LIC எப்படி இருக்கிறது? – அறிவுக்கடல்

LIC எப்படி இருக்கிறது? – அறிவுக்கடல்

 

 

LIC நிறுவனம் நலிவடையத் தொடங்கியிருக்கிறது என்றொரு கட்டுரை சில நாட்களுக்கு முன் bookday.in ல் வெளியாகியிருக்கிறது. காப்பீட்டுத்துறையைப் பற்றியோ, வாழ்நாள்(ஆயுள்) காப்பீடு என்பதைப் பற்றியோ, LIC நிறுவனத்தைப் பற்றியோ தெளிவான புரிதலின்றி அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

முதலில் ஒரு செய்தியை ஓர் உதாரணத்தின் மூலம் தெளிவுபடுத்திவிடுவோம். நகரை விட்டுத் தொலைவில் புதிதாக உருவான ஒரு குடியிருப்புப் பகுதியில் ஆயிரம் வீட்டு மனைகள் உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் வருகின்றன. ஒரு கட்டத்தில் 100 வீடுகள் வந்த நிலையில் அங்கு ஒருவர் மளிகைக் கடை ஒன்றைத் தொடங்குகிறார். அனைவரும் அந்தக் கடையிலேயே பொருட்கள் வாங்குகிறார்கள்.

வீடுகள் எண்ணிக்கை மெதுவாக அதிரிக்கிறது. ஒரு கட்டத்தில் இன்னொருவர் கடை திறக்கிறார். வீடுகளும் அதிகரிக்கின்றன, மேலும் இரு கடைகளும் வருகின்றன.

100 வீடுகள் இருந்து ஒரு கடை இருந்தபோது அனைவரும் அந்தக்கடையிலேயே பொருள் வாங்கினர். அந்தக் கடையின் சந்தைப் பங்கு 100 சதவீதம். வாடிக்கையாளர்கள் 100 பேர்.

200 வீடுகள் ஆன நிலையில், புதிதாக வந்த இரண்டாவது கடையில் 20 பேர் பொருள் வாங்கத் தொடங்கினர். முதல் கடையின் சந்தைப் பங்கு இப்போது 90 சதவீதம். ஆனால் வாடிக்கையாளர்கள் 180 பேர்.

500 வீடுகளாக உயர்ந்தபோது, கடைகளும் 4 ஆகிவிட்டன. இரண்டாவது கடையில் 100 பேரும், 3, 4ஆவது கடைகளில் முறையே 70, 60 பேரும் பொருள் வாங்குகிறார்கள். இப்போது, முதல் கடையின் சந்தைப் பங்கு 54 சதவீதமாக் குறைந்துவிட்டது. ஆனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை 270 பேர். அதாவது, உயர்ந்துதான் இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள், 46 சதவீத சந்தைப் பங்கை இழந்திருக்கிற அந்த முதல் கடை, நலிவடைந்துவிட்டதா? அதுதான் LICயின் நிலையும்! சந்தைப் பங்கு என்பது ஒப்பிடுவதற்கான பல அளவுகோல்களில் ஒன்று, அவ்வளவுதான்.

மார்ச் நிலவரப்படி இந்திய ஆயுள் காப்பீட்டுத்துறை நிர்வகிக்கிற மொத்த நிதி(AUM) ஏறத்தாழ ரூ.55 லட்சம் கோடி. இதில், LIC நிர்வகிப்பது மட்டும் ரூ.42 லட்சம் கோடிக்கும் அதிகம். எஞ்சியுள்ள 23 நிறுவனங்களும்(தற்போது 25!) சேர்ந்து கால் பங்குக்கும் குறைவான பிரிமியத்தைத்தான் திரட்ட முடிந்துள்ளது. இந்த ரூ.42 லட்சம் கோடி என்பது, இந்தியாவின் GDPயில் ஆறில் ஒரு பங்குக்குச் சற்றே குறைவு.

காப்பீட்டுத் துறையிலோ, நிதித்துறையிலோ மட்டுமின்றி இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே ஒரு நாட்டின் GDPயில் ஆறில் ஒரு பங்கைத் தன்னிடம் கொண்டிருக்கிற நிறுவனம் வேறொன்று இல்லை என்னும் அளவுக்கு ஒப்பிட முடியாத பிரமாண்டமான நிறுவனமாக LIC இருக்கிறது என்பதுதான் உண்மை. இவர்கள் சந்தைப் பங்கு குறைந்துவிட்டது என்று கூறிக்கொண்டிருக்கிற அதே காலகட்டத்திலேயே, ஜுன் 2023 நிலவரப்படி, LIC நிர்வகிக்கிற நிதி ரூ.46.11 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

அழிக்காமல் சிறிதாக்க பீர்பால் போட்ட பெரிய கோடு மாதிரி, எதைச் சொன்னால் LIC பலவீனமாகத் தெரியுமோ அதைச் சொல்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.

சந்தைப் பங்கு சரிவதும் ஆரோக்கியமானது அல்ல என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், அதற்கான காரணம் என்று LICயின் பெரியண்ணன் மனப்பான்மை என்று அந்தக் கட்டுரையாளர் எதைச் சொல்கிறார் என்று அவருக்கே தெரியாது என்றுதான் தோன்றுகிறது.

அரசு நிறுவனம் என்ற பொறுப்புடன் செயல்பட வேண்டியிருக்கிறது என்பதைத் தவிர, தனியார் துறையுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு, சுற்றிலும் ஏற்படுகிற அனைத்து மாற்றங்களையும் LIC கவனித்து, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றே பயணிக்கிறது, அதனால்தான், நான் திரும்பத் திரும்பக் குறிப்பிடுகிற, ‘தனியார் அனுமதிக்கப்பட்டு 23 ஆண்டுகளாக, 23 தனியார் நிறுவனங்கள் போராடி, ஆளுக்குச் சராசரியாக ஒரு சதவீதத்திற்குச் சற்றே அதிகமான சந்தைப் பங்கை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது’ என்பது இப்போதும் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

சந்தைப் பங்கை, இழந்தாலும், மீண்டும் மீட்ட சாதனையைக் கடந்த காலத்தில் பலமுறை LIC செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆனால், இப்போதைய சந்தைப் பங்கு சரிவு என்தற்குக் காரணங்கள் எவை என்பது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. முக்கிய காரணமாக, LICயின் விற்பனை பங்கு அமைந்திருக்கிறது. ஒருபுறம், ‘LICயும் எங்களைப் போலத்தான்,காப்பீடு செய்யப்பட்டு, அரசு நிறுவனம் என்ற தகுதியை இழந்துவிட்டது’ என்று தனியார் நிறுவனங்கள் பரப்புரை செய்கிறார்கள். மறுபுறம், பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட்ட தவறான சூழ்நிலை தொடங்கி, பங்குச் சந்தையைப் பின்னணியில் இயக்குகிற சூதாடிகள் வரையான பல்வேறு காரணிகள், LICயின் பங்கு விலையைச் சரியச் செய்தன.

பங்கு விலை சரிவிற்கும், நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் தொடர்பில்லை என்பதை, LICயின் பிரிமிய வருவாய் வளர்ச்சி உட்பட பல குறியீடுகளும் வெளிப்படுத்தினாலும், பங்கு விலை சரிவதால் LIC வீழ்ச்சியில் இருப்பதாகப் பரப்புரை செய்யப்படுவது மட்டும் நிற்காமல் தொடர்கிறது.

அதானி நிறுவனத்தில் பிரச்சினை என்றாலும் அதானியை விட்டுவிட்டு, LICயைப் பற்றி மட்டுமே பேசுமளவுக்கு, LICக்கு எதிரான பரப்புரைகளை, தாங்களோ, தங்கள் கூட்டாளிகள் அல்லது நண்பர்களோ நடத்துபவையாகவே உள்ள பெரும்பாலான ஊடகங்களைப் பயன்படுத்தி, தனியார்க் காப்பீட்டு நிறுவனங்களே செய்கின்றன என்பதுதான் உண்மை.

பலவீனமாக இருப்பதான மனநிலையை ஏற்படுத்துவது என்பது எந்தப் போட்டியிலும், போட்டியாளரின் திறனைப் பாதிக்கவே செய்யும். அதிலும், LIC முகவர்கள் சந்திக்கும் வாடிக்கையாளர்களில் பலரும், இந்த ஊடகச் செய்திகளை(வதந்திகளை?!) குறிப்பிட்டு, கேள்வியெழுப்புவது, முகவர்களைத் தடுமாறச் செய்கிறது என்பதுதான் உண்மை நிலை. இந்தத் தடுமாற்றத்தைத்தான் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு, இதுவரை அவர்களால் நுழைய முடியாத சிறு நகரங்களுக்கும் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நாம் பலவீனமாகிக் கொண்டிருப்பதாக ஏற்படுத்தப்படும் பொய்த் தோற்றங்களை நம்ப வேண்டாம் என்று நம் முகவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதும், உண்மைகளை விளக்குவதும்தான் உடனடித் தேவைகள். அவற்றைச் செய்வோம், LIC மீதான இத்தகைய தாக்குதல்களை முறியடிப்போம்!

(IRDAI விதிகளின்படியான பொறுப்புத் துறப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை என் தனிப்பட்ட கருத்துகளே. இவற்றுக்கும் LIC நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இணையத்திலும், பொதுவெளியிலும் கிடைக்கிற தரவுகள் மட்டுமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனத்திற்கு மட்டும் தெரிந்த எந்தத் தகவலும் இதில் பயன்படுத்தப்படவில்லை.)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *