லியோ டால்ஸ்டாய் (தமிழில்: வழிப்போக்கன்) எழுதிய "இந்துவிற்கு ஒரு கடிதம் (மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்)" புத்தகம் | www.bookday.in

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: வழிப்போக்கன்) எழுதிய “இந்துவிற்கு ஒரு கடிதம் (மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்)” – நூல் அறிமுகம்

“இந்துவிற்கு ஒரு கடிதம் (மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்)” – நூல் அறிமுகம்

ஜான் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம் (Unto This Last ) மற்றும் ஹென்றி தோரோவின் குடிசார் சட்டமறுப்பு அல்லது கீழ்ப்படியாமை (Civil Disobedience) போன்று காந்தியை அகிம்சாவாதியாய் மாற்றிய ,” The Kingdom of God Is Within You”,
(கடவுளின் அரசு உனக்குள்ளேதான் உள்ளது) என்கிற தனது புத்தகத்தினைத் தொடர்ந்து ,” ஃப்ரீ இந்துஸ்தான் “, பத்திரிகை ஆசிரியர் தாரக்நாத் கேட்டுக் கொண்டபடி இந்திய மக்கள் நிலை மற்றும் அவர்களது சுதந்திரம் குறித்து லியோ டால்ஸ்டாய் எழுதிய ,” இந்துவிற்கு ஒரு கடிதம்”, என்ற அவரது மடலை தனது தலைப்பாகவும் ,முதல் கட்டுரையாகவும் கொண்டதே இக்குறும் புத்தகம்.

இறுதி வரை டால்ஸ்டாயை நேரில் சந்திக்காத காந்தி தென்னாப்பிரிக்காவிலும் , லண்டனிலும் இருந்து கொண்டு அவரோடு தொடர்பேற்படுத்திக் கொள்ள எழுதிய கடிதங்களும், குறிப்பாக இப்புத்தகத்தின் முதல் கட்டுரையான “இந்துவிற்கு ஒரு கடிதம்”, பதிப்பிக்க அனுமதி வேண்டி டால்ஸ்டாய்க்கு எழுதிய முக்கிய மடலும் , இவர்கள் இருவரது வேறு பல தொடர்புடைய
கடிதங்களும் இப்புத்தகத்தின் பொருளடக்கமாகின்றன.

தங்களது பரஸ்பர கடிதங்களின் வழி இருவரும் பரிமாறிக்கொண்ட அரசியல், சமூக, சமயம், அறிவியல் மற்றும் நன்னெறி குறித்த பல்வேறு கருத்துகள் , மேலும் கடந்த கால மற்றும் அவர்களது சமகால பிரச்சினைகள் நிறைந்த உலக நடப்பு குறித்த விடயங்கள் இப்புத்தகம் முழுவதும் நிறைந்துள்ளன.

நவீன அறிவியல் சப்பானைப் போன்று எவ்விதம் கொடுரமான அழிவிற்கு மனித குலத்தை இட்டுச்சென்றது ,மேலும் மதியை நம்பாமல் மரபை நம்ப வைக்கும் மதத் தாக்கம் பெற்ற
போலி அறிவியல் இன்றைய மனிதர்களை முட்டாள்களாக்கும் நிலை குறித்த டால்ஸ்டாயின் சிந்தனைகளின் தாக்கம்தான் தான் பின்னாளில், ” Science without humanity”, ,” Religion without ethics”, மேலும் ,” Politics without principles”, ஆகிய இவை எல்லாம் சாவான பாவங்கள் ( of the seven deadly sins)என்று காந்தியாரை உறுதியாக சொல்ல வைத்தன என்றால் அது முற்றிலும் உண்மையே.

அறிவியலின் பெயரைச் சொல்லி மேற்குலக (குறிப்பாக இடைக்கால) கிறித்தவ மத அமைப்புகள் மக்களை ஏமாற்றியது போன்று கிழக்குலகிலும் இன்றும் இந்நிலை தொடர்வதையும் இதன் விளைவாக அறிவியல் மூட நம்பிக்கைகள் மக்களின் சிந்தனையாற்றலை முடக்கின என்று டால்ஸ்டாய் குறிப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவை விரட்டும் மடமை நிறைந்த சிலரது முயற்சிகளால் அறிவியல் பட்ட பாட்டை விழிப்புணர்வு கொண்ட இந்தியர்கள் எவரேனும் மறுக்க இயலுமா?

வரலாற்றில் மன்னர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டின்(Divine right theory of kingship ) அடிப்படையில் யாராலும் கேள்விகேட்க முடியாத முழு அதிகாரம் பெற்ற ஆட்சியாளர்களை ( Absolute monarchs) ஒருசில மதபீடாதிபதிகள்( Pontifical heads or Seers ) தங்கள் வசப்படுத்தி பெரும்பான்மை மக்களை சுரண்டி கொழுத்த கொடுமையை வாசிக்கும் போது இன்றும் மதமெனும் லாகிரி வஸ்து அரசியலுக்கள் புகுந்து (Religion in politics) செய்யும் சித்து வேலைகள் நமது மனத்திரையில் விரிகின்றன.

பிறரை அன்பு செய்தல் என்கிற விவிலியக் கோட்பாட்டினைச் சுட்டிக் காட்டும் போது , உலகப் பொருளாசைகளைக் களைந்து விடுவதே பிறரை அன்பு செய்வதற்கான சிறந்த வழி என்கின்ற ஸ்ரீகிருஷ்ணரின் போதனையோடு அதை ஒப்பிடுவது டால்ஸ்டாயின் உலகமறைத் தத்துவங்கள் குறித்த ஆழமான புரிதலை நமக்கு எண்பிக்கின்றன.

உங்களைப் ( டால்ஸ்டாய்) போன்று தீமையை வன்முறையால் எதிர்க்கக் கூடாது( Non-resistence to evil by force) என்கின்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தோம்”…” இன்றும் தீவிர நம்பிக்கை கொண்டேதான் இருக்கிறோம்” “…உங்களின் அந்த எழுத்துகள் எனது சிந்தனையில் ஒரு ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தி விட்டிருந்தன”, என்று காந்தியாரை சொல்ல வைத்த டால்ஸ்டாயின் இப்புத்தகம் குருட்டு மடமையை ஒழித்து பகுத்தறிவு வழி நின்று சமூக மறுமலர்ச்சி காண விழையும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.

நூலின் விவரங்கள்:

நூல் : இந்துவிற்கு ஒரு கடிதம் (மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்)
ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய் | தமிழில்: வழிப்போக்கன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 64
விலை: ரூ.50
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எழுதியவர் : 

✍🏻 ஆண்டனி பால்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *