ஒடுக்குமுறை அடுக்குகளின் சட்ட விதிகள் – ஜய்னா கோத்தாரி | தமிழில் இரா.இரமணன் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஹத்ராஸ் பாலியல் வன்முறை வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி (Prevention of Atrocities) Act 1989 (POA Act)) தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் கோரினார்கள். தற்போது உச்சநீதிமன்றம் அதுபோன்ற ஒரு வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. படான் ஜமால் வாலி எதிர் ஆந்திரப் பிரதேசம் எனும் இந்த வழக்கில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பார்வையற்ற 22வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். விசாரணை நீதிமன்றம் பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு குற்றங்களுக்காக வாழ்நாள் தண்டனை வழங்கியது. உச்ச நீதிமன்றம் பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனையை உறுதி செய்தது. ஆனால் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் அடுக்கு ஒடுக்குமுறைகள்(intersectional discrimination) எனும் கருத்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கம் அதற்கு நேர் எதிராக மற்ற வழக்குகள் போல இதிலும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுள் ஒன்றான சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு விதிக்கப்பட்ட தண்டனை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.அடுக்கு ஒடுக்குமுறைகள்

                  பால், சாதி, ஊனம் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளே ‘அடுக்கு ஒடுக்குமுறைகள்’ எனப்படுகின்றன. இந்த கோட்பாட்டை ஆதரிக்கும் பிரபல ஆளுமை  கிம்பெர்லி கிரென்ஷா மற்றும் அமெரிக்க கருப்பு இனப் பெண்கள் ஒடுக்குமுறை குறித்த கம்பஹி ரிவர் கலக்டிவ் (combahee river collective) அறிக்கை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தனது விளக்கத்திற்கு அடிப்படையாகக் கொண்டது. இதன்படி ஒரு பெண்ணின் அடையாளம் அவளுடைய சாதி,வர்க்கம்,மதம்,ஊனம், பால் ஆகியவற்றின் கூட்டாக இருக்கும்போது, அவள்மீது செலுத்தப்படும் வன்முறை மற்றும் பாகுபாடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளால் இருக்கலாம் என்பதை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. அந்த பார்வையற்ற தலித் பெண்ணின் மீது பல்வகை ஒடுக்குமுறைகள் சேர்ந்து ஏற்படுத்திய ஒட்டுமொத்த தாக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அது கூறியது.மாற்று திறனாளிப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் வழக்கில் குற்றவியல் நீதித்துறை கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்த நீதிமன்றம் நீதிபதிகள்,காவல்துறை,வழக்கறிஞர்கள் ஆகியோர் இதில் கூருணர்வு கொள்ள பயிற்சி அளிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

                  இவ்வாறு ஒடுக்குமுறை அடுக்குகளின் வழியே வழக்கைப் பார்த்தாலும் உச்ச நீதிமன்றம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது. வகொத (PoA Act) சட்டம், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க இயற்றப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்த சட்டம் தலித் மற்றும் ஆதிவாசிப் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்,பாலியல் சீண்டல்கள், தேவதாசி முறைக்கு விடுதல் போன்ற குற்றங்கள் உட்பட பல்வேறு தாக்குதல்களை  அங்கீகரிக்கும் பொருட்டு குறிப்பாக திருத்தப்பட்டது. இதிலுள்ள 3(2)(v)  பிரிவின்படி எஸ்சி/எஸ்டி அல்லாத ஒருவர் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி 10வருடங்கள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றத்தை இன்னொருவர் மேல் அவர் எஸ்சிஎஸ்டி பிரிவினர் என்கிற காரணத்திற்காக செய்திருந்தால் அவருக்கு வாழ்நாள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்தப் பிரிவில் ‘ எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்கிற காரணத்திற்காக’ என்ற வாக்கியம் ‘அந்த நபர் எஸ்சிஎஸ்டி பிரிவினர் என்று தெரிந்து’ என்பதாக 2015இல் திருத்தபப்ட்டது.

                தலித் மற்றும் ஆதிவாசிப் பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல் வழக்குகளில் நீதிமன்றங்கள் பிஓஏ (PoA Act) சட்டப்படி வழங்கப்பட்ட தண்டனைகளை தொடர்ச்சியாக ரத்து செய்து வருகின்றன. 2006 ராமதாஸ் மற்றவர்கள் எதிர் மகாராஷ்டிரா, தினேஷ்(எ) புத்தா எதிர் ராஜஸ்தான் மாநிலம் (2006), அஷ்ரபி எதிர் உ.பி மாநிலம்(2017) 2019 குமான் சிங் எதிர் ம.பி மாநிலம் ஆகிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட வாதங்களை வைத்து பிஓஏ (PoA Act) சட்டப்படி வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்தது.‘பாதிக்கப்பட்டவர் எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்கிற ஒரே காரணத்திற்காக பிஓஏ சட்டத்தை ஈடுபடுத்த முடியாது.’

‘பாலியல் பலாத்காரம் அவர் எஸ்சி பிரிவினர் என்பதாலேயே நடத்தப்பட்டது என்பதல்ல அரசு தரப்பின் வாதம்’

‘வழக்கில் காட்டப்பட்டுள்ள சாட்சியங்களும் ஆவணங்களும் பாதிக்கப்பட்டவர் எஸ்சிஎஸ்டி பிரிவினர் என்கிற அடிப்படையில் பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டது என்று நிரூபிக்கவில்லை’

‘குற்றம் அந்த ஒரு அடிப்படையில் மட்டுமே செய்யப்பட்டது என்பதற்கு சாட்சியங்கள் இல்லை’

இதைப்போன்ற பல்வேறு வழக்குகளில் சாத்தியமற்ற நிரூபணங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. என்ன நிரூபணம் வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. குற்றவாளி அந்தப் பெண் எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்பதால் பலாத்காரம் செய்தார் என்பதை அரசு தரப்பு எவ்வாறு நிரூபிக்க முடியும்? அந்தப் பெண் எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்பதும் அதை குற்றவாளி அறிவார் என்பது மட்டுமே ஒரே நிரூபணமாக இருக்க முடியும். ஒரு பெண் நலிந்த பிரிவினராகவும் மாற்றுத் திறனாளியாகவும் இருக்கும்போது அவர் பால், சாதி/இனம், ஊனம் ஆகியவற்றினால் பாகுபாடு காட்டப்படுபவராகவும் அந்தக் காரணிகளால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படும் அபாயம் அதிகம் உள்ளவராகவும் இருக்கிறார்.இதை அங்கீகரிப்பதைத்தான் ‘ஒடுக்குமுறைகளின் அடுக்குகள்’ எனும் கருத்து கோருகிறது.                     படான் ஜமால் வாலி எதிர் ஆந்திரப் பிரதேசம் வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தின் வழியே நோக்கி, பாகுபாட்டிற்கும் பலாத்காரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லாமலிருக்கலாம் அல்லது நிரூபிப்பது கடினமாக இருக்கலாம் என்பதை அங்கீகரிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் தாயார் காவல் துறைக்கு கொடுத்த புகாரில் தனது மகள் எஸ்சி பிரிவினர் என்பதாலேயே தாக்குதல் நடந்தது என்று குறிப்பிடாததினாலேயே அரசு தரப்பு வாதம் தோல்வியடையாது என்கிற விசாரணை நீதிபதியின் வாதத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. குற்றவாளி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தெரிந்தவர் என்பதால் அந்தப் பெண்ணின் சாதி அவருக்கு தெரிந்ததுதான் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. நீதிமன்றத்திற்கு இவ்வளவு நுட்பமான புரிதல் இருந்தாலும் குற்றவாளி சாதியின் அடிப்படையில் தாக்குதல் நடத்தினார் என்பதற்கு அரசு தரப்பு பிரத்தேயகமான சாட்சிகள் எதையும் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் பலவித காரணிகளை அங்கீகரிக்கும் அடுக்குமுறை கருதுகோளைக் கொண்டே    நீதிமன்றம் பால்,சாதி அல்லது ஊனம் இவற்றில் எந்த அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நிறுவுவது கடினம் என்று கூறியுள்ளது கெடுவாய்ப்பே.

                   வாழ்நாள் தண்டனை உறுதி செய்யப்பட்டபின் இந்த விவாதத்தில் என்ன முக்கியத்துவம் உள்ளது என்று ஒருவர் கேட்கலாம். தொடர்ந்து பிஓஏ சட்டப்படியான தண்டனை ரத்து செய்யப்படுவது அந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை உறுதி செய்வது போலாகும். மேலும் சாதி ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்களை மறைப்பதற்கு ஒப்பாகும். அண்மையில் பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை சொல்வது போல ‘அதிக எண்ணிக்கையில் தண்டனை ரத்து செய்யப்படுவது ஆதிக்க சாதிகள் தொடர்ந்து கொடும் செயல்கள் புரிவதற்கு ஊக்கம் அளித்து அவர்களது தைரியத்தை வளர்க்கும்.’

                     இந்த வழக்கின் மூலம் ‘ஒடுக்குமுறைகளின் அடுக்குகள்’  அடிப்படையில் பிஓஏ சட்ட தண்டனையை உறுதி செய்வது அல்லது விரிந்த அமர்விற்கு மாற்றுவது என்கிற வாய்ப்பை உச்ச நீதிமன்றம் நழுவவிட்டுவிட்டது. பெண்களுக்கு எதிரான சாதி ரீதியான தாக்குதல்கள் நம் முகத்தில் அறையும்போது சாட்சியங்கள் என்கிற அபரிமித தொழில்நுட்ப புகை மண்டலத்திற்குள் மறைந்து கொள்வதை நாம் நிறுத்த வேண்டும். அப்படி இல்லையெனில் நமது சாதிப் பாகுபாடு சட்டங்கள் பல்லில்லாமல் ஆகிவிடும். இந்த வழக்கில் ‘ஒடுக்குமுறைகளின் அடுக்குகள்’ முக்கியமானதெனக் கருதப்பட்டால்  பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பெண்கள் அனுபவிப்பதை விளக்கும் பிஓஏ சட்டத்தை சரியாக பகுத்து தீர்ப்பு சொல்வதற்கு அது வழி வகுத்திருக்க வேண்டும்.

(01.06.2021 தேதியிட்ட இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளிவந்த  ஜய்னா கோத்தாரி அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம்)
நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்
https://www.thehindu.com/todays-paper/tp-opinion/recognising-caste-based-violence-against-women/article34693668.ece