இன்றே உரையாடல்களைத் துவங்குவோம் – விழியன்குழந்தைகள் சம்பந்தப்பட்ட கொடுமை நிகழும்போதெல்லாம் இதைச்சொல்ல வேண்டி இருக்கின்றது. உரையாடல்களை குழந்தைகளுடன் துவங்குங்கள். ஆரோக்யமான உரையாடல்கள் தொடர்ந்தாலே பெரும்பாலான கொடுமைகள் நடக்காது அல்லது தீவிரம் அடையாது. பி.எஸ்.பி.பி பள்ளியில் நடந்த தொடர் பாலியில் சீண்டல் இன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளியிடம் ஏற்கனவே புகார் அளித்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கடும்கண்டத்திற்கு உரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த தயவு தாட்சண்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எந்த ஊடகமும் புகார் அளிக்கும் மாணவிகள் / பெற்றோர்களின் பெயர்களை பொதுவெளியில் வைக்கக்கூடாது.

நிற்க. இந்த செய்தி கிளம்பியவுடனே மஹரிஷி பள்ளியிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக வலைத்தளங்களின் புகார்கள் எழுந்துள்ளன. நம்முடைய குழந்தைகளுடன் ஆரோக்யமான உரையாடலை நடத்தும் மிக முக்கியமான நேரமிது. உரையாடல்கள் மட்டுமே நம் இருவருக்கும் இடையே இருக்கும் சுவற்றின் உயரத்தினை குறைக்கும். அதே சமயம் குழந்தைகளுக்கு என்று இருக்கும் வெளியினை மதிக்கவும் வேண்டும். அவர்களுக்கும் நிச்சயம் ரகசியங்கள் இருக்கும். இருக்கவேண்டும். நாம் செய்ய வேண்டியது வெளிப்படையான உரையாடல்களை. இதோ இந்த சம்பவத்தினை ஒட்டி குழந்தைகளுடன் பேச வேண்டும். பாலியல் சீண்டல் என்றால் என்ன என்று பேச வேண்டும். அப்படி நடந்தால் என்ன செய்யவேண்டும் எனச் சொல்லவேண்டும். இந்த குழந்தை என்ன செய்திருக்க வேண்டும் என்றும் அவர்களையே கேட்கவேண்டும்.

நேற்று சமூக வலைதளங்களில் தெலுங்கு திரைப்படத்தினை ஒத்த காட்சியினை சிறுவர்கள் படம்பிடித்துள்ளார்கள். இதனை அவர்கள் எந்த பாதுகாப்புடன் செய்தார்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் இதனை நிறைய நிறைய பகிரும்போது மேலும் மேலும் இதே போன்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த காட்சிகள் முழுக்க வன்முறை நிறைந்ததாக உள்ளது. இது மீண்டும் மீண்டும் விதைக்கப்படும். ஹிரோயிசம் என்பது அடித்து உதைப்பதா? இந்த மாதிரியான காட்சிகளை சினிமாவின் படம்பிடிப்பதை தடுத்த நிறுத்தமுடியுமா? சிறுவர்கள் இதனை மீள் உருவாக்கம் செய்வதையாவது நிறுத்தலாம். ஆனால் அதனைவிட முக்கியம் இதனைச் சார்ந்த உரையாடல்களை வீடுகளிலும் பள்ளிகளிலும் நிகழ்த்த வேண்டும். இது சரியா தவறா? இதைச் செய்வதால் என்ன நிகழும் என்பதனை ஒட்டி பேச வேண்டி இருக்கின்றது.

மாணவிகளிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர்..  நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல் - Polimer News - Tamil News | Latest  Tamil ...

கோவிட் பிரச்சனைகளையும் நாம் மறைக்கவேண்டியதில்லை. நமக்கும் பயமும் அச்சமும் நிலவுகின்றது. உலகம் முழுக்க என்ன நிகழ்கின்றது என்று காட்டவேண்டும். அறிவியல்பூர்வமாக நடக்கும் முன்றேற்றங்கள், நாடுகள் எப்படி மீண்டன, அரசுகள் எப்படி சறுக்குகின்றன, நிகழ்வுகள், வாட்ஸப்பில் வரும் செய்திகளை எப்படி எதிர்கொள்வது (நாளைக்கு அவங்களும் அதை உண்மைன்னு நம்பிடக்கூடாது), திட்டமிடல் உட்பட அனைத்தையும் பேச வேண்டி உள்ளது.

நாம் தயாரிக்க வேண்டியது குழந்தைகளுக்கான பாதுகாப்பு அணைகளை மட்டுமல்ல அதற்கு சமமாக அவர்களை பலமானவர்களாகவும் மாற்ற வேண்டும். எந்த சிக்கல் வந்தாலும் பிரச்சனைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறனையும் அறிவையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இவை தொடர் உரையாடல்கள் மூலமே சாத்தியம்.

கடந்த வாரத்தில் இரண்டு சிறுமிகளின் கடிதங்கள் நெஞ்சை நெகிழ வைத்தன. ஒன்று தூத்துக்குடி பகுதியில் இருந்து ஒரு சிறுமி தன் சேமிப்பு பணத்தினை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்புகின்றாள். அவள் தன் தந்தையை கோவிட்டுக்கு பறிகொடுத்துள்ளாள். இன்னும் ஒரு குழந்தையின் தந்தையை இது காப்பாற்றும் என அனுப்புயுள்ளார். மற்றொரு கடிதம் கர்நாடக மாநிலத்தில் இருந்து. அந்த சிறுமி தன் தாயை பறிகொடுத்துள்ளாள். கொரொணாவிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவள் தாயின் செல்போனினை யாரோ திருடிவிட்டார்கள். தாயை பறிகொடுத்த நிலையில் அவளுடன் இருக்கும் நினைவுகள் முழுக்க அந்த செல்போனில் பதிவாகி இருக்கு. அதனை திருப்பி தாருங்கள் என கன்னடத்தில் ஒரு கடிதம் எழுதி இருக்கின்றாள். இவை இரண்டையும் நம் குழந்தைகளிடம் பேச வேண்டியுள்ளது. இரண்டின் பேசுபொருள் வேறு வேறு. ஆனால் இரண்டையும் பேச வேண்டியுள்ளது. ஒன்று செய்ய வேண்டியது இரண்டு செய்யக்கூடாதது.

நாம் செய்ய வேண்டியது அறத்தினை போதிப்பது. வழிகாட்டுவது. நம் குழந்தைகள் சீண்டல்களும் உட்படக்கூடாது என்று நினைக்கும் அதே நேரத்தில் நம் குழந்தைகள் பிற்காலத்தில் யாரையும் சீண்டக்கூடாது அது அறமற்றது என்பதை ஆணித்தரமாக பதியவைக்க வேண்டியதும் மிக முக்கியம்.

தொடர்ந்து உரையாடுவோம்.

– விழியன்