போராளி சாவித்திரிபாய் பூலே | bookday

மறக்கப்பட்ட விடுதலைப் போராளி சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்

நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மக்கள் கல்வியின், பெண் கல்வியின் தீவிர ஆதவாளர் பெண் விடுதலையின் பாதுகாவலர் அரசியல் கலிதையின், முன்னோடி ஆதிக்க சாதிகளையும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்து நின்ற துணிச்சலான மக்கள் தலைவர் என்ற தகுதிகளுக்குப் பெருமை சேர்த்த சாவித்திரி பாய் பூலே பற்றி பலரின் கருத்துகளும் சிந்தனைகளும் தொகுப்பாகி இந்நூலின் வழியே நமக்கு வழிகாட்டுகிறது.

உலகத்தை மனிதநேயம் மிக்கதாகவும் அன்பு நிறைந்ததாகவும் எல்லோரும் சக மக்களின் மீது நம்பிக்கை கொண்டவராகவும் மாற்றுவதன் அவசியத்தை உணர்ந்து அதை எளிமையான வழிகளிலும் வலிமையான எண்ணத்தாலும் நிறைவேற்றிக் காட்டியவர் சாவித்திரி பாய் பூலே அவர்கள்.

பெண் சாதிய ரீதியிலும் ஆணாதிக்க ரீதியிலும் இரட்டை அடிமைத்தனத்தில் சிக்கிக்கொண்ட சூழலில் கல்வியும் போதிய விழிப்புணர்வும் இல்லாத அவர்களை இனம் கண்டு கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்திக் காட்டி வாழ்வு முறைகளை மாற்றிக் காட்டியவர். சாதிய அடக்குமுறையையும் ஆணாதிக்கப் போக்கையும் மாற்றியமைப்பதே தனது லட்சியமெனக் கொண்டு அதை செயல்படுத்தியும் காட்டியவர்.

போராளி சாவித்திரிபாய் பூலே | bookday

தனது செயல்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்த தன் கணவர் ஜோதிபா பூலேவுடன் இணைந்து உண்மையான மதம் என்பது சாதியத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை சமூகத்திற்கு புரிய வைத்தார்.

விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு வழங்குதல் ஆதிக்கச் சாதியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மக்களைக் காப்பாற்றுதல் அதற்காக தனது உயிரையே இழக்க நேர்தல் என சமூகத்தில் பொதுநலத்தை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்ட தியாகியின் வரலாற்றை பல்வேறு ஆளுமைகள் வழியே தொகுத்திருக்கும் இந்நூலின் மூலம் அன்றைய இந்தியாவின் சமூக அவலத்தையும் ஏற்றத்தாழ்வுகளையும் உணர முடிகிறது.

மகாராஷ்டிராவில் மதமும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைத்திருந்த காலகட்டத்தில் பார்ப்பனீய நிலப் பிரபுக்களின் ஆதிக்கப் போக்கில் சாதிய ஒடுக்குமுறைகள் மலிந்திருந்த சூழலில் பூலே தம்பதியினரின் முயற்சியும் உழைப்பும் மிகப் பெரிய தடைக்கற்களைத் தாண்டி சமூகத்தை முன்னோக்கி நகர்த்திட உயிரூட்டியது.

1848ம் ஆண்டு பூனேவில் ஒன்பது மாணவிகளோடு தொடங்கப்பட்ட பள்ளியில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராக பணியேற்கிறார். சூத்திர அதிசூத்திர சாதியினருக்கு விழிப்புணர்வும் கல்வியும் வழங்கிட வேண்டி அவர்களுக்காக தனிப்பள்ளியை ஏற்படுத்திய அவர் தனது செயல்பாடுகளில் பலவித இடர்பாடுகளில் மாட்டிக்கொண்டாலும் விடாமுயற்சியாலும் சமூகத்தின் மீதான அக்கறையினாலும் தனது லட்சியத்தை நோக்கி தீவிரமாக உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

ஒவ்வொரு நாளும் சாவித்திரி பாய் பூலே மீது ஆதிக்க சாதியினர் சேற்றையும் மலத்தையும் அள்ளி வீசினர்.பல்வேறு இடையூறுகளை அவருக்கு ஏற்படுத்தி நாளும் அவரை இழிவுபடுத்துகின்றனர்.கல்வியை மக்களுக்கு வழங்கிட எவ்வித ஊதியமும் இல்லாமல் மனமுவந்து தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பெண் கல்வியின் வளர்ச்சியே சமூகத்தின் சூழலை மாற்றக்கூடியது என்பதில் உறுதியேற்றுக்கொண்டு செயல்பட்டார்.

பற்பல நூற்றாண்டுகளாகக் கல்வி பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக இருந்துவந்த பண்டைய இந்திய சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கான கல்வியைத் தடுத்து நிறுத்தி அவர்களை ஒடுக்கவும் அடிமைப்படுத்தவும் வாழ்க்கை மீதான அவநம்பிக்கையை விதைக்கவும் கல்வியை ஓர் ஆயுதமாக மேல்தட்டு வர்க்கம் பயன்படுத்திவந்த சூழலில் தாங்கள் ஆதரவற்றவர்கள் என்பதாலும் தங்களது வாழ்வு நிலையை மாற்றிக்கொள்ள திறமையற்றவர்கள் என்பதாலும் ஏழை மக்களும் ஒடுக்கப்பட்ட சாதியினரும் பல வழிகளில் ஏமாற்றப்படுவதை அவர்களுக்கு உணரத்தி மேம்பாட்டை நோக்கிய நகர்வுக்கு அவர்களை அழைத்துச் செல்வதில் பெரிதும் முயன்று சாதித்திருக்கும் சாவித்திரி பாய் பூலே தம்பதியினரின் அன்றைய தீவிரத் தன்மையினை நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.

சாவித்திரி மற்றும் ஜோதிபா இடையிலான காதல் எவ்வாறு சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றது என்பதை அவர்களது காதல் கடிதங்கள் விவரிப்பதையும் நூல் எடுத்துக் கூறுகிறது.

உடல் பொருள் ஆவி அனைத்தும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்திட மட்டுமே என உறுதி கொண்டு செயல்பட்ட தம்பதியினரின் வாழ்க்கையை நேரில் பார்த்த நிகழ்வென நூல் படம் பிடிக்கிறது.

பொதுநலத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் துடிக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் சமூகத்தின் மீதான எவ்வித நலனிலும் அக்கறை காட்டாத மக்களுக்கு சமூகத்தின் மீதான ஈர்ப்பை உணர்த்தி சிறந்த பாதை காட்டவும் இந்த நூல் உதவுகிறது.

 

நூலின் தகவல்கள் 

நூல் : மறக்கப்பட்ட விடுதலைப் போராளி சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்

தொகுப்பாசிரியர்கள் : பிரஜ் ரஞ்சன் மணி , பமீலா சர்தார்

தமிழில் : வெ.கோவிந்தசாமி

வெளியீடு : பரிசல் புத்தக நிலையம்

முதல் பதிப்பு : அக்டோபர் 2021

பக்கம் :  110

விலை : ரூ.120

 

நூல் அறிமுகம் எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *