கடவுள்அல்ல. மனிதர்தான் – ச. வீரமணி

கடவுள்அல்ல. மனிதர்தான் – ச. வீரமணி

பாரதி புத்தகாலயம், “மாவோ, கடவுள் அல்ல மனிதர்தான்” என்று ஒரு சீனப் புத்தகத்தை மாவோவின் படத்துடன் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறது. இதனைக் கண்ணுற்றதும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் சென்னை, மவுண்ட ரோடில் (இன்றைய அண்ணா சாலையில்) தோழர் ஏ.எஸ்.கே. ஐயங்கார் அவர்கள் எழுதிய “தங்கம்மா” என்ற சிறுவர்களுக்கான நாவல் ஒன்றைப் பழைய புத்தகக் கடை ஒன்றில் 0.50 காசுகளுக்கு வாங்கியது நினைவுக்கு வந்தது. மிக அற்புதமான நாவல் அந்நாவலை பதின்பருவ வயதில் அன்றிருந்த நான் மட்டுமல்ல, என் அண்ணன் குழந்தைகள் அனைவருமே மிகவும் விரும்பிப் படித்தோம். இடதுசாரி இலக்கியத்தை சிறுவர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக அதில் கொண்டு சென்றிருப்பார், தோழர் ஏ.எஸ்.கே.

1948இல் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் மீது அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்ட அடக்குமுறைகளை மிகவும் நகைச்சுவையுடன் அதில் வர்ணித்திருப்பார்.  காவல்துறையினர் கட்சித் தோழர்களின் வீடுகளுக்குள் புகுந்து குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டுவதையும், அங்குள்ள புத்தக அலமாரிகளையெல்லாம் ஆராய்ந்து தமிழ்ப் புத்தகங்களை எல்லாம் அள்ளிச் செல்வதையும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு அவர்கள் அள்ளிச் செல்லும் புத்தகங்களில் அங்கே உள்ள ஆங்கிலப் புத்தகங்களை விட்டுவிடுவார்களாம். ஏனெனில் அவை என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அள்ளிச்செல்லும் புத்தகங்களுக்கு எல்லாம் அவைதான் அடிப்படை என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

அந்த நாவலில் ஒரு சம்பவத்தை தோழர் ஏ.எஸ்.கே. குறிப்பிட்டிருப்பார். மாஸ்கோவில் லெனின் மாசோலியத்தில் நாள்தோறும் நீண்ட வரிசை நிற்கும். அவ்வாறு ஒரு நாள் நின்ற வரியையில் கை விளங்காத ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான். அவன் விளங்காத தன் கையை தன் கால் டிரவுசரின் பைக்குள் நுழைத்துகொண்டிருந்தான்.

அதைப் பார்த்த மாசோலியத்தின் காவலர், “யாரும் கைகளை பேன்ட் பாகெட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது, கைகளை வெளியில் எடுங்கள்” என்று கட்டளையிட்டார். அந்தச் சிறுவனும் பயந்து கைகளை வெளியில் எடுத்துவிடுவான். அந்தச் சமயம் அவன் விளங்காத கைகள் சரியாகிவிடும். அதிர்ச்சி, இன்ப அதிர்ச்சி. அவனுக்குச் சிறிதுநேரம் ஒன்றுமே புரியவில்லை. “ஓ, என் விளங்காத கை சரியாகிவிட்டது. லெனினைப் பார்க்க வந்தேன். என் கை சரியாகிவிட்டது. லெனினைப் பார்க்க வந்ததால்தான் என் கை சரியானது. லெனின், கடவுள்” என்று சத்தமாகக் கூறி ஆடத் தொடங்கிவிட்டான்.

Moscow’s Lenin Mausoleum

இந்த செய்தி காட்டுத்தீ போன்று மாஸ்கோவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சோவியத் யூனியனிலும் பரவியது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இச்செய்தி எட்டியது. கட்சியின் மத்தியக்குழு உடனடியாகக்கூடி இது குறித்து ஆய்வு செய்தது. பின்னர், அறிவியலறிஞர்கள் குழு ஒன்றிடம் அந்தப் பையனைச் சோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பணித்தது.

அறிவியலறிஞர்களும் அந்தச் சிறுவனைப் பரிசோதித்துவிட்டு ஓர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், சிறுவனுக்கு கை விளங்காதிருந்தது உண்மையே என்றும் அன்றைக்கு அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் அவன் கைகளை வெளியே எடுக்கும்போது கை சரியாவிட்டது என்றும் இவ்வாறு அதிர்ச்சி ஏற்படும்போது கை சரியாவது உண்டு என்றும், இன்ப அதிர்ச்சியில் அவன் கை சரியாகி விட்டதென்றும். எனவே, லெனின் கடவுள் அல்ல, லெனின் மனிதர்தான்”  என்றும் அறிக்கை சமர்ப்பித்தார்கள்.

இந்த அறிக்கையை கட்சியின் மத்தியக்குழு பல லட்சம் பிரதிகள் எடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் சோவியத் யூனியன் முழுவதும் பரப்பினார்கள். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சி. இதே நம் நாட்டில் உள்ளதுபோன்று மதவெறிக்கட்சிகளாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சற்றே யோதித்துப் பாருங்கள்.

Show 1 Comment

1 Comment

  1. நா.வே.அருள்

    வாழ்வின் மறக்க முடியாத சம்பவம். மனநேர்மையின் பறைசாற்றல். எப்படியான அரசு அமைய வேண்டும் என்னும் ஆரோக்கியக் குறிப்பு. அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *