இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  14ஆவது பிரிவு கூறுவதாவது: “இந்திய எல்லைப் பகுதிக்குள்  சட்டத்தின் முன் அல்லது சட்டங்களின் சமப் பாதுகாப்புக்கு முன் எந்தவொரு நபருக்கும் சமத்துவத்தை அரசு மறுக்கக் கூடாது.’’

ஆனால், ஆர்எஸ்எஸ்  இயக்கத்தின் மூலவரும், சிந்தனாவாதியுமான எம்.எஸ். கோல்வால்கர் 1938இல் எழுதிய அவருடைய புத்தகமான “நாம், அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம்’’ (“We, or Our Nationhood Defined” என்னும் நூலில் எழுதியிருப்பதாவது: “இந்துஸ்தானத்தில், இந்துக்கள் அல்லாதவர்கள், இந்து மதத்தைத் தழுவிக்கொள்ள வேண்டும் … அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்புரிமைகளுக்கும் உரிமை பாராட்டாமல், ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக்கூடக் கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம். …’’

இந்தப் புத்தகம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மற்றும் அதனைப் பின்பற்றுவோருக்கான தத்துவார்த்த அடித்தளமாகும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்று நம் அரசமைப்புச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருப்பதற்கு மாறாக, இவர்கள் இத்தகைய வக்கிரத்தனமான கருத்தாக்கத்தை உயர்த்திப்பிடித்து, இந்தியாவை தங்களுடைய நால்வர்ண கட்டமைப்புக்குள் திணிக்க முயல்கிறார்கள். இத்தகைய மாபெரும் அச்சுறுத்தலை எதிர்த்து முறியடிக்க வேண்டும் எனில் ஆர்எஸ்எஸ் என்றால் என்ன என்பதையும் அதன் வரலாறு என்ன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

Teesta Setalvad

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா கட்சி. அதன் தலைவர்களில் பெரும்பாலானவர்கள், தற்சமயம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதி எடுத்துக்கொண்டு பிரதமராகவோ அல்லது இதர அமைச்சர்களாகவோ இருப்பவர்கள், ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குத் தாங்கள் விசுவாசமாக இருப்பதாக சங்கல்பம் எடுத்துக்கொண்டவர்கள்.  ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார ஸ்தாபனம் என்று கூறிக்கொண்டபோதிலும், உண்மையில் அது “இந்து தேசம்’’ என்கிற கருத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிற ஓர் அரசியல் அமைப்புதான். இதனை எய்தவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ஆர்எஸ்எஸ், தன் கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளுக்கும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கையின்படி தேசம் என்றால் எப்படி இருக்க வேண்டும்?

ஆர்எஸ்எஸ் இயக்கம் அனைத்து ஹிந்துக்களுக்கான தேசத்தை உருவாக்கக் கோரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் புனிதநூலில் சமூக, பொருளதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை உரிமைகளிலிருந்து இந்துக்களிலேயே ஒரு பிரிவினருக்கு (சூத்திரர்களுக்கும், ஆதிசூத்திர சாதியினருக்கும்)  விலக்கு அளித்திருக்கிறது.

Religious Extremism: Lynching against Minorities – Pakistan House

இவ்வாறு செய்யும் அதே சமயத்தில், தாங்கள் அமைத்திட இருக்கும் இந்து தேசம், புராதன இந்து புனிதநூல்களில் பின்பற்றப்பட்ட சட்டங்களையே நடைமுறைப்படுத்தும் என்றும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பரிவாரங்களும் இதற்கான மாற்றத்தினை ஏற்படுத்திடும் என்றும் கூறுகின்றன. இதன் பொருள் என்ன தெரிகிறா? மனு (அ)தர்மத்தின்படி நால்வர்ண அமைப்பை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதேயாகும்.

நாம் மேலே குறிப்பிட்ட கோல்வால்கரின் நூலில் இத்தகைய கருத்துக்கள்தான் அடங்கி இருக்கின்றன.

ஆர்எஸ்எஸ் இயக்கமும், இந்திய விடுதலைக் கான போராட்டமும்

ஆர்எஸ்எஸ் என்னும் அமைப்பு 1925இலேயே அமைக்கப்பட்டுவிட்டபோதிலும், தேசிய இயக்கத்தில் பெயர்சொல்லக்கூடிய அளவிற்குத் தலைவர்களை அது பெற்றிருக்க வில்லை. ஏனெனில், இவர்கள் எந்தவிதத்திலும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை.

அவர்கள் தூக்கிப்பிடிக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர் வீ.டி.சாவர்க்கர். இவர் இந்து மகா சபையின் நிறுவனர். இந்து மகா சபையிலிருந்துதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் உருவானது. 2002இல் குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான படுகொலைகள் நடைபெற்றபின் இரு மாதங்கள் கழித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது அந்தமான் விமான நிலையத்திற்கு சாவர்க்கர் பெயரைச் சூட்டியது.

Shiv Sena wants India declared a 'Hindu Rashtra', but what exactly ...

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் உயிர்ப்பிச்சைக் கோராத  பகத்சிங், சுகதேவ், அஸ்பகுல்லா போன்ற புரட்சியாளர் அல்ல இந்த வீ.டி.சாவர்க்கர். மாறாக, சாவர்க்கர் அந்தமான செல்லுலர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது மன்னிப்புக் கோரி கருணை மனு அளித்த நபராவார். 1913 நவம்பர் 14 அன்று அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கோரி எழுதிய கருணை மனுவில், தான் அரசாங்கமாகிய பெற்றோருக்கு “ஊதாரி மகன்’’-ஆக இருந்துவிட்டேன் என்று சித்தரித்திருப்பார். …

ஜின்னாவின் முஸ்லீம் லீக் உட்பட அனைத்து மதவெறி அமைப்புகளைப் போன்றே, ஆர்எஸ்எஸ் இயக்கமும், “நேரடி நடவடிக்கையில் இறங்குங்கள்’’ என்று ஜின்னா விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து  1946-47இல் ஏற்பட்ட இந்து – முஸ்லீம் இனக்கலவரங்களுக்குப் பின்னர்தான் வளர்ந்தது. 1946 ஆகஸ்டில் கல்கத்தாவில் பலர் கொல்லப்பட்டதால் காந்திஜி விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அந்த சமயம்தான் ஆர்எஸ்எஸ் நன்கு வளர்ந்தது.

ஆர்எஸ்எஸ் இயக்கமும் இந்து மகா சபையும் “வெள்ளையனே வெளியேறு’’ இயக்கத்தை எதிர்த்தவைகளாகும்.  பாஜக-விற்கு முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஃபசல் ஹக் என்கிற முஸ்லீம் லீக் உறுப்பினரின் தலைமையில் அமைந்திருந்த  வங்காள அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்தார். காந்திஜி “வெள்ளையனே வெளியேறு’’ முழக்கத்தை எழுப்பியபோது, 1942 ஆகஸ்ட் 9 அன்று ராஜினாமா செய்ய இதுவே சரியான தருணம் என்று முகர்ஜி நினைத்திட வில்லை. மாறாக,  அவர் கீழ்க்கண்டவாறு முன்மொழிந்தார்:

A Faithful Son of Bharat & Brave' – Gandhiji on Veer Savarkar

“வங்காளத்தில் “வெள்ளையனே  வெளியேறு’’ இயக்கத்தை முறியடிப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், மாகாண நிர்வாகம் இவ்வியக்கத்தை முறியடிக்கக்கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுத்திடும். இவ்வியக்கம் இம்மாகாணத்தில் வேரூன்றுவது தோல்வி யடையும். … இந்தியர்கள் பிரிட்டிஷாரை நம்ப வேண்டும். இவ்வாறு பிரிட்டிஷாரை நம்புவது பிரிட்டிஷாரின் நலன்களுக்காகவோ அல்லது பிரிட்டிஷ் பலம் அடைந்துவிடும் என்பதற்காகவோ அல்ல,  மாறாக நம் பாதுகாப்பு மற்றும் இம்மாகாணத்தின் விடுதலை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற் காகவேயாகும்.’’

இந்து மகாசபை சிந்த் பகுதியிலும் சிந்த் சட்டமன்றத்திலும் முஸ்லீம் லீகுடன் கூட்டணி அரசாங்கம் அமைத்திருந்தது.  சிந்த் சட்டமன்றம்,  ‘தனியே பாகிஸ்தான் உருவாக்குவதற்கான கோரிக்கை சரிதான்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது.  முகர்ஜியும் இதர இந்து மகா சபை தலைவர்களும் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதற்கு இதுவே தருணம் என்று நினைக்கவில்லை.

இந்து மகாசபையின் தலைவரான சாவர்க்கர், தன் உறுப்பினர்களுக்கு, “அரசாங்கத்தில் பொறுப்பு வகிப்பவர்கள் தங்கள் நிலையினைத் தொடர வேண்டும். வழக்கமாக மேற்கொள்ளும் கடமைகளைத் தொடரவேண்டும். ராஜினாமா செய்யக் கூடாது.’’ என்று கட்டளை பிறப்பித்தார்.  உண்மையில், இந்து மகாசபையின் கீழ் 1942 ஆகஸ்டு 31 அன்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.  அதில் அனைத்து மகாசபை உறுப்பினர்களும் தங்கள் வேலைகளில் நீடிக்க வேண்டும் என்றும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ் இயக்கமும் காந்தியைக் கொன்ற கோட்சேயும்

2014 மே மாதத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி – 2 அரசாங்கம் — இந்தத்தடவை ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு நபரின் தலைமையுடன் — ஆட்சி அமைத்த பின் ஒருசில மாதங்களுக்குள்ளேயே  காந்திஜியைக் கொன்ற கோட்சேயை உயர்த்திப்பிடிக்க, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபை கூக்குரலிடத் தொடங்கிவிட்டன.

கோட்சே காந்தியை கொன்றது ஏன் ...

உலக இந்து ஃபவுண்டேசன்,  கோட்சேயை “தேசிய ஹீரோ’’-ஆகவாகக் கருதப்பட வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறே அவர் இந்தியப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் சித்தரிக்கப்பட வேண்டும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினை வலியுறுத்தி இருந்தது. அந்தக் கடிதத்தில், வரலாற்றை முற்றிலுமாக சிதைத்து, கோட்சே “பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடியவர்’’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்தக் கடிதம் அவர்களின் இணையதளத்தில் பதியப்பட்டிருந்தது. இது, “இந்துயிசத்தையும், இந்து கோவில்களையும் பாதுகாப்பதற்கான ஸ்தாபனத்தின்’’ இணையதளமாகும்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக இந்து பாரம்பர்ய அடித்தளத்தின், திட்டத்தின்  ஒரு பகுதியாக, இந்த ஸ்தாபனத்தில் ஒரு கிளை ‘கோவில் பாதுகாப்பு அலுவலகம்’ என்ற பெயரில் 2012 ஜூனில் ஹைதராபாத்தில் திறந்து, செயல்பட்டு வருகிறது.

மூவர்ணக் கொடியை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் ‘ஆர்கனைசர்’ என்னும் ஆங்கில இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.  1947 ஜூலை 17 அன்று வெளியான இதன் மூன்றாவது இதழ், அரசியல் நிர்ணயசபை தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியைத் தெரிவுசெய்த முடிவால் மிகவும் நொந்துபோய் எழுதியிருந்தது. ‘தேசியக் கொடி’ என்று தலைப்பிட்டு அது தீட்டியிருந்த தலையங்கத்தில், மூவர்ணக்கொடிக்குப் பதிலாக, காவிக் கொடியைத் தேசியக் கொடியாகத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று எழுதியிருந்தது.

My Response to Rupa Subramanya on Twitter | Neha Dixit

இதே கோரிக்கையை அது சுதந்திரம் அறிவிக்கப்படவிருந்த சமயத்தில் ஜூலை 31 அன்று வெளியான இதழில் ‘இந்துஸ்தான்’ என்று தலைப்பிட்டுத் தீட்டியிருந்த தலையங்கத்திலும், பின்னர் 1947 ஆகஸ்ட் 14 இதழில் ‘எந்தப்பக்கம்’ என்று தலைப்பிட்டுத் தீட்டியிருந்து  தலையங்கத்திலும் வலியுறுத்தி இருந்ததுடன், இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாடு என்கிற கருத்தாக்கத்தையே நிராகரித்தும் எழுதியிருந்தது. மேலும், 1947 ஆகஸ்ட் 14 தேதியிட்ட இதழில், ‘காவிக்கொடியின் பின்னேயுள்ள மனித அறிவுக்கு எட்டாத மர்மம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியைத் தெரிவு செய்ததைக் கேலி செய்தும், தில்லி செங்கோட்டையில் காவிக் கொடியையே ஏற்ற வேண்டும் என்று கோரியும் கீழ்க்கண்ட வார்த்தைகளில் எழுதியிருந்தது:

“விதிவசத்தால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள் நம் கைகளில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். ஆனால், எந்தக்காலத்திலும் இது மதிக்கப்படாது மற்றும் இந்துக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. மூன்று என்கிற வார்த்தையே ஒரு கெட்ட வார்த்தையாகும். மூவர்ணங்களைக் கொண்ட கொடி நிச்சயமாக உளவியல்ரீதியான பாதிப்பை உற்பத்தி செய்யக் கூடியதாகும் மற்றும் நாட்டிற்குக் கேடுபயக்கக்கூடியதாகும்.’’

ஆர்எஸ்எஸ் இயக்கமானது, எப்போதுமே இந்தியா பல்வேறு வேற்றுமைகளைக்  கொண்ட நாடு என்பதை அங்கீகரித்ததில்லை.   இந்தியா என்பது பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட நாடு என்பதை அது என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.  கோல்வால்கர், 1946 ஜூலை 14 அன்று நாக்பூரில் அவர்களது கூட்டத்தில், “நம்முடைய மாபெரும் கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கொடி நமது காவிக்கொடிதான். இது கடவுளால் உருவாக்கப்பட்ட கொடி,’’ என்று கூறினார்.  மேலும், “இறுதியில் இந்த தேசம் முழுவதுமே இந்த காவிக்கொடிக்குத் தலை வணங்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்,’’ என்றும் அவர் பிரகடனம் செய்தார்.

ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய மூவர்ணக்கொடி முதன்முறையாக பறக்க விடப்பட்டது என்பது  2000 ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி-1 ஆட்சிக்கு வந்த பின்னரேயாகும்.

….

One thought on “ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்வோம் – தீஸ்டா செடால்வத் (தமிழில்: ச.வீரமணி)”
  1. ஆதாரமின்றி குறுகிய மனப்பான்மையுடன் இட்டு கட்டிய பொய்கள் நிறைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *