நல்ல ஆரோக்கியமான உடல்நலத்துடன் தொற்றுநோயைச் சுமந்து திரிபவர்கள் இருப்பதை, அதாவாது நோயை உருவாக்குகின்ற நோய்க்கிருமிகளை எடுத்துச் சென்று பரப்புகின்ற சிலர் தாங்கள் அந்த நோயால் பாதிக்கப்படாமல் உடல்நலத்துடன் இருக்கிறார்கள் என்பதை 1907ஆம் ஆண்டு நியூயார்க் லாங் தீவில் பரவிய டைபாய்டு நோயின் மூலம் நிறுவிய ஜார்ஜ் சோப்பர் என்ற சுகாதரப் பொறியாளர் அனைவராலும் கொண்டாடப்பட்டவர். 1918ஆம் ஆண்டு, முதலாம் உலகப்போரின் இறுதிகட்டத்தில், ஸ்பானிஷ் காய்ச்சல் என்றழைக்கப்பட்ட, இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் உலகெங்கும் பரவியது.
இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ ஒரு கோடியே எண்பது லட்சம் பேர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போயினர். அந்த நோய் குறித்து சைன்ஸ் என்ற அறிவியல் ஆய்விதழில் நீண்ட கட்டுரை ஒன்றை 1919ஆம் ஆண்டு சோப்பர் எழுதினார். இப்போதைய கொரோனா வைரஸ் தோற்றுவித்திருக்கும் கோவிட்-19 நோயின் அறிகுறிகள், அந்த இன்ஃப்ளூயன்சா நோயின் அறிகுறிகளைக் கொண்டதாக இருப்பதால், 1918ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய இன்ஃப்ளூயன்சா தொற்று நோய் பலவழிகளிலும் மனித இனத்திற்கான படிப்பினையை இன்றைக்கும் வழங்குவதாக பல ஆய்வாளர்களும் கருதுகின்றனர். இன்ஃப்ளூயன்சா குறித்து 1919ஆம் ஆண்டு சோப்பர் எழுதிய அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவம்.
சைன்ஸ் அறிவியல் ஆய்விதழ், 1919 மே 30, பக்கங்கள் 501-506
ஜார்ஜ் ஏ. சோப்பர்
சுகாதாரப் படை, அமெரிக்கா
தொற்றுநோய் கற்றுத் தருகின்ற பாடங்கள்
உலகம் முழுவதும் தற்போது பரவியிருந்த தொற்றுநோய் இதற்கு முன்னர் எப்போதும் காணப்படாதது. இதனினும் கொடிய தொற்றுநோய்கள் இருந்தன என்றாலும், அவை இந்த அளவிற்கு பரவி இருந்ததில்லை. சில தொற்றுநோய்கள் இப்போது உள்ளதை விட அதிகமாகப் பரவியிருந்தாலும், மிகக் குறைவான ஆபத்தையே விளைவித்திருந்தன. வெள்ளம், பஞ்சம், பூகம்பம், எரிமலை வெடிப்பு என்று இவையனைத்தும் மனிதப் பேரழிவு குறித்த மிகக் கொடூரமான வரலாற்றை ஏற்கனவே எழுதிச் சென்றிருக்கின்றன என்றாலும், இதுபோன்ற உலகளாவிய திடீர் பேரழிவு இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்பட்டிருக்கவில்லை.
இந்த தொற்றுநோயைச் சுற்றியிருக்கின்ற முழுமையான மர்மம், மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கின்றது. இது என்ன நோய், எங்கிருந்து வந்தது அல்லது இதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்று யாருக்குமே தெரியவில்லை. நோயின் மற்றொரு அலை மீண்டும் வந்து விடுமோ என்ற கவலையுடன், இன்றைக்கு மனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
தொற்றுநோய்களிலே நன்கு அறியப்பட்ட மிகப் பழமையான தொற்றுநோயாக இன்ஃப்ளூயன்சா இருந்தாலும், அது குறித்து மிகக் குறைவாகவே அறிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தனது பொறுமையான, கடினமான உழைப்பால் மற்ற கொள்ளைநோய்களை அழிந்து போகும் நிலைக்கு கொண்டு சென்ற அறிவியலால், இந்த நோய்க்கு முன்பாக தன்னுடைய ஆற்றலை இதுவரையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நோயைப் பரப்புகின்ற நச்சு, அதனை முன்கூட்டியே அறிந்து கொள்வது, மோசமான நிலைக்கு செல்வது என்று அனைத்திற்கும் காரணமாக இருக்கின்ற காரணிகள் குறித்த சந்தேகம் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இவை பற்றிய கோட்பாடுகளை உருவாக்குவதற்கான அருமையான வாய்ப்புகளும், மிகச் சிறந்த சில ஆய்வுகளும் இருந்தாலும், அவற்றை ஏற்றுக் கொள்வது குறித்து பொதுவான உடன்பாடு இதுவரையிலும் எட்டப்படவில்லை.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்த கோட்பாடுகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இருந்தாலும் மற்ற சுவாச நோய்களைத் தடுக்கும் என்று நம்பப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் இன்ஃப்ளூயன்சாவைத் தடுத்து நிறுத்தலாம் என்று கருதப்பட்டது. இவ்வாறான இரட்டை அனுமானமானது, பலவீனமான நாணல் மீது சாய்வதற்கு ஒப்பானது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. தொகுப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ள சுவாச நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை. மரணத்திற்கான மிகமுக்கியமான காரணமாக அவை இருக்கின்றன என்றாலும், இதுவரையிலும் எவ்வாறு அவற்றைத் தடுப்பது என்று அறியப்படவில்லை.
பொதுமக்களின் அலட்சியம்
நோய்த்தடுப்பு வழியில் மூன்று முக்கிய காரணிகள் குறுக்கே நிற்கின்றன: முதலாவதாக, பொதுமக்களின் அலட்சியம். மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு வரவிருக்கின்ற ஆபத்துகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. பெரும் சிக்கலும், வரம்பும் கொண்டுள்ள சுவாச நோய்த்தொற்றுகளின் தீவிரத்தன்மை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, வரவிருக்கின்ற ஆபத்தை மறைத்து விடுகின்றது. நோய்த்தொற்றுகளின் தன்மை சாதாரண ஜலதோஷத்தில் துவங்கி நிமோனியா வரையிலும் மாறுபாடு கொண்டிருக்கிறது. எந்த வகையிலும் இவையனைத்தும் தனித்தன்மையுடன் இருப்பதில்லை. தடுமன் அல்லது நாசி அழற்சியாகத் துவங்குகின்ற நோயின் தாக்குதல், பின்னர் தொண்டை நோவு, நீர்க்கட்டு, குரல்வளை அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி, நுரையீரல் அழற்சி என்கிற நிமோனியாவாக உருவாகலாம்.
நுரையீரலை நோக்கி நோய் முன்னேறும் போது, அதன் தாக்கம் அதிகரிக்கிறது. இந்த தொற்று சில நேரங்களில் மார்பில், சில நேரங்களில் தொண்டையில், இன்னும் சில நேரங்களில் தலையில் தொடங்குவதாகத் தெரிகிறது. தொடங்கிய இடத்திலேயே அது நின்று விடலாம் அல்லது பல கட்டங்களைக் கடந்து செல்லலாம். இதுதான் ஜலதோஷத்தின் கதை. பொதுவாக இதனை ஆபத்து நிறைந்தது என்று சொல்வதை விட, அசௌகரியமானது என்றே சொல்லலாம். எந்த குறிப்பிட்ட வைரஸ் அதை உருவாக்குகின்றது என்பது தெரியவில்லை. திறமையான சிகிச்சைகள் எதுவுமில்லாமல் அல்லது அன்றாட நடவடிக்கைகளில் எந்தவொரு பெரிய குறுக்கீடும் இல்லாமலே, பெரும்பாலான மக்கள் குணமடைந்து விடுகிறார்கள்.
மிகவும் அசாதாரணமான இருக்கின்ற மற்றொரு வகை நோய் தொகுப்பு, பெரும்பாலும் மேற்கூறியவற்றோடு குழப்பமான தொடர்புடையதாக இருக்கின்றது. தொண்டை அடைப்பான், அம்மை மற்றும் ஸ்கார்லட் காய்ச்சல் போன்ற குறிப்பிட்ட நோய்த்தொற்றுகள் இந்த தொகுப்பில் அடங்குகின்றன. இன்ஃப்ளூயன்சாவும் இந்த தொகுப்பிலேயே இருக்கிறது. ஆரம்பத்தில் தோன்றுகின்ற அறிகுறிகள் ஜலதோஷத்தை ஒத்ததாக இருக்கும். தெளிவான, ஆபத்தான அறிகுறிகள் நோயாளியிடம் தோன்றுகின்ற வரையிலும், நோயின் உண்மையான தன்மை யாராலும் அறியப்படுவதில்லை. அறிகுறிகள் தோன்றுவதற்கான அந்த காலகட்டத்திற்குள்ளேயே, மற்றவர்களும் பாதிக்கப்படுகின்ற நிலை உருவாக வாய்ப்பு இருக்கின்றது.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் தனித்த தன்மை
நோய்த்தடுப்பு வழியில் குறுக்கே நிற்கும் இரண்டாவது காரணி, தடுப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் தனித்த தன்மையாகும். தனிநபர் ஒருவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மீது மிகப்பெரிய தடையை ஏற்படுத்தாத, பொதுவகையிலான நோய்களுக்காக கடைப்பிடிக்கப்படுகின்ற நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, குடல் நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், சுவாச நோய்த்தொற்றுகளைப் பொறுத்தவரை அந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாது. நோய்த்தொற்று வைரஸைக் கொண்டிருக்கும் இன்ஃப்ளூயன்சாவின் கழிவுப் பொருட்கள் பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படுவதில்லை அல்லது கழிவுநீர் அமைப்பிற்குள் செலுத்தப்படுவதில்லை.
டைபாய்டைப் போலவே அவை முறையாகக் கையாளப்படுகின்றன. மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக வெளியேறுகின்ற கழிவுகள் காற்றில் பரவி கைகள், உணவு, உடை மற்றும் பாதிக்கப்பட்ட நபரைச் சுற்றியிருக்கும் சூழல் முழுவதையும் மாசுபடுத்துகின்றன. தானே அறிந்திரா வகையில், கண்ணுக்குத் தெரியாமல், எந்தவித சந்தேகமும் தோன்றாத வகையில் ஒருவருக்கு இது நடக்கிறது. இந்த வகையான கிருமி பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான நடைமுறைகள், அவ்வளவாகப் பலன்களைத் தராது. ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற, சுவாச நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளே தொற்றுநோயியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
தங்கள் மீது நோயை ஏற்றிக் கொள்ளும் வாய்ய்பு இருப்பவர்களால், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதையும் செய்ய முடியாது. நோய்க்கிருமிகள் நன்கு கடத்தப்படாத இடத்திலேயே, நோயின் சுமை வைக்கப்படுகிறது. தனக்கிருக்கின்ற ஜலதோஷம் மிகவும் ஆபத்தான தொற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று நினைக்கின்ற ஒருவர், தனக்கு லேசான ஜலதோஷம் மட்டுமே இருக்கும் போது, மற்றவர்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாக, தனிமையில் தன்னை அடைத்துக் கொள்வது என்பது மனித இயல்பில் இல்லாத ஒரு செயலாகும்.
நோய் தொற்றும் தன்மை
மூன்றாவதாக, சுவாச நோய்த்தொற்றுகளிடம் உள்ள அதிக தொற்றும் தன்மை, அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிரமத்தை அதிகரிக்கிறது. நோயரும்பும் காலம் கணிசமாக வேறுபடுகிறது; சில தொற்றுநோய்களைப் பொறுத்தவரை, அது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களாக இருக்கிறது. தன்னை நோய் தாக்கியிருக்கிறது என்பதை நோயாளி அறிந்து கொள்வதற்கு முன்பாகவே அந்த நோய் அடுத்தவருக்குப் பரவி விடுகிறது.
சுவாச நோய்களைக் கட்டுப்படுத்துகின்ற வழியில் குறுக்கே நிற்கின்ற தடைகளின் இந்தப் பட்டியலை, பெரும்பாலும் ஆரோக்கியமாக இருப்பவர்களே தங்களுடன் நோய்க்கிருமிகளைச் சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் முடித்துக் கொள்ளலாம். இதன்மூலம் தாங்கள் அறியாமலே தங்களுக்கே ஆபத்து ஏற்படுத்துபவர்களாகவும், பிறருக்கு அச்சுறுத்தலைத் தருபவர்களாகவும் அவர்கள் செயல்படுகிறார்கள். இன்ஃப்ளூயன்சா பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் இதன் மீது எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
இவையனைத்தும் மிகவும் பயமுறுத்துவதாகத் தோன்றுகின்றது என்றாலும், இதனால் யாரும் மனச்சோர்வடையத் தேவையில்லை. டைபாய்டைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்ற காரியமாகவே முன்பு தோன்றியது. ஏற்படுகின்ற சிரமத்தைச் சரியாக அளவிடுவதே, பெரும்பாலும் அந்த சிரமங்களைக் கடப்பதற்கான முதல் படியாக இருக்கும்.
தரவுகளுக்கான முக்கியத்துவம்
இன்ஃப்ளூயன்சா தொற்றுநோயைப் பற்றி இங்கே கூறப்படுவது, இந்த எழுத்தாளரிடம் தற்போதுள்ள பார்வையாக மட்டுமே முன்வைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இப்போது யாராலும் அதிகாரப்பூர்வமாகப் பேச முடியாது. அனைத்து உண்மைகளும் ஒன்றிணைக்கப்படும்போது, இன்றிருக்கின்ற சில கருத்துக்களுக்கு மாற்றங்கள் தேவைப்படலாம். நிகழ்வை முழுமையாக அளவிடுவதற்கு, நாம் இன்னும் நெருக்கமாகச் செல்ல வேண்டும். தனிப்பட்ட ஆய்வுகள் மற்றும் எண்ணற்ற ஆய்வாளர்களின் முயற்சிகள் குறித்து அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, அவையனைத்தும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
மேற்கொள்ளப்பட்டிருக்கும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து இறுதியாக எதையும் சொல்வதற்கு முன்பாக, நகரங்கள், முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள புள்ளிவிவரத் தரவுகள் அனைத்தும் வகைப்படுத்தி, அட்டவணைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும், அவ்வாறு செய்யப்படும் வரை, நோய் தாக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, அவர்களுடைய வயது, பாலினம், உடல்நிலை, இனம், நோயின் சிக்கல்கள் மற்றும் நோயின் விளைவுகள் பற்றி எதையும் சொல்ல இயலாது. நோய் வருவதற்கு முன்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது இந்த உண்மைகள் கொண்டிருக்கின்ற தொடர்புகள் பற்றியும் அதிகம் பேச முடியாது. இந்த வேலை பல நிபுணர்களின் கவனத்தை இப்போது ஈர்த்துள்ளது.
பொது சுகாதார அதிகாரிகள், பாக்டீரியாவியல் மற்றும் நோயியலில் திறமை கொண்டவர்கள், நோய் குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய வாய்ப்புள்ள திறன் கொண்ட மருத்துவர்கள் என்று அனைவரும் தங்களுடைய அறிக்கைகளைத் தயாரித்து வருகின்றனர். தொற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து அறிவியல் ஆய்வுகள் குறித்த பதிவுகளும் ஒரு முடிவிற்கு வந்து சேர்வதற்கு இன்னும் பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் கூட ஆகலாம். பல இடங்களிலிருந்து, பல கோணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைகளின் மூலம் நல்ல விஷயம் ஒன்றை நம்பிக்கையுடன் நாம் எதிர்பார்க்கலாம்.
இத்தனை ஆண்டுகளாக இன்ஃப்ளூயன்சாவின் உண்மையான தன்மையை மறைத்து வைத்திருந்த மர்மங்கள் எந்த அளவிற்குத் தெளிவாக்கப்படும் என்பதைக் காலம் சொல்லும். உலகளாவிய இன்ஃப்ளூயன்சாவைத் தவிர, வேறேந்த நோயையும் படிப்பது இந்த அளவிற்கு மிகவும் கடினமானதல்ல. அது வருகிறது, பரவுகிறது. திடீரென மறைந்து விடுகிறது. அதன் வருகையின் போது அதைக் கவனமாக, சிரமப்பட்டு அறிந்து கொள்வதற்கான நேரம் எதுவும் கிடைக்காததால், பயங்கரமான ஆற்றலை அது கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இல்லாமல் போவது அல்லது அதீத பரவல் கொண்டிருப்பது என்று அந்த நோய் கொண்டிருக்கின்ற இரண்டு தன்மைகளும் அவற்றின் ஆய்விற்கு குறுக்கே நிற்கின்றன.
தொற்றுநோய்களுக்கு இடையில் ஏற்படுகின்ற இடைவெளியில் இன்ஃப்ளூயன்சா முற்றிலும் இல்லாமல் போய் விடுகிறதா என்ற கேள்வி நிச்சயம் கேட்கப்படும். இந்த இடத்தில் கருத்துக்கள் வேறுபடுகின்றன. உலகளாவிய இன்ஃப்ளூயன்சா தொற்று காய்ச்சல் ஒரு தனி வகை தொற்று என்று சிலர் கருதுகின்றனர். மற்றவர்கள் அது எப்போதுமே நம்மிடையே இருந்து வருவதாக நினைக்கிறார்கள். சமீபத்தில் நாம் பார்த்ததைப் போன்று, சாதாரணமாக தன்னுடைய ஆபத்தான அம்சத்தை அது வெளிப்படுத்தாது. ஆனாலும் வழக்கமான தொற்று நோய் மற்றும் இந்த அசாதாரணமான உலகளாவிய இன்ஃப்ளூயன்சா கொண்டிருக்கும் பல அறிகுறிகளும் ஒன்று போலவே இருக்கின்றன.
பொதுவான தொற்றுநோய்களுக்கு காரணமான குறிப்பிட்ட தீவிர வகை வைரஸே காரணம் என்ற கருத்தின் அடிப்படையில் சமீபத்திய உலகளாவிய தொற்றுநோய் குறித்து ஒருவேளை விளக்கப்படலாம்.
சமூக இடைவெளி
இன்ஃப்ளூயன்சாவை சமூகத்திலிருந்து வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. அதாவது முழுமையாக தனிமைப்படுத்தலை ஏற்படுத்துவது என்ற ஒரேயொரு வழிதான் அதை முற்றிலும் தடுப்பதாக உள்ளது. நோய்த்தொற்று ஏற்படக் கூடியவர்களிடமிருந்து, வைரஸைக் கொடுக்கும் திறன் கொண்டவர்களைத் தள்ளி வைப்பது அல்லது நேர்மாறாக அதைச் செய்வது அவசியம். இது மிகவும் கடினமான நடைமுறையாகும். ஏனென்றால் முதலாவதாக, வைரஸை உற்பத்தி செய்பவர்கள் அனைவரையும் கண்டுபிடிப்பதற்கான சாத்தியமில்லை.
இரண்டாவதாக யார், யார் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் என்பதையும் அறிய முடியாது. தனிமைப்படுத்தலை முழுமையாக நகரங்களிலோ அல்லது நகரங்களின் சில பகுதிகளிலோ அல்லது நகரங்களில் உள்ள நபர்களிடமோ அறிமுகப்படுத்துவதும் சாத்தியமானது இல்லை. சில சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் மட்டுமே இது சாத்தியப்படும். சிலர் இதை வெற்றிகரமாக முயற்சித்திருக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் வெறுமனே நோய் தாக்குதலை ஒத்தி மட்டுமே இது வைத்துள்ளது என்பதால், அந்த கொள்கை எந்த வகையிலும் தவறு என்பதாகி விடாது. .
இன்ஃப்ளூயன்சா தொற்று எவ்வாறு தோன்றியது
இன்ஃப்ளூயன்சா தொற்று போன்ற பொதுவான இயற்கை நிகழ்விற்கு பொதுவான காரணம் இருக்கிறது என்று கருதுவது இயற்கையானது. உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கும் அளவிற்கு பொதுவானதாக இருப்பதாக, பெரும்பாலான மக்கள் நினைக்கக்கூடிய ஒரே காரணம் வளிமண்டம் அல்லது நிலப்பரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில் இது மிகவும் பழமையான கருத்தாகும். பொதுமக்களைப் பொறுத்தவரை, மற்ற அனைத்து காரணங்களைக் காட்டிலும், இதுவே இதுவரையிலும் அவர்களிடம் தப்பிப் பிழைத்திருக்கின்ற காரணமாக இருக்கிறது.
ஒரு வகையில் இது சிடென்ஹாமின் தொற்றுநோய் கட்டமைவு கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோட்பாடு மதிப்பிழந்து விட்டதாக பலமுறை கூறப்பட்ட போதிலும், சிடென்ஹாம் நம்பியதைப் போலவே நம்புகின்ற பலர் இன்னும் இருக்கின்றனர். சில வருடங்களில், மற்ற பருவங்களை விட சில குறிப்பிட்ட பருவங்களில் வித்தியாசமான இருப்பை இந்த நோய் எடுத்துக்கொள்வதற்கு, நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பொதுவான சூழல்கள் உதவுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள்.
1889-90ஆம் ஆண்டின் தொற்றுநோய்களின் பிற்பகுதியில், இன்ஃப்ளூயன்சா பரவலுக்கான காரணம் மனிதனுடனான தொடர்பிலிருந்து முற்றிலும் தனித்து, அப்போதிருந்த உலக நிலைமைகளுடன் அது ஏதோவொரு வகையில் தொடர்பு கொண்டிருந்தது என்றே பலரும் கருதினர். 1917-18ஆம் ஆண்டின் அசாதாரண குளிர்காலம், அதைத் தொடர்ந்த கடுமையான கோடைகாலமே அண்மையில் ஏற்பட்ட தொற்றுநோய்க்கு பெரும்பாலும் காரணமாக இருந்தது என்று ஒருசிலர் கருதுகிறார்கள். மற்றவர்கள் நடைபற்ற பெரும் யுத்தமே அந்த கொள்ளை நோயைத் தூண்டியதாக நம்புகிறார்கள். ஒரே நேரத்தில் பல இடங்களில் அந்த நோய் தன்னிச்சையாக உருவாகி இருக்கலாம் என்று ஒருசிலர் கூட கருதவில்லை. இந்த கருத்துக்களுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட வாதங்கள் நம்பத்தகுந்ததாக இல்லாமல், பெரும்பாலும் புத்திசாலித்தனத்துடன் மட்டுமே இருந்தன. அந்த வாதங்கள் எதுவும் அறிவியல் பகுப்பாய்வின் சோதனையில் வெற்றி பெறவில்லை.
1918 ஆம் ஆண்டின் பெரும் தொற்றுநோய்க்கு உடனடி காரணம் ஒரு தொற்று வைரஸ்; அது உலகெங்கிலும் பரவும் வரை, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடந்து சென்றது என்பதற்கான மிகப் பெரிய ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன. இந்த வைரஸ் பரவிய முறை மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைப் போன்றே இருந்தது என்று நம்பப்பட்டது. இந்த தொற்றுநோய் மிகவேகமாகப் பரவியது என்பதும், அந்த வேகம் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிப்பதை விட அதிகமாக இல்லை என்பதுமே, வைரஸ் இந்த முறையில் பரவியது என்ற நம்பிக்கைக்கான காரணங்களாக இருந்தன. அது எந்த வைரஸ், எவ்வாறு அது உடலில் இருந்து வெளியேறுகிறது அல்லது நுழைகிறது, நோயின் எந்த காலகட்டத்தில் அது மற்றவர்களுக்கு பரவுகின்றது என்பதை இதுவரையிலும் யாரும் சரியாகக் குறிப்பிடவில்லை.
பைஃபர் பேசிலஸ் தான் காரணி என்று சிலர் கருதுகின்றனர். தனிப்பட்ட முறையில் வடிகட்டக்கூடிய வைரஸ் காரணமாக இருக்கலாம் அல்லது பைஃபர் பேசிலஸுடன் இணைந்து அது செயல்படுவதாக இருக்கலாம் என்று மற்றவர்கள் நம்புகின்றனர். கிட்டத்தட்ட அனைவருமே, இன்ஃப்ளூயன்சா மற்றும் நிமோனியா ஆகியவை தனித்தனியாக வரக்கூடிய நோய்கள் என்பதையும், இன்ஃப்ளூயன்சா கொண்டு வருகின்ற நிமோனியாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதன் காரணமாகவே அதிக அளவில் இறப்பு ஏற்பட்டது என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். சுவாச வகையாக இருப்பதால், மூக்கு மற்றும் வாய் வழியாக இந்த வைரஸ் உடலை விட்டு வெளியேறுகிறது என்று நம்பப்படுகிறது. மூக்கு, வாய் அல்லது கண்கள் வழியாக உடலுக்குள் நுழைவதாக இது இருக்க வேண்டும்.
இது போன்ற கேள்வி கேட்கப்படலாம். இன்ஃப்ளூயன்சா மற்றும் பைஃபர் பேசிலஸ் எப்போதும் நம்முடனே இருக்குமென்றால், இந்த நோய் ஏன் திடீரென்று அதன் சாதாரண வகைகளிலிருந்து தீவிரம், தொற்று மற்றும் ஏற்படுத்துகின்ற சிக்கல்கள் தொடர்பாக வேறுபட வேண்டும்? இந்த கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஒன்று, தொற்று தோன்றிய தொலைதூர இடத்திலிருந்து நாகரிகமடைந்த நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டது என்று கருதுவது.
மற்றொன்று அது உள்நாட்டிலேயே தோன்றியது என்று வைத்துக்கொள்வது. இந்த கோட்பாடுகளை, அவற்றின் அனைத்து விவரங்களுடனும் இங்கே விவரிக்க முடியாது. இந்த வாதங்கள் எந்த வகையிலும் நம்ப வைப்பதாக இருக்கவில்லை. உலகளாவிய தொற்றுநோயைப் பற்றிய முழுமையாக விளக்குவதற்கு, இந்த தொற்று நோய் எங்கு தோன்றியிருந்தாலும், அந்த நோய் எவ்வாறு உருவானது என்பதை நிரூபிக்க வேண்டும்.
தொற்றுநோயின் தோற்றம் – சிக்கலான உயிரியல் நிகழ்வு
சந்தேகத்திற்கு இடமின்றி, தொற்றுநோயின் தோற்றம் ஒரு சிக்கலான உயிரியல் நிகழ்வாகவே இருக்கிறது. வைரஸின் தாக்குதலுக்கு ஆளானவர்களில் பெரும் பகுதியினரிடம் இருக்கின்ற எதிர்ப்பாற்றலைக் கடக்கும் திறன் கொண்ட ஒரு வைரஸ் உருவாகிறது. வைரஸின் தாக்கும் ஆற்றலைக் குறைப்பது, நோய்த்தொற்றுடைய நஞ்சுடன் தொடர்புடைய வழக்கமான நிகழ்வாகும். பாஸ்டரின் காலத்திலிருந்தே நோயெதிர்ப்புத் துறையில் உள்ள மிகச் சிறந்த பணிகளின் அடித்தளமாக ’கட்டுப்படுத்தப்பட்ட ஒடுக்கம்’ என்பது உள்ளது.
அதிகரிப்பு மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்றாலும், நடைமுறையில் தன்னிடம் உள்ள நோய்க்கிருமி பண்புகளை இழந்த ஒரு வைரஸை, எளிதில் பாதிக்கக்கூடிய விலங்குகளுக்குள் செலுத்துவதன் மூலம் அந்த வைரஸை வீரிய நிலைக்கு உயர்த்த முடியும் என்பது நன்கு நிறுவப்பட்டுள்ள உண்மையாக இருக்கிறது. தீங்கு விளைவிக்கின்ற வீரியத்தன்மை கொண்ட நோய் தன்னிச்சையாக மீண்டும் தொற்றுநோய்களில் தோன்றுவது, சில நேரங்களில் லேசான தொற்றுநோய்களில் தோன்றுவதைப் போன்ற செயல்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
எங்கோ ஓரிடத்தில் இருப்பவர்களிடம் பழக்கமாகி, அதன் விளைவாகச் சகிப்புத்தன்மையைப் பெற்றவர்களிடையே இருக்கின்ற இன்ஃப்ளூயன்சா வைரஸ், அந்த வைரஸுக்கு அன்னியமாக இருக்கும் மற்றவர்களிடையே அறிமுகப்படுத்தப்படும் போது, அதன் விளைவாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இது இயற்கையாகவே நோய் பரவலுக்கு வழிவகுத்து, உலகளாவிய தொற்றுநோயை விளைவிக்கும்.
மற்ற தொற்றுநோய்களுடன் செய்யப்படும் ஒப்பீடு, சுவாச நோய்த்தொற்றுகள் எவ்வளவு பரவலாகவும், விரைவாகவும் பயணிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. கிருமிகளின் மகத்தான பரிமாற்றம் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களின் சுவாசக் குழாயில் எவ்வாறு நடக்கின்றது என்பதை இது காட்டுகிறது. நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து பாக்டீரியா பொருட்கள் மற்ற நபர்களின் மூக்கு மற்றும் வாய்க்குள் எவ்வளவு எளிதாக நுழைய முடியும் என்பதைக் காண்பது கவலையளிப்பதாக இருக்கிறது. அவற்றை ஒப்புக்கொள்வது நன்மைகளைச் செய்யும் என்றால், உண்மைகள் மறைக்கப்படக்கூடாது.
வாயில் உள்ள கிருமிகளின் பரிமாற்றம் மக்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம் நடக்கிறது என்பதால், தொற்றுநோய் நமது கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல், அது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்றால், சுவாச நோய்த்தொற்றுகள் எந்த அளவிற்கு ஏற்படக்கூடும் என்பதையும் விளக்குகிறது. சமீபத்திய இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் போலவே உலகளாவியதாக இருக்கிறது என்றாலும், ஜலதோஷ தொற்றுநோய்கள் அவ்வப்போது மட்டுமே ஏற்படுவதாக சிலர் நினைக்கிறார்கள். அது மிகவும் லேசாக வந்து போவதால், அவற்றின் தொற்றும் தன்மை குறித்து யாருக்கும் சந்தேகம் ஏற்படுவதில்லை. இந்த நோயின் அபாயகரமான அலை தோன்றுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே இன்ஃப்ளூயன்சா தொற்றுநோய் அமெரிக்கா முழுமையும் பரவியிருந்தது. ஆனாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே அது கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.
ஜலதோஷ தொற்றுநோய்கள் அடிக்கடி இருப்பது, பிற சுவாச நோய்களைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தி தருகிறது. பொதுவான சுவாச நோய்த்தொற்றுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவை கட்டுப்படுத்தப்படும் வரையிலும், இன்ஃப்ளூயன்சாவை முழுமையாகப் புரிந்துகொண்டு அதனைக் கட்டுப்படுத்த இயலாது என்று இங்கிலாந்து உள்ளாட்சி வாரியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி சர் ஆர்தர் நியூஷோல்ம் கூறியுள்ளார். இன்ஃப்ளூயன்சா காய்ச்சலைப் படிப்பதற்கான வழி ஜலதோஷத்தைப் பற்றி படிப்பதாகும் என்ற அவருடைய கருத்தை, இந்த எழுத்தாளர் மனதார ஏற்றுக் கொள்கிறார். ஜலதோஷத்தைப் பற்றி படிப்பதற்கான இடம் கிராமம் அல்லது எல்லைக்குட்படுத்த சுற்றுச்சூழல் கொண்ட இடமாகும். இந்தக் காலம், அதைப் படிக்க வேண்டிய காலமாக இருக்கிறது.
சாதாரண காலங்களில் சுவாசக் குறைவு ஏற்படுவது, அவற்றை மிகச்சாதாரணமாகக் கருதுகின்ற அலட்சியம், அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் நம்மிடம் இருக்கின்ற தற்போதைய இயலாமை ஆகியவற்றை கவனத்தில் கொள்வதே தொற்றுநோய் நமக்குத் தந்திருக்கும் சிறந்த படிப்பினை ஆகும். டைபாய்டு, மலேரியா மற்றும் பல நோய்களைப் போன்று சுகாதாரப் பணிகளின் மூலமாக அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது. நிர்வாக நடைமுறைகளாலும், சுய பாதுகாப்புக்கான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவும். அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
தொற்று நோய் மீண்டும் வருமா?
தொற்று நோய் மீண்டும் வருமா என்ற கேள்விக்கு வராது என்று யாரும் சாதகமாகப் பதிலளிக்க முடியாது. பொதுவாக இன்ஃப்ளூயன்சா ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அலைகளாக வீசும். தெளிவற்ற, லேசான அலைகளை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா அனுபவித்தது. அதற்குப் பின்னர் பல இடங்களில் புதிய நோய் பரவலை ஒத்த உள்ளூர் இடையூறுகள் ஏற்பட்டன. இங்கிலாந்தில் புதிதாக, ஆபத்தான பாதிப்பு பதிவாகியுள்ளது. மற்றொரு தொற்றுநோய் அமெரிக்காவில் வருமா என்று ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
பொது சுகாதாரத்தைப் பராமரிப்பது, தொகுப்பாக இருக்கின்ற சுவாச நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைளே நோய் மீண்டும் புதிதாக பரவினால் எடுக்கப்பட வேண்டிய சிறந்த நடவடிக்கைகளாக, இருக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட தன்மை இல்லாததாகத் தோன்றுகின்ற நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து சந்தேகம் எழுந்தால், ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வது நல்லது என்ற பொது மனநிலையை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் கொடுக்கப்பட்ட கூடுதல் கவனிப்பால் பொது ஆரோக்கியம் பாதிக்கப்படாது.
முதலாவது செய்யத் தகாத விஷயங்களைப் பார்க்கலாம். பொதுக்கருத்து அவ்வாறாக இல்லாத வரையிலும், தியேட்டர்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவது, பொதுவாக அனைவரும் முகக்கவசங்களை அணிவது போன்றவை விரும்பத்தக்கவை அல்ல. ஓரிடத்திலிருந்து இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்போது தவிர, அவர்களுக்கு காற்று தேவைப்படும் என்பதால், நோயாளிகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக் கூடாது. நோய் இருப்பதாக சந்தேகத்திற்குள்ளானவர்களுக்கு நோய் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரையிலு, அவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும்.
இன்-ஃப்ளூயன்சா நோயாளிகளை மற்ற நோயாளிகளிடமிருந்து தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். இன்ஃப்ளூயன்சா நோயிருப்பவரை பெரியம்மை போன்று தொற்றுநோய் இருப்பவராகவே கருத வேண்டும்: நோய்வாய்ப்பட்டவர்கள் அருகே இருப்பது, மற்றும் அவர் உண்ணும் பாத்திரங்கள், உடைகள், அவர் இருமுகின்ற, தும்முகின்ற காற்று மற்றும் அவர் சுவாச அறிகுறிகளுடன் இருப்பது ஆபத்து நிறைந்தது. அவரிடம் புலப்படுகின்ற அறிகுறிகள் காட்டுவதைவிட, அவர் இன்னும் மோசமானவராகவே கருதப்பட வேண்டும்.
தனிநபர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
தனிப்பட்ட தேவையற்ற ஆபத்துகளைத் தவிர்ப்பது, ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவது சிறந்தது. இது குறித்து புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. பின்வரும் பன்னிரண்டு சுருக்கமான விதிகளில் பொதிந்துள்ள, நினைவில் கொள்ள வேண்டிய மிக அத்தியாவசியமான விஷயங்களைப் பற்றிய எழுத்தாளரின் கருத்துக்கள் செப்டம்பரில் தயாரிக்கப்பட்டன. அவை ராணுவ சர்ஜன் ஜெனரலால் பரிந்துரைக்கப்பட்டு, போர் செயலாளரின் உத்தரவின் மூலம், சாத்தியமான அனைத்து விளம்பரங்களும் தரப்படும் வகையில் வெளியிடப்பட்டன.
- இன்ஃப்ளூயன்சா ஒரு மக்கள்திரள் நோய் என்பதால் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்கவும்.
- இருமும் போதும், தும்மும் போதும் மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளுங்கள் – உங்களிடம் இருக்கின்ற கிருமிகளை, தங்கள் மீது நீங்கள் தூக்கி எறிவதை மற்றவர்கள் விரும்பவில்லை.
- உங்கள் மூக்கு மட்டுமே சுவாசிப்பதற்கானது, வாய் அல்ல – அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- மூன்று சு-களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்-சுத்தமான வாய், சுத்தமான தோல் மற்றும் சுத்தமான ஆடைகள்.
- நடக்கும் போது பதட்டமின்றியும், பயணத்தின் போது, தூங்கும் போது உங்கள் உடலை கதகதப்பாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
- இரவுகளில் – வீட்டில் எப்போதும், அலுவலகத்தில் நடைமுறையில் வாய்ப்பிருக்கும் போதும் ஜன்னல்களைத் திறந்து வைக்கவும்.
- வாய்ப்பளித்தால், உணவு உங்களுடனான போரில் வென்று விடும் – உங்கள் உணவைத் தேர்ந்தெடுத்து, நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
- உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது – சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவுங்கள்.
- செரிமானத்தின் கழிவுப்பொருட்களைச் சேர விடாதீர்கள் – எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
- துண்டு, கரண்டி, முள்கரண்டி, கிளாஸ் அல்லது கப் போன்றவற்றை சுத்தம் செய்யாமலோ அல்லது வேறொருவர் பயன்படுத்தியதையோ பயன்படுத்த வேண்டாம்.
- இறுக்கமான உடைகள், காலணிகள், கையுறைகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். இயற்கையை உங்கள் கூட்டாளியாக மாற்ற முயற்சியுங்கள் – அதை உங்கள் கைதியாக்காமல்.
- காற்று தூய்மையாக இருக்கும் போது முழுமையாகச் சுவாசிக்கவும் – ஆழ்ந்து சுவாசிக்கவும்.
THE LESSONS OF THE PANDEMIC- https://science.sciencemag.org/content/49/1274/501
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு