அறிவொளி போல் மீண்டும் ஒரு வெள்ளம் பெருகி வரத்தான் போகிறது - சாகித்திய அகாடமி ச. தமிழ்ச்செல்வன் நேர்காணல் | Writer Tamilselvan Interview | சந்திப்பு: கமலாலயன் | www.bookday.in

நேர்காணல்: அறிவொளி போல் மீண்டும் ஒரு வெள்ளம் பெருகி வரத்தான் போகிறது – ச. தமிழ்ச்செல்வன் | சந்திப்பு: கமலாலயன்

நேர்காணல்: அறிவொளி போல் மீண்டும் ஒரு வெள்ளம் பெருகி வரத்தான் போகிறது – ச. தமிழ்ச்செல்வன்

| சந்திப்பு: கமலாலயன்

ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், ‘செம்மலர்’ மாத இதழின் ஆசிரியராகவும் பங்களிப்புச் செய்து வருகிறார். இவருடைய சிறுகதைகள் மொத்தத் தொகுப்பாகப் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அரசியல் எனக்குப்பிடிக்கும், இருளும் ஒளியும், எசப்பாட்டு, சாமிகளின் பிறப்பும் இறப்பும், ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது, நான் பேச விரும்புகிறேன் உள்ளிட்டு இதுவரை 64 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இப்போது சமீபத்தில் 65 -ஆவது புத்தகமாகத் “திருப்பியடித்த வரலாறு” என்னும் பெருநூல் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றுபட்டிருந்த தஞ்சை மாவட்டத்தில் பண்ணையடிமைகளாகச் சாணிப்பாலும்,சவுக்கடியும் கொண்டு ஆண்டைகளால் கொடுமைப்படுத்தப்பட்டுக் காலங்காலமாகக் கூனிக்குறுகி வாழ்ந்து கொண்டிருந்த கூலி விவசாயிகளான உழைப்பாளி மக்களுக்குத் துணிவூட்டியது பொதுவுடைமை இயக்கம். அவர்களை விவசாய சங்க அமைப்பில் ஒன்று திரட்டி, “அடித்தால் திருப்பியடி!” “ஏண்டி” என்றால் “என்னடா” என்று கேள்” என்றெல்லாம் சொல்லித்தந்து மக்கள் இயக்கமாகக் கட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம் . அந்த மாபெரும் இயக்கத்தின் வரலாற்றைத் ‘திருப்பியடித்த வரலாறு’ என்ற தலைப்பில் எழுதி முடித்திருக்கிறார் ச. தமிழ்ச் செல்வன். இவர் எழுதிய ‘தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு 2025 -ஆம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட இருந்த தறுவாயில், கடைசி நிமிடத்தில்,ஒன்றிய அரசு தலையிட்டு அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இத்தகைய ஒரு சூழலில் வெண்மணியில் ராமையாவின் குடிசையில் தீயில் வெந்த 44 தியாகிகள் நினைவு தினத்தன்று ‘திருப்பியடித்த வரலாறு’ நூலை வெளியிடப்போகும் அறிவிப்பையும், அதை முன்பதிவில் பெற விரும்புவோர் பதிவு செய்து கொள்ளலாம் என்னும் அறிவிப்பையும் செய்து விட்டுச் சென்னைக்கு வந்திருந்தார் தமிழ். அவருடன் பாரதி புத்தகாலய அலுவலகத்தில் நேர்காணல் ஒன்றை நிகழ்த்த முடிந்தது. அதன் எழுத்து வடிவம் இது:

இந்திய ஒன்றிய அரசின் சாகித்திய அகாடமி விருது தங்களுக்கு அறிவிக்கப்பட இருந்தது. 24 இந்திய மொழிகளிலும் இந்த விருதுக்குரிய நூல்களையும், அவற்றின் படைப்பாளிகளையும் தேர்வு செய்து விட்ட சாகித்திய அகாடமி செயற்குழு, தனது விருதுகளை அறிவிக்க செய்தியாளர்கள் கூட்டத்திற்குத் தயார் நிலையில் இருந்து கொண்டிருந்த போது, இறுதி நொடியில் ஒன்றிய அரசு நேரடியாகத் தலையிட்டு அவற்றை அறிவிக்க விடாமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழில் உங்களுடைய ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூலுக்கு அறிவிக்கப்படவிருந்த விருது அது. இப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கிறது?

நான் எந்த விருதையும் எதிர்பார்த்து எழுதியவனோ அல்லது எழுதுகிறவனோ அல்லன். என்னைப் போன்றவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது கொடுப்பார்கள் என்று நான் நம்பியதும் இல்லை. அறிவிப்பு வரப் போகிறது என்று சொன்னார்கள். பிறகு ஒன்றிய அரசு அதை நிறுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது அகாடமியில் செயற்குழுவில் இருப்பவர்களுக்கே கூடத் தெரியாது. இந்த நிலையில், நான் எந்த வருத்தமும், ஏமாற்றமும் அடையவில்லை. வந்தால் லாபம், வராவிட்டால் அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் வரும். தவிர, பாராட்டுகள், விருது அறிவிப்புகள், வாழ்த்துகள், வசைகள் என எதையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் கடந்து போகும் மனநிலைக்கு நான் வந்து பலகாலம் ஆகிவிட்டது.இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. எனக்கு விருது நிறுத்தப்பட்டதை விட சாகித்திய அகாடமி நிறுவனம் முடக்கப்பட்டுள்ளதுதான் பெரிய கவலை. நேரு காலத்தில் மிகுந்த கனவுகளோடு உருவாக்கப்பட்ட அமைப்பை இப்படிச் சீரழித்துவிட்டார்களே என்பதுதான் நாம் பேச வேண்டிய பிரச்னை.

‘திருப்பியடித்த வரலாறு’ என்ற தலைப்பில் தஞ்சை மாவட்டப் பொதுவுடைமை வரலாற்றை எழுதி முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். ஆனால், ஒரு வகையில் அது ஓர் அரசியல் கட்சியின், பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறுதானே? நீங்கள் அடிப்படையில் ஒரு கலை இலக்கியவாதியல்லவா? இந்தப் பணியைக் கடந்த ஆறேழு ஆண்டுகளாகக் கால நேரம் பார்க்காமல் உழைத்து எழுதியிருக்கிறீர்கள். அதைப்பற்றி எனச்சொல்ல விரும்புகிறீர்கள்?

நான் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட், தொழிற்சங்கவாதி. என்ன, நான் கொஞ்சம் இலக்கியம் தெரிந்த, கதை எழுதத் தெரிந்த கம்யூனிஸ்ட். நான் கட்சி உறுப்பினன் என்ற முறையில் கட்சி எனக்குக் கொடுக்கும் கடமைகளை நிறைவேற்றக் கூடியவன். ‘தஞ்சை மாவட்டக் கட்சி வரலாற்றை நீங்கள் எழுதுங்கள்’ என்று சொன்னார்கள். நான் செய்து முடித்து விட்டேன், அவ்வளவு தான்.

இந்தப்பெரும் பணியை முழு மன நிறைவுடன் செய்து முடித்திருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா?

இல்லை; மிகவும் போதாமையைத்தான் உணர்கிறேன். ஏனென்றால், இந்தக் கட்சியின் வரலாறு அப்படிப்பட்டது. இதற்காக நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்திருக்கும் ஆவணங்கள், தரவுகள், சான்றா தாரங்களில் இப்போது எழுதி முடித்திருக்கும் நூலில் ஐம்பது சதவீத அளவுக்குக் கூடப் பயன்படுத்தியிருக்கவில்லை. இன்னும் நான் பயன்படுத்த வேண்டிய தரவுகள் 50 சதவீதம் இருக்கின்றன. எனவே, செய்த வரைக்கும் லாபம் என்ற ஆறுதல்தான் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வு. எஞ்சியிருப்பவற்றை, அவ்வப்போது தேவையைப் பொறுத்து சிறு சிறு நூல்களாகக் கூட எழுதி வெளியிட்டுக் கொள்ள முடியும். அந்த அளவுக்குத் தரவுகள் கைகளில் இருக்கின்றன.

உங்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘வெயிலோடு போய்’ வெளி வந்த போது, நானும், என்னைப்போன்று அப்போது இளைஞர்களாக இருந்த நுற்றுக்கணக்கான இளம் வாசகர்களும் அந்தத் தொகுப்பை எப்படிக் கொண்டாடினோம் என்று எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. எனக்கு அறிமுகமாகும் ஒவ்வொரு வாசகருக்கும் அந்தத் தொகுப்பை நானே வாங்கிக் கொடுத்திருக்கிறேன்; அவர்களை வாங்கிப் படிக்குமாறு அறிமுகம் செய்திருக்கிறேன். அது வந்து பத்தாண்டுகள் கழித்துத்தான் இரண்டாவது தொகுதியாக ‘வாளின் தனிமை’ தொகுப்பு வந்தது. அந்தக்கதைகளின் பாணி உங்கள் முந்தைய தொகுப்பின் தன்மையிலிருந்து பெரிதும் மாறுபட்டு, நவீனத்தன்மையுடன் இருந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு நீண்ட கால இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. உங்களிடமிருந்து வேறு எந்த விதமான புனைவிலக்கியப் படைப்புகளும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சில சிறுகதைகளை மட்டும் அவ்வப்போது எழுதியிருந்தீர்கள்.’வெயிலோடு போய்’ கதையைப் போல, அல்லது அதை விடவும் சிறப்பான சிறுகதைகளை நீங்கள் எங்களுக்குத் தருவீர்கள் என்று மிகவும் எதிர்பார்த்தோம்…

எனக்கும் அப்படிக் கதைகளை எழுத வேண்டுமென்ற ஆவல் மனதில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இன்றைய சூழலில் என்ன தேவைகள் எழுகின்றனவோ அவற்றுக்கேற்ப நான் என்ன எழுத வேண்டுமென்பதைத் தீர்மானிக்கிறேன். இயக்கத்தின் தேவை, அன்றன்று எழுகிற அரசியல், சமூகச் சூழல் தேவைகள், மக்களின் தேவைகள்,பத்திரிகைகள் நமக்குத் தரும் வாய்ப்புகள் – இப்படியானவற்றைப் பொறுத்து அவ்வப்போது நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். புனைவு இலக்கியங்களைப் படைப்பதில் நானும் ரொம்பக் கவனம் செலுத்தாமல் போயிருக்கிறேன்… இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை, எனக்கு என்ன வயதா ஆகி விட்டது? எழுபத்திரண்டு வயதுச் சின்னப்பையன்தானே நான்? இனிமேல் எழுதி விட்டால் போச்சு!

நீங்கள் எழுதிய ‘தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்’ நூல்தான் தற்போது சாகித்திய அகாடமி விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நூலில் கடந்த ஒரு நுற்றாண்டுத்தமிழ்ச் சிறுகதைகளில் முதல் ஐம்பதாண்டுக்காலக் கதைகளைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். அவற்றை எழுதிய 60 படைப்பாளிகள், அவர்களின் மொத்தக்கதைகளில் பேசப்பட்டிருக்கும் பொருண்மைகள், அவற்றின் பாத்திர வார்ப்புகள், கதைகள் பேசும் வாழ்க்கைகள், அவற்றினுள் புதைந்து கிடைக்கும் சமூக, அரசியல், பண்பாட்டு, கலை, இலக்கிய, பொருளாதார அம்சங்கள் பற்றி எல்லாம் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறீர்கள். இப்படியொரு நூலை எழுதுவதற்கான உந்துதல் எது? இது மாதிரியான ஆய்வுகளைக் கலை இலக்கிய விமர்சகர்கள்தாமே செய்வது வழக்கம்?

கொஞ்சம் பின் கதையைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு முறை எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பேசும் புதிய சக்தி இதழுக்காக ‘தமிழ்ச் சிறுகதையின் அரசியல்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை தருமாறு கேட்டுக்கொண்டார். அவருக்காகப் பதினாறு பக்கங்களில் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தேன். அதைத் திரும்பப் படிக்கையில், இதைக் கொஞ்சம் விரிவாக எழுதலாமே என்கிற எண்ணம் எழுந்தது.

இன்னொரு சந்தர்ப்பத்தில், தோழர் அருணனைச் சந்தித்த போது, ‘‘மேற்கண்ட கட்டுரையைப் போலத் தமிழ்ச்சிறுகதைகள் பற்றி ‘நமது பார்வை’யில் ஒரு புத்தகத்தை நீங்கள் ஏன் எழுதக்கூடாது?’’ என்று அவர் கேட்டார். அதன் பின், அவரைச்சந்திக்கும் போதெல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால், நான் அப்போது உடனே அந்த முயற்சியில் ஈடுபடவில்லை.

இன்னொரு விஷயம்: இது ஓர் ‘ஆய்வு நூல்’ அல்ல. எனக்கு அது பழக்கமில்லாத தொழிலும் கூட. எனக்குச் சரியென்று படுவதையும், இயக்கத்தின் தேவையைப் புரிந்து கொண்டும் எதையும் பரவலாக மக்களிடம் ‘எடுத்துச் செல்லும்’ பணியே என் வாழ்நாளில் பிரதான பணியாக இருந்து வந்திருக்கிறது. இந்த நூலும் அதன் தொடர்ச்சிதான். கால வரிசையில், சில சிறுகதையாளர்களின் படைப்புகளை முன் வைத்து, அவர்கள் முன்னெடுத்த அரசியலை அறிமுகம் செய்யும் சிறு முயற்சியே இந்த நூல். அரசியல் என்று நான் இங்கு குறிப்பிடுவதும், புரிந்து கொண்டிருப்பதும் அவர்கள் தங்களின் படைப்புகள் வழியே முன் வைத்த சமூகப் பார்வை, சமூகத்தின் எந்தப்பிரிவைப் பற்றி அவர்கள் எழுதியிருக்கிறார்கள், அவர்களின் மனச் சாய்மானம் எந்தப்பக்கமாக இருந்தது, அவர்கள் வாழ்ந்த காலங்களின் சமூக அசைவியக்கங்களை உள் வாங்கியிருந்தார்களா, பெண்கள் – சாதிகள் குறித்த அவர்களின் நிலைப்பாடு என்ன என்பன போன்ற கேள்விகளைத்தாம். அரசியல் என்று ஒற்றை வார்த்தையில் சொல்கிறேன்… என் வாசிப்பில், நான் உணர்ந்தவற்றைச் சொல்லி,இளம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.

தமிழ்ப் பெண் படைப்பாளிகளில் ஓர் அபூர்வ மணியாகத் திகழ்ந்தவர் ஆர்.சூடாமணி. அவர் எப்படி இந்தப் பெரு நூலில் விடுபட்டுப் போனார்?

ஆர்,சூடாமணி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பாளி. அவர் மட்டுமா விடுபட்டிருக்கிறார்? ஜெயந்தன் எவ்வளவு அற்புதமான எழுத்தாளர்? ஏன், நம்முடைய மேலாண்மை பொன்னுச்சாமி, அஸ்வகோஷ், இலங்கைப் படைப்பாளிகள், சிறுபான்மை இனப் படைப்பாளிகள் – இப்படி எவ்வளவோ பேரைப்பற்றி இதில் எழுதாமல்தானே விட்டிருக்கிறேன்? நான் விட்டு விடவில்லை. விடுபடல் என்று சொல்வது கூடச் சரியில்லை. உண்மையில், நான் எழுத்தாளர்கள் அத்தனை பேரின் பட்டியலையும் வைத்துக் கொண்டு ஒருவர் விடாமல் எழுதி விட வேண்டுமென்றும் முயற்சி செய்யவில்லை. என் கவனத்திற்கு வந்தவர்களில், சாத்தியமான படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புகளையும் பற்றி ஒரு பரிசீலனையை மேற்கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்! அடுத்தடுத்த பகுதிகளில், இன்னும் எழுதப்பட வேண்டிய நம் படைப்பாளிகளைப் பற்றிக் கட்டாயம் எழுதுவேன்…

நீங்கள் அவசியம் செய்வீர்கள் என்று தெரியும். இருந்தாலும் என் ஆர்வம் காரணமாக இதைக் கேட்டேன். இந்த நூலை எழுதும் போது, என்ன மாதிரியான மன நிலையில் இருந்தீர்கள்? அந்த எழுத்துப் போக்கில் நீங்கள் உணர்ந்தவற்றைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்…

ஆம், கட்டாயம் அதைச்சொல்ல வேண்டுமென நானும் விரும்புகிறேன். தோழர் சுகுணா திவாகரன், சக்தி தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருடைய தூண்டுதலால் இக்கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை அவற்றின் ஆரம்ப வடிவத்தில் விகடன்.காம் மின்னிதழில் எழுதினேன். அவற்றை, இத்தலைப்புக்கேற்ப திருத்தித் திரும்ப எழுதினேன். அவற்றின் தொடர்ச்சி பாரதி புத்தகாலய மின்னிதழில் வந்தது. அது இந்த நூலின் இரண்டாவது பகுதியாக இணைந்து இப்போது வெளிவந்திருக்கிறது. மூன்றாம், நான்காம் பாகங்கள் பின்னர் தொடரும்…

என் அனுபவத்தில், இதற்காக நான் வாசித்த கதைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறாயிரம் கதைகளுக்கு மேல் இருக்கும். ஒவ்வோர் எழுத்தாளரும் எழுதியுள்ள மொத்தக்கதைகளையும் ஒன்றுவிடாமல் வாசித்து விட வேண்டும் என்று எனக்கு நானே ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டேன். அப்படி வாசித்தால்தான் அந்தப்படைப்பாளியின் பார்வைகள், எந்தெந்தப் பிரச்னையை எந்தெந்தக் கோணங்களில் அணுகியிருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு உதவும். ஏதோ சாம்பிளுக்கு ஒன்றிரண்டு கதைகளை வாசித்து விட்டு இப்போது நான் எழுதியிருப்பது போன்ற ஒரு பெரு நூலை எழுதியிருக்கவே முடியாது. இந்த நீண்ட நெடிய வாசிப்பு எனக்கு ஒரு பேரனுபவமாக இருந்தது. பிறந்த போதிருந்தே தமிழ்ச்சிறுகதை எளிய மக்கள் – சார்ந்த ஓர் அரசியல் பார்வையைக் கொண்டிருந்தது. அது இன்றுவரை தொடர்வதையும் காண முடிகிறது. உழைக்கும் மக்கள் சார்பான குரல், குறைந்தபட்சம் ஒரு ஜனநாயகத் தன்மை – தொடக்கத்திலிருந்தே தமிழ்ச் சிறுகதைகளில் இருந்து வந்துள்ளது… இப்படியான சில கணிப்புகளுக்கு நான் வந்தேன். அவற்றை எழுதும் போது, அவற்றுக்கான ஆதாரங்களாக அந்தந்தப் படைப்பாளிகளின் சிறுகதைகளிலிருந்தும், சுய வாக்குமூலங்களாக அமைந்துள்ள நேர்காணல்கள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்தும் பொருத்த மான பகுதிகளையும் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறேன். எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தேடி வாசித்துத் தேவையான பகுதிகளையும் நூலில் சேர்த்தேன்.ஒரு படைப்பாளியைப் புரிந்துகொள்ள இவை எல்லாமே தேவை.படைப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு படைப்பாளியின் அரசியலைக் கண்டு பிடிக்க முடியாது.

மிகவும் காத்திரமான சில பார்வைகளை நீங்கள் முன்வைத்திருப்பதை நான் படித்தேன். அடுத்தடுத்த பகுதிகளுக்காகக் காத்திருக்கிறோம். நான் பேச விரும்புகிறேன் என்ற தொகுப்பில், ஃபிரைடா காலோவைப்பற்றி அவருடைய சொந்த எழுத்துகளிலிருந்தே ஓர் அழகிய சித்திரத்தை உருவாக்கித் தந்திருந்தீர்கள். அந்த நூலில் மேலும் பல ஆளுமைகளைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பவையும் அத்தகைய எழுத்தோவியங்கள்தாம். இன்னும் இப்படிப்பேச வேண்டியவர்கள், பேச விரும்புகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள் அல்லவா? இந்த வகைமையில் நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதலாமே?

கொஞ்சம் அல்ல, நிறையவே எழுத வேண்டியிருக்கிறது. பால் ராப்சன் பற்றி,பில்லி ஹாலிடேபற்றி என இன்னும் சில முக்கியமான கலை இலக்கிய ஆளுமைகளைப் பற்றி நான் எழுத விரும்புகிறேன்… எழுதுவேன்

இருளும் ஒளியும், ஜிந்தாபாத் ஜிந்தாபாத் ஆகிய புத்தகங்கள் முறையே அறிவொளி இயக்க அனுபவங்களையும், உங்களின் தொழிற்சங்க அனுபவங்களையும் மிக உணர்ச்சிபூர்வமாகப் பதிவு செய்திருக்கும் படைப்புகள். வலையில் விழுந்த வார்த்தைகள் தொகுப்பு, நீங்கள் முகநூலில் பதிவு செய்த அனுபவக் கட்டுரைகள். எழுத எழுதத் தீராத அனுபவங்களின் களஞ்சியங்கள் அவை. அவற்றைப்பற்றி….

ஆம், ஒரு போதும் எழுதித்தீர்க்க முடியாத எண்ணற்ற அனுபவங்கள் என் மனதில் இன்னும் இருக்கின்றன. இவற்றில் வெறும் கட்டுரைத்தன்மை மட்டும் இல்லை, மாறாகப் புனைவின் கீற்றுகளும் ஆங்காங்கே இழையோடிக் கொண்டிருப்பவை. பல நண்பர்கள் என்னிடம் இந்த அம்சத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்: “நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் குறிப்பிட்ட அனுபவங்கள், சிறுகதைகளாக எழுதப்பட்டிருக்க வேண்டியவை அல்லவா? கட்டுரைகளாக அல்லது முகநூல் பதிவுகளாக மட்டும் நிறுத்திவிட வேண்டியவை அல்லவே அவை?” என்கிறார்கள். எனக்கும் கூட ‘ஆமா, சரிதானே’ என்று தோன்றுவதுண்டு. புனைவின் சாத்தியங்களை நான் மறுக்கவில்லை; ஆனால், இன்றைய தேவைகள், எனக்குக் கிடைக்கும் நேரம், மனநிலை, வெளியிடப்போகும் ஊடகம் -இவற்றைப் பொறுத்து, ஏதோ ஒரு வடிவத்தில் நான் உணர்பவற்றைப் பதிவு செய்து விடுகிறேன், அவ்வளவுதான்.

வாய்ப்புக்கிடைக்கும் போது, அவற்றைக் கதைகளாக எழுதி விட்டால் போச்சு!

அறிவொளி இயக்க காலத்தில், அதன் உப விளைவுகளாகத் தோற்றம் கொண்டவற்றுள் மிக முக்கியமானது மதுரையில், பேரா.ச.மாடசாமி அவர்களின் தலைமையில் செயல்பட்ட பி.ஜி.வி.எஸ். கருத்துக்கூடம். அங்கே நாம் சிறு சிறு புத்தகங்களின் வடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகக் கதைகளிலிருந்து, உள்ளூர்க்கதைகள் வரை மறுவரைவுப் பிரதிகளாக மாற்றி அச்சிட்டுப் பல்லாயிரக்கணக்கில் விநியோகம் செய்தோம். ஓஹென்றி, மாப்பஸான், டால்ஸ்தாய், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், கந்தர்வன், வேல.ராமமூர்த்தி, பூமணி, தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர், இன்னும் பல முதன்மையான எழுத்தாளர்களின் சிறுகதைகளை அறிவொளி இயக்கத்தில் புதிதாக எழுதப்படிக்கக் கற்றுக் கொண்ட புதிய கற்போருக்கேற்ற எளிய நடையில், சிறு சிறு வாக்கியங்களில், பக்கத்திற்குப்பக்கம் படங்களுடன் அச்சிட்டுக் கிராமம் கிராமமாக விநியோகம் செய்தோம். ஒவ்வொன்றும் ஒரு ரூபாய் என்று தயாரிப்புச் செலவை மட்டும் ஈடுகட்டக்கூடிய விலை நிர்ணயம் செய்து விற்பனையும் செய்தோம். பல கிராமங்களில் எளிய விவசாய மக்கள் கையில் காசு இல்லாமல் தங்களிடம் இருந்த தக்காளி, காய்கறிகளைக் கொடுத்து விட்டு ‘எங்களுக்குப் புஸ்தகம் குடுங்க. எங்க பேரப்பிள்ளைகள்கிட்ட குடுத்துப்படிக்கச் சொல்லிக் கேட்டுக்கறோம்” என்று வாங்கிக்கொண்டு போனார்கள். மனம் நெகிழ வைக்கும் எத்தனை நூறு அனுபவங்கள்!

அப்படிப்பட்ட ஓர் அரிய கருத்துக் கூடத்தை நம்மால் தொடர்ந்து இயங்க வைக்க முடியவில்லையே? நீங்கள், பேரா. சசிதரன், பேரா. குழந்தைவேல் பாண்டியன் இப்படி எத்தனை பேர் பங்களிப்புடன் நடந்த பணிகள் அவை? மீண்டும் அத்தகைய ஒரு கருத்துக் கூடத்தை, இன்றைய இயக்கத்தேவைகளுக்கு ஏற்ப, ஓர் ஆவணக்காப்பகமாக ஏன் நாம் புனரமைக்கக்கூடாது? உங்கள் பார்வையில், இந்தப் பணி உள்ளிட்ட அறிவொளி இயக்கப்பணிகள் குறித்து என்னென்ன பதிவுகள் இன்னும் மீதம் இருக்கின்றன?

உங்கள் கேள்வியே ரொம்ப நீண்டு விட்டது. நானும் சொல்லுவதற்கு நிறைய இருக்கின்றன. அறிவொளி என்ற சொல்லே அன்றைக்கு நமக்கு எல்லையற்ற உத்வேகம் தந்த ஒரு மந்திரச் சொல். புதுக்கோட்டையில், அறிவொளி மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்குச் சைக்கிள் வாங்கித்தந்து, ‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி!’ என்று பாடித்திரிந்தோம். மதுரையில் பிஜிவிஎஸ் கருத்துக்கூடம் சார்பில் நீங்கள் சொன்னது போல சிறு நூல்கள் வடிவில் மிகச் சிறந்த சிறுகதைகளைப் பிரசுரங்களாக வெளியிட்டு ஊர் ஊராகக் கொண்டு போய் மக்களுக்கு அறிமுகம் செய்தோம். பீடி சுற்றும் இடங்களிலும், பட்டாசு தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளிலும் மக்கள் நடுவே அந்தக்கதைகளை உரக்க வாசித்து அறிமுகம் செய்தோம். அறிவொளித் தொண்டர்கள் அந்தக் கதைகளை உடனுக்குடன் சிறு நாடகங்கள் ஆக்கி தெருக்களில் அவற்றை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்.பேராசிரியர் காளீஸ்வரன் இதில் முன்கை எடுத்தார். வேலூரில் மக்களின் நலவாழ்வு தொடர்பான செய்திகளை டாக்டர் சுந்தரராமன் போன்ற மருத்துவ அறிஞர்களின் ஆலோசனைகளின்படி முகாம்களையும், மக்கள் சந்திப்புகளையும் நடத்தி பரப்புரைகள் செய்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சுதந்திரப்போராட்ட வரலாற்றைச் சிறு சிறு பிரசுரங்கள் வடிவில் வெளியிட்டு அறிமுகம் செய்தோம். அறிவொளி மாவட்டங்கள் எல்லாவற்றிலும் குறைந்தது மூன்று தமிழ் நாளிதழ்களையும், சில முக்கிய வார,மாத இதழ்களையும் அனைத்து ஊராட்சிகளுக்கும் இலவசமாக அனுப்பி அந்தந்த ஊர் அறிவொளி மையங்களில் அவற்றைப் பொதுமக்கள் படிப்பதற்கு வகை செய்தோம். எல்லாம் ஒரு பெருவெள்ளம் போலப் பொங்கிப் பாய்ந்த காட்சிகள் என் மனக்கண்களில் மீண்டும் படங்களாக ஓடுகின்றன. ஆனால், இன்றைக்கு அந்த வெள்ளம் வடிந்திருக்கிறது என்பது உண்மைதான். எனக்கும் அந்த வருத்தம், ஆதங்கம் உண்டுதான். ஆனால், இது அறிவொளி இயக்கத்திற்கு மட்டும் நேரும் சோதனையல்லவே? எல்லா இயக்கங்களுக்கும் இப்படி ஓர் எழுச்சிக்காலமும், அது வடியும் காலமும் இருக்கவே செய்கின்றன. இப்போது அறிவொளி வெள்ளம் வடிந்திருக்கும் காலம். இன்றைய சூழலில்,இந்திய ஒன்றிய அரசாங்கம் தனது மக்கள் நலக் கோட்பாடுகள் அனைத்தையும் கை கழுவி விட்டது. மாநில அரசாங்கத்தின் உரிமைகள் அனைத்தையும் திட்டமிட்ட வகையில் ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதைய நிலையில் நம்மால் என்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்து கொண்டிருக்கிறோம்… தொடர்ந்து செய்வோம். காலம் மாறும், மீண்டும் அறிவொளி போல் வேறு ஏதேனும் ஒரு வெள்ளம் பெருகி வரத்தான் போகிறது…எனக்கு நம்பிக்கையிருக்கிறது…

நீங்கள் சொல்வது மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. நாம் தொடங்கிய இடத்திற்கே வருவோம்… சாகித்திய அகாடமியின் தன்னாட்சி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில சாகித்திய அகாடமிகள் நீண்ட காலமாக இயங்கி வருகின்றன. அவை,தங்களின் மாநில மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு விருதுகளை வழங்கி வருகின்றன. நாமும் ஏன் தமிழ் மாநிலத்தில் சாகித்திய அகாடமி ஒன்றை நிறுவ வேண்டுமெனக் கோரிக்கை எழுப்பக்கூடாது? அதற்காக தமுஎக சங்கம் போன்ற அமைப்புகள், சகோதர இயக்கங்களுடன் இணைந்து கோரிக்கை இயக்கங்களை ஏன் நடத்தக்கூடாது?

கண்டிப்பாகச் செய்யலாம். உண்மையில், இது த மு எ க ச.வின் நீண்ட நாள் கோரிக்கைதான். இப்போது ஒன்றிய அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்தி, நமக்கென்றொரு சாகித்திய அகாடமியை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். செய்வோம்!
தமிழில் சிறார் இலக்கியங்கள் நீண்ட ஒரு வரலாறு உடையவை. அழ.வள்ளியப்பா காலத்தில், அவர் தலைமையில் இயங்கிய குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் வெள்ளி விழாக் கொண்டாடிய ஒரு மகத்தான இயக்கம். நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் ஏராளமான சிறார் இலக்கியப் படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.

கவிமணி தேசிக விநாயகம் தொடங்கி, மகாகவி பாரதி, அழ.வள்ளியப்பா, பூவண்ணன், ரேவதி, ஆர்வி, வாண்டுமாமா போன்ற பலரின் குழந்தை இலக்கியப்படைப்புகள் இன்றளவும் வாசிக்கப்படுபவை. ஆனால், வள்ளியப்பாவின் மறைவுக்குப்பிறகு, ஒரு நீண்ட தொய்வு ஏற்பட்டிருந்தது. இப்போது, சமீப காலத்தில்,மீண்டும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் உருவாகி, மிகவும் ஆர்வத்துடன் முனைப்பாகச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.. உங்கள் பார்வையில், தமிழ்ச் சிறார் இலக்கியம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் வளர்கிறதா?

நிச்சயமாக! ‘வாழும் அழ.வள்ளியப்பா’ எனச் சொல்லத்தக்க வகையில் உதயசங்கரின் சிறார் இலக்கியப்படைப்புகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிற படைப்புகளாக அவை இருக்கின்றன. குழந்தைகளுக்கான பாடல்களைப் பாவண்ணனும், குருங்குளம் முத்துராஜாவும் தொடர்ந்து எழுதி வருவதைக் காண்கிறேன்.யூமா.வாசுகி, சரிதா ஜோ, ஞா.கலையரசி, முத்துக்குமாரி, சாலை செல்வம், யெஸ்.பாலபாரதி, ஆதி வள்ளியப்பன், ச.க.முத்துக்கண்ணன், ஈரோடு சர்மிளா, விழியன், நம்ம தலைவர் ஆயிஷா நடராசன் இன்னும் நிறையப் பேர் ஏரளமாக எழுதி வருகிறார்கள். நமது புக்ஸ் ஃபார் சில்ட்ரன் பதிப்பகம் எத்தனை நூறு புத்தகங்களை எவ்வளவு அழகாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது? பல மொழிபெயர்ப்புக் கதைகளையும் நாம் வெளியிட்டிருக்கிறோம். இது இன்னும் வீச்சுடன் தொடர வேண்டும். தொடரும் என்பது எனது நம்பிக்கை!

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *