ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்தகம் தான் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்? புத்தகம்.
இது ஒரு நிலத்தை வைத்து எழுதப்பட்ட கதை ஆகும். நிலம் என்பது ஒருவனுக்கு சாதாரண ஒரு செல்வமாக அல்லது பொருளாக கொள்ள முடியாது. இந்த நிலத்திற்காக எண்ணற்ற போர்கள் உலகில் நடந்துள்ளன. பல பேர் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர் உடைமைகளை இழந்துள்ளனர். நிலம் என்பது ஒருவன் பொருளாதார ரீதியில் கீழ் மட்டத்திற்கும் மேல்மட்டத்திற்கும் உயர்த்தும் ஒரு கருவியாக இருந்துள்ளது எல்லா காலங்களிலும். அப்படி ஒரு நிலத்திற்காக ஆசைப்பட்டு ஒருவன் செய்யும் செயல்களை சொல்கிறது இந்த புத்தகம்.
இந்த கதையின் கதாநாயகன் பாஹோம். அழகான ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயம் செய்து கொண்டிருந்த பாஹோவிற்கு சொந்தமான நிலம் இல்லையே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. சொந்தமான நிலம் மட்டும் தன்னிடம் இருந்தால் எமனுக்கும் பயப்பட மாட்டேன் என்று சொல்லும் அளவிற்கு உழைப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்தான்.இதை கேட்டுக்கொண்டு இருந்த சாத்தான் என்னையே நீ எதிர்க்க துணிந்து விட்டாயா என்று கோபம் கொண்டு அன்றிலிருந்து அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது.
பாஹோமின் குதிரை பக்கத்து தோட்டத்தில் சென்று அடிக்கடி மேய்ந்து விட்டு அதற்கு அபராதம் கட்டுவது வழக்கமாக இருந்து.அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தான் பாஹோல்.இன்று தான் நமக்கு சொந்த நிலம் வரும் நாம் அதில் பயிரிடுவோம்,யாருக்கும் பயப்படாமல் இருப்போம் என்றெல்லாம் யோசித்து கொண்டிருக்கும் போது அந்த நிலம் விற்பனைக்கு வருவதாக கேள்விபட்டு அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்ற அளவு நிலத்தை வாங்கி கொள்கின்றனர். பாஹோலும் கடன் பட்டு சிறு நிலத்தை வாங்கி விட்டான்.
அவனுக்கென்று ஒரு சொந்த நிலம் கிடைத்துவிட்டது. அதில் அவனே முதலாளி. அவன் மகிழ்ச்சியாக விதைகளை விதைத்து அறுவடை செய்தான். தன்னுடைய கால்நடைகளை தன்னுடைய சொந்த நிலத்தில் மேய விட்டான். இதைவிட பெரு மகிழ்ச்சி என்ன இருந்து விடப் போகிறது ஒரு விவசாயிக்கு.
ஆனால் அவரை மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. செழித்து வளர்ந்த தன்னுடைய சோளப் பயிரை அண்டை வீட்டு கால்நடைகள் எல்லாம் மேய தொடங்கின. இதனால் ஆத்திரமடைந்த பாஹோம் அண்டை வீட்டு மனிதர்களிடமெல்லாம் சண்டைக்கு சென்றான். அவனிடம் அதிகப்படியான நிலமிருந்து அனைவரிடமும் ஒரு அவ பெயரை வாங்கிக் கொண்டான். இதற்கான காரணம் விவசாயிகளிடம் போதுமான நிலங்கள் இல்லாததே என்பதை தெரிந்தும் அவன் வருந்தாமல் அவன் நிலத்தை பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தான். இதனால் அனைவரின் கோபத்திற்கும் ஆளானார். சில நாட்களில் அந்த ஊரில் உள்ள அனைவரும் பக்கத்து ஊரிற்கு குடி பெயர்ந்து விட்டனர். ஆனால் பாஹோம் நிலத்தின் மீது கொண்ட ஆசையில் அவ்விடத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.
ஒரு நாள் பாகோம் தன்னுடைய வீட்டில் இருக்கும் பொழுது விவசாயி ஒருவரை சந்திக்கின்றான். வந்த விவசாயி வோல்கா நதிக்கு அந்த புரம் இருந்து வருவதாகவும் அந்த இடத்தில் நிறைய நிலங்கள் இருப்பதாகவும் அதிகப்படியான மக்கள் அங்கே சென்று குடியேறி இருப்பதாகவும் கூறுகிறார். அங்கு இருக்கும் நிலங்கள் மிக வளமானதாகவும் அங்கு இருக்கும் ஏழை விவசாயிகள் கூட சீக்கிரத்தில் பணக்காரர்களாக மாறி விடுகிறார்கள் என்று ஆசை வார்த்தை கூறுகிறான்.இதை கேட்ட பாஹோமிற்கு நிலத்தின் மீது அவனுக்கு இருந்த ஆசை பேராசையாக வளர்கிறது. உடனே அவன் இருந்த பிரதேசத்தை விட்டு செல்கின்றான்.
அங்கு நிலங்களை வாங்கி விவசாயத்தை செய்கின்றான். விவசாயம் மிக செழிப்பாக நடைபெற்றது அதிகப்படியான பணத்தையும் சம்பாதித்தான் ஆனால் அங்குள்ள நிலங்கள் ஏழை விவசாயிகளிடமிருந்து குத்தகைக்கு வாங்கப்பட்டு அதிலிருந்து பணக்கார விவசாயிகள் பயிர்களை செய்தனர். செல்வத்திற்கு குறைவில்லாமல் இருந்த பாஹோவிற்க்கு சொந்தமான நிலம் வாங்குவது குறியாக இருந்தான். தன்னிடமிருந்த 1500 ரோபில்கள் அளித்து விலை குறைவாக கிடைத்த நிலத்தை வாங்க முடிவு செய்தான். அந்த நேரத்தில் அவ்வழியே வந்த ஒரு வியாபாரி பஷ்கீர் இனத்தவர்கள் வசிக்கும் இடத்தில் மிகக் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கியதாக கூறினான். ஆற்றுக்கு அருகில் இருக்கும் மிக வளமான நிலம் மிக சொற்ப பணத்திற்கு அங்கே நிலங்கள் கிடைக்கின்றன என்று அந்த வியாபாரி கூறியதை கேட்டு உடனே இந்த பிரதேசத்திற்கு சென்று நிலங்களை வாங்க முடிவு செய்தான்.
ரஷ்ய நாட்டின் செழுமையான ஸ்டெபி நிலப்பரப்பிற்கு தன்னுடைய வேலைக்காரனுடன் சென்று சேர்ந்தான் பாஹோம். அங்கே இருந்த பழமையான நிலத்தை பார்த்தவுடன் வாஹோமின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எப்படியாவது இந்த நிலத்தை வாங்கிய தீர வேண்டும் என்ற அவா அவனுக்குள் வேரூன்றி விட்டது. அந்த பஷ்கீர்களிடம் தனக்கு தேவையான நிலத்தை கேட்கும் பொழுது அவர்கள் ஒரு நிபந்தனையை விதிக்கின்றனர்.
காலை சூரியன் உதிக்கும் பொழுது எந்த இடத்தில் இருந்து கிளம்புகிறாயோ அதே இடத்திற்கு மாலை சூரியன் மறைவதற்குள் நீ வந்து சேர வேண்டும். எவ்வளவு தூரம் நீ நடந்து செல்கிறாயோ அந்த நிலம் முழுவதும் உனக்கே சொந்தம் என்று கூறுகின்றனர். அதைக் கேட்டதும் அவனுக்கு மகிழ்ச்சிக்கு அளவில்லை ஒருபுறம் இது சாத்தியமா என்று ஒரு யோசனையும் இருந்தது. எப்படி இருந்தாலும் அதிகபட்சமான நிலத்தை நாம் கடந்து அதை நமது சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் நடக்கத் தொடங்குகிறான். அதிகமான எடையின் காரணமாக தன்னுடைய வேகம் தடைபட்டு விடுமோ என்ற பயத்தில் அவனுடைய காலணி,உணவு,நீர் என அனைத்தையும் துறந்து ஓடுகிறான்.உழாத அந்த நிலம் அவன் கால்களை கிழிக்கிறது. பசி,தாகம்,வெயில் என அனைத்தும் அவனை பார்த்து சத்தமிட்டு ஓலையிடுகிறது .
பார்க்கும் இடமெல்லாம் சிறப்பாக இருக்கவே அவன் அதிகப்படியான நிலத்தை கடந்து அடைய பார்க்கிறான்.அவனின் பேராசை சூரியனுக்கு தெரிந்து தான் மறைந்து போகும் நேரத்தை அதிகப்படுத்தவா முடியும்.?சூரியன் மறையும் நேரம் வருகிறது.அவன் கடக்கும் தொலைவும் நெருங்கி விட்டது.தன் பலத்தை எல்லாம் திரட்டி ஆரம்பித்த இடத்தை அடைந்து விட்டான்.எல்லோரும் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி அவனை எழுப்புகின்றனர்.விழுந்த அவன் மீண்டும் எழுந்து கொள்ளவே இல்லை. நிலத்திற்காக ஆசைப்பட்டு அந்த நிலத்திலேயே உயிரை விட்டான் பாஹோம்.
அதிகப்படியான நிலத்திற்கு ஆசைப்பட்ட பாஹோமை ஆறடி நிலத்தில் அடக்கம் செய்தனர் விவசாயிகள்.
இதேபோன்று கருணையின் ஒளி என்ற கதையிலும் பண்ணை அடிமைகள் படும் வேதனைகளை எடுத்துக்காட்டுகிறது.தன்னிடம் வேலை செய்யும் பண்ணை அடிமைகளை எந்த அளவுக்கு மிக குறைவாக நடத்த முடியுமோ அவ்வளவு குறைவாக நடத்தி அவர்களிடம் தேவைக்கு அதிகமான உடல் உழைப்பை சுரண்டி கொழுத்து கிடக்கும் கண்காணிப்பாளர்களை பற்றிய கதைதான் கருணை ஒளி. டால் ஸ்டாலின் மிகச்சிறந்த கதைகளான how much land does a man need? That candle. என்ற இரண்டு கதைகளும் சேர்ந்த ஒரு தொகுப்பு தான் இந்த புத்தகம். அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் .நன்றி.
நூலின் விவரங்கள்:
புத்தகம்: ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? (How Much Land Does a Man Need)
ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ்
விலை: ரூ.80
எழுதியவர் :
✍️ – நளினி மூர்த்தி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


டால்ஸ்டாயின் எளிமையான அதே நேரத்தில் மிக நுட்பமான கதை இது. பாஹோமின் நிலப் பசியை வாசிப்போர் உணர்ந்திட முடியும்.
இக்கதையை ராதுகா பதிப்பகம் பெரிய அளவில் வண்ணப் படங்களுடன் குழந்தைகளுக்கான புத்தகமாககூட வெளியிட்டிருக்கிறது.