தல் கூடாது.
துணிந்து தானாக சில செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தன் நம்பிக்கை வளரும். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும். பயம் விலகும். சுயசார்பும், சுய முயற்சியும் பெருகும். வாழ்க்கையில் நம்பிக்கையும், மனதில் உறுதியும் வளரும்.
சமூகத்தின் அங்கமாக தன்னை கருதி, சமூகத்திற்கு ஒரு சிக்கல் என்றால் அது தனக்கும் தான் என்று உணரச் செய்யும். தனக்கு வரும் சிக்கலை சமூகத்துடன் இணைந்து எதிர்கொள்ளும் கூட்டு வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ள உதவும்.
பாலின சமத்துவம், உயர்வு தாழ்வு அற்ற சமூக அமைப்பை கட்டமைப்பது, அனைத்து மனிதர்களையும் சமமாக மதிப்பது போன்ற வாழ்க்கையின் உன்னதமான விழுமியங்களை குழந்தைகள் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வார்கள்.
பொத்திப் பொத்தி, பாடநூலுக்குள்ளேயே முடங்க வைக்கப்படும் குழந்தைகள் சமூக மனிதராக வளர வாய்ப் பற்றவர்களாக வளர்கிறார்கள்.
இதோ, தென்காசி மாவட்டத்தில் ஒரு கிராமம். அங்கு ஒரு குடும்பம். தாய் தந்தை இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். அவர்களின் குழந்தைகள் இரண்டும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கின்றனர்.
இணையதளமும் இல்லை, தொலைக் காட்சி பெட்டியும் இல்லை. ஊரடங்கில் இந்த குழந்தைகள் கற்கிறார்கள். தாங்கள் எப்படி கற்றுக் கொள்கிறோம் என்பதை அப்பா, அம்மா அறிந்துக் கொள்ள உதவுகிறார்கள்.
ஒரு நாள் உரையாடல், மற்றோரு நாள் கதை சொல்லுதல், அதற்கு அடுத்த நாள் கற்றல் கற்பித்தல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விவாதித்தில், அதன் நீட்சியாக மரம் ஏறி பழுகுதல்.
குழந்தைகள் உரையாடுகிறார்களா? குழந்தைகள் கற்றல் கற்பித்தல் குறித்து விவாதிக்கிறார்களா? என்று பலரும் ஆச்சரியப்படலாம்.
“சொல்லுவதை செய்” என்று குழந்தைகளுக்கு ஆணையிட்டு பழகிப்போன நமக்கு இது ஆச்சரியமான செய்தி தான்.
அவர் அனுப்பிய காணோலியில் கூர்மையாக ஒன்றை கவனிக்க முடிந்தது. மகன் மரம் ஏறுகிறார். அப்பா அதை படம்பிடிக்கிறார். குழந்தை விழுந்துவிட்டால் என்ன செய்ய என்று பயந்து அப்பாவோ அம்மாவோ மரத்தடியில் நிற்க வில்லை.
மகன் ஏறும் போது அப்பா உற்சாகப்படுத்துகிறார், எந்த நொடியில் மகனின் வேகம் குறைந்து சிரமப் படுகிறான் என்று உணர்கிறாரோ அந்த கணம் குழந்தையிடம், “போதும், இறங்கலாம்” என்கிறார். இது தான் கவனித்தல், வழி நடத்துதல் என்பது.
குழந்தை, பழக்கமில்லாத, புதுமையான ஒரு கற்றல் செயல்பாட்டில் ஈடுபடும் போது, குழந்தையை தடுக்கவில்லை. குழந்தையை பயமுறுத்தவில்லை. குழந்தை செய்ய நினைப்பதை செய்ய அனுமதித்து, புதியதாக ஒரு அனுபவம் குழந்தை பெற உதவுகின்றனர் தாயும் தந்தையும்.
மகள் ஏறுகிறார், தாயின் பதட்டத்தை குரல் மூலம் உணர முடிகிறது. ஆனால் தாய், தந்தை இருவரும் மரத்தின் அருகில் செல்லவில்லை. எந்த உயரத்தில் குழந்தை சிரமப் படுகிறார் என்று உணர்கிறார்களோ அப்போது “போதும், இறங்கலாம்” என்கின்றனர்.
ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் சமமாக மரம் ஏறச் செய்து ரசிக்கின்றனர் இந்த பெற்றோர்.
இவை அனைத்தும் கற்றல் செயல்பாடு தானே. இவ்வாறு, தான் வாழும் சூழலில் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்த ஏன் நாம் சிந்திக்க வில்லை. பாடப் புத்தகத்தை தாண்டி குழந்தை கற்றுக் கொள்வதை அங்கீகரிக்க மறுப்பதும், அவ்வாறான முயற்சிகளை உற்சாகப்படுத்த முன்வராததற்கான காரணம், கற்றல் செயல்பாடு குறித்த முழுமையான புரிதல் நமக்கு இல்லாததே.
இத்தகைய இயல்பான கற்றல் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் இந்த பெற்றோர் யார்?
தமிழ் நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள். குழந்தைகளையும் குழந்தைகள் வளரும் வாழ்க்கை சூழலையும் நன்கு உணர்ந்து, குழந்தைகள் விரும்பி கற்கும் படி தேவையான வகுப்பறை சூழலை உருவாகாகித் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
இத்தகைய அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம், “இவ்வாறு பாடம் நடத்து” என்று அரசுப் பள்ளியை எட்டிக்கூட பார்க்காத அதிகார வர்க்கம் ஆணையிட போகின்றதாம்.
இத்தகைய ஆசிரியர்களை சுயமாக சிந்திக்கவோ, செயல்படவோ அனுமதிக்காமல், நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், நிர்வாகத்தின் ஆணைக்கினங்க செயல்பட வேண்டிய ஊழியர்களாக நடத்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் எதிர்பார்க்கும் கண்ணியமிக்க குடிமக்களாக மாணவர்களை எவ்வாறு உருவாக்க முடியும்?
இத்தகைய நிர்வாக அணுகுமுறை, சொல்வதை செய்யும் ஏவலாளிகளாகத் தானே மாணவர்களை உருவாக்கும். நாகரீக சமூகம் எவ்வாறு இதை அனுமதிக்க முடியும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அனுபவத்தை உள் வாங்கி பள்ளிகள் இயங்கத் தொடங்கினால் சமத்துவம் மலரும், சமூகம் மேம்படும்.
அரசுப் பள்ளிகள் சமூகத்தின் சொத்து. அதன் ஆசிரியர்கள் குழந்தைகளை சுதந்திர மனிதர்களாக வளர்த்தெடுக்கும் பண்பாட்டு செயல்பாட்டாளர்கள்.
அத்தகைய உணர்வோடு, அரசுப் பள்ளி ஆசிரியர்களை சுதந்திரமாக பணி செய்ய அனுமதிப்போம், ஆசிரியர்களை அரவணைத்து போற்றுவோம்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
இந்த நேரத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை. மரம் ஏறுதல் நல்ல உதாரணப்படுத்தல்