கலாச்சார தொழிற்சாலை (Culture Factory Series) – 12 | வாழ்வென்றால் போராடும் போர்க்களமே (Life is a battlefield) - ஆர்.பத்ரி

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே – ஆர்.பத்ரி 

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
கலாச்சார தொழிற்சாலை – 12 (நிறைவு)
      ஆர்.பத்ரி

கடற்கரை மணற்பரப்பில் நடந்து கொண்டே அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உரையாடல் முற்றுப்பெறும் தருணத்தில் அந்த இளம் பத்திரிக்கையாளன் (ஜான் ஸ்வின்டன்) கார்ல் மார்க்சின் தீர்க்கமான கண்களை பார்த்து ஒரு கேள்வியை எழுப்புகிறான். “மார்க்ஸ் அவர்களே, தத்துவார்த்த பார்வையில் இயக்கவியல் அணுகுமுறையோடு, மூலதனத்தின் பாத்திரத்தையும், உழைப்புச் சுரண்டலையும் மிக விரிவாக விளக்கி ஏராளமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்பதை ஒரு வரியில் விளக்க முடியுமா.?”.. புன்முறுவல் பூத்துக் கொண்டே பதிலளிக்கிறார் மார்க்ஸ்.

“வாழ்க்கை என்றால் போராட்டம்”. மார்க்சின் அந்த பதில் மிகவும் அர்த்தம் பொதிந்தவை. முரண்பாடுகள் இல்லாமல் எதுவும் இல்லை. இரண்டு எதிர்மறை அம்சங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு முன்னேறுவது தான் போராட்டங்களுக்கான அடிப்படையாகும். பதிவு செய்யப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே. ஆம், போராட்டங்கள் இன்றி எதுவும் இங்கு நிகழ்வதில்லை.

போராட்டம் எனும் வார்த்தையின் இயல்பான பயன்பாட்டிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும். “உங்கூட தினமும் போராடறதே எனக்கு பொழப்பா போச்சு, இந்த விஷயத்தை அவங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பெரிய போராட்டமாயிருச்சுங்க, என்னால அவங்க கூட போராட முடியாது சார், என சாதாரணமாக போராட்டம் எனும் வார்த்தையை நாம் அவ்வப்போது பயன்படுத்துகிறோம். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில் படப்பை எனும் இடத்தில் ஒரு துணிக்கடைக்கு “போராட்டம்“ என பெயர் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஏன் அந்த பெயரை ஒரு துணிக்கடைக்கு வைத்தார்கள் என தெரியவில்லை. இப்படி நம்மை சுற்றிலும் ‘போராட்டம்’ என்பது சுழன்று கொண்டேயிருக்கிறது. கதைகளும், பாடல்களும் கூட போராட்டங்களை கொண்டாடுகின்றன.

”போராடடா, ஒரு வாளேந்தடா”, ’எரிமலை எப்படி பொறுக்கும்’, உயிரை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா’ ஆகிய பாடல்களை கேட்கும் போது நமக்குள் ஒரு புதிய உணர்வு ஊற்றெடுப்பதை நாம் உணர்ந்திருப்போம். இப்படியாக போராட்ட உணர்வுகள் ஒரு புறம் நம்மை முன்னோக்கிய திசையில் உந்தித் தள்ளினாலும், போராட்ட உணர்வை மழுக்கடிக்கும் காரியங்களும் மறுபுறத்தில் நடக்கின்றன. ’நாம் உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருப்போம், பொதுப்பிரச்னைகளோ போராட்டங்களோ நமக்கெதுக்கு’ எனும் போதனையும் கூட அவ்வப்போது அசரீரியாக நமக்குள் ஒலிக்கிறது. அத்தகைய உணர்வை முளையிலேயே கிள்ளிப்போட வேண்டுமெனில், நமக்குள்ளாகவே நாம் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. கூட்டாக மற்றவர்களோடு இணைந்தும், தனித்தனியாக தன்னளவிலும் என போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்க வேண்டும். அவையே நம்மை முன்திசை நோக்கி உந்தி நகர்த்தும் சக்கரங்கள் ஆகும்.

நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எனும் கிராமம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட புகழ்மிக்க கிராமம். முன்னாள் முதல்வர் அவ்வப்போது வரும் இடம் தான் அது. அந்த கிராமத்திற்கு அருகில் ஈளாடா எனும் மற்றொரு கிராமமும் இருக்கிறது. பெரும்பாலும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் வசிக்கும் அந்த பகுதியில் ஒரு வங்கியின் ஏடிஎம் உள்ளது. திடீரென ஒரு நாள் ஈளாடாவிலிருந்து அந்த ஏடிஎம் இயந்திரத்தை கொடநாடு கிராமத்திற்கு மாற்றப்போவதாக வங்கி அதிகாரிகள் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளையும் கூட செய்து விட்டார்கள். கொடநாடு கிராமத்தில் ஏடிஎம் பயன்பாட்டை அன்றைய முதல்வர் துவக்கி வைப்பதற்கான விழா ஏற்பாடுகளும் செய்யபட்டன.

ஆனால், ஈளாடா கிராமத்திலிருந்து அந்த ஏடிஎம் இயந்திரத்தை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது எனும் கோரிக்கையோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்து விட்டார்கள். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் போது கருப்புக் கொடி போராட்டமா என பதறிப்போன காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்களை தொடர்பு கொண்டு போராட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தினார்கள். ஏடிஎம் மையத்தை மாற்றும் முடிவை கைவிட்டால்,  நாங்களும் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம் என மறுத்து விட்டார்கள் இளைஞர்கள். போராடினால் கைது, ரிமாண்ட் எனும் மிரட்டலோடு தனது அடுத்த ஆயுதத்தை கையில் எடுக்க துவங்கியது அரசு நிர்வாகம்.

“ சார், நாங்க சுமார் ஐம்பது பேர் இருப்போம், அதனால் கைது செஞ்சா ஒரே இடத்துல வைக்கற மாதிரியான பெரிய ஜெயிலா பார்த்து போடுங்க” என உறுதியாக களத்தில் நின்ற இளைஞர்களின் மன உறுதியையும், போராட்ட குணத்தையும் கண்டு கலக்கம் அடைந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார்கள். முதல்வர் கலந்துக்குற விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டோம், அதனால் விழா முடிந்த ஒரு வாரத்துள்ளேயே உங்க ஊரில் அதே இடத்தில ஒரு ஏடிஎம் மையத்தை கொண்டு வரோம் சார் என எழுத்துப் பூர்வமான உறுதிமொழியை தொடர்ந்தே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஒரு வாரத்தில் அதே இடத்தில் மீண்டும் ஏடிஎம் மையம் செயல்பட துவங்கி இன்று வரையிலும் செயல்படுகிறது.

மாவீரன் திப்புசுல்தான் போர்க்காலங்களில் பயன்படுத்திய ஒரு சிறிய கோட்டை ஒன்று நீலகிரியில் பகாசூரன் மலை எனும் பகுதியில் இருக்கிறது. அந்த பகுதியில் இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட தாயகம் திரும்பிய மக்கள் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டம், அதன் நடுவே அரசால் கட்டித்தரப்பட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் ஆகிய ஏற்பாடுகள் இருந்தாலும் கூட அரை நூற்றாண்டு காலமாக சாலை வசதி இல்லை. நோயாளிகள், முதியவர்கள் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு கூட வரமுடியாது. கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனக்கு உரிய நேரத்தில் வர முடியாததால் நிகழ்ந்த உயிரிழப்புகள், வனவிலங்கு தாக்குதல் என பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து, அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி அனுப்பி ஓய்ந்து போயிருந்தார்கள். அந்த சூழலில் தான் அவர்கள் ஒன்று திரண்டு போராட ஆயத்தமானார்கள்.

தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்த மக்களும் களத்தில் இறங்கிய போராட்டம் நான்கு நாட்களாக இரவு பகல் என தொடர்ச்சியாக நடந்தது. அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு, உறங்கி போராடிய மக்களின் உறுதியை பார்த்து இறங்கி வந்த நிர்வாகம் ஒரு மாதத்திலேயே ரூபாய் 82 லட்சம் செலவில் புதிய தார்ச் சாலையை அமைத்துக் கொடுத்தார்கள். அரை நூற்றாண்டாக அசைந்து கொடுக்காத அரசு எந்திரத்தை பணிய வைத்தது எது. மக்களின் உருக்குப் போன்ற ஒற்றுமையும் உறுதியான போராட்டமும் தானே. சாலை கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற செய்தியை அறிந்து அடுத்தடுத்து பல்வேறு கிராம மக்களும் செங்கொடிக்கு பின்னால் அணிதிரண்டு தங்களுக்கான சாலை உரிமையை நிலைநாட்டி வெற்றி பெற்றது தனிக்கதை.

அத்தகைய போராட்டங்களில் பழங்குடி மக்களுக்கான சாலை கேட்டு நடைபெற்ற போராட்டம் கொஞ்சம் சுவாரசியமானது. வழக்கம் போல அந்த எளிய பழங்குடி மக்கள் போலீசாரால் மிரட்டப்பட்டார்கள். கிராமத்திற்கான சலுகைகள் நிறுத்தப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்தினார்கள். ஒரு காவல்துறை அதிகாரியோ ஒரு படி மேலே சென்று “நாளைக்கு நீங்க போராட்டம் நடத்துனீங்கன்னா நாங்க துப்பாக்கியோடதான் வருவோம்” என பகிரங்கமாகவே மிரட்டினார். கொஞ்சம் கூட கலங்காத பழங்குடி மக்கள், ‘சார் நீங்க துப்பாக்கியோட வாங்க, நாங்களும் எங்க கிட்ட இருக்கற துப்பாக்கியோடு தான் நிக்கப்போறோம், வாங்க சார் பாத்துக்கலாம்’ என பதிலளித்தை கண்டு குழம்பிப் போனார் அந்த அதிகாரி.

மறுநாள் காலை முன்னூறு காவலர்களும், கைது செய்து கொண்டு செல்ல நான்கைந்து வாகனங்களுமாக வந்து நின்ற அதிகாரிகள் அந்த காட்சியை பார்த்து திகைத்து தான் போனார்கள். பழங்குடி கிராமங்களிலிருந்த மொத்த குழந்தைகளும் பள்ளிச் சீருடையோடு முன்வரிசையில் அணிவகுத்து நிற்க, “பாத்தீங்களா சார், எங்க துப்பாக்கிகளை, இப்போ சொல்லுங்க என்ன செய்யலாம்’’ என உற்சாகமாக கேட்ட மக்களிடம் வேறு வழியின்றி பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்திலேயே ஒப்பந்த போட்டனர் அதிகாரிகள். அடுத்த சில நாட்களில் இரண்டு கோடி ரூபாயில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மகத்தான சோவியத் புரட்சியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் நவம்பர் 7 அன்று அப்பகுதி கிராமங்களில் செங்கொடியை ஏற்றினார்கள் பழங்குடி மக்கள். உதிரிகளாக பிரிந்து நிற்கும் போது எளிய மக்கள் தங்கள் வலுவை புரிந்து கொள்வதில்லை. ஆனால் தங்களுக்கான கோரிக்கைகளோடு போராட்டக்களங்களில் ஒன்றிணைந்து நின்றால் ஆயிரம் மடங்கு வலு கூடிவிடுகிறது.

மாற்றம் எனும் சொல்லை தவிர அனைத்தும் மாறும் என்பது தத்துவம். ஆனால் அத்தகைய மாற்றங்கள் எதுவும் இயல்பாக நிகழ்ந்து விடுவதில்லை. மாற்றத்தை விரும்புவோரிடம் அதற்கான முயற்சி தேவைப்படுகிறது. எளிய மக்களின் கரங்களில் பூட்டப்பட்டிருக்கும் விலங்குகள் உடைத்து நொறுக்கப்பட வேண்டுமானால், அவர்கள் வலுவானவர்களாக மாறுவதும், கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் அனைவரும் ஓரணியில் திரள்வதும் அவசியமாகிறது. மறுமையில் சொர்க்கங்களை காட்டுகிற வெற்று நம்பிக்கைகளை விடுத்து நாம் வாழும் இப்புவியையே நாம் விரும்பும் வகையில் மாற்றிட முடியும் எனும் புரட்சிகர நம்பிக்கையை விதைத்துக் கொண்டே போராடுவோம். அது ஒரு நாள் நிச்சயம் முளைக்கும்.

அக்னி குஞ்சொன்று கண்டேன், அதை ஆங்கோர்
காட்டிலே பொந்திடை வைத்தேன்.
வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
கட்டுரையாளர்: 
ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம் - Offer is the cause of desire - culture factory - R.Badri - Commercial - Capitalism - https://bookday.in/
                               ஆர்.பத்ரி

கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க : ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *