இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும் ! – இரா.சிந்தன்இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும்!

(புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை முன்வைத்து)

‘மாடல்’ அல்லது ‘முன்மாதிரி மாநிலம்’ என்ற சொல்லாடல் இந்திய அரசியலுக்கு புதிதல்ல. முதலில் ‘குஜராத் மாடல்’ என்ற புனைவுக் கதை, இந்திய மக்களிடையே முதலாளித்துவ ஊடகங்களால் பரவலாக விதைக்கப்பட்டது. அதன் களத்திலேயே, 2014 ஆம் ஆண்டு ‘மோடி பிம்பத்தின்’ பிரம்மாண்ட வெற்றி அறுவடை செய்யப்பட்டதை அறிவோம். அப்போதே கூட நாட்டின் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக சக்திகளும், ‘ஜிடிபி’ எண்களா? ‘எழுத்தறிவு மற்றும் மக்கள் நல்வாழ்வு குறியீட்டு’ எண்களா? எது முன்மாதிரிக்கான அடித்தளம் என்ற கேள்வியை எழுப்பினார்கள். மிகச் சிறு மாநிலத்தில் அமைந்திருந்த இடது முன்னணியின் ஆட்சியை சுட்டிக்காட்டி, இதுதான் இந்தியாவிற்கே வழிகாட்டும் முன்மாதிரி என்ற அந்தக் குரல், வெகுமக்களை உரிய காலத்தில் சென்று சேராதது, சோகமே.

அதன் பின், ‘மாடல்’ பற்றிய பிம்பங்கள் உடையத் தொடங்கின. மிகச் சாதுர்யமாக, தங்களின் கதையாடலை ‘வகுப்புவாத – தேசிய வெறியை” சுற்றியதாக மாற்றிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்/பாஜக சக்திகள், பெருமுதலாளிகளோடு கூட்டினை வலுப்படுத்தி, ஊடகங்களின் பெரும் பலத்தோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். இப்போது ‘மாடல்’ பற்றிய கேள்விகள் எதிர் தளத்தில் இருந்துதான் வலுவாக எழுகின்றன. ஆர்.எஸ்.எஸ்/பாஜக கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும், பொருளாதார இறையாண்மையையும் அடித்து நொறுக்கி வருகிறது. எனவே, இந்த போக்கிற்கு மாற்றான முன்மாதிரிகளை பேசுவது காலத்தின் கட்டாயம்.

வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்கு, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல. இப்போதைய உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைக்க வேண்டும். அதைத்தான் ‘இடதுசாரி மாடல்’ என்று குறிப்பிடுகிறோம்.

இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி, ஒட்டுமொத்த அதிகாரத்தின் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டு முன்னேறுவது எப்படி சாத்தியம்? அதுவும் ‘நவதாராளமய’ விதிகளுக்கு உட்பட்டே ஆட வேண்டிய ஒரு ஆட்டத்தில், இரண்டாவது முறையாக வெற்றியை தொடர முடியுமா? இவ்வாறு பல கேள்விகள் நமக்கு முன் எழுகின்றன. இந்தப் பயணம் அப்படியே தொடருமா அல்லது வங்கத்திலும், திரிபுராவிலும் எதிர்கொண்ட தடங்கல் இங்கேயும் நிகழக்கூடுமா என்ற பதட்டமும் பலரிடம் எழுகிறது.

“புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு” என்ற இந்த ஆவணம் அந்த கேள்விகளை தெளிவாக்குகிறது. பதட்டத்தை சீராக்குகிறது. இந்த செயல்திட்டம், எர்ணாகுளத்தில் நடந்த சி.பி.ஐ(எம்) மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

முதல் கொள்கைத் தலையீடு 1939:

இந்திய விடுதலைக்கு முன்பே, மதராஸ் மாகாண அரசாங்கம் அமைத்த குத்தகை விசாரணைக் குழுவிடம் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் ஒரு மாற்று அறிக்கையை முன்வைக்கிறார். அப்போது கேரளத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளே நிறைவடைந்திருந்தது. குத்தகை ஏற்பாட்டில் உள்ளார்ந்து நிலவுகிற சுரண்டல் நடைமுறைகளை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. நிலப்பிரபுத்துவ அமைப்பை ஒழித்தால்தான் சமுதாய வளர்ச்சி சாத்தியம் என்று அறுதியிட்டு கூறியது. உழுபவருக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்றது. இவ்வாறு, அது பழைய சுரண்டல் முறைகளுக்கு முடிவுகட்டச் சொன்னது.

இந்திய விடுதலைக்கு பின், மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்காக களத்திலும், கொள்கை அளவிலும் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்களை நாம் அறிவோம்.

1957 ஆம் ஆண்டில், உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி உருவானது. இந்த வெற்றியைப் பற்றிய தேவையற்ற பெருமிதங்கள் கட்சிக்கு இருக்கவில்லை. முதலமைச்சராக தேர்வான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், ‘இப்போதுள்ள சூழ்நிலையில், உழைக்கும் மக்களுடையதும், ஏழை மக்களுடையதுமான நலவாழ்வுக்கான திட்டங்களை அமலாக்கி செயல்படுத்துவதுதான் அரசாங்கத்தின் நோக்கம்’ என்றார். ஆம், இந்திய ஆட்சியின் வர்க்கத்தன்மை மாறவில்லை, குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்ட மாநில ஆட்சியைத்தான் கட்சி வழிநடத்தியது. எனவே, மாநில ஆட்சிக்கு உள்ள வரம்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருவது அவசியம் என்றார் அவர். அதுபோலவே, கேரளத்தில் சுதந்திர இந்தியா கண்ட முதல் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கை, வர்க்க ஆட்சியையும், வரம்புகளையும் தெளிவாக்கியது.

நிலச் சீர்திருத்தம், கல்வி, மக்கள் நலவாழ்வு போன்று பல்வேறு துறைகளில் கேரளம் மேற்கொண்டுள்ள சாதனைகளை நாம் அறிவோம். இந்தக் கட்டுரையில் அவைகளை மீண்டும் கூறப்போவதில்லை. மாறாக, அந்த சாதனைகளுக்கு திசைகாட்டும் கொள்கைகளின் தடத்தையே பின் தொடரவுள்ளோம்.

மாற்றுக் கொள்கைக்கு வாய்ப்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், இதுபோன்ற மாநில ஆட்சிகளை நடத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டுள்ளது. “மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, அவைகளை நிறைவேற்றுகிற அரசாங்கங்களை அமைக்கும் வாய்ப்புகளையும் கட்சி பயன்படுத்திக்கொள்ளும்” என்பதுடன், உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டவும் உதவியாக இருக்கும் என்கிறது. அதே சமயத்தில் ‘நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு அடிப்படையான தீர்வுகளைப் பெற்றிட முடியாது’ என்ற எச்சரிக்கையும் வெளிப்படுத்துகிறது.

ஒன்றிய அரசாங்கம், திட்டமிடலை முற்றாக கைவிட்டுவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ஐந்தாண்டு திட்டங்களோ, திட்ட ஆணையமோ இனி கிடையாது. ஆனால், கேரள அரசாங்கம் மட்டும், வளர்ச்சிக்கான திட்டமிடலை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அது, மக்களுக்கு நல்ல பலனையும் வழங்கி வருகிறது. இதற்கான விதை 1967 எல்.டி.எப் ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டது ஆகும். அப்போதைய ஒன்றிய அரசாங்கம் ஐந்தாண்டு திட்டத்தை கைவிட்டு, ‘திட்ட விடுப்பு’ என்ற பாதையில் பயணித்தபோது, கேரள மாநிலத்தில் மாற்று கொள்கைக்கான வரைவுச் சட்டகம் முன்மொழியப்பட்டது. அது பொருளாதார திட்டமிடலின் அவசியத்தை எடுத்துக்காட்டியது. இத்தகைய மாற்றுக் கொள்கைகளே ‘இடதுசாரி மாடலின்’ அடித்தளம் ஆகும்.

1980, 1987, 1996 ஆண்டுகளில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்தது. இந்த சமயங்களிலெல்லாம் இடதுசாரிகள் முன்னெடுத்த நலத்திட்டங்களை, அடுத்து வருகிற யுடிஎப் ஆட்சி பின்னுக்குத் தள்ளியது. எனவே, ஆட்சியில் போராட்டம், ஆட்சியில் இல்லாத காலங்களில் மக்கள் நல நடவடிக்கைகளை காத்திடும் களப் போராட்டங்கள் என்று அயர்வில்லாமல் கட்சி செயல்பட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் காரணமாகவும், ஒன்றிய அரசாங்கத்தின் தொடர் தாக்குதல் காரணமாகவும், கேரள மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

1990 களில், உலகமய, தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் வேகமெடுத்தன. ‘நவதாராளமயம்’ என்பது வெறும் சொல் அல்ல, அது பல்வேறு கட்டுப்பாடுகளையும், செயல் திட்டங்களையும் தன்னகத்தே கொண்ட ‘புதிய உலக ஒழுங்காக’ அமைந்தது. மார்க்சிஸ்ட் கட்சி, இந்த சவாலை எதிர்கொள்வதற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

இந்த சூழலை ஆய்வு செய்திட 1994 ஆம் ஆண்டில் ஏ.கே.ஜி ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் சார்பில் சர்வதேச விவாதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
கேரளாவை பற்றியும் அதன் சமூக பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுவந்த பல்வேறு அறிஞர்கள் அதில் பங்கேற்று விவாதித்தார்கள். தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் கூறினார், “நாம் சந்தித்துவரும் தீவிர பொருளாதார நெருக்கடியில் இருந்து கவனத்தை திருப்பும் விதத்தில், கேரளத்தின் சாதனைகளைப் பற்றிய விதந்தோதல்கள் வேண்டாம். பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாம் இந்தியாவின் பிற மாநிலங்களை விடவும் பின் தங்கியுள்ளோம். நெருக்கடிக்கான தீர்வினை தாமதிக்க முடியாது. வேலைவாய்ப்பிலும், உற்பத்தியிலும் பின் தங்கிய நிலைமையை நாம் புறந்தள்ளினால் அது நமக்குத்தான் ஆபத்தாக முடியும்”

இந்த மாநாட்டின் விவாதங்கள் பலன் கொடுத்தன. 1996 ஆம் ஆண்டில் ‘மக்கள் திட்ட முன்னெடுப்பு’ வந்தது. 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. திட்டமிடலிலும், வளர்ச்சிப் பணிகளிலும் மக்களின் பங்கேற்பை இது அதிகப்படுத்தியது.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட சர்வதேச மாநாடுகள் கேரளத்தின் வளர்ச்சி பிரச்சனைகளை பல்வேறு கோணங்களிலும் விவாதித்தன. மாற்று திட்டங்களை உருவாக்கின. 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில், பிரபாத் பட்நாயக் கூறினார், “அரசின் வள ஆதாரங்கள் குறைந்துகொண்டே செல்வது தற்செயல் அல்ல, நவ-தாராளமயத்தின் அடிப்படையான வெளிப்பாடு இது. இவ்விசயத்தில் கேரளம் விழிப்போடு இருக்க வேண்டும்” என்றார்.

பெரு முதலாளிகளுடைய மூலதனத்தை தமது மாநிலத்தில் ஈர்ப்பதற்காக மாநிலங்களுக்குள் நடக்கும் போட்டியும் அதன் விளைவுகளும் ‘அதிகாரக் குலைவினை’ ஏற்படுத்துகின்றன. நமக்கு தேவை அதிகார பரவலாக்கமே. நவதாராளமய சூழலிலும் அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்று கட்சி விவாதித்தது. ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்கொள்வது பற்றியும், நேரடி அன்னிய முதலீடுகள் பற்றியும் தெளிவை தருவதாக இந்த விவாதங்கள் அமைந்தன.

அடுத்து வந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்களின் கொள்கைகளை வகுப்பதில் இந்த விவாதங்கள் பங்காற்றின.

மீண்டும் விஜயன் அரசாங்கம்:

கேரள மாநிலத்தின் வரலாற்றில், இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த பின்னணியில்தான், எர்ணாகுளத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், கேரளத்திற்கான தொலைநோக்கு பற்றி விவாதிக்கப்பட்டது.

‘பல்வேறு வர்க்கங்களின் பிரச்சனைகளையும் கணக்கில் எடுத்து, உள்ளார்ந்த சமூக நீதிப் பார்வையுடன்’ கேரள மாநில அரசாங்கத்தின் கொள்கைகள் அமைய வேண்டும். ‘நவீன அறிவார்ந்த சமூகத்தை’ அமைப்பதற்காக, அறிவியலையும் நுட்பன்களையும் பயன்படுத்திட வேண்டும், அனைத்து சமூக தளங்களிலும் உற்பத்தி சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும். திறன் அதிகரிக்க வேண்டும் அதன் மூலம் உற்பத்தி உயரவேண்டும் என்கிறது ‘புதிய கேரளத்திற்கான தொலை நோக்கு ஆவணம்’.

அதாவது, கேரளத்தின் தொழிலாளர்கள் அதி நவீன இயந்திரங்களை இயக்கிடும் திறனுடன், புதிய தொழில்நுட்ப அறிவுடன் செயல்படும் அடித்தளத்தை வலுவாக அமைக்கும்போதுதான். வாழ்க்கைத் தரம் உயரும். உற்பத்தி அதிகரிப்பதுடன், விநியோகத்தை சமநீதி அடிப்படையில் மேற்கொள்ள முடியும் என்று ஆவணம் தெளிவாக்குகிறது.

முன்பே குறிப்பிட்டதைப் போல, நாட்டில் பொருளாதார திட்டமிடல் முற்றாக கைவிடப்பட்ட காலத்தில், கேரள மாநிலம் மட்டுமே திட்டமிடல் நடவடிக்கைகளை கைவிடவில்லை. இப்போதும் 14 வது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பதுடன், ஆண்டு திட்டங்களும் தயாராகின்றன. நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நிலவும் வாழ்க்கைத்தரத்தை 25 ஆண்டுகளில் எட்ட வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்திருக்கிறார்கள்.

வளங்களும், வாய்ப்பும்

இதையெல்லாம் செய்வதென்றால் மாநிலத்திற்கு நிதி அவசியம். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டும், நவதாராளமய கொள்கைகளின் சட்டகத்திற்கு உட்பட்டுமே அதனை மேற்கொள்ள முடியுமா?. ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் வருவாய் மேலும் குறையும் சூழலே உள்ளது. இந்த சூழலை எதிர்கொண்டு ‘இடது மாடலை’ முன்னெடுப்பது, வர்க்கப் போராட்ட தெளிவோடே நடத்தப்பட முடியும். இந்த போராட்டத்தில் வெகுமக்களையும் தொடர்ந்து ஈடுபடுத்திட வேண்டும்.

இந்த ஆவணத்தில் பொதுத்துறை நிறுவனங்களை பற்றி குறிப்பிடப்படும் பகுதி மிக முக்கியமானதாகும். ஏற்கனவே உள்ள பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், திறம்பட செயல்படுத்தும் அவசியத்தை மக்களிடமும், அதன் ஊழியர்களிடமும் இந்த ஆவணம் முன்வைக்கிறது. மேலும் பொதுத்துறையில் புதிய புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் அதன் மூலம் வளர்ச்சியை வேகப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்ற திசையை இந்த ஆவணம் காட்டுகிறது. இது நவதாராளமய விதிகளுக்கு முற்றிலும் முரணான ‘இடதுசாரி மாடலின்’ தனித்துவம் ஆகும்.

அதே போல, சிறு/குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், உள்ளாட்சிகள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுவதுடன், பாரம்பறிய தொழில்களில் நவீன முன்னேற்றங்களை புகுத்துவதன் அவசியத்தையும் தெளிவாக்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அவசியத்தை தெளிவாக்கும் இந்த ஆவணம், மிகவும் சவாலான, நுட்பமான பணிகளை இந்த திசையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வழிகாட்டுகிறது.

புவி வெப்பமாதல் மற்றும் சூழலியல் பிரச்சனைகளை எதிர்கொள்ளல்
உள்ளாட்சி அமைப்புகளில் பொது வெளிகளை உருவாக்குதல்
ஊழல் நடைமுறைகளுக்கு முடிவுகட்ட சமூக தணிக்கை வழிமுறைகளை உருவாக்குதல்
போன்ற முன்மொழிவுகள், கேரளத்தின் சமூக வாழ்வில் பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் ‘இடதுசாரி’ வெளிப்பாடுகள் ஆகும்.
உதாரணமாக, கேரளத்தில் தற்போதுள்ள உள்ளாட்சிகளில் 40 சதவீதத்திற்கும் மேல் எதிர்க் கட்சிகளின் நிர்வாகத்தில் உள்ளதையும், நிதி செலவினங்களை மேற்கொள்வதில் உள்ளாட்சிகளுக்கு உள்ள சுதந்திரத்தையும் இதனோடு இணைத்து நோக்கினால், நம்மால் மேற்சொன்ன முன்மொழிவுகளின் தாக்கத்தை உணர்ந்திட முடியும்.

கட்சியும் அரசாங்கமும்

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, கேரளத்தின் ஆட்சியை வழிநடத்துகிறது. அதே சமயத்தில் அரசாங்கம் என்பது அனைவருக்குமானது. அனைவரையும் உள்ளடக்கி நடக்க வேண்டியது. இந்த சூழலில், கட்சி தனது பாத்திரத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆவணம் தெளிவாக்குகிறது.

கட்சியின் தொலைநோக்கிற்கு உகந்ததாக அரசின் கொள்கைகள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது, எச்சரிக்கை உணர்வுடன் பரிசீலித்து உறுதி செய்திட வேண்டும்.
அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதுடன், வெகுமக்கள் ஆதரவுடனே திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை கட்சியே உறுதி செய்திட வேண்டும்.
பொதுத்துறைகளை திறன் வாய்ந்த வகையில் இயக்கும் கடமையை தொழிற்சங்கங்களும் கவனத்தில் கொள்வதுடன், கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறப்பான சேவைகளை உறுதி செய்வதில் ஊழியர் சங்கங்களும் கவனம் செலுத்திட வேண்டும்.

மாநில அரசின் செயல்பாடுகளுக்கு வரம்பிடும் ஒன்றிய அரசின் போக்குகளை மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்துவது கட்சியின் கடமை என்பதை இந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

உலகமே, நவதாராளமயம் உருவாக்கிய இடியாப்பச் சிக்கலில் சிக்குண்டிருக்கும் சூழலில் ‘இடதுசாரி’ அரசாங்கங்கள் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுத்து வருகின்றன. இந்த பொறியினை விசிறி, மேலும் சுடர் விடச் செய்யும் ஆவணமே இந்த சிறு பிரசுரமாகும். ‘இடதுசாரி மாடல்’ என்பது, இப்போது ஒரு மாநிலத்தின் களத்தில் வார்த்தெடுக்கப்படும் போதிலும் அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மாற்றுப்பாதையை எடுத்துக்காட்டுகிறது. இந்திய மக்களின் நலவாழ்வினை பாதுகாத்திட சாத்தியமான, நடைமுறைக்கு உகந்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதே அதன் தொலைநோக்கு. இந்த முயற்சி, அதற்கே உரிய தனித்துவத்துடன் உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது.

– இரா.சிந்தன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.