இடதுசாரி உணர்வு தேவை -தொடூர் மடபுசி கிருஷ்ணா (தமிழில்: கி.ரமேஷ்)

இடதுசாரி உணர்வு தேவை -தொடூர் மடபுசி கிருஷ்ணா (தமிழில்: கி.ரமேஷ்)

 

ஒரு இசைக்கலைஞர், எழுத்தாளர், ஒரு கலாச்சார வரலாற்று ஆசிரியரான தொடூர் மடபுசி கிருஷ்ணா பல பரிமாணங்களை உடையவர்.  இந்திய அறிவுலக வட்டத்தில் ஒரு முக்கியப் பங்காளரான அந்த கர்னாடக சங்கீதப் பாடகர் தேச வளர்ச்சியில் கலை மற்றும் கலைஞர்களின் பங்கு குறித்தும் வேறு பல விஷயங்கள் குறித்தும் எண் 13 இடம் பேசுகிறார்.  அக்கறை கொண்ட ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்க விரும்பும் எந்த நாட்டுக்கும் ‘இடதுசாரி’ உணர்வு தேவை என்கிறார் அவர்.

கே: மேற்குலகு போன்றோ அல்லது வேறு புவியியலமைப்பு போன்றோ அல்லாது இந்தியாவில் செயல்பாட்டாளராக ஒரு இசைக்கலைஞர் இருப்பது அரிது.(டைலானிலிருந்து மர்லீ, சீகர் வரை, ஏன் எமினெம் அல்லது டேவிட் ரோவிக்ஸ் வரை) மேலும்,  இந்திய இசையில் மிகவும் பழமையான ஒரு கிளையை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்.  ஆக, ‘பாடும்போதே’ ‘பேசுவதைத்’ தொடங்க எது உங்களைத் தூண்டியது?

டி.எம்.கிருஷ்ணா: ஒருவேளை நாம் இந்தக் கேள்வியைத் திருப்பிப் போட்டால்?  ஒரு கலாச்சார முன்னுரிமையுடன் இசையைச் சார்ந்து அதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் இசைக்கலைஞர்கள் ஏறத்தாழ ஏன் பேசுவதே இல்லை?  சமூகத்தின் இந்தப் பகுதி நடைமுறைப்படுத்தும், ஆதரிக்கும் கலையுடைய இயல்பின் உட்பார்வையை அந்தக் கேள்விக்கான விடை கொடுக்கும். நாம் நடைமுறைப்படுத்தும் இந்த ஒதுக்கக்கூடிய, கேள்வி கேட்காத யோசனையற்ற கலையின் இயல்பைத் தொடர்ந்து அறிந்ததிலிருந்துதான் எனது பேச்சும் எழுத்தும் வருகின்றன.  உண்மையில் இது கலையின் அடிப்படைக்கு எதிராகவே செல்கிறது.  நமது கலையை மீண்டும் மீண்டும் வரும் செயல்பாடாகவும், வழக்கமான மகிழ்ச்சியாகவும், நாம் சொந்தமாக அறிவித்துக் கொண்ட கலாச்சார/ஆன்மீக மேன்மையாகவும் நாம் செதுக்கியிருப்பதால்  பெரும்பகுதி உலகம் குறித்து நாம் உணர்வில்லாமலேயே இருக்கிறோம்.  நான் இந்த அசிங்கமான குமிழிக்குள் அடைந்து கிடக்க மறுக்கிறேன்.  நான் எல்லாவற்றுக்கும் விடை கண்டு விட்டேன் என்று அதற்குப் பொருளல்ல.  உண்மையில் நான் கேள்விகளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்!

கே: கலை சமூக அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டுமா? அல்லது கலைஞர் அவ்வாறு இருக்க வேண்டும், கலை இத்தகைய அர்ப்பணிப்பள் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாமா?

கிருஷ்ணா: கலை என்பது அதன் இயல்பிலேயே சமூக இருப்பாகும்.  ஒவ்வொரு கலை வடிவமும், அதன் இருப்பிடமும், விளக்கமும், அதன் வரம்புகளும் அதன் தொட்டிலால் (தோன்றிய இடத்தால்) வடிவம் பெறுகின்றன.  ஒரு கலைஞன் அதை நம்புகிறானோ இல்லையோ, அவனோ/அவளோ கலையைப் பயில்வதன் மூலம் சமூகவாதியாக, அரசியல்வாதியாக ஆகிறார்.  நான் இந்த நிலைத்தன்மையை அறிய வேண்டும் என்பதைத்தான் கேட்கிறேன்.  நான் ஒரு தியாகராஜ கீர்த்தனையை மைலாப்பூரில் உள்ள ஒரு சபாவில் பாடும்போது அது ஒரு சமூக, அரசியல் செயல்பாடு.  நான் அதிலெல்லாம் செயலூக்கத்துடன் பங்கேற்கும்போது அந்த அரங்கிலுள்ள மக்களுக்கும், அந்த மதில்சுவருக்கு வெளியே வசிக்கும் மக்களுக்கும் அது எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற செய்தியைக் கொண்டு செல்கிறேன்.  இந்த உணர்வே கலைஞனின் இயல்பை மாற்றும்.

கே:    நீங்கள் கீழ்நிலை கலை வடிவங்களை ஆதரிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.  நீங்கள் உங்கள் முன்னுரிமைகள் குறித்தும், முரண்பாடுகள் குறித்தும் அறிவீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.  இந்தக் கவலைகளுக்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள்?

கிருஷ்ணா:  ஆதரவளித்தல் என்ற சொல்லே ஆழமாக ஆதரவளிப்பது!  நான் அதைப் பயன்படுத்த மாட்டேன்.  நமது நிலத்தில் நிலவும் பல்வேறுபட்ட கலாச்சாரங்களை நான் கற்க முயன்று கொண்டிருக்கிறேன்.  இந்த செயல்பாட்டின்போது, நாம் கட்டி வைத்திருக்கும் கண்ட/காணாத, பேசிய/பேசாத சமூகக் கலாச்சாரத் தடைகள் உடைக்கப்பட வேண்டியுள்ளன என நான் உறுதியாக நம்புகிறேன்.  இதைச் சொல்லும்போது, எனது சாதி, பாலினம், கலாச்சார முன்னுரிமைகள்தான் இவற்றையெல்லாம் அச்சமின்றிக் கூறுவதற்கான துணிவை அளிக்கின்றன என்பதை ஆழமாக உணர்ந்தே இருக்கிறேன்.  எனது உண்மையான அறிவுத் திறன்களுக்கும் இந்தத் துணிவுக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் இல்லை.  இந்த உள்ளார்ந்த ‘திமிரை”, (ஆம் அந்தச் சொல்லைத்தான் நான் பயன்படுத்துவேன்,) உணர்ந்திருப்பதுதான் முக்கியம்.

இந்தத் தருணத்திலும் எனது இசை, வார்த்தைகள் அல்லது செயல்பாடுகள் விளிம்பிலிருப்பவர்களின் குரல்களை அடக்கி விடமுடியாது என்பது இதன் பொருள்.  எனவே நான் எப்போது பேச வேண்டும், எப்போது அமைதி காத்து, கேட்க மட்டும் வேண்டும் என்பதை நான் கற்றுக் கொள்ள வேண்டும்.  நான் தவறு செய்து விட்டேன் என்று ஏற்றுக் கொள்ளும் முதல் ஆள் நானாகவே இருப்பேன். அந்தத் தவறு சமூக முன்னுரிமை கொடுக்கும் பார்வையின்மையால் வருவதாகும்.  ஆனால் நான் இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன் என்பதை நான் கற்றுக் கொண்டுள்ளேன்.  ஆனால் முன்னுரிமை பெற்றவர்களின் மாற்றம் தேவையானது என்பதையும் ஆகவே இந்தச் சிக்கல்களுடன் நாம் இணைந்து போராடுவது தேவையானது என்பதையும் நான் வலுவாக உணர்கிறேன்.  நான் முன்னுரிமை என்ற சொல்லை தெளிவாக உணர்த்த விரும்புகிறேன்.  நான் சமூகக் கலாச்சார முன்னுரிமையைப் பற்றிப் பேசுகிறேன்.  அந்த முன்னுரிமை மேல்சாதி என்று அழைக்கப்படுவோரிடம் இருப்பது, அவர் ஏழையாக இருந்தாலும் உணர்வது.

கே: கர்னாடக சங்கீதம் இயல்பிலேயே ஒரு பழமையான கட்டமைப்பைக் கொண்டிருப்பது.  அதை மாற்ற முயல்வது என்பது சங்கீத வடிவையே மாற்றுவது போலாகும்.  நீங்கள் அதை ஏற்கிறீர்களா?  இல்லையென்றால், உங்களது “தீவீரமான” வழிகளின் மூலம் நீங்கள் உண்மையில் எதை அடைய முயல்கிறீர்கள்?

கிருஷ்ணா: அது நீங்கள் கர்னாடக சங்கீதத்தை எப்படி விளக்குகிறீர்கள் என்பதையே முழுமையாகச் சார்ந்தது.  எனக்கு கர்னாடக சங்கீதம் என்பது மூன்று அம்சங்களின் விளைபொருள் – அவை ராகம், தாளம் மற்றும் பாடல்.  அதன் உள்ளார்ந்த அழகின் ஒவ்வொரு அம்சமும் இந்த மூன்று அம்சங்களின் விளைவே.  வேறு எதுவும் இதற்கு வெளியிலிருப்பதாகும்.  நாம் கலை வடிவத்தை இப்படிப் பார்த்தால், மாற்றம் என்பது சாத்தியமே என்பதை உணர்வோம்.  சங்கீதம் என்பது சாதி, பாலினம், மதத்துடன் தொடர்புடைய பாகுபாடான நடைமுறைகளுடன் பிணைக்கப்பட்டது என்று நாம் நம்பினால் சங்கீதம் மாற்றமற்று நிலையானதாகவே இருக்கும்.  அதிலிருந்து உடைத்துக் கொண்டு சங்கீதத்தை உணர்வது என்பதை ஒவ்வொரு சங்கீத நிபுணரும் தாமே முடிவு செய்ய வேண்டியது.

India's Radical Classical Star - OZY | A Modern Media Company

கே: இடதுசாரித் தத்துவங்களுடன் உங்கள் அறிவுலக தொடர்புகள் குறித்து நீங்கள் அறியப்படுபவர்.  உங்களது படைப்புக்களைக் கொண்டாடும் இளைஞர்கள் உட்பட  ஏராளமான இன்றைய இளைஞர்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் குறித்தோ அதன் தத்துவங்கள் குறித்தோ தெரியாது.  தத்துவங்களின் இடதுசாரி அலைவரிசைக்குள் இருப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கிருஷ்ணா: நாம் ‘இடதுசாரி’ என்ற வார்த்தையைச் சொன்ன உடனேயே பெரும்பாலானோர் ஸ்டாலின், மாவோ மற்றும் பிற கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியைப் பற்றி நினைத்துக் கொள்கிறார்கள்.  காரல் மார்க்சை விடுங்கள், இடதுசாரி, சோஷலிசம், கம்யூனிசம் பற்றி சமூக ஊடகங்களில் எழுதும் பலரும் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  ஒவ்வொரு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரமும் தத்துவார்த்த ரீதியாக இடதுசாரி எதிர்ப்பானது, மனித இனத்தின் உட்சாரத்துக்கு எதிரானது என்பதைச் சொல்வதில் நான் உறுதியாக உள்ளேன்.  இடதுசாரியின் கருத்துக்களை நமக்குள் உள்வாங்கிக் கொள்ள என்னால் ஒரு அவசரப் பாடத்தை நடத்த முடியாது.  ஆனால் அதன் தத்துவத்தின் சாரம் ‘தன்னிலிருந்து’ சமூகத்துக்குத் தனது பிரதிபலிப்பின் அடிப்படையை மாற்றுவது என்பதில் அடங்கியுள்ளது.

இந்த மாற்றம் சமூக, அரசியல் கலாச்சாரம் அல்லது பொருளாதார மூலதனம் வைத்திருப்போருக்குக் குறிப்பாக முக்கியமானது.  இந்த நோக்கத்துக்குக்  கீழ் ஒரு மிக முக்கியமான முன் தேவை, சிந்தனைகளும், செயல்பாடுகளும் பகுத்தறிவுள்ள சிந்தனையிலிருந்தும், விமர்சனபூர்வமான கேள்விகளிலிருந்தும் வரவேண்டும் என்பதாகும்.  இது மிகவும் முக்கியமாக ஆகிறது.  ஏனென்றால் சமூகம் தனது நிலையை வலுப்படுத்த பகுத்தறிவற்ற, இன்னும் கூட விசித்திரமான கதைக்களங்களைப் பயன்படுத்துகிறது என்பதாகும்.   கம்யூனிசத்தின் சாரம் அதிகாரத்துக்கு சவால் விடுப்பதும் உற்பத்தியும் ஆகும்.  பெரிய வடிவத்தில் உற்பத்தி என்பது மதிப்பு உருவாக்குதல் என்ற ஆலோசனையைக் காட்டுகிறது. எனவே அது மனித செயல்பாட்டின் ஒவ்வொரு வகையையும், அவற்றைப் பீடிக்கும் சமத்துவமின்மைகளையும் உள்ளடக்குகிறது.

இந்தியாவில் இடதுசாரி (அதன் அனைத்து வகைகளுடனும்) ஒரு ஜனநாயக சமூகத்தில் அதன் தத்துவார்த்த, அரசியல், சமூகப் பங்கிற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.  ஒவ்வொரு தத்துவத்தைப் போலவும் அனைத்து (இந்தியாவில்) கம்யூனிஸ்ட் அரசுகளும் சிறப்பாக இருந்து விடவில்லை.  ஆனால் விளிம்புநிலையிலுள்ள ஏராளமானோருக்கு அதிகாரமளிப்பதில் அதன் பங்கினை அது அழித்து விட முடியாது.  அது ஒவ்வொருவரும் சமநிலையில் பேசுவது பற்றியது.  எனவேதான் எதிர்ப்பு என்பது ஒரு சக்திமிக்க ‘இடதுசாரிக்’ கருவி.  அது சக்தியற்றோரை ஒன்று சேர்க்க அனுமதித்து ஒன்றிணைந்து தமது குரலை தெருக்களில் எழுப்பச் செய்கிறது.

நடுத்தர வர்க்கம் அல்லது உயர்சாதி குடிமக்கள் எனப்படுவோர் இடதுசாரிகளை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் அது அவர்களது நிலையை தொந்தரவு செய்கிறது என்பதால்தான் என்று நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.  அது அவர்களது கலச்சர இருப்பிடத்தை மாற்றலாம்.  அவர்களுக்கு சவால் விடும் வலிமையை விளிம்பு நிலையினருக்கு அளிப்பதைக் கடவுள் தடுக்கட்டும்.  ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் வெல்கிறதோ இல்லையோ, ஒரு அக்கறை கொள்ளும் நாட்டை விரும்பும் எந்த நாட்டுக்கும் ‘இடதுசாரி’ உணர்வு  தேவை.

கே: நீங்கள் வலைதளத்தில் ட்ரால் செய்யப்பட்டு அவமதிக்கப் படுகிறீர்கள்.  இசையைத் தவிர வேறு எது உங்களை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் வைத்திருக்கிறது?

கிருஷ்ணா: ட்ரால் செய்வதும் அவமதிப்பதும் என்னை பாதிப்பதில்லை.  இந்த கமெண்டுகளெல்லாம் அவற்றை எழுதுபவர்களைப் பிரதிபலிக்கின்றன.  ஊக்கத்துடன் இருக்க நான் சிறிது மயக்கும் இசையைக் கேட்க வேண்டும்.  அதிலிருந்து எனக்குத் தெளிவு கிடைக்கும்.

கே: நீங்கள் அரசியல் விஷயங்களில் கருத்துக் கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்.  இன்றைய இந்தியாவில் அரசியல் களத்தில் இரண்டு பார்வைகள் இருக்கின்றன.  ஒன்று இன்று நாடு பெரும்பான்மையால் கட்டுப்படுத்தப்படும் ஜனநாயகத்துக்குள் நழுவிக் கொண்டிருக்கிறது; மற்றொன்று மதச்சார்பற்ற தாராளவாதம் இந்தியாவின் எழுச்சியை வரலாற்று ரீதியகத் தடுத்து விட்டது, கடந்த காலத்தின் தவறுகளைச் சரி செய்வதற்கு இதுதான் காலம் என்பது.  இந்த விவாதங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கிருஷ்ணா: நாம் முதலில் ‘மற்ற’ பார்வையைப் பார்க்கலாம்.  மதச்சார்பற்ற தன்மையும், தாராளவாதமும் இந்த நாட்டைப் பின் தங்க வைத்தன என்ற வாதத்தில் எந்த தர்க்க வாதமும் இல்லை.  இந்த மக்கள் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிப் பேசவில்லை என்று நான் நினைக்கிறேன்.  ஏனென்றால் 1990களின் துவக்கத்தில் மாறிய பொருளாதாரக் கொள்கை, யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏறத்தாழ அப்படியே தொடர்ந்தது.  எனவே குறுகிய மனப்பான்மையான இந்து பெரும்பான்மை சிந்தனைகள் மதச்சார்பற்ற தாராளவாதத்தால் கட்டுப்படுத்தப்பட்டன என்ற உண்மையைத்தான் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  இதுதான் விஷயம் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

பாஜக அரசும் அதன் கொடுக்கு அமைப்புக்களும் கடந்த 70 ஆண்டுகளில் நமது இருப்பு முற்றிலும் தோல்வி என்று விளக்க முடிந்ததையெல்லாம் செய்கின்றன.  சுருக்கமாகக் கூறினால் இது வெறும் குப்பை.  ஆனால் அது மதரீதியாகக் குவிக்கும் விளக்கம்.  முஸ்லிம்களிடமிருந்தும், மதச்சார்பின்மை பேசுபவர்களிடமிருந்தும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறார்கள் என்று பெரும்பான்மை இந்துக்களை நம்பி ஏற்கச் செய்வதன் மூலம் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரு போலியான அச்சத்தை உண்டாக்கியிருப்பதுடன், தமது தொடர்ச்சியான இருப்புக்காக அதைத் தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.  அவர்களை விமர்சிப்பவர்கள் யாரையும் இந்து எதிரி என்று வண்ணம் தீட்டி விடுகிறார்கள்.  உண்மையிலோ, நிதர்சனத்திலோ இதில் எதற்கும் எந்த அடிப்படையும் கிடையாது.  சுதந்திர இந்தியாவுக்கு நிச்சயமாக ஒரு பலதரப்பட்ட, சிக்கலான கடந்த காலம் உண்டு.  இந்தக் கடந்த காலத்தின் ஒரு முழுமையான, அனைத்தும் உள்ளடக்கிய பார்வை ஒரு தாரளமான பார்வையேயாகும்.  அதைத்தான் தற்போதைய நிர்வாகம் உங்களுக்குக் கிடைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.  இன்று இந்தியா செங்குத்தாகப் பிளக்கப்படுகிறது.  இது மிகவும் மிரட்சியடைய வைப்பது.  ஏனென்றால் நமக்கு முன்னால் இருக்கும் ஆழமான வீழ்ச்சியை ஜனநாயகம் நமது கண்களிலிருந்து மறைக்கிறது.  

Sebastian and Sons: A Brief History of Mrdangam Makers eBook ...

கே: உங்கள் புத்தகம் ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்: மிருதங்கம் செய்பவர்களின் ஒரு சுருக்கமான வரலாறு’ மிருதங்கம் வாசிப்பவர்களுக்கும் அதைச் செய்பவர்களுக்கும் இடையிலான அதிகார உறவுகளை விளக்குகிறது.  நாம் பெரும்பான்மை ஜனநாயகம், சாதிப் பாகுபாடுகள், அதிகார உறவுகள், மிடூ இயக்கம் உள்ளிட்ட பாலின சமத்துவங்கள்  ஆகியவற்றைப் பேசும் இந்த நேரத்தைத் திட்டமிட்டுத்தான் புத்தகத்தை வெளியிட்டீர்களா?

கிருஷ்ணா: புத்தகம் வெளியிடப்பட்ட நேரம் எதேச்சையாக அமைந்தது.  நான் இந்தப் புத்தகத்துக்காக நான்கு ஆண்டுகள் உழைத்தேன்.  அது இந்த விவாதங்கள் சூடாக நடந்த போது வெளிவந்தது தற்செயலானது.  இந்தப் புத்தகம் இந்த விவாதங்களுக்கு அதிகமாக ஆரோக்கியமான, பிரதிபலிப்பான தொடர்ச்சிக்குப் பங்களித்தது என்று நம்புகிறேன்.

கே: நாங்கள் இந்தக் கேள்வியைக் கலைஞர்களிடமும், எழுத்தாளர்களிடமும் கேட்கிறோம்.  உங்கள் பார்வையில் இந்தியா என்ற சிந்தனை என்பது என்ன?

கிருஷ்ணா: இந்தியா பற்றிய ’எனது சிந்தனை’, 1.3 கோடி சிந்தனைகளில் ஒன்று மட்டும்தான்.  

பேட்டியாளர்: கே.டி.பி.ராதிகா.  சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளரும், கர்னாடக சங்கீதப் பாடகருமாவார்.

தமிழில்: கி.ரமேஷ்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *