அறிவியல் பேசுவோம்!
இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
1. செவ்வாயிலிருந்து பூமிக்கு வந்த விண்கற்கள்: புதிய கண்டுபிடிப்பு
பூமியில் கண்டெடுக்கப்பட்ட விண்கற்களில் 390 விண்கற்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவை. இந்த 390 செவ்வாய் விண்கற்களில் 200 விண்கற்கள் செவ்வாயின் 5 மோதல் பள்ளங்களிலிருந்து வந்தவை என்கிறது புதிய ஆய்வு. செவ்வாயின் தார்திஸ் மற்றும் எலிசியம் பகுதிகளில் உள்ள இந்த பள்ளங்களின் வயது மற்றும் கனிம கலவை ஆகியவற்றை ஆராய்ந்ததில் இந்த கண்டுபிடிப்பு.
https://www.science.org/doi/
2. : எகிப்தில் கி.மு 6-ம் நூற்றாண்டில் ஒரு வானியல் ஆய்வகம்!
எகிப்தின் காஃப்ர் எல்-ஷெய்க் கவர்னரேட்டில் உள்ள பண்டைய நகரமான புட்டோவில், கி.மு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வானியல் ஆய்வகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம், சூரியனை கண்காணித்து காலண்டரை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இங்கு சூரிய கடிகாரம், நட்சத்திரக் கூட்டங்களை கண்காணிக்கும் காவற்கோபுரம் மற்றும் பல்வேறு கடவுள்களின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
3. கொசுக்கள் அகச்சிவப்பு கதிர்களை உணர்கின்றன.
கொசுக்கள் அகச்சிவப்பு கதிர்களை உணரும் திறன் கொண்டவை என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் உடல் வெப்பத்தை, அகச்சிவப்பு கதிர்கள் மூலம் உணர்ந்து கொசுக்கள் நம்மை கண்டுபிடித்து தாக்குகின்றன. கொசுக்களின் ஆண்டெனாக்களில் உள்ள சிறப்பு நியூரான்கள் இந்த அகச்சிவப்பு கதிர்களை உணர உதவுகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பு கொசுக்கள் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்த உதவலாம்.
https://doi.org/10.1038/
4. பனி யுகத்தில் மாமூத் யானைவேட்டை – புதிய கண்டுபிடிப்பு
பனி யுகத்தில் மாமூத் யானைகளை வேட்டையாட மனிதர்கள் எறிஈட்டிகளைப் பயன்படுத்தவில்லை என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மாறாக, அவர்கள் கூர்மையான கற்களால் முனைப்படுத்தப்பட்ட நீண்ட ஈட்டிகளை தரையில் ஊன்றி, வரும் விலங்குகளை குத்திக் கொன்றனர். பனி யுக மனிதர்களின் வேட்டையாடும் முறைகளைப் பற்றிய புதிய பார்வையை இந்த ஆய்வு உருவாக்கியுள்ளது.
https://doi.org/10.1371/
5. பழங்கால கடல் பசுவும், அதன் வேட்டையாளர்களும்
வெனிசுலாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கடல் பசுவின் எலும்புக்கூடு, அது முதலில் ஒரு முதலையால் தாக்கப்பட்டு பின்னர் ஒரு புலி சுறாவால் கிழித்தெறியப்பட்டதைக் காட்டுகிறது. சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன், மயோசீன் யுகத்தில், கடலில் வாழ்ந்த விலங்குகளின் உறவுகள், இன்றைய கடலில் நாம் காணும் உணவுச் சங்கிலியை ஒத்ததாக இருப்பதைக் காட்டுகிறது.
https://www.tandfonline.com/
6. GPS க்கு மாற்றாகும் குவாண்டம் திசைகாட்டிகள் – புதிய முன்னேற்றம்
விஞ்ஞானிகள் குளிர்சாதன பெட்டி அளவுள்ள, ஆறணு இன்டர்ஃபெரோமீட்டர் எனும் அமைப்பை மிகச்சிறியதாக மைக்ரோசிப்பில் பொருத்திடும் அளவிற்கு வடிவமைத்துள்ளனர். இது குவாண்டம் திசைகாட்டிகளை கையடக்கமாக மாற்றிட உதவும். இவை GPS நுட்பத்தைக் காட்டிலும் மேம்பட்டவை. தொலைதூரப் பயணங்கள், ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத்துறைகளில் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
https://www.science.org/doi/
7. உலகிலேயே வேகமாக பின்கர்ணம் அடிக்கும் பூச்சி
வட கரோலினா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கோள வடிவிலான ஸ்பிரிங்டெயில் என்ற சிறிய பூச்சி உலகிலேயே மிக வேகமாக பின்னோக்கி குதிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த பூச்சி வினாடிக்கு 368 சுழற்சிகளில் சுழன்று, தனது உயரத்தை விட 60 மடங்கு உயரத்திற்கு குதிக்கிறது. இந்த அற்புதமான திறன், வேட்டையாளர்களிடமிருந்து தப்பிக்க உதவுகிறது.
8. குழந்தைகளின் கவன சிதறல்: ஆய்வு வெளிப்படுத்தும் உண்மை
குழந்தைகள் ஒரு பணியில் மட்டும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவதற்குக் காரணம், அப்பணியை முடிக்கத் தேவையான தகவலை நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்க உதவும் செயல்பாட்டு நினைவகம் முழுமையாக வளராததே ஆகும். இதன் காரணமாக, அவர்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிக தகவல்களைச் சேகரிக்கின்றனர். பெரியவர்களைவிட அதிகமாக ஆராய்கின்றனர் என்கிறது ஒஹியோ பல்கலைக்கழக ஆய்வு.
http://dx.doi.org/10.1177/
9. வௌவால்களின் இனிப்பு ரகசியம்: ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பு
சில வகை வௌவால்கள், குறிப்பாக தேன் உண்ணும் வௌவால்கள், ஆச்சரியமூட்டும் அளவிற்கு அதிக சர்க்கரையை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை என தெரியவந்துள்ளது. நீளமான குடல் அமைப்பு, அதிக சர்க்கரை உறிஞ்சு திறன் மற்றும் சில மரபணு மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கும் அமெரிக்காவின் ஸ்டோவர்ஸ் ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு, நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க உதவக்கூடும்.
http://dx.doi.org/10.1038/
10. காயங்களில் பாக்டீரியாவைக் கண்டறிதல்: புதிய தொழில்நுட்பம்
புதிய ஆட்டோஃப்ளூரசென்ஸ் (AF) இமேஜிங் கையடக்க சாதனத்திலிருந்து வரும் வயலட் ஒளி பாக்டீரியாவின் செல் சுவர்களில் உள்ள மூலக்கூறுகளை ஒளிரச் செய்கிறது. வெவ்வேறு வகையான பாக்டீரியாக்கள் வெவ்வேறு நிறங்களில் மாறுவதால், மருத்துவர்கள் காயத்தில் பாக்டிரியாக்களின் பாதிப்பை உடனடியாக தீர்மானிக்க முடியும். நாள்பட்ட காயங்களில், பாக்டீரியாக்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு இந்த நுட்பம் உதவும்.
http://dx.doi.org/10.1089/ wound.2024.0067
எழுதியவர் :
த. பெருமாள்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.