தவெக மீதான இடதுசாரி விமர்சனம்
– என்.குணசேகரன்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இது குறுகிய காலமாக இருக்கலாம்; எனினும் அவர்களது செயல்பாட்டில் பல விமர்சனங்கள் உண்டு.
ஒன்றிய அரசின் செயல்பாடுகள் தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இன்றைய சூழலில், அது பற்றிய தவெக அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தெளிவாக்கப்படவில்லை.
தவெக அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம், ஒன்றிய அரசுடனான அதன் உறவு ஆகிய இரண்டு முனைகளிலும் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளனர்.
பொருளாதார அணுகுமுறை
ஆட்சிக்கு வந்தவுடனேயே “கஜானா காலியாக உள்ளது” என்ற குற்றச்சாட்டை முன்னாள் திமுக அரசின் மீது சுமத்திய தவெக அரசாங்கம், ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அரசின் தற்போதைய நிலை என்ன, ஏன் அந்நிலை உருவானது என்பதை மட்டும் விளக்கும் அவ்வறிக்கையில், அதைச் சரிசெய்வதற்கான குறிப்பிட்ட செயல்திட்டம் இல்லை.
இதன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டு முதல் முழு பட்ஜெட்டிலும் இதே போக்கு தொடர்ந்தது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களுக்கான நீண்ட நாள் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இந்தக் குறுகிய காலத்திலேயே ₹20,000 கோடி கூடுதல் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. ₹10.98 லட்சம் கோடி மொத்தக் கடன் ஏற்கனவே உள்ளது. இந்த நிலையில், பொதுச் செலவினங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கான தெளிவான நிதி ஆதாரம், எதிர்கால சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தெளிவான அணுகுமுறை இல்லை.
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி (GSDP) 15.98% எனச் சொல்லப்பட்டுள்ளது. அரசின் சொந்த வருவாய் வளர்ச்சி வெறும் 6.89% மட்டுமே என்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. வளர்ச்சிக்கும் வரி வசூலுக்கும் இடையேயான இந்த இடைவெளியை எப்படி நிர்வகிப்பது?
பெருநிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தோரிடமிருந்து முறையாக வரிகளை வசூலிப்பதற்கு அரசாங்கம் உறுதியான முயற்சிகளை மேற்கொள்கிறதா எனும் கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு அரசாங்கம், மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட ‘வருவாய் பெருக்குக் குழுவை’ அமைத்துள்ளது. மாண்டேக் சிங் அலுவாலியா இந்தியாவின் நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் முதன்மை வடிவமைப்பாளர்களில் ஒருவர்; 1991-ல் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற்றும் சந்தை சார்ந்த சீர்திருத்தங்களில் முக்கியப் பங்கு வகித்தவர். அரசுக் கட்டுப்பாடுகளைக் குறைத்து, தனியார் துறை மற்றும் உலகளாவிய சந்தை ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் கொள்கைகளை இவர் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளார். இந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும், தற்போது வந்துள்ள அறிவிப்புக்களும் நடவடிக்கைகளும் நவதாராளமயத்தை நோக்கியதாகவே அமைந்துள்ளன.
நவதாராளமய நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல!
தமிழ்நாடு அரசாங்கம் உள்கட்டமைப்பை மேம்படுத்த தனியார்மயமாக்கல், பொது-தனியார் பங்களிப்பு (PPP), அவுட்சோர்சிங், ஒப்பந்த வேலைகள் என நவதாராளமயக் கொள்கைகளைப் பல்வேறு துறைகளில் கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது:
- அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பெருமளவில் PPP மூலமாகத் திட்டமிடப்படுகின்றன.
- சென்னை போன்ற பெருநகரங்களில் மின்சாரப் பேருந்துகளைப் பொதுப் போக்குவரத்துத் துறையிடம் நேரடியாக வாங்காமல், தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்கி பராமரிக்கும் PPP திட்டங்கள்.
- சென்னை அவுட்டர் ரிங் ரோடு, பெரிஃபெரல் ரிங் ரோடு மற்றும் முக்கியத் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் டோல் பிளாசா வசூல் உரிமைகளுடன் கூடிய PPP முறை.
- கோயம்புத்தூர்-அரியலூர் மின்சாரப் பரிமாற்றக் காரிடார் (₹4,000 கோடி) மற்றும் 20,000 மின் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கத் தனியார் பங்களிப்பு ஊக்கப்படுத்துவது.
- பொதுமக்களுக்கான அடிப்படைச் சேவைகளைத் தனியார் முகமைகள் வசம் ஒப்படைக்கும் போக்கு; பேருந்து நிலையங்களை மறுமேம்பாடு செய்து வணிக வளாகங்களை அமைக்கும் உரிமையைத் தனியாருக்குத் தருவது போன்ற திட்டங்கள்.
- அரசுப் பணிகளில் நிரந்தரப் பணியிடங்களுக்குப் பதிலாக ஒப்பந்த/வெளிமுகமை (Outsourcing) முறைக்கு முக்கியத்துவம்; மாநகராட்சி/நகராட்சிகளில் தூய்மைப் பணியிடங்கள் சுய உதவிக்குழுக்கள் அல்லது தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் நிரப்பப்படுவது; அரசு மருத்துவமனைகளில் செவிலியர், கணினி இயக்குபவர், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆண்டுக்கணக்கில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுவது.
இது போன்ற நடவடிக்கைகளின் விளைவாக, அரசு வேலை வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன.அது மட்டுமல்லாது,பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடும் சமூக நீதியும் பாதிக்கப்படுகிறது. வேலைப் பாதுகாப்பின்மை, குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு, PF, மருத்துவக் காப்பீடு, பணி நிரந்தரம் இல்லாமை போன்ற அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
இந்த நவதாராளமயப் போக்கிற்கு இணையாக, மாநிலப் பொருளாதாரத்தின் அடிப்படையான விவசாயத் துறையும் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 60 சதவீதம் மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தைச் சார்ந்துள்ள நிலையில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு சுமார் 13 சதவீதமாகச் சுருங்கிப் போயுள்ளது. கடந்த திமுக ஆட்சி இதை மாற்றுவதில் முனைப்புக் காட்டவில்லை; தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பது மட்டும் போதுமானதல்ல. விவசாய இடுபொருள் விலைகளைக் குறைப்பது, ஆதார விலையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள்தான் முக்கியமானவை. இந்தப் பார்வை தவெகவிடம் இல்லை .
உணவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏழை-நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்து வருகிறது; மாநிலப் பொருளாதார ஆய்வறிக்கை மொத்த வேலையின்மை விகிதம் 3.5% எனக் குறிப்பிட்டாலும், சமூகப் பாதுகாப்பற்ற வேலைகளே அதிகரித்துள்ளன — பெண்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கவில்லை.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்துள்ள ‘அமெரிக்க-ரஷ்ய பொருளாதார தடைச்சட்டம்’ ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கடுமையாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது; இது மறைமுகமாக இந்திய மக்கள் மீதான பொருளாதார சுமையை அதிகரிக்கும்.
இதேபோல் அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு விலைவாசி உயர்வு, வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி என்ற வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவிக்க வேண்டாமா ?
2. ஒன்றிய அரசின் நிதி ஆதிக்கம் – மாநில உரிமை மீறல்
தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நீட், மூன்று மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்டவற்றைக் கூட்டாட்சிக்கு எதிரானவை என விமர்சித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகாரத்தில் உள்ள கட்சி என்கிற வகையில் அதன் அழுத்தம் போதுமானதாக இல்லை.
முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே முதல்வர் விஜய் மேற்கொண்ட டெல்லி பயணங்களின் தன்மையே இதற்குச் சான்று. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து நெடுஞ்சாலை, ரயில்வே, மெட்ரோ நிதி ஒதுக்கீடு கோரி மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் பொது வெளியில் அழுத்தம் கொடுக்கும் வகையில் இல்லாமல், “கோரிக்கை மனு” வடிவிலேயே இந்த முயற்சிகள் இருந்தன.
நிதிப் பங்கீட்டில் நியாயமான பகிர்வு கோரி ஆகஸ்ட் 2026-ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மிகவும் மென்மையாக — “சிறப்புச் சலுகை எதுவும் கோரவில்லை, உரிய பங்கு மட்டுமே” கேட்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் கூறினார். தற்போது வசூலிக்கப்படும் வரியில் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே தமிழ்நாடு திரும்பப் பெறுகிறது என்ற நிலையும், 16வது நிதி ஆணையத்தின் தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு விகிதம் வெறும் 4.097 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையும் எவ்வளவு பெரிய அநீதி! இந்த உண்மைகளை மக்களிடம் எத்தனை முறை தவெக நிர்வாகிகள் பேசியிருக்கிறார்கள்? வடமாநிலங்களுக்கு அதிகம் பகிர்வு செய்துள்ள நிதி ஆணையம் தமிழ்நாட்டைப் புறக்கணித்துள்ளது என்பது மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினை. வரி வருவாய்ப் பகிர்வில் மாநிலங்களுக்கான பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் கறாராகக் கோரிக்கை விடுத்ததை நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவாரா?
ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஈ.ஏ.எஸ். சர்மா முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பின் 270, 282 பிரிவுகளை ஒன்றிய அரசு எவ்வாறு துஷ்பிரயோகம் செய்து நிதி ஆணையத்தின் பங்கைச் சுருக்குகிறது என்று விவரித்திருந்தார். 2014-15ல் ₹3.38 லட்சம் கோடியாக இருந்த செஸ்/சர்சார்ஜ் வசூல் 2025-26ல் ₹14.22 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதை அவர் எடுத்துக்காட்டினார். ஒன்றிய அரசு செஸ் மற்றும் சர்சார்ஜ் வரிகளைத் தீவிரமாக உயர்த்தி மாநிலங்களின் நிதி உரிமைகளைப் பறித்து வருகிறது; இவற்றை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கும் ‘வரித் தொகுப்பிற்குள்’ (Divisible Pool) கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்திலும் சட்ட ரீதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன; மாநிலக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நிதி மசோதாக்கள் மீதான விவாதங்களின் போது இதை எழுப்பி வந்துள்ளனர். 2024 பிப்ரவரி 8 அன்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இதே பிரச்சினை மீது புதுடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்தது.மாநில உரிமைகளுக்காகவும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் ஒரு மாநில முதல்வர் தலைமையில் டெல்லியில் திரண்டு நடத்தியப் போராட்டம்,இந்திய அரசியல் வரலாற்றில் பதிவாகியுள்ள முக்கிய நிகழ்வு.
ஒன்றிய அரசின் நிதி ஆதிக்கத்தினை எதிர்ப்பதும்,இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணை மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பாதுகாப்பதும் ஒரு மாநில கட்சியின் கடமை.இதனை தவெக உணரவில்லை. கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற மாநில பட்டியலில் உள்ள துறைகளில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத தலையீடுகளை எதிர்ப்பது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட கடமை. நீட் எதிர்ப்பு, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு போன்றவை தமிழ்நாடு மாணவர்களின் எதிர்கால நலனுக்கானவை; இவற்றில் இடைவிடாது குரல் எழுப்பி,போராடுவதற்கு தவெகவிடம் செயல் திட்டம் எதவும் இல்லை.
அதேபோல், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி, பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்டவற்றை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை;இது குறித்து கடிதம் எழுதுவது மட்டும் போதுமானதா? மக்கள் மன்றத்தில் இந்த அநீதியை முன்வைத்து மக்கள் எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டாமா ?
இது தவிர, தேசிய அளவில் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை அழித்து ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் பாதையில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரமாகப் பயணப்பட்டு வருகிறது; சிறுபான்மை மக்கள் மீது நிகழ்த்தப்படுகிற அன்றாடத் தாக்குதல்கள் இந்தியாவின் மதச்சார்பின்மைக்குப் பெரும் சவாலாக உள்ளது. பட்டியலின மக்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன.தவெக வெளியிட்ட “மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்” பிரகடனத்தில் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது; “மாநிலத் தன்னாட்சி உரிமையே அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் சமூக நீதிக் கொள்கைக்கும் எதிராக உள்ள ஆர்எஸ்எஸ்-பாஜக அமைப்புகளின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை உறுதியாக எதிர்க்காமல் அந்தக் கொள்கைகளை தவெகவால் முன்னெடுக்க முடியுமா?
மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்குத் தேவையான நிதி எவ்வாறு ஒன்றிய அரசால் சுருக்கப்படுகிறது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து அரசியல் ரீதியான விவாதங்களை உருவாக்குவதில் இடதுசாரிகள் முன்னிற்கின்றனர்.ஆனால் தவெகவினர் இதில் உரிய அக்கறை காட்டவில்லை. இது போன்ற நிதித் தாக்குதல்களை எதிர்கொள்ள, கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது அக்கறை கொண்ட அனைத்து மாநில அரசுகளும் அரசியல் இயக்கங்களும் ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான கொள்கை ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம். இது போன்ற தாக்குதலுக்கு எதிராக தவெக அரசாங்கம் இதுவரை உறுதியான, தொடர்ச்சியான எதிர்ப்பை முன்னெடுக்கவில்லை.
கடந்த திமுக ஆட்சியை மக்கள் நிராகரித்ததற்குக் காரணம் என்ன? மதச்சார்பின்மை விஷயத்தில் அவர்கள் உறுதியாக இருந்தபோதிலும் ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றதுதான் அவர்களது தோல்விக்குக் காரணம். இந்த உண்மையைத் தவெகவினர் உணரவில்லை.
அதிகாரத்தை நிர்வகிப்பதில் தவெக அரசாங்கம், தமிழ்நாட்டின் தேவைகளை மையப்படுத்தி உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல், குறுகிய கால அரசியல் இலாபம் பெறுவதில் கவனம் செலுத்துகிறது. பொருளாதார நிர்வாகத்திலும், ஒன்றிய அரசுடனான உறவிலும் இப்படிப்பட்ட அணுகுமுறை தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கப் பயன்படாது. தவெகவின் இந்த இரு வெளிப்பாடுகளையும் உழைக்கும் வர்க்கக் கட்சி என்ற வகையில் மார்க்சிஸ்ட் கட்சி விமர்சிக்கிறது.இடதுசாரிகளும் விமர்சிக்கின்றனர்.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பொருளாதாரத்தில் நிகழ்த்தப்படுகிற சீர்கேடுகளை விமர்சித்துப் போராடுவதற்கும் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது அவசியம்.
– என்.குணசேகரன்
மத்தியக்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

