எழுதியதற்கு எழுதுவது என்பதே விமர்சனம்

Literature Articles: Criticism is writing for what is written - dhananchezhiayan m. Book Day Branch of Bharathi Puthakalayam.மு. தனஞ்செழியன்

எல்லாக் காலங்களிலும் எழுத்து இருந்திருக்கிறது. ஆனால், அவை நாள்பட முன்னேறி உள்ளதா!, தோய்ந்து உள்ளதா? என்பதனை இக்காலகட்டத்தின் வாசகர்களைச் சமநிலையில் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது…

ஒட்டுமொத்த மனித இயக்கத்துடனான உலக வரலாற்றில். எத்தனையோ மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. மிகவும் பழைய மொழியாகவும் இன்றுவரையிலும் வழக்கத்தில் எழுத்து நடையிலும், சொல் நடையிலும் இருக்கக்கூடிய மொழியாகத் தமிழ் உள்ளது.

இவ்வகையான தமிழ் மொழியின் பெருமைகளை மார்தட்டிப் பேசிக்கொள்வோர் கூட தொடர்ந்து தமிழ் இலக்கியங்களையும், தமிழ்ப் படைப்புகளையும் வாசிப்பதில்லை என்பது உண்மை.

தமிழ் படைப்புலகத்தில் ஆண்டுதோறும் ஆயிரம் கவிதைத் தொகுப்புகளும், ஐந்நூறு சிறுகதைத் தொகுப்புகளும், முன்னூறு கட்டுரைத் தொகுப்புகளும், நூறு நாவல்களும், இருபதிலிருந்து இருபத்தைந்து எண்ணிக்கையிலான மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளிவருகின்றன.

எழுத இவ்வளவு எழுத்தாளர்கள் இருந்தாலும். அவர்களது படைப்புக்களை எல்லாம் விற்றுத் தீர்ப்பது என்பது இன்னொரு சவால். முதல் ஆயிரம் பிரதி விற்றுத் தீர்க்கவே இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஐந்தாண்டுக் கால இடைவெளியில் விற்றுத்தீர்ந்த புத்தகப் பிரதிகளைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் ஐந்திலிருந்து ஆறு என்கிற எண்ணிக்கையிலேயே வெளிவருகின்றன. இந்த ஐந்து ஆண்டு கால இடைவெளியில் ஐந்து முதல் ஆறு விமர்சனக் கட்டுரைகள் பரவலான வாசகர்களைச் சென்றடையாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இங்கே விமர்சனங்களால் வெளிவரும் புத்தகங்களை விடச் சர்ச்சைகளால் சாலையில் வைத்து எரிக்கப்பட்ட புத்தகங்கள் பிரபலமாகின.

ஒரு நல்ல புத்தகத்தின் மீதான விமர்சனம் இல்லாமல் போவதால், அந்தப் படைப்பு அடுத்தகட்ட நிலையை அடைவதில்லை. வாசகன் ஒரு புத்தகத்தை வாசித்த முகாந்திரத்திலேயே. அதன் மீதான அடர்த்தியை விமர்சனங்களில் வெளிப்படுத்தலாம். முதலில் வாசிப்பின் மீதான விமர்சனத்தின் வாயிலாக எழுத்தாளர்களின் ஆரம்பக் கட்டங்களில். தங்களை இலக்கியத்திற்குள் நுழைத்துக் கொள்கிறார்கள்.

அப்படியாக நீங்களும் முதல் விமர்சனத்தை எழுதிவிட்டு சாகித்திய அகாடமிகோ, கனவு இல்லத்திற்கு எல்லாம் ஆசைப்படுவதில் ஒன்றும் தவறில்லை..
மேற்கத்திய நாடுகளில் உலகின் பொது மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தில் எழுதக்கூடிய பரவலான எழுத்தாளர்களைப் பற்றி லிட்ராரி ஆஃ கிரிட்டிசிசம் என்கிற புத்தகம் வால்யூம் வாரியாக ஆண்டுதோறும் வெளியிடப்படும்.ஒரு ஆண்டு முழுவதும் எழுத்தாளரின் படைப்புகள் மீது வரக்கூடிய பரவலான விமர்சனங்களைத் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிடுவது தான் லிப்ராரி ஆஃ கிரிட்டிசிசம்.

அதில் உலகெங்கும் இருக்கக்கூடிய பரவலான எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனங்கள். ஒரே புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும். எல்லா வால்யூமிலும் அந்த எழுத்தாளரைப் பற்றிய விமர்சனங்கள். எந்த எந்த வால்யூமில் வந்தது என்று இன்டெக்ஸ் பக்கத்தில் தெளிவாக இருக்கும். இந்த தொகுப்புகள் சென்னையில் இருக்கக்கூடிய அமெரிக்கன் நூலகத்தில் வாசிப்பதற்குக் கிடைக்கும்.

இந்த தொகுப்புகள் எல்லாம் ஒரு எழுத்தாளரைப் பற்றி வாசகன் எளிதாக அறிந்து கொள்ளவும் அவரது படைப்புகளை நோக்கிச் செல்லக்கூடிய ஒரு திறவுகோல் ஆகவும் அமைகின்றன.

இன்றைய வாசகர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தேவையற்றதை வாசிக்க வேண்டாம் என்றும் தனது வாசிப்பு நேரத்தை வீணடித்து விடக் கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

நல்ல வாசகர் விமர்சகர்கள் பரிந்துரைக்கக் கூடிய நூல்களைத் தேடி வாசிக்கிறார். இணைய வெளிகளில் வரக்கூடிய கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, குறுநாவல் போன்றவற்றில் வாசகர்கள் பரவலாகக் கவனம் செலுத்துவதில்லை. அதன் பின்னூட்டங்களில் யாராவது கதையைப் பற்றி விமர்சனங்கள் நல்ல வகையில் எழுதி இருந்தால் மட்டுமே அந்தக் கதையை வாசிக்கத் தொடங்குகிறார்கள்.

வாசிப்பும், எழுத்தும் சேர்ந்து இயங்குவதே இலக்கியப்படைப்பாக இருக்கிறது. நல்ல முகாந்திரங்கள் இருக்கக்கூடிய படைப்புகளைப் புத்தக மதிப்புரை வாயிலாக (http://www.noolarangam.com) நூல் அரங்கம் இணையதளம் செய்து வருகிறது. அதில் ஒரு புத்தகத்திற்கு இருநூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் தங்களுடைய விமர்சனங்களை எழுதி உள்ளார்கள்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக, புத்தகம் பேசுது மாத இதழ் தமிழில் வெளிவரக்கூடிய புதிய நூல்களைப் பற்றிய அறிமுகமும், நூல்கள் மீதான விமர்சனங்களையும் செம்மையாகச் செய்து வருகிறது. (https://bookday.in/category/puthagam-pesuthu/)

பாரதி புத்தகாலயம் நடத்திவரும் www.bookday.in இணையத்திலும் இதுவரையில் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களின் விமர்சனமும், புத்தக அறிமுகமும் எழுதப்பட்டு இருக்கின்றன. (https://bookday.in/category/book-review/)

எழுதியதற்கு எழுதுவது என்பது எங்கோ இருக்கும் எழுத்தாளருடன் ஒரு உரையாடலைத் தொடங்குவது போன்றது. நூறு செயல்களைச் செய்வதற்கு நாம் முதல் செயலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.
இன்றே தொடங்குவோம். . .

நன்றி
மு தனஞ்செழியன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.