சுற்றுலா கற்றுத்தரும் பாடங்கள்
– இல. சுருளிவேல்
சுற்றுலா என்றாலே மனதில் மகிழ்ச்சி, செல்லக்கூடிய இடங்கள் பற்றிய தேடல் ஆரம்பம் ஆகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்ப சுற்றிப்பார்க்க விருப்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு அது நீண்டநாள் கனவும் கூட. சுற்றுலா என்பது நோக்கம், இடம், மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. முக்கியமாக உள்நாடு, வெளிநாடு, உள்ளே, வெளியே, கலாச்சார, சாகச, பசுமை, மருத்துவ, ஆன்மீக/மத சார்பான, நலம் மேம்பாடு, வனவிலங்கு, வணிக, நிறுவன, கிராமிய, கப்பல் மற்றும் கல்விசார் என சுற்றுலாவை பல்வேறு வகைகளாக பிரிக்கலாம்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையான சுற்றுலாவிற்கு சென்றிருப்போம். தனியாக, குடும்பத்திலிருந்து, கல்வி நிறுவனங்களில் இருந்து, பணி செய்யும் இடங்களில் இருந்து, நண்பர்களுடன், உறவினர்களுடன் என நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில் சுற்றுலா அனுபவம் கிடைத்திருக்கும். சிலருக்கு அதற்கான சூழ்நிலை இருந்திருக்காது. அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றாலும் அதுவும் ஒரு கோயில் சுற்றுலா என்று கருதலாம்.
கல்வி சுற்றுலாவை எடுத்துக்கொண்டால், நாம் வகுப்பறையில் கற்ற, கேட்டறிந்த பல விஷயங்களை களப்பணி மற்றும் கல்விச் சுற்றுலாவின் மூலம் நேரடியாக கண்டுணர்ந்து, ஒரு அனுபவக் கல்வியை பெறுகிறோம். அது சிந்தனைக்கு விதையாக அமைகிறது. பள்ளிப் பருவத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு அல்லது சில நாள்கள் சுற்றுலா அருகில் உள்ள மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.
கல்லூரி பருவத்தில் செல்லக்கூடிய தூரம், நாட்கள் வேறுபாடும். சில கல்வி நிறுவனங்களில் சுற்றுலா கட்டாயமாகவும் உள்ளது. ஆனால் அந்த சுற்றுலாவில் எத்தனை விழுக்காடு கற்றலுடன் ஓர் மகிழ்ச்சியான அனுபவத்தை பெறுகிறோம் என்பது கேள்வியாக உள்ளது. சுற்றுலா வெறும் மகிழ்ச்சிக்கும், பொழுதுபோக்கிற்கு மட்டுமா. சுற்றுலாவில் கற்க வேண்டிய பாடங்கள் பல உள்ளன. காட்சிகளை பார்ப்பதோடு மட்டுமல்ல. கற்றுக் கொள்ளவும் தயாராக வேண்டும். ஏன், எப்படி, எதற்கு என்ற கேள்வி நம் மனதில் உருவாக வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வரலாறு உண்டு.
அந்த வரலாற்றுத்தேடல் மனிதனை இன்னும் மேம்பாடு அடையச் செய்யும். நாம் பார்க்கும் இடங்களில் உள்ள கட்டிடங்கள், காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள அழகுப் பொருள்கள், சிற்பங்கள், நினைவுச் சின்னங்களை, பார்க்கும் போது அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம். அது உருவான கதை நமக்கு தேவையில்லை என்று நினைக்கிறோம். நம் நாட்டில் உள்ள கோயில் சிற்பங்கள் நினைவுச் சின்னங்களை வரலாற்று சிந்தனையோடு அணுகினால் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். தேர்வுக்கு படிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவை என்ற சிந்தனையில் கற்றுக் கொண்டால் வாழ்க்கை இனிமையாகும்.
அனுபவமே ஆசான்:
ஒரு கல்விச் சுற்றுலா அனுபவம் எனக்கும் கிடைத்தது. மாணவர்களை பொறுப்புடன் இந்தியா முழுவதும் 23 நாட்கள் அழைத்துச் செல்லும் ஒரு சுற்றுலா வாய்ப்பு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கியது. மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் கற்றுக் கொண்டதை விட மாணவர்களைப் பற்றி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அடிப்படை வசதிகள், பழக்கவழக்கங்கள் கலாச்சாரங்கள், மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்கள், அங்குள்ள சூழலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மிக அருமையான வாய்ப்பாக இருந்தது. படித்து அறிந்து கொள்வதை விட, அனுபவ அறிவு மிகப்பெரியது என்பதை உணர்ந்தேன்.
சுற்றுலாவின் அவசியம்:
சுற்றுலா ஒரு மனிதனை, ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை முன்னேற்றம் அடைய செய்கிறது. சுற்றுலாவின் மூலம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, துருக்கி, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் முக்கிய இடத்தில் உள்ளன. நமது அண்டை நாடுகளான சீனா, சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளும் சுற்றுலாவின் மூலம் நல்ல முன்னேற்றம் கொண்டு வருகின்றன. சில நாடுகளில் போதுமான வேளாண் உற்பத்தி இல்லை. ஆனால் சுற்றுலாத் துறையின் மூலம் அதிக வருமானம் பெறுகின்றனர். பொருளாதார வளர்ச்சி காண்கின்றனர்.
மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களை இன்னும் மேம்படுத்தி சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை உயர்த்தலாம். புதிய சுற்றுலா தளங்களை அடையாளம் காணலாம். உள்நாட்டு வெளிநாட்டு மக்களை ஈர்க்கும் சூழ்நிலை உருவாக்கலாம். வருடத்திற்கொருமுறை நடைபெறும் ஜல்லிக்கட்டு போன்று மீன்வளம், வேளாண்மை, கைவினைப்பொருள் கண்காட்சியை பெரிய அளவில் ஊக்கப்படுத்தலாம். இந்தியாவில் நிலவளம், நீர்வளம், இயற்கைவளம், மனித வளம் ஆகியவை சுற்றுலா வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கிறது.
சுற்றுலா தரும் பாடங்கள்:
சுற்றுலா பயணிகள் துன்பங்களை மறந்து மகிழ்ச்சியை அனுபவிக்க சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர். சுற்றுலா ஒவ்வொருவருடைய வருமானம் விருப்பத்தை பொறுத்து வேறுபடுகிறது. மனிதனுக்கு சந்தோஷம், புத்துணர்ச்சி என்பதைத் தாண்டி உளவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பலருக்கு மாற்றங்கள் நிகழ்வதை பார்க்க முடியும். முக்கியமாக குடும்ப சுற்றுலாவாக இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை வலுவாகிறது. குடும்ப பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது. சிந்தனை முதிர்ச்சி அடைகிறது.
சேமித்த பணத்தை மாதத்திற்கு, வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா மூலம் செலவழிக்க வேண்டும். இறப்பதற்குள் சில இடங்களை பார்க்க வேண்டும் என்ற சிந்தனை. சுற்றுலா சென்ற இடங்களை புகைப்படம் மூலம் பார்த்து மகிழ்வது என பொதுவான சிந்தனைகளில் சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். செல்பி எடுத்துக் கொள்வதற்காகவும், புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் பயணித்தால் அது மட்டுமே பெரிதாக தோன்றும். மகிழ்வுடன் கற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி நமக்குள் உதயமாகும் போது புதிய சிந்தனை ஊற்று எடுக்கிறது. அது தேடலுக்கும், கற்றுக் கொள்வதற்கும் வழி ஏற்படுத்துகிறது. செல்லும் இடங்களில் உள்ள அரியவகை புராதான சின்னங்களை பாதுகாப்பது நமது கடமையாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் சுற்றுலா மூலம் கற்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
நாம் படித்ததை, கேள்விப்பட்டதை, கேள்வி படாத விஷயங்களை சுற்றுலா கற்றுத் தருகிறது. மனிதனை அறிவியல், அரசியல், வரலாறு, சமூக, பொருளாதார, கலாச்சார ரீதியாக சிந்திக்க வைக்கிறது. நமது முன்னேற்றத்தை மற்றவர்களோடு ஒப்பீடு செய்துபார்க்க உதவுகிறது. முன்னேற்றத்துக்கான சிந்தனை விதையை தூவுகிறது. அது மரமாகி பலருக்கு நன்மை தரக்கூடிய சூழ்நிலையும் உருவாகிறது. முக்கியமாக, நாம் ஒரு விஷயத்தை மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். வகுப்பறையில் மட்டுமல்ல நாம் செல்லும் இடங்களிலும், மக்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள முடியும். அந்த மனநிலையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருபுறம் நல்ல விஷயங்கள் பல இருந்தாலும், சுற்றுலா மூலம் தீய பழக்கங்களும் கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. புதிய இடங்கள், புதிய சூழல் ஆகியவை சிந்தனையில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படவும் செய்கின்றன. நமது சுதந்திரம் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி வரம்பு மீறவும் வழிசெய்கின்றன. நாகரீகம், மகிழ்ச்சி என்ற பெயரில் சிற்றின்பப் பழக்கங்களான மது, தகாத உறவு, போதைப் பழக்கம் போன்றவற்றிற்கும் வாய்ப்புள்ளது. தன் விருப்பத்தினாலோ, நண்பர்கள், உறவினர்கள் போன்ற புற தூண்டுதலின் காரணமாகவோ சிலர் பாதை மாறவும் செய்கின்றனர். காலப்போக்கில் அதற்க்கு அடிமையாகவும் வாய்ப்புள்ளது. இதற்கு ஒரே தீர்வு சுய ஒழுக்கம் மட்டுமே. தாம் பட்ட கஷ்டம் தம் குழந்தைகள் படக்கூடாது என்ற சிந்தனையில் பொறுப்பில்லாமல் பிள்ளைகள் கையில் அதிகமாக பணம் கொடுத்து பழகுவது ஆபத்தானது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
பணத்தின் அருமையை, நேரத்தின் அருமையை பிள்ளைகள் மத்தியில் அதிகம் விதைக்க வேண்டும். சமூகப் பொறுப்பை குழந்தைகள் மத்தியில் அதிகம் வளர்க்க வேண்டும்.
திட்டமிடல்:
எந்த ஒரு விஷயமும் சரியான திட்டமிடல் இருந்தால் அந்த காரியம் வெற்றியில் முடியும். திட்டமிடல் சரியாக இல்லாதபோது, பண விரயம், நேர விரையம், மன உளைச்சல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அது சுற்றுலாவிற்கும் பொருந்தும். சுற்றுலாவிற்கு எவ்வளவு பணம் தேவை, எங்கு தங்குகிறோம், உணவு, காலநிலை, மற்ற தேவைகளுக்கு சரியான திட்டங்கள் தேவை. வருமானம் ஈட்டுபவராக இருந்தால் நினைத்த இடத்திற்கு, நினைத்த பொருளை வாங்குவதற்கு, நினைத்ததை அனுபவிக்க முடியும். அதே சமயம், கடன் வாங்கி சுற்றுலா செல்வது நிம்மதியை கெடுக்கும். மாணவர்களாக இருக்கும்போது சரியான திட்டமிடல் இருந்தால் நிறைய அனுபவங்களைப் பெறலாம்.
மாணவப் பருவத்தில் குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம். அரசின் சலுகைகளை முழுமையாக பயன்படுத்தலாம். அரசு விடுதிகளைப் பயன்படுத்தலாம். பெற்றோர்களின் வருவாயில் படிப்பதால் தேவையில்லாத வீண் செலவுகளைக் குறைக்கலாம். சிலர் இந்த இடங்களுக்கு திரும்பி வரப்போவதில்லை என்ற சிந்தனையில் செல்லுகின்ற இடமெல்லாம் பொருட்களை வாங்கி அடுக்குகின்றனர். பொருட்களை வாங்கி குவிக்கும் போது நமது பயணம் சுமையாக மாறுகிறது. சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க தவறுகிறோம். சிலர், இந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை, வரப்போவதில்லை என்ற சிந்தனையில் அந்த இடத்திற்கு அதிக நேரம் செலவழிக்கின்றனர். அது தேவையில்லாதது. உடன் பயின்றவர்கள் எதிர்காலத்தில் வராமல் இருக்கலாம். ஆனால் நன்கு படித்து உயர் பதவியில் பொறுப்பில் வரும்போது பல சுற்றுலாக்கள் நம்மை தேடிக் வந்து கொண்டே இருக்கும். புதிய நண்பர்களும் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்.
பயணத்தில் எதிர்பாரா இயற்க்கை சீற்றங்கள், வெள்ளம், நிலச்சரிவு, போர், தீவிரவாத தாக்குதல்கள், விபத்து போன்றவை சுற்றுலா பயணத்தில் ஏற்படவும் வாய்ப்புள்ளது. முறையான திட்டமிடல், செய்திக்கேட்கும் பழக்கம், விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துணிவு இருந்தால் இடர்பாடுகளை குறைக்க முடியும்.
சுற்றுலா என்பது வாழ்க்கை பயணத்தின் மிகப்பெரிய அனுபவமாகும். அது அரிதாக நடப்பதும், அடிக்கடி நடப்பதும் நமது முன்னேற்றம் விருப்பத்தை பொறுத்து அமைகிறது. நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் வகுப்பறையில் மட்டுமில்லாமல் சுற்றுலாவின் மூலம் அதிகம் பெற முடியும். அது தனி மனிதனுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும், வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும், அடுத்த தலைமுறையினருக்கு கற்றுத்தரும் பாடங்களாகவும் இருக்கும். எனவே சுற்றுலாவை ஊக்குவிப்போம், அதனை முழுமையாக கற்றலுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வோம். கற்றுக்கொண்ட பாடங்களை சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம்.
எழுதியவர் :
முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.