Simple people Livelihood-smashing by Government Machinery | எளிய மக்கள் வாழ்வாதாரத்தை நொறுக்கும் எந்திரங்கள் - Chennai City, eviction People - யார் இந்த மக்கள் - https://bookday.in/

வாழ்வாதாரத்தை நொறுக்கும் எந்திரங்கள் – எஸ் வி வேணுகோபாலன்

மாளிகை வாசலில் ஆடிக் காற்றும் கூட வாலைக் குழைக்குதடா – பக்தியில்
மரியாதை செய்யுதடா – நம்ம
மண்ணுக் குடிசையைக் கண்டுப்புட்டா மட்டும்
மாடாக முட்டுமடா – கூரையை
மல்லாக்கத் தள்ளுமடா

என்று எழுதி இருப்பார் கவிஞர் நவகவி.

இயற்கையின் சீற்றத்திற்கு மட்டுமல்ல, சட்டத்தின் பாதுகாவலர்களாகத் தங்களை நிறுவிக் கொள்ளத் துடிக்கும் அதிகாரிகள் சிலரது அதிரடி நடவடிக்கைகளுக்கும் கூட அப்பாவி மக்களே இரையாகி அல்லோலகல்லோலப் பட்டுப் போகின்றனர்.

சென்னை மாநகரில் ஏழை எளிய மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து அகற்றப்படுவது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஓரிடத்தில் நிகழும்போது அதைக் கேள்விப்பட்டுத் திரும்பிப் பார்க்கும் சமூகம், பின்னர் தொடர்ச்சியாக இந்தக் கூத்து நிகழும்போது அதை நியாயப்படுத்திக் கொண்டு திரும்பிப் பாராது தனது அன்றாடத்தில் நகர்ந்து போகப் பழகிக் கொண்டுவிடுகிறது.

திரையில் பார்த்தது தரையிலும்

வசிப்பிடங்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டது போக, இப்போது வாழ்வாதார இடங்களிலிருந்தும் அப்புறப்படுத்தப்படுகின்றனர் எளிய மக்கள். திரைப்படங்களில் தங்களது கதாநாயகன் வீட்டை வில்லனின் ஆட்கள் பொக்லைன் எந்திரம் வைத்து அடித்து நொறுக்கும்போது தாங்களும் தியேட்டரில் குமுறிக் கொந்தளிக்கும் அப்பாவி சாலையோர வர்த்தகர்கள், என்றைக்காவது ஒரு நாள் தங்களது வாழ்வில் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்களா?சினிமாக்களில் பார்த்த வில்லன்களை விடவும் வெறியோடு வரும் அதிகார வர்க்கத்தின் ஏவலில் அதே மாதிரியான எந்திரங்களால் தங்கள் கடைகளையும் இடித்து நொறுக்குவார்கள் என்று கனவிலும் கண்டிருப்பார்களா?. மிகக் குறைந்த நேரத்தில் மேலதிகம் கடைகளை அடித்து நொறுக்கும் சாதனையை அண்மையில் கோடம்பாக்கம் ரயிலடி அருகே நிகழ்த்தியுள்ளது சென்னை மாநகராட்சி.

Loud and clear:  The police reminding traders at Koyambedu of the lockdown timings.இளவயதில் இருந்தே சின்னஞ்சிறு வர்த்தகர்களின் கடைப்புறங்களோடு நெருக்கமாக வாழ்ந்த தலைமுறை மனிதர்களுக்கு காய்கறி, பழம், நொறுக்குத் தீனி உள்ளிட்டுத் தங்களுக்கு விற்பனை செய்யும் எளிய மனிதர்களோடான பழக்கம், வெறும் வியாபாரி – வாடிக்கையாளர் உறவுக்கு அப்பாற்பட்ட அன்பில் கட்டப்பட்டிருக்கும். தெருவோரத்தில் காய்கறி விற்பனை செய்வோர் ஒரே ஒரு நாள் கண்ணில் படாமல் போனாலும் மறுநாள், ‘என்ன ஏழுமலை..என்ன சங்கதி…எங்கே ஆளைக் காணோம்?’ என்று கேட்கின்ற அக்கறை மிகுந்தவர்களாக இருப்பார்கள் வாடிக்கையாளர்கள். யார் யாருக்கு எந்தெந்த மாதிரி காய் வேண்டும் என்று பார்த்த மாத்திரத்தில் தேர்வு செய்து எடுத்து அரிவாளால் வெட்டிச் சீவிக் கொடுப்பார் இளநீர் வியாபாரி. பழம் தீர்ந்து போயிருக்க வேண்டுமே என்று நினைவூட்டுவார் பழ வியாபாரி. கையில் சில்லறை இல்லாமல் சங்கடப்படும்போது, நான் எங்கே போகப் போகிறேன்..நாளைக்கு வந்து கொடுங்க என்று அன்போடு வழியனுப்பி வைப்பார்கள் தெருவோரக் கடைக்காரர்கள்.

பரமபத வாழ்க்கை

பூ வியாபாரமோ, காயோ, பழமோ, மீனோ, இறைச்சியோ எங்கெங்கோ இருந்து கடும் சிரமங்களோடு அவற்றைத் தருவித்து அல்லது தானாக அலைந்து தேடி எடுத்துக் கொண்டு வந்து வந்து தெருவோரத்துக் கடையில் பத்திரப் படுத்திக் கடும் கோடையானாலும், பனியானாலும், மழையானாலும் அன்றாடப் போராட்டங்களோடே தங்களது வாழ்வாதரம் தேடிப் பிழைப்பு நடத்துவோர் தான் இந்த எளிய தட்டு மக்கள். விலை குறைவானாலும் தரத்தில் மலிவு இல்லாதபடிக்குத் தங்களது வர்த்தகத்தை நடத்துகின்றனர். பரமபத விளையாட்டின் சிறிய சிறிய ஏணிகளில் ஏறியும் திடீர் என்று பெரிய பாம்பில் இறங்கி மீண்டும் தாக்குப் பிடித்து ஏறவுமாகப் போய்க் கொண்டிருக்கிறது பல்லாயிரக்கணக்கான எளிய வியாபாரிகளது அன்றாட வாழ்க்கை.

வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டே யார் யாருக்கோ எல்லாம் வணக்கம் போட்டும், கையூட்டுகள் கொடுத்தும், காலில் விழுந்து கதறியுமாகத் தான் வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டிக் கொண்டிருக்கின்றனர் இந்த சாலையோர வியாபார மக்கள். மாநகரத்து நடுத்தர வர்க்க அலுவலக ஊழியர்கள், ஏழை எளிய மக்கள் தான் இந்தத் தெருவோர வியாபாரிகளின் பெருஞ்சந்தை. மாநகர அன்றாடப் பதட்டங்களில் சிக்கிச் சுழலும் மக்களுக்கு இந்தத் தெருவோரக் கடைகளே நம்பிக்கை புள்ளிகள். ஆனாலும், இந்தக் கடைகள் அகற்றப்படும்போது அந்த வலியைப் பெரிதாக உணர விடாது இந்த வாடிக்கையாளர்களைக் கடந்து போக வைப்பது தான் புதிய தாராளமயம் சமூகத்தின் உளவியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம். ஒற்றை ஒற்றை மனிதர்களாக சமூகத்தைப் பிரித்து விட்டிருப்பது அதன் சாகசங்களில் ஒன்று.

Simple people Livelihood-smashing by Government Machinery | எளிய மக்கள் வாழ்வாதாரத்தை நொறுக்கும் எந்திரங்கள் -  Chennai City, eviction People - யார் இந்த மக்கள் - https://bookday.in/

அதிரடி இடிப்பு அராஜகம்

முற்பகல் நேரத்தில் திடீர் என்று வந்து இடிக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். மற்றுமோரிடத்தில் மாலை நேரத்தில் நடக்கிறது அந்தத் தாக்குதல். அண்மையில் இன்னுமோரிடத்தில் நள்ளிரவைக் கடந்த நேரமொன்றில் நூற்றுக் கணக்கான கடைகளைக் காணாமல் செய்துவிட்டிருக்கின்றனர். பாரிமுனை என் எஸ் சி போஸ் சாலை எனப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் (இந்தப் பெயரை முழுதாக எழுதினால் தான் நடந்திருக்கும் அநியாயம் நமக்குப் புலனாகும்) தங்கள் கடைகள் நொடி நேரத்தில் தங்களது கை நழுவிப் போய்த் தாங்கள் சாலை நடுவில் நிறுத்தப்படும் அவலத்தை எதிர்கொள்ளத் திணறிய ஒரு பெண்மணி (கிருஷ்ணவேணி) தாளமாட்டாத நெஞ்சுவலியால் தாக்குண்டு சரிந்து விழுந்து மாண்டு போனார். எழும்பூர் ரயிலடி அருகே நடந்த கடைகளை அகற்றும் நடவடிக்கையின்போது துவண்டு போய்க் கதறினர் எளிய வர்த்தகர்கள்.

கோடம்பாக்கம் ரயிலடி அருகே நடந்த கடை இடிப்பின் போது, காலில் விழுந்து மன்றாடிக் கேட்டிருக்கின்றனர் பெண்மணிகள். ‘எங்களது உடமைகளைத் நாங்களே எடுத்துக் கொண்டு வெளியேறக் கொஞ்சம் அனுமதியுங்கள்’ என்று கைகூப்பிக் கதறி அழுத்திருக்கின்றனர். ‘ஒவ்வொரு கடை வாசலிலும் இருபது நிமிடம் நின்று நிதானித்து இடித்துப் போகத் தான் நான் பிறந்தேனா?’ என்று கோபத்தோடு கேட்டுவிட்டுக் கடைகளை அப்பளம் நொறுக்குவது போல் இடித்து நொறுக்க உத்தரவிட்டு இருக்கிறார் மாநகராட்சி அதிகாரி. இத்தகைய அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்திருக்கிறார்கள்? தங்களது வழிபாட்டுக்குரிய கடவுள் படங்கள், தலைவர் படங்கள், குடும்பத் தலைவர் படங்கள் எல்லாமே தகர்த்து எறியப்படும் காட்சி அந்த எளிய மக்கள் மனத்தை எப்படி வாட்டி எடுக்கும் என்பதைக் கற்பிக்காத கல்வியால் இவர்களுக்கு வாய்த்திருக்கும் அந்த உயர் பதவிகளின் மதிப்பு தான் என்ன ?

யாருக்கு பாதுகாப்பு – யார் மீது படையெடுப்பு

மாநகரத்தில் எங்கெல்லாம் கடைகள் போடலாம், அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது மட்டுமல்ல, ஏற்கெனவே பல ஆண்டுகளாகக் கடை நடத்தி இருப்போரை அகற்ற வேண்டுமானாலும் கூட உரிய வழிமுறைகளும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியறிவு அற்ற பாமர மக்கள் தங்களுக்கான சட்ட பாதுகாப்பைக் கூட அறியாமல் யார் யாரது கருணையையோ, தயவு தாட்சண்யத்தையோ நம்பியே தங்களது எளிய பிழைப்பை நடத்திக் கொண்டிருக்க, சட்டங்களை அறிந்தவர்கள் அத்துமீறி சட்டங்களுக்குப் புறம்பாகத் தங்களது அதிகார பலத்தைக் காட்டும்போது எளிய மக்களுக்கு ஏது போக்கிடம்? அவர்களது உளவியல் அதிர்ச்சிக்கும் உடலியல் நடுக்கங்களுக்கும் வாழ்வியல் நரகத்திற்கும் யார் ஈடு செய்ய முடியும்? எளிய மக்கள் மீது பாயும் இந்த அதிகார எந்திரங்கள், சட்டப் புறம்பான ஆக்கிரமிப்புகள் யார், எவர் என்ற எந்தப் பாகுபாடுகள் இன்றி போய் இடித்து நொறுக்குமா ?

சட்டம் எப்போதும் வசதி படைத்தவர்களைப் பார்த்தால் வாலைக் குழைக்கும், எளிய மக்களைப் பார்த்தால் பாய்ந்து சென்று கவ்விக் குதறும் என்று உச்ச நீதிமன்ற நீதியரசர் (மறைந்த) இரத்தினவேல் பாண்டியன் ஒரு முறை குறிப்பிட்டார். அவர் தனது வழிகாட்டியாகக் கொண்டாடிய நீதியரசர் வி ஆர் கிருஷ்ண அய்யர், ‘சட்டம் எல்லோரையும் பார்த்துக் குரைக்கும், ஆனால் ஏழை எளிய, கல்வியறிவற்ற, விளிம்பு நிலையிலுள்ள பாமர மக்களைத் தான் கடிக்கும் என்று வேதனையோடு பதிவு செய்திருந்தார். நவகவியின் பாடலும் அதைத் தான் வழிமொழிகிறது. ஆட்சியாளர்கள் உடனடி தலையீடு செய்து தங்களுக்கு உரிய நியாயம் வழங்குவார்களா, தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவுவார்களா என்று ஏங்கிக் கிடக்கின்றனர் இந்த எளிய மக்கள்.

*******



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 3 Comments

3 Comments

  1. Manoharan Natarajan

    நடைபாதை கடைக்காரர்களின் அவலநிலை . அவர்களை உதாசீனம் படுத்துவது ஏற்க முடியாது. இந்தக்காவலர்கள் அவர்களிடம் பொறுக்கித்திண்பர். அடுத்த நாளே கடையை இடிப்பர். பைத்தியக்கார நிலை. வருத்தம். நன்றாக குறிப்பிட்டுள்ள எஸ்விவி அவர்களுக்கு நன்றி.

  2. B Uma

    Rule should be equal for everyone. In Democratic country. Government employees shouldn’t take the rules in their hand.

  3. கே.ராஜு

    தெருவோர வியாபாரிகளின் அவல நிலையை இதைவிடத் தெளிவாக விளக்க முடியாது. அரசு தலையிட்டு அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *