முனைவர் இல. சுருளிவேல் எழுதிய "காலம் கற்றுத்தரும் பாடங்கள்" கட்டுரை | Dr. L. Surulivel "Lessons Taught by Time" Tamil Article | வாழ்க்கை கட்டுரை | www.bookday.in

காலம் கற்றுத்தரும் பாடங்கள் – இல. சுருளிவேல்

காலம் கற்றுத்தரும் பாடங்கள் – இல. சுருளிவேல்

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?

என்கிறார் மகாகவி பாரதியார். அவர் வாழ்ந்த காலங்கள் 39 வருடங்கள் மட்டுமே. ஆனால் காலத்தால் அழியாத காவியங்களை விட்டுச்சென்றுள்ளார். சுதந்திர வேட்கையை தூண்டியுள்ளார். ஆம்! பாரதியின் வரிகள் ஒரு சாதாரண மனிதனையும் சிந்தனையாளன் ஆக்குகிறது. ஆக்கப்பூர்வமான மனிதனாக மாற்றுகிறது. காலத்தின் அருமையை உணர்த்துகிறது. அவரைப்போன்று சில கவிஞர்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், துறை சார் வல்லுநர்கள், தலைவர்கள் வாழ்ந்த காலங்கள் குறைவுதான். ஆனால் மக்கள் மனதில் நீடித்து நிலைக்கின்றனர்.

எது வாழ்க்கை?

சிலர் 100 வயதிற்கு மேல் வாழ்ந்து, வாழ்ந்ததற்கான அடையாளம் தெரியாமல் மறைந்துள்ளனர். குறைவான காலங்கள் வாழ்ந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, பிறருக்கு பயனுள்ள வகையில் வாழ்ந்துள்ளனர். தலைமுறை நினைவு கூறும் அளவிற்கு வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். பணம் பதவி புகழ் ஒருபுறம் இருந்தாலும் மனித சமூகத்திற்கு பயனுள்ள வகையில் வாழ்ந்து மறைவது சிறந்த வாழ்க்கையாகும்.

சராசரி வாழ்க்கை உண்ணுவது, உறங்குவது, இனவிருத்தி செய்வது மட்டுமா வாழ்க்கை?. பணம் பொருள் சம்பாதிப்பது மட்டுமா வாழ்க்கை? மனிதப் பிறவியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் அதைத் தாண்டி சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். ஒவ்வொரு நொடிப் பொழுதையும் அனுபவிக்கிறார்கள். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்கள். வாழும் போதும், வாழ்ந்த பிறகும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான தடயங்களை விட்டுச் செல்கின்றனர். அதனால்தான் மாபெரும் வீரர்களை, மானம் காத்தோர்களை, மனித சமூகம் மறுமலர்ச்சி ஏற்பட காரணமாக இருந்தவர்களை இன்றும் நினைவு கூறுகிறோம். பெறுவது மட்டுமல்ல கொடுப்பதும் வாழ்க்கை. நான் சில இடங்களில் பார்ப்பதுண்டு. உயிருடன் இருக்கும் பெற்றோருக்கு உணவு கொடுப்பதில்லை. பெற்றோர்களை கவனிப்பதில்லை. அன்பு காட்டுவதில்லை. ஆறுதலாக பேசுவதில்லை. ஆனால் இறந்த பின்பு பல ஆயிரங்களில் செலவு செய்து அவர்களின் இறுதிச்சடங்கை செய்கின்றனர். ஒரு சமூக அந்தஸ்துக்காக, மற்ற சமூகங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த செலவு. உண்மையில் அது ஒரு வகையான போலி வாழ்க்கையாகும். உயிருடன் இருக்கும் போது அவர்களை கவனித்து இருந்தால் அவர்களின் ஆயுள் நீடித்திருக்கும். இறந்த பின்பு அவ்வளவு செலவு ஏன்?. ஒருவர் இறக்கும்போது அவர்களுக்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்கு செய்வது சரியாக இருக்கும். ஆரவாரம் தேவையில்லை.

சமீபத்தில் எங்கள் வீட்டு அருகில் ஒரு மூதாட்டி இறந்தார். அந்த மூதாட்டியின் வாரிசுகள் அதிக செலவு செய்து மேளதாளங்கள், வானவேடிக்கை, ஒலிபெருக்கி, பாட்டு, ஆட்டம் என தடபுடலாக செலவு செய்து மூதாட்டியின் இறுதிச்சடங்கை செய்தனர். இது அவர்களுக்கு வேண்டுமென்றால் பெருமையாக இருக்கலாம். மற்றவர்களுக்கு பெரிய தொந்தரவு. ஒலிபெருக்கி சத்தம் மிகப்பெரிய எரிச்சலை உண்டு செய்திருக்கும். அவர்கள் முறைப்படி காவல் நிலையத்தில் அனுமதி பெற்று அந்த ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டதா என்றால் நிச்சயம் இருக்காது. அந்த பகுதி மக்கள் மனக்குமுறலுடன் இருந்ததை உணர்ந்தேன். நிச்சயம் வயதானர்களுக்கு நோயாளிகளுக்கு சிரமம்தான். நெகிழி கழிவுகளும், சாலையோரங்களில் கிடைக்கும் மலர்மாலைகள் பாதிப்புதான். சமூக அந்தஸ்திற்காக, மற்ற சமூகங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த செயல்கள். இது ஒரு வீண் செலவு என்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது. மாற்றாக, அந்த மூதாயிட்டியின் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை கல்வி நிலையம், மருத்துவமனை, மாணவர்களின் உதவித்தொகை போன்ற பொது காரியங்களுக்கு முதலீடு செய்யப்பட்டால் வரலாறு என்றும் நினைவு கூறும். அது ஒரு ஆக்கப்பூர்வமான செயலாக இருக்கும். சிலர் பணம் வீடு, நிலம், நகை பொருள் என்று தங்களின் ஆயுட்காலம் முழுவதும் சம்பாதிக்கின்றனர். அதை அனுபவிக்க அவர்கள் இருப்பதில்லை. பெற்றோர்கள் சேர்த்த சொத்துக்களை பங்குபோட வாரிசு போராட்டங்கள் தொடருகின்றன.

முன்மாதிரி குடும்பங்கள்:

சமீபத்தில் கூட்டுக் குடும்பத்திற்கு முன் உதாரணமாக விளங்கும் கும்மிடிப்பூண்டி பண்டி விஜய சாரதி(50) மறைவிற்கு சென்று இருந்தேன். அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டு, உடல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு கண் கலங்கினேன். விஜய சாரதி தந்தை பண்டி அய்யலு சில ஆண்டுகள் முன்பே இறந்து விட்டார். அவரது உடலும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பம் பணத்தைவிட மக்களை அதிகம் சம்பாதித்து உள்ளது என்பதைப் பார்க்க முடிந்தது. வாழ்க்கை என்பது நாம் இம்மண்ணில் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே. இதனை மிகவும் பற்றுடன் அணுக வேண்டும் என்பது அவசியம் இல்லை. இன்று தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருவது முன்மாதிரியான விஷயங்கள். உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்திற்கு அரசு மரியாதை என்பது மிகப்பெரிய முன்னெடுப்பாகும். இதன் மூலம் மனித மாண்பு தழைக்க ஆரம்பிக்கிறது. மாநில அரசின் முயற்சியால் பலர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர். வாழும்போதும், வாழ்ந்த பிறகும் இவ்வுலகத்திற்கு பயனுள்ள வகையில் வாழ வேண்டும். அதற்கு நேரத்தின் அருமையை உணர வேண்டும். நேரத்தை முழுமையாக ஆக்கப்பூர்வமாக செலவழிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வுலகில் மிகப்பெரிய செல்வந்தருக்கும், ஒரு ஏழைக்கும் சமமாக கிடைப்பது நேரம் மட்டுமே. அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவழித்தால் நமது முன்னேற்றத்திற்கான முதலீடாக மாறுகிறது. நேரப்பயன்பாடு நமக்கு மட்டுலமல்லாமல் பிறருக்கும் சமூக மாற்றத்திற்கும் உதவவேண்டும்.

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி வாழ்ந்து காட்டவேண்டும். வாழ்க்கை என்பது பயணம் , வாழ்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பு மட்டுமே. பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறது. அதனை சுமையாக்குவதும், சுவையாக்குவதும் நமது சிந்தனையை பொறுத்து இருக்கிறது. வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ கற்றுக் கொள்வோம். எவ்வளவு செலவு செய்தாலும், செலவழித்த பணம் சம்பாதித்து விடலாம். செலவழித்த காலம் ஒரு போதும் திரும்பி வரப்போவதில்லை. குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில் பல சம்பவங்கள் மகிழ்ச்சி தரக்கூடிய, மறக்க முடியாத நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றை அசைபோடுவதால் மாற்றங்கள் ஏதும் நடக்கப் போவதில்லை. நடந்தவைகள் அனுபவங்களை தருகின்றன. அந்த அனுபவங்களை ஆசான் ஆக்கி கொள்வோம். நிகழ் காலத்தை அனுபவிப்போம். 2026 ஆம் ஆண்டை வரவேற்போம். வரலாறு படைப்போம்.

📚 எழுதியவர்:

முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *