வாழ்க்கை - கட்டுரைகள் - லியோ டால்ஸ்டாய் |Leo Tolstoy - Life Essays

வாழ்க்கையின் புதிர்களை, எதிர்பாராமைகளை, மனித மனங்களை, வாழ்வை, மரணத்தை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்வினை தத்துவார்த்தமாக விவரிக்கும் நூல் இது.

எத்தனை படித்தவராய் இருப்பினும், பண்பட்டவராக, அனுபவங்களில் மேம்பட்ட நிலையை அடைந்தவராய் இருப்பினும் வாழ்வில் எதிர்ப்படும் வினோதங்களில் இருந்து தப்பியவர் எவரும் இருக்க முடியாது.

தனது மகளின் மரணத்தின்போது ‘இத்தனை படித்தும் எழுதிக் குவித்தும் வாழ்க்கையின் தாத்பரியம் எனக்கு விளங்கவே இல்லையே’ என்று டால்ஸ்டாய் கதறியதாக எங்கோ வாசித்த நினைவு.

தனக்கென மட்டுமே வாழாதவனுக்கே அச்சமற்ற வாழ்வு சாத்தியப்படுகிறது. அத்தகைய வாழ்வு மீதான அணுகலும், விலகலுமே பெரும்பாலான மனிதருக்கு சாத்தியப்படுகிறது.

‘ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வே பெரிது, தன் நலனே முக்கியம் என்ற உணர்ச்சி இருக்கிறது. அப்படியிருந்தும் மனிதன் எல்லா உயிர்களும் தன் சுகத்திற்காகவே அமைந்தவை என்று கருதுகிறான்’.

ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் வசித்தபின் அல்லது பணியாற்றியபின் எதேச்சையாக அவ்விடத்தை நீங்கிச் சென்றபின் பழைய இடம் சிறிது சிறிதாக நம் நினைவிலிருந்து மறைந்து விடுகிறது.

தான் இல்லாத இடம் குறித்த எண்ணங்களும் அவ்விடத்தின் இருப்பு குறித்த பிரக்ஞையும் புதிய வகை பரிமாணத்துக்குள் சென்றுவிடுவதை தவிர்க்க முடிவதில்லை.

‘தன் நலன் வேண்டியே மனிதன் பிறருக்கு உதவ எண்ணகிறான்’ என்ற வரி எளிய உண்மையைக் கூறுகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு நாம் இந்த பூமியில் இல்லாதிருந்தோம், அதேபோன்று அடுத்த சில பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் இல்லாதிருப்போம்,

இடைப்பட்ட நாட்களே வாழ்க்கை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்நாட்களில் சக மனிதரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினோம்? எந்த அளவு பயனுடைய வாழ்க்கை வாழ்ந்தோம்? என்ற கேள்விகளையெல்லாம் இந்நூல் எழுப்புகிறது.

தன் சொந்த இன்பத்தை நாடி வாழும் தனிப்பட்ட வாழ்க்கையை மிருக வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார் டால்ஸ்டாய்.

ஒரு குறிப்பிட்ட சாராரின் நெடுநாளைய துன்பம் மற்றொரு சாராரின் நாள்பட்ட இன்பமாக அமைந்து வடுகிறது.மிருக வாழ்க்கை வாழும் மனிதன் காலப்போக்கில் பிறர் நலனையும் நாடும் மனித வாழ்க்கைக்குள் நுழைகிறான்.எங்கும் அவனால் நிலைத்துவிட முடிவதில்லை என்றவாறு எழுதிச் செல்கிறார் டால்ஸ்டாய்.

உடலுக்கு கிடைக்கக்கூடிய சௌகரியங்களே மனித வாழ்வு என்ற நிலை மாற மனிதன் பக்குவம் அடைய வேண்டியுள்ளது.

‘மிருகத்திற்கு சுயநலம் அவசியம் மனிதனுக்கு அதுவே தீமை’

‘தன் வாழ்க்கையைக் காக்க விரும்புவோன், அதை இழக்கிறான், எவன் வாழ்க்கையை இழக்கிறானோ அவன் அதைக் காக்கிறான்’.

‘அழிய வேண்டியதை, அழிந்து கொண்டே இருப்பதை யாரும் பாதுகாக்க முடியாது’

மேற்கண்ட வரிகள் சிந்தனையைத் தூண்டுபவை. தமக்காகவே வாழும் மிருக வாழ்வை ஒருபோதும் முழுமையாக புறக்கணித்துவிட இயலாது. இருப்பினும் பிறர் நலன் விழையும் மனித வாழ்வு குறித்து சிந்தித்தலும், அதை நோக்கி பயணிப்பதுமே மனிதனின் வாழ்வை பயனுள்ளதாக்கும்.

 

நூலின் தகவல்கள் 

 

நூல் : லியோ டால்ஸ்டாய்

தமிழில்ப.ராமஸ்வாமி

வெளியீடு : மின்னூல்

பக்கங்கள் : 136

 

எழுதியவர் 

சரவணன் சுப்ரமணியன்

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *