மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் பள்ளம் (Lonar Crater) மற்றும் லோனார் ஏரி (Lonar Lake) புகழ்பெற்ற இடமாகும்.

லோனார் பள்ளம் (Lonar Crater) – ஏற்காடு இளங்கோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற ஒரு சிறு நகரம் உள்ளது. இது லோனார் பள்ளம் (Lonar Crater) மற்றும் லோனார் ஏரிக்கு (Lonar Lake) புகழ்பெற்ற இடமாகும். இந்த ஏரியை ஒரு எரிமலைப் பள்ளம் என விஞ்ஞானிகள் கருதினர். பின்னர் மேற்கொண்ட ஆய்வில் இது ஒரு விண்கல் (Meteorite) தாக்குதலால் உண்டான பள்ளம் என கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் பிளாஜியோகிளேஸ் (Plagioclase) போன்ற சில கனிமங்கள் இருப்பதன் மூலம் இது விண்கல் மோதலால் உருவானது என உறுதி செய்யப்பட்டது. இதன் கீழ் பகுதியில் கண்ணாடி துண்டுகளின் குறிப்பிடத்தக்க இருப்பு உள்ளது. விண்கல் தாக்குதலில் ஏற்பட்ட அபரிமிதமான வெப்பம் அங்கிருந்த மணலைக் கண்ணாடியாக மாற்றியது எனத் தெரிகிறது. இந்தப் பள்ளத்தின் வயது சுமார் 52,000 ஆண்டுகள் ஆகும்.

இந்தப் பள்ளம் தக்காண பீடபூமியில் (Deccan Plateau) அமைந்துள்ளது. இது சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த எரிமலை பாசால்ட் பாறையின் ஒரு பெரிய சமவெளி ஆகும். இந்தப் பாசால்டிக் பாறை (Basaltic Rock) மீது விண்கல் மோதியதால் இந்தப் பள்ளம் உருவானது. பூமியில் விண்கல் தாக்குதலால் ஏற்பட்ட 4 பள்ளங்கள் பாசால்டிக் பாறையில் உள்ளன. இவற்றில் ஒன்று இந்தியாவிலும் (லோனார்) மற்ற 3 பள்ளங்கள் தெற்கு பிரேசிலும் உள்ளன.

Lonar Crater Lake Story | Lake Created by Meteor Collision in Maharashtra |  Quick Fact #6 - YouTube

இந்தப் பள்ளத்தில் நீர் தேங்கி இருப்பதால் இது லோனார் ஏரி, லோனார் குளம் மற்றும் சரோவர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி முட்டை வடிவம் அல்லது கிட்டத்தட்ட வட்டமானது. இது 8 கிலோமீட்டர் சுற்றளவும், 1.8 கிலோமீட்டர் விட்டமும், 1.13 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது. பள்ளத்தின் விளிம்பின் மட்டத்திலிருந்து 137 மீட்டருக்கு கீழே நீர் உள்ளது. இதன் ஆழம் 950 அடியாகும். ஏரியைச் சுற்றிலும் சிறிய குன்றுகள், தாவரங்கள், மரங்கள், பறவைகள் மற்றும் 1250 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்களும் உள்ளன.

பூர்ணா மற்றும் பெங்கங்கா என இரண்டு சிறிய நீரோடைகள் ஏரிக்குள் வடிகின்றன. ஏரியின் நீரில் பல்வேறு உப்புக்கள், சோடாக்கள் மற்றும் கெய்லுசைட் போன்ற கனிம வளங்கள் உள்ளன. இந்த ஏரியில் கார நீர் மற்றும் உப்பு நீர் ஆகிய இரண்டும் இருப்பது ஆச்சரியமானது. இது வனவிலங்கு சரணாலயமாகவும், பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாகவும், தேசிய புவியியல் தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஹாலோபாக்டீரியா வளர்ச்சி மற்றும் கரோட்டினாய்டு அதிகரிப்பின் காரணமாக இந்த ஏரி இளஞ்சிவப்பாக மாறியது. அறிவியல் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.

கட்டுரையாளர்:

ஏற்காடு இளங்கோ,

அறிவியல் எழுத்தாளர்.

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *