புத்தகங்கள் வாங்கியதில் ஓர் சுவாரசிய அனுபவம்.
அடுக்க அலமாரியில இடம் இல்லை. புதுசா செய்தாதான் அடுக்கமுடியும் என்கிற நிலையில முழு தேங்காய எதுவோ உருட்டும்னு சொல்லுவாங்களே அதுமாதிரி இன்னைக்கு மத்தியானத்திலிருந்து கூரியரில் வந்த புத்தகப் பார்சலை எப்படி பிரிக்கிறதுன்னு முழிச்சிகிட்டிருந்தேன்.
பார்சல்ல என்னாது?ன்னு வீட்டுக்காரங்க கேட்கிறதுக்கு முன்னாடியே ”இது பள்ளிக்கூடத்துக்கு வந்த புத்தக பார்சல். திங்கள் கிழமை எடுத்துகிட்டு போகனும். அதுவரைக்கும் எங்க வைக்கலாம்?” அப்படீன்னு கேட்டு முந்திகிட்டேன்.
‘அதுக்கென்னங்க கட்டிலுக்கு கீழே வச்சிடுங்க. மறக்காம 2ஆம் தேதி எடுத்துகிட்டு போங்க’ அப்படீன்னு அவங்க சொன்னாங்க. ஒரு சிக்கல் தீர்ந்தது. அடுத்த சிக்கல் வருவதற்குள் அதான் பிரித்து அடுக்கிறதுக்கான இடம் எங்கேன்னு தேடிகிட்டு இருந்தப்போ ஏற்கனவே சுவர் அலமாரியில் ஒன்னே முக்கால் வரிசையில புத்தகங்கள் அடுக்கியிருந்து கொஞ்சம் இடம் ‘இங்கு வாடகைக்கு இடம் கிடைக்கும் என்பது போல காலியாக இருந்த இடத்தில் சமயம் தேடி குட்டிபோட்ட பூனை மாதிரி அலைஞ்சிகிட்டே இருந்தேன்.
மத்தியானம் மணி ரெண்டு இருக்கும் வீட்டுல ‘தூக்கமா வருதுங்க கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கிறேன் என்னை எழுப்பாதீங்க’ன்னு சொன்னாங்க. நாம ஏதாவது நேர்மாறாக சொன்னா அவங்களுக்கு சந்தேகம் வரும் என்பதால “ஏமா எந்த நேரமும் தூக்கம் தானா?” என்று பல்லு மேல நாக்கு படாம பேசினேன். ஒரே முறைப்பு. “சரிமா நீங்க தூங்கி எழுந்திருங்க மெதுவா பேசிக்கலாம்”னு மாத்தி பேசினேன். ‘போதும் நிறுத்திக்கீங்க’ அப்படீன்னு வாயை பொத்துகிற ஒரு சைகை அங்கிருந்து வந்தது. சரிம்மா “நானும் போய் கொஞ்சம் தூங்குறேன்”னு ஒரு பிட்ட போட்டுட்டு புத்தக பார்சலிடம் வந்து நைசா பிளேடு போட்டேன்.
கால எந்திரத்தில போனாலும் அவ்வளவு வேகத்துல அது போகாதுன்னு நினைக்கிறேன். அதைவிட வேகமாக ஏற்கனவே புத்தகங்கள் அலமாரியில் இருப்பது போல புதுசா வாங்கிய புத்தகங்களை உள்ளே திணித்துவிட்டு கொஞ்சம் மூச்சியும் வாங்கிட்டு இதோ உங்களிடம் பேசுகிறேன்.
எங்க வீட்டுல என்ன பிரச்சினைன்னா “ஏற்கனவே வாங்கின புத்தகங்களையே படிச்சி கிழிக்கல. அதையெல்லாம் படிச்சிட்டு புதுசா புத்தகங்கள் வாங்குங்க” அப்படிங்கிறது அவங்களோட கொள்கை. அதுவும் ஞாயம் தான். நமக்கு என்னான்னா போற இடத்தில நம்ம கை குரங்கு கை மாதிரி எதையாவது எடுத்துகிட்டே இருக்கும் என்பது போல புத்தக கடை ஞாபகம் வந்துட்டா புதிய தலைப்புகள் என்னென்ன வாங்கனும்னு ஏற்கனவே செல்போன் நோட்டீஸ் போர்டுல எழுதி வச்சிடுவோம். அப்புறம் கடைய பார்த்தா கை சும்மா இருக்குமா… அப்படித்தான் நேற்று சென்னை Bharathi Puthakalayam ஸ்டாலில் நுழைந்தேன். அங்க சொல்லவே வேண்டாம் விடிஞ்சு எழுந்தா புதுசா குறைந்தது பத்து தலைப்புகளிலாவது புத்தகங்கள் வந்து நம்மை சீண்டிகிட்டே இருக்கும். அப்படித்தான் 34 புத்தகங்கள் வாங்கி, தோழர் Mohammed Sirajudeen அவர்களிடம் கூரியரில் போடச் சொல்லி அதனால இவ்வளவு தூரம் எழுதும்படியா ஆயிடுச்சி.
இன்னும் வேற ஜனவரி 6.2023 YMCA வா வா’ன்னு இழுக்கும் என்னா பன்னப் போறேன்னு தெரியல.
பார்ப்போம் கடவுள் வழிகாட்டாமலா போவான். அவனுக்குத்தான் எல்லா குறுக்கு வழியும் தெரியுமே.
இது எல்லாம் நம்ம Samsu Deen Heera தோழர் சொல்வது போல மதிப்பெண் மண்டையரிடம் மட்டுமே இருக்கனும். யாராவது வீட்டுல போட்டுக் கொடுத்திடாதீங்கப்பா. நானே அவங்களுக்கு நல்ல சந்தோச மனநிலையில இருக்கும்போது நைசா சொல்லிடறேன்.
‘திருட்டு பையா என்னை நல்லா ஏமாத்திற… இனிமேல் ஒரு வருசத்துக்கு எதுவும் வாங்கப்படாது’ன்னு ஒரு அன்பு கலந்த கண்டிப்பு வரும். நமக்கும் அப்பதான் நிம்மதியும் வரும்.
‘வாசிக்க நேரமில்லை’ என்போர்களுக்கிடையே எப்படியும் வாசிக்க வேண்டும் என்று துடிக்கும் இதயங்களுக்கான ஒரு அனுபவப் பதிவு.
– சண்முக சாமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments