ரோனா வில்சனின் மடிக்கணினிக்குள் குற்றம் சுமத்தப்படும் வகையிலான கடிதங்கள் ‘திணிக்கப்பட்டன’ : அமெரிக்க டிஜிட்டல் தடயவியல் நிறுவன அறிக்கை  – சுகன்யா சாந்தா | தமிழில்: தா.சந்திரகுருபுனே காவல்துறையினர் புதுதில்லியில் உள்ள ஆர்வலரான ரோனா வில்சனின் இல்லத்தில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்வதற்கு குறைந்தது இருபத்தி இரண்டு மாதங்களுக்கு முன்பாக குற்றம் சுமத்தப்படும் வகையில் இருந்த குறைந்தபட்சம் பத்து கடிதங்களை சைபர் தாக்குதல் நடத்திய ஒருவர் வில்சனின் மடிக்கணினிக்குள் திணித்ததாகக் கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டு எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட வில்சன் மற்றும் பதினைந்து உரிமை ஆர்வலர்களைச் சிக்க வைப்பதற்காக புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கடிதங்களின் நம்பகத்தன்மை குறித்து மசாசூசெட்ஸை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான ஆர்செனல் கன்சல்டிங் வெளியிட்டுள்ள அறிக்கை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மின்னணு ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அந்த நிறுவனத்தை வில்சன் பாதுகாப்புக் குழு கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று அணுகியிருந்தது.

உள்ளூர் புனே காவல்துறையினரால் ஆரம்ப கட்டத்தில் விசாரிக்கப்பட்டு வந்த அந்த வழக்கு மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வீழ்ந்து  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் என்று முத்தரப்பு கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு 2020 ஜனவரியில் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

வில்சனின் கணினி உட்பட கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்கள் கூறி வருகின்ற ‘ஆதாரங்களை’ மட்டுமே புலனாய்வு முகமை சார்ந்து இருப்பதால் ஆர்செனல் கன்சல்டிங் இப்போது வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

‘வில்சனின் மடிக்கணினியுடன் ஒத்திசைவை ஏற்படுத்திக் செய்வதற்கு அதற்குப் பொறுப்பானவருக்கு நேரம் உட்பட விரிவான சாதகங்கள் இருந்தன. கண்காணிப்பு, குற்றம் சுமத்தும் வகையிலான ஆவணத்தை நுழைப்பது ஆகியவையே அவர்களுடைய முக்கிய  குறிக்கோள்களாக இருந்தன என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது’ என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அந்த டிஜிட்டல் தடயவியல் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸ்பென்சர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக தங்களிடம் வழங்கப்பட்ட பெருமளவிலான மின்னணு தரவுகள் குறித்து தங்களுடைய குழு அயராது செயல்பட்டதாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் தடயவியல் நடைமுறைக்கான மிக உயர்ந்த வரம்பை இந்த அணி அமைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

C:\Users\Chandraguru\Pictures\Arsenal Bhima Koregaon case\Et3NHjjWQAIPGBt.jpg

அந்த சைபர் தாக்குதலை நடத்தியவர் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாகப் பயன்படுத்திய குறிப்பிட்ட மால்வேர் உள்கட்டமைப்பு இருபத்திரண்டு மாதங்களாக வில்சனின் கணினியைத் தாக்கி ஒத்திசைவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வில்சனுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள், மற்ற பிற இந்திய உயர்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுடனும் தொடர்பு கொண்டிருப்பதை ஆர்செனல் எடுத்துக் காட்டியுள்ளது.

‘இதுவரையிலும் ஆர்செனல் சந்தித்து வந்திருக்கின்ற ஆதாரங்களை மாற்றுகின்ற மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாக பல்வேறு அளவீடுகளின் அடிப்படையிலும், குற்றம் சுமத்தப்படுவதற்கு காரணமாக இருந்த முதலாவது மற்றும் கடைசி ஆவணங்களை நுழைத்ததற்கு இடையே மிக அதிக கால அளவை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற இந்த வழக்கு இருக்கிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு வில்சன், அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொருவரான நாக்பூரைச் சேர்ந்த பிரபல குற்றவியல் வழக்கறிஞரான சுரேந்திர காட்லிங் ஆகியோர் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டது. வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கல்வியாளர் ஆனந்த் டெல்டும்ப்டே, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்டு பிறரை இந்த வழக்கில் சிக்க வைத்த பதின்மூன்று கடிதங்கள் அவர்களுடைய கணினிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2018 ஏப்ரல் 17 அன்று வில்சனின் வீடு சோதனை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அவரது கணினியில் இடையீடு செய்து மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஆர்செனலின் அறிக்கை கூறுகிறது. வில்சனின் கணினியில் 2018 ஏப்ரல் 16 அன்று மாலை 4:50 மணியளவில் கடைசி மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், அடுத்த நாள் காலை ஆறு மணியளவில் அப்போதைய விசாரணை அதிகாரி சிவாஜி பவார் உட்பட உள்ளூர் புனே காவல்துறை குழுவினர் புதுதில்லி முனிர்காவில் உள்ள வில்சனின் வீட்டிற்கு சோதனை நடத்துவதற்காகச் சென்றதாகவும் ஆர்செனல் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

எண்பது வயதான வரவர ராவின் மின்னஞ்சல் முகவரி வில்சனின் மடிக்கணினியில் ஒத்திசைவை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்டது என்று ஆர்செனல் கன்சல்டிங் வெளியிட்டுள்ள அறிக்கை இப்போது இந்த வழக்கில் சிறப்பு விசாரணை கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்வதற்கான தளமாகி இருக்கின்றது. ‘வரவர ராவின் மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி ஒருவரால் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்குப் பிறகு வில்சனின் கணினியுடன் 2016 ஜூன் 13 அன்று ஒத்திசைவு ஏற்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் வில்சனுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராவ் ஒருவர்’ என்று அறிக்கை கூறுகிறது.

https://cdn.thewire.in/wp-content/uploads/2021/02/10175137/WhatsApp-Image-2021-02-10-at-5.28.51-PM-1-483x1024.jpeg

நிஹால்சிங் ரத்தோட் பெற்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்

இதேபோன்றதொரு மின்னஞ்சல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞராக இருந்து வரும் நிஹால்சிங் ரத்தோட் என்பவருக்கும் அனுப்பப்பட்டது. குறிப்பாக வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், உரிமை பாதுகாவலர்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட குறைந்தபட்சம் இரண்டு சைபர் தாக்குதல்களுக்கு ரத்தோட் இலக்காகியுள்ளார்.

பெகாசஸ் என்ற ஸ்பைவேரைப் பயன்படுத்தி வாட்ஸ்ஆப்பில் உள்ள வீடியோ அழைப்பைப் பயன்படுத்தி தொலைபேசியில் மால்வேரை நிறுவுகின்ற வகையில் ரத்தோட் இலக்கு வைக்கப்பட்டார். எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட சாதி எதிர்ப்பு ஆர்வலர்கள்  குறிவைக்கப்படுவதற்கான தெளிவான வழிமுறை இருப்பதாக 2019 அக்டோபரில் தி வயர் இணைய இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல்கள் மூலம் டிஜிட்டல் தாக்குதலுக்கு இலக்காக இருந்தவர்களில் ரத்தோட் ஒருவராக இருந்தார் என்று 2019 டிசம்பரில் தி வயர் இணைய இதழில் கட்டுரை வெளியாகி இருந்தது. பெறுநரின் தனிப்பட்ட நலன்களுக்கு ஏற்ப அந்த மின்னஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 2019 செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இடையில் அவை அனுப்பப்பட்டன. அந்த மின்னஞ்சல்களில் இருந்த மால்வேர் கணினியில் நிறுவப்பட்டதுமே, சைபர் தாக்குதலை நடத்தியவருக்கு முழுமையாகப் புலப்படு நிலையையும், கட்டுப்பாட்டையும் அது தருகின்றது.

வில்சனின் கணினியில் காவல்துறையினர் கண்டுபிடித்ததாகக் கூறிய டிஜிட்டல் ஆதாரங்களில் இருந்த பல முரண்பாடுகளை தி வயர் இணைய இதழ் 2019 டிசம்பர் 21 அன்று வெளியான மற்றொரு கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தது.

காவல்துறையின் ஒவ்வொரு குற்றப்பத்திரிகையும் புத்தம்புதிய குற்றச்சாட்டுகளைக் கொண்டிருந்ததால், எல்கர் பரிஷத் வழக்கு எதிர்பாராத பல திருப்பங்களைக் கண்டது. முதலில் இந்த வழக்கு நகர்ப்புற நக்சல்கள் குழு பிரதமர் நரேந்திர மோடி மீது ராஜீவ் காந்தி பாணியிலான படுகொலைக்குத் திட்டமிட்டது என்ற குற்றச்சாட்டுகளுடனே தொடங்கியது. வில்சன், கேட்லிங், கல்வியாளர் ஷோமா சென், ஆர்வலர்கள் சுதிர் தவாலே, மகேஷ் ரவுத் ஆகிய ஐந்து பேர் 2018 ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்ட போது புனே காவல்துறையால்  இதுபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மோடியைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் (ஏப்ரல் 17 அன்று நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட) வில்சனின் மடிக்கணினியில் கிடைத்ததாக காவல்துறையினர் கூறினாலும், ஜூன் 6 வரை அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து தங்களுடைய வாதங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு பல முறை கேள்விகளை எழுப்பியுள்ளது.

வில்சனின் கணினியில் ஒத்திசைவு செய்யப்பட்ட வழியை விளக்குகின்ற ஆர்செனல் அறிக்கை, ராவ் அனுப்பிய மின்னஞ்சலுடன் ஓர் இணைப்பு ஆவணம் இருந்ததாகவும், அதைத் திறக்குமாறு வில்சன் ஏமாற்றப்பட்டதாகவும் கூறுகிறது. 2016 ஜூன் 13 அன்று பிற்பகல் 3:07 மணிக்கு அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. வில்சன் அதை சில மணி நேரங்களுக்குள் திறந்து பார்த்தார். வில்சன் தன்னால் அந்த இணைப்பு ஆவணத்தை திறக்க முடிந்தது என்று மாலை 6:16 மணிக்கு அந்த மின்னஞ்சலுக்கு பதிலளித்திருந்தார். அவரது கணினியுடன் அப்போதுதான் ஒத்திசைவு செய்யப்பட்டது என்று ஆர்செனல் அறிக்கை கூறுகிறது.

‘ஆவணத்தைத் திறந்து பார்ப்பது (ரார் காப்பகக் கோப்பிற்குள் ‘அனதர் விக்டரி.ரார்’ (மற்றுமொரு வெற்றி.ரார்) என்று பெயரிடப்பட்டு – படம் 2 ஐப் பார்க்கவும் என்று ஆவலைத் தூண்டும் வகையில்) என்பது பல நிகழ்வுகளின் சங்கிலித் தொகுப்பில் ஒரு பகுதியாக இருந்தது. அது வில்சனின் கணினியில் நெட்வயர் ரிமோட் அக்சஸ் ட்ரோஜனை (RAT) நிறுவுவதற்கான வழியை வகுத்தது என்று ஆர்செனல் கன்சல்டிங்கின் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலின் மூலமாக டிராப் பாக்ஸிற்கான இணைப்பைத் திறப்பதாக வில்சன் நினைத்த போது, அந்த மின்னஞ்சல் நெட்வொர்க்கர் மால்வேர் மூலம் அவருடைய மடிக்கணினியுடன் ஒத்திசைவை ஏற்படுத்திக் கொண்டது. ‘ஆர்செனல் இந்த பகுப்பாய்வின் போது உள்கருவிகளை உருவாக்கியது. அவை  வில்சனின் கணினியில் இருக்கின்ற நெட்வொர்க்கர் பதிவுகளைத் தேடி, டிக்ரிப்ட் செய்ய அனுமதித்தன’ என்று ஆர்செனல் அறிக்கை விளக்குகிறது. 2016ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வில்சனின் கணினி கைப்பற்றப்பட்ட நாளிலிருந்து 2018 ஏப்ரல் 17க்கு இடையிலான காலப்பகுதியில் ஐம்பத்தியேழு குறிப்பிட்ட நாட்களில் முழுமையான மற்றும் பகுதியான நெட்வொர்க்கர் பதிவுகளை ஆர்செனல் மீட்டெடுத்தது. அந்த பதிவுகளில் கைப்பற்றப்பட்டிருந்த செயல்பாடுகளில் வில்சன் உலாவிய வலைத்தளங்கள், கடவுச்சொற்களைச் சமர்ப்பித்தல், மின்னஞ்சல்களை எழுதுதல், ஆவணங்களைத் திருத்துதல் ஆகியவை அடங்கும்’ என்று அந்த அறிக்கை கூறுகிறது.

https://cdn.thewire.in/wp-content/uploads/2019/02/13114605/collage-main-1200x514-1024x439.jpg

பீமா கோரேகான் வழக்கில் ரோனா வில்சனுடன் (வலது கடைசி) 

கைது செய்யப்பட்ட சுதிர் தவாலே, சுரேந்திர காட்லிங், ஷோமா சென், மகேஷ் ரவுத்

மால்வேரை மிகவும் எளிதாக வாங்க முடியும்

நெட்வயர் ​​மால்வேரை வெறுமனே பத்து டாலருக்கு எளிதாக வாங்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம் அந்த மால்வேரைப் பயன்படுத்துவதற்கான எளிதான வழிகாட்டியை வழங்குகிறது.

நெட்வயர் என்பது மிகவும் பிரபலமான பல-தள தொலைநிலை அணுகல் ட்ரோஜன் அமைப்பு ஆகும். சைபர் தாக்குதலை நடத்துபவர்கள் நெட்வயரை பல்வேறு வழிகளில் பெற முடியும். அவற்றில் ஒன்றாக வேர்ல்டுவயர் லேப்ஸ் இடமிருந்து வாங்குவது உள்ளது. நெட்வயர் மிகவும் சக்தி வாய்ந்தது. பல ஆண்டுகளாக அது இருந்து வருகிறது என்று ஆர்செனலின் விசாரணை கூறுகிறது. அதன் பதிப்பு புதுப்பிப்புகள் குறைந்தபட்சம் 2013 ஜூன் 2013 வரை இருப்பதாக அறிக்கை கூறுகிறது. ஆவணங்களை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட தொலை கட்டுப்பாட்டு அம்சங்களுக்கு கூடுதலாக, ப்ராக்ஸி செயினிங் (சைபர் தாக்குதலை நடத்துபவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமானது), திருட்டுத்தனமாக ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பது, கீலாகிங், கடவுச்சொல் மீட்பு போன்ற மோசமான அம்சங்களையும் நெட்வயர் வழங்குகிறது.

கோப்புகளை சுருக்கவும் குறைக்கவும் செய்கின்ற WinRAR v3.70 வில்சனின் மடிக்கணினியில் நிறுவப்பட்டிருந்தது மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது. சைபர் தாக்குதலை மேற்கொள்பவர் WinRAR v4.20ஐ கோப்பு விநியோகங்களின் போது தற்காலிகமாகப் பயன்படுத்துவார். அந்த பரிவர்த்தனைகள் மூலம் தாக்குதலை நடத்தியவர் OPSEC_notes.docxஐ வழங்கியதையும், இறுதியாக OPSEC_notes.rar மற்றும் Adobe.exeஐ நீக்கியதையும் காட்டியது என்று ஆர்செனலின் விசாரணை கூறுகிறது.

பத்து மிக முக்கியமான ஆவணங்கள் (பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டவை) ஒருபோதும் வில்சனின் கணினியில் முறையான வழியில் தொடர்பு கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை என்று ஆர்செனலின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

“இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், எப்போதாவது அந்த பத்து ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது அந்த ஆவணங்கள் அடங்கிய மறைக்கப்பட்ட கோப்புறையையோ திறந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை’ என்று ஆர்செனல் கண்டுபிடிப்புகளில் ஒன்று குறிப்பிடுகிறது. அது உண்மை என்றால், இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான செய்தியைத் தருகிறது. அதாவது அந்த இருபத்தியிரண்டு மாதங்களில் தனது மடிக்கணினியில் ஒத்திசைவு செய்யப்பட்டிருப்பதையோ அல்லது தன் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர்தாக்குதலைப் பற்றியோ வில்சன் அறிந்திருக்கவே இல்லை.

குற்றச்சாட்டுக்குரிய ஆவணங்கள் வில்சனின் கணினிக்கு மறைக்கப்பட்ட கோப்புகள் மூலமாக அனுப்பப்பட்டன என்று ஆர்செனலின் கண்டுபிடிப்பு கூறுகிறது. வில்சனின் மடிக்கணினியில் மால்வேர் எவ்வாறு நிறுவப்பட்டது என்பதை விவரிக்கின்ற அந்ஹ்ட அறிக்கை, முதலில் “kbackup” என்ற கோப்புறை 2016 நவம்பர் 3 அன்று 00:10:07 என்ற நேரத்தில் உருவாக்கப்பட்டது என்றும் சில நிமிடங்களிலேயே அது “Rbackup” ஆக மாற்றப்பட்டது என்றும் கூறுகிறது அந்த 00:40:24. “Rbackup” கோப்புறை அதே நாளில் 16:18:49 மணிக்கு மறைக்கப்பட்ட நிலைக்கு மாற்றியமைக்கப்பட்டது. கோப்புறையின் கடைசி மாற்றத்தின் நேர முத்திரை 2018 ஏப்ரல் 16 அன்று 16:50:41 மணிக்கு, அதாவது எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக வில்சனுடன் நான்கு பேர் கைது செய்யப்படுவதற்கு ஐம்பது நாட்களுக்கு முன்பாக என்றிருக்கிறது.

சட்ட நடவடிக்கை 

வில்சன் பாதுகாப்பு குழுவிடம் இந்த அறிக்கை கிடைத்தவுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க பம்பாய் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை முகமையின் பங்கு கேள்விக்குரியது என்று கூறப்பட்டுள்ள அந்த மனுவில், பதிவுகளின் உண்மை அல்லது நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள அவர்கள் எந்த விருப்பமும் காட்டவில்லை என்பதையே அவர்களின் நடத்தை நிரூபிக்கிறது; மனுதாரரை (வில்சன்) கைது செய்வதிலும், அவர் மீதும், மற்றவர்கள் மீதும் வழக்குத் தொடுப்பதிலுமே அவர்கள் தீவிரமான ஆர்வத்தை காட்டியுள்ளனர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் தொடக்கத்திலிருந்தே வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது விசாரணை முகமையால் தயாரிக்கப்பட்ட பொய்களை அடிப்படையாகக் கொண்டே எல்கர் பரிஷத் விசாரணை நடந்து வந்துள்ளது என்று தி வயர் இணைய இதழிடம் இந்த வழக்கில் வில்சன் மற்றும் கைது செய்யப்பட்ட பிற ஆர்வலர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞரான மிஹிர் தேசாய் கூறியுள்ளார்.

‘இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள், இதுவரையிலும் நாங்கள் கூறி வந்திருப்பதன் விரிவாக்கம் மட்டுமே. வில்சனைப் போலவே, குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் டிஜிட்டல் தரவுகளும் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளன’ என்று கூறும் மிஹிர் தேசாய் இந்த ஆதாரங்களை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்கிறார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க இந்த அறிக்கை வலுவான ஆதாரத்தை வழங்கியிருப்பதாக அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விடுவிப்பதோடு இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://cdn.thewire.in/wp-content/uploads/2018/01/25003605/Bombay-HC-PTI.jpeg

பம்பாய் உயர் நீதிமன்றம். புகைப்படம்: பி.டி.ஐ.

இந்த வழக்கில் உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மீது குறிவைக்கப்படுவதற்கு முன்பாகவே, சமஸ்தா ஹிந்து அகாதியின் தலைவரும், ஹிந்துத்துவா தலைவருமான மிலிந்த் எக்போட், சிவ் பிரதிஸ்தான் ஹிந்துஸ்தான் தலைவரான சம்பாஜி பைதே ஆகியோர் மீது ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் தலித் சமூக உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் என்ற குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டு தாக்குதல் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து சாதி எதிர்ப்பு ஆர்வலரான அனிதா சவாலே தாக்கல் செய்த அந்த வழக்கு எக்போட் சிறிது காலம் கைது செய்யப்படதற்கு  வழிவகுத்தது.

ஆனால் இந்த வழக்கில் நகர்ப்புற நக்சல்கள் என்ற புதிய கோணத்தை புனே காவல்துறையினர் கொண்டு வந்ததும், பைதே, எக்போட் என்ற அந்த இரு பிராமணத் தலைவர்களுக்கு எதிரான விசாரணை ஸ்தம்பித்துப் போனது. உச்சநீதிமன்றத்திலும் சட்டசபையிலும் அரசு தாக்கல் செய்திருந்த ஆரம்பகட்ட வாக்குமூலங்களில் சவாலே அளித்த புகார் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆர்செனல் அறிக்கையின் கண்டுபிடிப்புகளால் இந்த வழக்கை இன்னொரு முறை ஆய்வு செய்து உண்மையான குற்றவாளிகள் மீது கவனம் செலுத்துமாறு மாநில அரசை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக்கான பாதுகாப்புக் குழு வலியுறுத்துகிறது என்று வழக்கறிஞர் ரத்தோட் கூறுகிறார். ‘ஹிந்துத்துவா குழுக்களாலேயே பீமா-கோரேகான் வன்முறை திட்டமிடப்பட்டது. ஆரம்ப விசாரணையின் போதே பைதே, எக்போட் ஆகியோருக்கு இருந்த பங்கு தெளிவாகி இருந்தது. அப்போது பாஜக மாநில அரசின் கீழ் இருந்த புனே காவல்துறை அந்த விசாரணையைத் தடம் புரளச் செய்து உரிமை ஆர்வலர்கள் மீது தன்னுடைய கவனத்தைச் செலுத்தியது. குறைந்தபட்சம் இப்போதாவது உண்மையான குற்றவாளிகள் விசாரிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று அவர் கூறினார்.

https://thewire.in/tech/rona-wilson-elgar-parishad-letters-planted-us-firm

நன்றி: தி வயர் இணைய இதழ் 2021 பிப்ரவரி 10

தமிழில்: தா.சந்திரகுரு