‘சேகுவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை’ நூல் வெளியீடு விழா
தலித், பழங்குடிகளை அரசியல்படுத்துவோம். அவர்களுக்கு இடதுசாரி பார்வையை உருவாக்குவோம் என்று ‘சேகுவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கூறினார். ஜான் லீ ஆண்டர்சன் எழுதி, ஜெ.தீப லட்சுமி மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை’ எனும் (2 தொகுதிகள்) கொண்ட நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (டிச.21) சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தமுஎகச மூத்த தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நூலை வெளியிட, எழுத்தாளர் இரா.முருகவேள், அலோசியஸ் ஜோசப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதன் சுருக்கம் வருமாறு:
அடையாள அரசியலை தகர்த்தெறியக் கூடிய பெயர் சேகுவேரா. சர்வ தேச பார்வை கொண்டவராகவும், மக்களை பல நூற்றாண்டுகளாக சுரண்டி, ரத்தம் சிந்த வைக்கும் அற்ப தேசிய வாதத்தை ஒழித்துக்கட்டுவதை லட்சிய மாக கொண்டிருந்தார் சே. இந்தியாவில் காங்கிரஸ் முன்வைத்த தேசியவாதம் வேறு; பாஜக வைக்கும் தேசியவாதம் வேறு. மொழி, இனம், மதத்தின் பெயரால் தேசியவாதம் முன்னிறுத்தப்படுகிறது. இவற்றுக்கு எதிராக சே இருந்தார்.
அம்பேத்கர் இயக்கங்களை இணைக்க செயல்திட்டம்
தலித், பழங்குடிகளை பாட்டாளிகளாக அணுகி, அரசியல்படுத்தி, இடதுசாரி திசைவழியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உள்ளது. தலித் அமைப்புகளை சாதியவாதிகளாக விலக்கி வைப்பது; அடையாள அரசியலுக்கு உள்ளாகிறார்கள் என்று கூறி உறவாடுவதை தவிர்க்கக்கூடாது.
அம்பேத்கர் இயக்கத்தவர்கள் தன்னியல்பாக இடதுசாரிகளோடு இணைய வேண்டும். இடதுசாரிகளோடு தலித் மக்களை இணைய விடாமல் அத்தகைய இயக்கங்கள் தாக்கம் செய்கின்றன. அதை தடுக்க வேண்டுமானால், அம்பேத்கர் பெயரில் செயல்படும் இயக்கங்களை இணைத்து செயல்பட செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.
இடதுசாரி தேவை வரலாற்றுத் தேவை
அம்பேத்கர் காலம் முதல் தலித் இயக்கங்கள் இடதுசாரிகளோடு இணைந்து செயல்படாதது ஏன் என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மொழிவழி தேசியம் பேசும் இயக்கங்கள் குறுகிய பார்வை கொண்டவை என்று ஒதுக்கக்கூடாது. இடதுசாரிகளின் தேவை வரலாற்றுத் தேவையாக மாறியுள்ளது. மக்களை அரசியல்படுத்தும் பொறுப்பு இடதுசாரிகளுக்கு உள்ளது. ஏகாதிபத்தியத்தை எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும். இடதுசாரிப் பார்வை இருந்தால் தேசியவாத அரசியல், அடையாள அரசியல், சாதி, மத, மொழி அடையாள அரசியல் தகர்த்தெறியப்படும். எனவே, இடதுசாரி அரசியல் பார்வையை வலி மைப்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்தினால்தான் வலதுசாரி அரசியலை வீழ்த்த முடியும்.
அடையாள அரசியலின் தாக்கம், தலித் சமூகத்தை சார்ந்தவர்களே அம்பேத்கர் எங்கள் தலைவர் இல்லை என்று கூறும் நிலை உள்ளது. அம்பேத்கரை ஏற்காதவர் எப்படி மார்க்சை ஏற்பார்? மொழி அடையாள அரசியலால், வடமாநில தொழிலாளர்களை, சக தொழிலாளர்களை விரட்டும் நிலை உள்ளது.
இணைந்தே நிற்போம்!
மத தேசியவாதத்தை எதிர்ப்பதில் இடதுசாரிகள் மிக உறுதியாக நிற்கிறார்கள். பாஜக, சங்பரிவாரத்தை கொள்கை, கருத்தியல் ரீதியாக மிக உறுதியாக, மிக வலுவாக எதிர்ப்பவர்கள் இடதுசாரிகள். இதே அணுகுமுறையை பிற கட்சிகள் பின்பற்றவில்லை. சங்பரிவாரத்தின் ஆபத்தை புரிந்து கொள்ள இடதுசாரிப் பார்வை தேவை. இடதுசாரிப் பார்வையை வளர்த்தெடுக்க வேண்டும். இடதுசாரி இலக்கியம் பெருக வேண்டும். சேகுவேரா போன்ற வரலாறுகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இடதுசாரிப் புரிதல் இருப்பதால்தான், எப்போதும் இடதுசாரிகளுடன் விடுதலை சிறுத்தைகள் இணைந்து நிற்போம் என்று உறுதியான நிலைப்பாடாக கொண்டுள்ளோம். களத்தில் கைகோர்த்து நிற்கிறோம். அது தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் நூலை அறிமுகம் செய்து இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா பேசினார். எழுத்தாளர்கள் ஜா.மாதவராஜ், பா.ஜீவசுந்தரி ஆகியோர் பேசினர். மொழி பெயர்ப்பாளர் ஜெ.தீபலட்சுமி ஏற்புரை யாற்றினார். முன்னதாக சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வரவேற்றார்.
தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போர்க்குணத்தால்
இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக சே குவேரா! – கே.பாலகிருஷ்ணன் பேச்சு
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு: ஜான் லீ 20 ஆண்டுகள் உழைத்து சேகுவேரா வாழ்க்கை வரலாற்றை ஆவணங்களின் அடிப்படையில் எழுதிய நூலின் தன்மை மாறாமல் மொழி பெயர்ப்பாளர் தீபலட்சுமி தந்துள்ளார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டலில் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதையும் விடுவிக்க சேகுவேரா எல்லை கடந்து போராடினார். 39 வயது வரை மட்டுமே வாழ்ந்த சேகுவேரா மரணத்தின் வாயிலில் நின்ற போதும் மனந்தளராமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார். அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை இன்றைக்கும் ஈர்க்கும் சக்தியாக உள்ளார். 1959ஆம் ஆண்டு கியூபா விடுதலை அடைந்ததில் இருந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து வருகிறது.
அதனையும் மீறி கியூபா முன்னேறி வருகிறது. ஏகாதிபத்தியம் எத்தகைய தடை விதித்தாலும் சோசலிச சமூகத்தை அடிபணிய வைக்க முடியாது என்பதற்கு உதாரணமாக கியூபா உள்ளது. ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவைப் போல், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சோசலிசம் வந்தால் உலகின் மிகப்பெரிய வல்லரசாக; நல்லரசாக நமது நாடு மாறும். கார்ப்பரேட்டுகளின் லாபம் பெருகுவதால் நாடு வல்லரசாகாது. உலகின் பல நாடுகளில் நிலவும் கொடுமைகளை விட இந்தியாவில் வறுமை, பசி அதிகமாக உள்ளது. ஏகாதி பத்திய நாடுகள் இந்தியாவை கபளீகரம் செய்கின்றன. ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இந்தியாவில், சாதி, மதத்தால் மக்களை பிரித்து, கலவரத்தை மூட்டி திசை திருப்புகின்றன. லத்தீன் அமெரிக்காவில் சேகுவேரா சாதிக்க நினைத்ததை, இந்தியாவில் நடத்தி முடிக்க சபதமேற்போம். சமூக மாற்றத்திற்கு உறுதியேற்போம். அணு குண்டு ஒருமுறைதான் வெடிக்கும். புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் அது வெடிக்கும். எனவே, இளைஞர்களிடம் இந்நூலைக் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.